அக்டோபர் 26, 2015

பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான ஜெபம்

Image result for பரிட்சை எழுதும் மாணவர்கள்

பரிட்சைக்கு ஆயத்தப்படும்போது செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே,

நீர் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதையும், உம்மைத்தேடி வருகிற எவரையும் நீர் புறம்பே தள்ளுவதில்லை (யோவா: 6:37) என்ற அருள் வாக்கையும் நம்பி உம்மிடம் வந்து மன்றாடுகிறேன். நான் எதிர்நோக்கியிருக்கும் பரிட்சைகளை குறித்த என்னுடைய கவலைகளையும், பயங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்.

எனவே, என் இருதயத்தையும், ஆத்துமாவையும் உம்முடைய தெய்வீகபிரசன்னத்தினால் நிரப்பி, என் வாழ்க்கையின் தேவனாய் இரும். தயவாக என் பெலவீனங்கள், கவனக்குறைவுகள், பயங்கள், பரபரப்புகள், தடைகள் யாவையும் எடுத்துப்போட்டு, பரிட்சைக்கு ஆயத்தப்படும் இந்த நாட்களில் முழுகவனத்தையும் என்னுடைய பாடங்களில் செலுத்தி, நேரத்தை வீணாக்காமல் படிக்க, “எனக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்து என்னை ஆசீர்வதியும்” (2தீமோ: 1:7).

 “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்: 32:8) என்றபடி, எந்த பாடத்தை எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுத்தாரும். என் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தெரியாத பகுதிகளை சொல்லித் தாரும்.

 “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூர்ணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்: 1:5) என்ற வசனத்தின்படி தெய்வீக ஞானத்தையும், ஞாபக்தியையும் எனக்குத் தாரும். நான் படிப்பதெல்லாம் அப்படியே என் மனதில் தங்கவும், அவை பரிட்சை நேரத்தில் என் ஞாபகத்திற்கு வரவும், எனக்கு விசேஷித்த ஞாபகசக்தியைத் தாரும்.
 நீர் என் மன்றாட்டைக் கேட்டதற்காக நன்றி. இந்த ஜெபத்தை ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்!

பரிட்சை நாட்களில் செய்ய வேண்டிய ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே!

“ஜெபத்தைக் கேட்கிறவர்” என்ற நாமத்தை நீர் கொண்டிருப்பதால் உம்மிடத்தில் நம்பிக்கையோடு வருகிறேன் (சங்: 65:2). நான் இப்பொழுது எழுதப்போகும் பரிட்சைக்கு தேவையான ஞானம், ஞாபக சக்தி, ஆரோக்கியம், தைரியம்  நீர் எனக்கு அளித்து, உதவி செய்யும்படி மன்றாடுகிறேன். இந்த ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்று அனுபவிக்க தடையாக உள்ள என் பாவங்கள் யாவையும் உம் இரத்தத்தால் கழுவி, என்னை தூய்மைப்படுத்தும். என்னை உம் பிள்ளையாக மாற்றியிருக்கிறபடியால் உமக்கு நன்றி.

 “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” என்ற உமது வாக்குப்படி, உம்பிரசன்னத்தால் என்னை நிரப்பும். என்னோடு வாரும்.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா: 41:10) என்று எழுதியிருக்கிறபடியே, இன்று நான் தேர்வு எழுதப்போகும் அறையில் உம் பிரசன்னத்தை அதிகமாக உணர, எனக்கு உம் அருள் தாரும். உம் வார்த்தையின்படியே, என் கரத்தை உம் வலதுகரத்தினால் தாங்கும். அப்பொழுது என்னால் முழு நிச்சயத்துடன் என் பரிட்சைகளை எழுதமுடியும். எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும், ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதிலை அதுவும் கொடுக்கப்படுகிற நேரத்திற்குள் முழுமையாக எழுதி முடிக்கவும் உதவி செய்யும்.

 என் தேர்வையும், அதின் முடிவுகளையும் உம்முடைய வல்லமையுள்ள கரங்களில் ஒப்படைக்கிறேன். “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி: 21:31) என்ற வாக்கின்படி, எனக்கு ஜெயம் தாரும். இப்பொழுதும் என் ஜெபத்தைக் கேட்கிறதற்காக நன்றி.

இந்த விண்ணப்பங்களையெல்லாம், எனக்கு ஜெயம் கொடுக்கப்போகிற ஜெயக்கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன் எங்கள் நல்லப்பிதாவே. ஆமென்.