"ஆர்க்கிலாஸ்"
(Archelaus)
ஏரோதுவுக்குப் பின்...
ஏரோது சாகும் முன் உயில் ஒன்று எழுதி, அதில் யார் யார் எந்த நாட்டை ஆள வேண்டுமென்று குறிப்பிட்டார்.
1. ஆர்க்கிலாஸ் (Archelaus) - யூதேயா நாட்டையும்,
2. ஆண்டிபாஸ் (Antipas) - கலிலியோ, பெரியா (Per ea) நாடுகளையும்,
3. பிலிப்பு (Philip) - தராக்கோனிட்டிஸ் (Trachonitis), பேட்டானியா (Batania), கௌலானிட்டிஸ் (Gaulanitis) - நாடுகளையும் ஆள வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்தப் பத்திரத்தை ரோமப் பேரரசன் ஒப்புக் கொண்ட பின்னர்தான் அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டார். ஏரோது இப்படிச் செய்யத் தேவையில்லை என்றாலும், தான் இறந்த பிறகு ரோமப் பேரரசின் நல்லெண்ணத்தைப் பெறவே இப்படி செய்தான். ஏரோது இப்படி செய்ததால், அவனுடைய மகன்கள் மூவரும், அவனுடைய தங்கை சலோமியும் ரோம் நகருக்கு விரைந்து சென்றார்கள்.
எருசலேமிலிருந்து ஒரு தூதுக் குழுவினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அக்குழுவினர் ஏரோது ஆட்சியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, ஏரோது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தங்களை ஆள வேண்டாமென்றும், ரோமரே நேரடியாக தங்களை ஆள வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்தார்கள். இந் நிகழ்ச்சி லூக்கா: 19:14 - ல் குறிப்பிடப்பட்டுள்ளது. லூக்கா: 19:12-27 வரை சொல்லப்பட்ட உவமையில் வரும் பிரபு இந்த ஆர்க்கிலாஸ்தான்.
ஆர்க்கிலாசுக்கு அரச பட்டத்தைத் தரித்துக் கொள்ள உரிமை கொடாமல் 'எத்நார்க்' (Ethnarch) என்று சொல்லக் கூடிய "தேசாதிபதி" பதவியை வகித்து, யூதேயா நாட்டை ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. ரோம ராயன் அகஸ்டஸ், ஏரோதுவின் உயில் பத்திரத்தில் ஒரு முக்கிய மாறுதல் செய்து மீதியை அப்படியே ஏற்றுக் கொண்டான்.
ஆர்க்கிலாஸ் (கி.மு.4-கி.பி.6 ) ஆளத் துவங்குமுன்னமே நாட்டில் கலகம் உண்டானது. அதை மிக கொடுமையான முறையில் அடக்கினான். பலர் உயிரிழந்தனர். பின்பு ரோம் சென்றிருந்த நேரம், யூதேயா நாட்டில் வேறொரு கலகம் உண்டானது. 'சாபினஸ்' (Sabin-us) என்ற ஒரு ரோம அதிபதி எருசலேம் ஆலயத்தைக் கொள்ளையிட்டு, அதன் முன் மண்டபங்களில் தீ வைத்துக் கொளுத்தினான். கலகம் பாலஸ்தீனா முழுவதும் பரவியது. சீரியா நாட்டின் ஆளுநர் 'வரசு' (Varus) கலகத்தை அடக்கினான்.
ஆர்க்கிலஸ் திரும்பி வந்தவுடன் தனக்கு எதிராக ரோம் நகருக்குச் சென்ற தூதுக் குழுவினரைக் கொன்றான். (லூக்கா: 19:27). இதனால், மக்கள் மிகவும் வெறுத்தார்கள். இவனது ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்தது.
எனவே, எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள மக்கள், ரோம ராயன் அகஸ்டசுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, ஆர்க்கிலஸின் ஆட்சியின் சீர்கேடுகளை எடுத்துக்காட்டி, இக் கொடுமையிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்று முறையிட்டார்கள். அதன் பயனாக அகஸ்டஸ், ஆர்க்கிலசை கி.பி.6 - ம் ஆண்டில் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான்.