செப்டம்பர் 10, 2012

அந்தியோகஸ் எபிபனேஸ் IV


அந்தியோகஸ் எபிபனேஸ் IV
(antiochus Epipipanus)

அந்தியோகஸ் III - ன் மகன்தான் இந்த 'அந்தியோகஸ் எபிபனேஸ் IV'. இவன் கி.மு.175 - ல் .ராஜாவாக வந்து கி.மு.163 வரை ஆண்டான். இவன் தன்னைப் புகழ்ந்து பேசினாலும், மக்கள் இவனை ஆங்கிலத்தில் "Epimanes" என்றும் "Epiphanes" என்றும் அதாவது "பைத்தியக்காரன்" என்று அழைப்பார்கள்.

இவன் ஒரு காலத்தில் 'ஹெலனேசேஷன்'  (கிரேக்கக் கலாச்சாரத்தைப் புகுத்துதல்) மிகக் கடுமையாக இருந்தது. (1மக்கபேயர்: 4:7-17).

செலுக்கஸ் மரித்தபின் எபிபனேஸ் ஆட்சிக்கு வந்தான். 'ஜேய்சன்' (Jason) என்பவன் தவறான வழிகளில் பிரதான ஆசாரியனாக வந்தான். இந்த ஜெய்சன், இராஜாவுக்கு 360 வெள்ளி நாணயங்களை கொடுத்தான். 80 தாலங்துகள் இன்னும் கொடுப்பதாகச் சொன்னான். விளையாட்டு அரங்கம் ஒன்று ஆரம்பிக்க இன்னும் 150 தாலந்துகள் கொடுப்பதாகவும் 'அந்தியோகியா வாலிபக் குழு' ஒன்றையும் ஏற்படுத்தி தந்தான். பிரதான ஆசாரிய பதவி கிடைத்தவுடன் ஜெய்சன் கிரேக்க வழிகளைப் பின்பற்ற யூதர்களிடம் வற்புறுத்தினான்.

நான்காம் அந்தியோகஸ் எபிபனேஸ்சின் ஆட்சி  யூதர்கள் வரலாற்றில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இவன் யூதர்கள் சமய வாழ்க்கையில் அதிகமாகக் குறுக்கிட்டான். இவன் சமய ஆசாரங்களில் பலவற்றில் தலையிட்டு தடைசெய்து தேவாலயத்தில் கிரேக்க தெய்வ வழிப்பாட்டைப் புகுத்தினான். ஜனங்களையும் கிரேக்க தெய்வங்களுக்குப் பலியிட வற்புறுத்தினான். இச்சமயத்தில் 'மோதீன்' என்னும் கிராமத்தில் உள்ள மத்தத்தியா என்னும் ஆசாரியனும் அவன் குமாரரும் அந்தியோகஸ் எபிபனேஸ் IV - ற்கு எதிராகக் கலகம் செய்தனர். இதுவே, "மக்கபேயர் கலகம்" எனப்படுகிறது.

மத்தத்தியாவின் மூத்த மகனான யூதாஸ் மக்கபேயுவின் தலைமையில் (கி.மு.165 - கி.மு.160) யூதர்கள், எபிபனேசின் படைகளை கி.மு.165 - ல் வென்று கி.மு.165 ஆம் ஆண்டு டிசம்பர் (கிஸ்லேவ்) மாதம் 25 ம் நாள் (எபிபனேஸ் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தின அதே நாளில்) யூதர்கள் தேவாலயத்தைச் சுத்தகரித்துப் பிரதிஷ்டை செய்தனர். (1மக்கபேயர்: 4:36-59). இதன் நினைவாகவே பிற்காலத்தில் பிரதிஷ்டை விழாவென்னும் "ஹனுக்கா" என்ற விழாவை யூதர்கள் ஆசரித்து வந்தனர்.

இப்படி நெடுங்காலத்திற்குப் பின் யூதர்கள் ஓரளவு அரசியல் சுதந்திரமடைந்தனர். யூதாஸ் மக்கபேயருக்குப்  'யோனத்தான்' (கி.மு.159-142), பின்பு 'சீமோன்' (கி.மு.142-134) ஆகிய மக்கபேய சகோதரர்கள் தலைமை தாங்கி யூதர்களை வழி நடத்தினர்.

சீமோனின் காலத்தில் முக்கிய நிகழ்ச்சியொன்று நடந்தது. 'மூன்றாம் ஒனியா' என்ற பிரதான ஆசாரியனுக்குப் பின், முறையாக நியமனம் பெற்ற பிரதான ஆசாரியர்கள் யூதர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஆசாரிய பரம்பரையை ஒழுங்குபடுத்த மக்கள் முனைந்தனர்.'ஹாஸ்மோனியர்' என்னும் மக்கபேயர் குடும்பத்திலேயே இதனை உறுதிப்படுத்த விரும்பினர். அப்படியே 'சீமோன்' முறையான பிரதான ஆசாரியனாக முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டான். (1மக்கபேயர்: 14:35-51).

இப்படியாக, சீமோன் காலத்திலிருந்து யூதர்களுக்குள் ஆசாரியத்துவமும் இராஜரீகமும் இணைந்ததோர் புதிய ஆளுகை உருவானது. இது 'ஹாஸ்மோனியர் ஆளுகை' (Hasmonean Kingdom) எனப்பட்டது.

இந்த ஆளுகையின் கடைசி பிரதான ஆசாரியனாக 'இரண்டாம் அரிஸ்தோபுலஸ்' (கி.மு.66-63) இருந்த காலத்தில், ரோம் அரசனான 'பாம்பே' எருசலேமை அழித்து இந்த ஹாஸ்மோனியா ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டினான். இப்படியாக கி.மு.63 - ல் யூதேயா, ரோம் மாகாணமாகிய சீரியாவின் ஒரு பகுதியானது.