செப்டம்பர் 06, 2012

"ஹசீடியர்"

 
"ஹசீடியர்"
(Hassidims)

மக்கபேயர் கலகத்தின்போது அந்தியோகஸ் எபிபனேஸை எதிர்த்து நின்றவர்களில் 'ஹசீடியர்' என்பவர்கள் மிக மக்கியமானவர்கள். 'ஹசீடிம்' என்னும் சொல் 'ஹெசட்' என்னும் எபிரேயச் சொல்லிருந்து வந்தது. இச் சொல் 'இரக்கம்' 'அன்பு' என்று பொருள்படும். (ஓசியா: 6:6).

பெரும்பாலும், இது உடன்படிக்கை நேரத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. எனவே, இதனை 'உடன்படிக்கையின் அன்பு' என்பர். ஆகவே, கடவுளின் பெயரில் உள்ள உடன்படிக்கையின் அன்பினால் ஏவப்பட்ட ஒரு கூட்டம் மக்களை - இந்த வார்த்தை குறிப்பிடுகிறது எனலாம். பழைய ஏற்பாட்டில் 'உத்தமமானவர்கள்' என்ற அர்த்தத்தில் இச் சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (சங்கீதம்: 149:1,9).

தள்ளுபடியாகமங்களிலும் இவர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். (1மக்கபேயர்: 2:42; 7:13;  2மக்கபேயர்: 14:6). இங்கு இவர்கள் ஒரு புதிய வகுப்பினராகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இவர்கள் ஒரு வகுப்பினராக உருவான காலம் மக்கபேயர் காலத்திற்கு முந்தியதாக இருக்கலாம் என கருத இடமுண்டாகிறது.

மக்கபேயர் கலகத்தில் இவர்களில் பலர் நியாயப்பிரமாணத்திற்காக இரத்தசாட்சியாக மரித்தனர். (1மக்கபேயர்: 2:42). மற்றவர் கடைசி மட்டும் யூதாஸ் மக்கபேயாவுக்குத் துணையாக நின்றனர். (2மக்கபேயர்: 14:6).

மக்கபேயர் கலகத்திற்குப் பின் இரத்தம் சிந்தின கைகளையுடைய மக்கபேய சந்ததி ஆசாரியப் பணியைச் செய்வதை இவர்கள் ஆதரிக்கவில்லை. மேலும், போர்ச் செயல்களில் ஈடுபட்டு அதிகார ஆசையில் போவதையும் இவர்கள் வெறுத்தனர். அதனால், பின்னாட்களில் சதுசேயர் முதலானோர் ஹாஸ்மோனிய ஆசாரிய ஆளுகையை ஆதரித்து நிற்க, ஹசீடிம் கூட்டத்தார் அதனை எதிர்த்து நின்றனர்.

பரிசேயர், எசீனேயர் ஆகியோர் இந்த ஹசீடிம் வகுப்பாரிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.