செப்டம்பர் 13, 2012

"யூதேயாவின் மேல் ரோம மாகாணத் தலைவரின் ஆட்சி"

 
 "யூதேயாவின் மேல் ரோம மாகாணத் தலைவரின் ஆட்சி"

 யூதேயா நாடு கி.பி.6 முதல் கி.பி.41 ஆம் ஆண்டு வரை ரோம நாட்டுப் பேரரசரால் நேரடியாக ஆளப்பட்டது. யூதேயா நாடு ரோம ராயனின் சொந்த சொத்து போல கருதப்பட்டது. அந்நாட்டுத் தலைவர் 'புரோகுரேட்டர்' (Procurator) என்று, அதாவது 'மகாணத் தலைவர்' என அழைக்கப்பட்டார்.  இவர் சீரிய நாட்டு ஆட்சித் தலைவருக்கு (Legate) பொறுப்பாளியல்ல.

எனவே, யூதேயாவில் சேகரிக்கப்பட்ட வரி, ராஜாவின் தனி நிதியில் சேருமே ஒழிய, நாட்டு நிதியுடன் சேராது. ஆகவே, 'ராயனுக்குரியதை ராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள்' (மத்தேயு: 22:21) என்று இயேசு கூறியது எழுத்தின்படியான உண்மை (Literal) என நாம் அறியலாம். இந்த மாகாண ஆட்சித் தலைவர்கள் கடலோரத்திலுள்ள 'செசரியா' (Caesar ea) என்னும் துறைமுகப் பட்டணத்தில் குடியிருந்தார்கள். (அப்போஸ்தலர்: 23:33). பண்டிகை நாட்களில் எருசலேமில் தங்குவார்கள்.

இக்காலத்தில் ஆட்சி செய்த மாகாண ஆட்சித் தலைவர்கள் (List of Procurators):

1. கோப்பனியஸ் - Coponius 6–9 C.E.
2. மார்க்கஸ் ஆம்பிபுலஷ் - Marcus Ambibulus 9–12 C.E.
3. ரூபஸ் டினியுஸ் - Rufus Tineus 12–15 C.E.
4. வெலேரியஸ் கிரேட்டஸ் - Valerius Gratus 15–26 C.E.
5. பொந்தியு பிலாத்து - Pontius Pilate 26–36 C.E.
6. மார்செல்லஸ் - Marcellus 36–37 C.E.
7. மாருல்லஸ் - Marullus 37–41 C.E.
8. கஸ்பியஸ் ஃபேடஸ் - Cuspius Fadus 44–46 C.E.
9. திபேரியுஸ் ஜீலியஸ் அலெக்சாண்டர் - Tiberius Julius Alexander 46–48 C.E.
10. வெண்டிடியஸ் கும்மேனஸ் - Ventidius Cumanus 48–52 C.E.
11. ஆண்டனியஸ் பேலிக்ஸ் - Antonius Felix 52–60 C.E.
12. போரியஸ் பெஸ்துஸ் - Porcius Festus 60–62 C.E.
13. அல்பின்னஸ் - Albinus 62–64 C.E.
14. ஜீயஸ் ஃபுளோரியஸ் - Gessius Florus 64–66 C.E.

 1, 5  -  பேருடைய காலங்களில் நடந்த சில முக்கியக் நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம்:

1. முதல் ஆட்சித் தலைவரின் முதலாம் ஆண்டில் (கி.பி.6 )  "சல்பியஸ் குயிர்னியஸ்" (Sulpi - cius - Quirinius)  சீரிய நாட்டின் தலைவராயிருந்தார். லூக்கா:2:2 - ல் உள்ள சிரேனியு என்று குறிப்பிடப்பட்டவர் இவரே. அங்கு சொல்லப்பட்ட குடிமதிப்பு கணக்கெடுக்கும்போது சிரேனியு அதாவது சல்பியஸ் குயிர்னியஸ் நாட்டுத் தலைவராக இல்லை.

சீரிய நாட்டுத் தலைவரின் கீழ் ஒரு படைத்துறை ஆணையராக இருந்தார். அவர் நாட்டுத் தலைவர் ஆனபின் 2ஆம் முறை
யூதேயா நாட்டு மக்களை எண்ணிக் கணக்கிட்டார். அதன் பயனாக பெரும் கலகம் மூண்டது. ஏனெனில், ஆள்வரி போடவே இப்படிக் கணக்கிடுவது வழக்கம்.

5. பிலாத்து, 'வளையாத் தன்மையுள்ளவர்'  என்றும்  'கடுமையான பிடிவாதக் குணத்தினர்' என்றும் முதலாம் அகிரிப்பா, பேரரசன் கலிகுலாவுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார்.

பொதுவாக, ரோம ராயன் உருவம் பதித்த எந்த பொருளையும் ரோமர், எருசலேமுக்குள் கொண்டு வருகிறதில்லை. ஏனென்றால், யூதர்கள் அதை சிலை வணக்கமாக கருதினார்கள். ஆனால், பிலாத்து, அரசு உருவம் தீட்டிய படைக் கொடிகளை எருசலேமுக்குள் மறைவாகக் கொண்டு வந்தார்.

இதையறிந்த யூதர்கள், அந்த விருதுகளை வெளியே கொண்டு போகாவிட்டால் கலகம் செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள். அதனால், பிலாத்து கொடிகளை நகரத்தை விட்டு அப்புறப்படுத்தினார். நம் தேவனிடத்தில் யாதொரு குற்றமும் இல்லையென்று கண்டபோதிலும், யூதர்கள் கலகம் செய்வார்கள் என்று அஞ்சி அவரைக் கொலை செய்ய ஒப்புக் கொடுத்தது இதனால்தான்.