"மக்கபேயர் புரட்சி"
(The Maccabees Struggle)
சாதோக்கின் குடும்ப வழி வந்த 'மூன்றாம் ஒனியாஸ்' (Onias III) என்னும் பிரதான ஆசாரியனை நான்காம் அந்தியோகஸ் (Antiochus IV) கி.மு.174 - ல் பிரதான ஆசாரியப் பதவியிலிருந்து இறக்கினான். பின்பு, அதிக இலஞ்சம் வாங்கி 'ஜெய்சன்' (Jason) என்பவனை பிரதான ஆசாரியனாக நியமித்தான். இந்த ஜெய்சன் ஒரு அரசியல்வாதியாகவும், கிரேக்கக் கலாச்சாரத்தை யூதர் நடுவே புகுத்துகிறவனாகவும் காணப்பட்டான்.
இதனால், பிரதான ஆசாரியத்தவம் சீர்கெட்டுப் போயிற்று. கி.மு.169 - ல் நான்காம் அந்தியோகஸ் எகிப்திற்கு எதிராக யுத்தம் அணிவகுத்து பின்பு பின் வாங்கினான். அவன் போகிற வேளையில் எகிப்தில் சில குழப்பங்கள் நடந்தன.
ஜெய்சன் என்பவன் 'மனேலாயு' (Manelaus) என்பவனை 1000 படையாளிகளை வைத்து பதவியிறக்க முயற்சித்தான். மனேலாயு ஒருமுறை பிரதான ஆசாரிய பதவி வகித்தவன். இது நான்காம் அந்தியோகஸிற்கு கோபத்தை வருவித்தது.
நான்காம் அந்தியோகஸ் ஜெய்சனை ஒடுக்கி ஆலயப் பொக்கிஷத்தை எடுத்து விட்டான். நாட்டின் ஐக்கியத்தை நிலைநாட்டுகிறேன் என சொல்லி ஓய்வு நாளையும், விருத்தசேதனத்தையும் தடை செய்தான். ஒழுங்காக நடந்து வந்த பலி ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டது. நியாயப்பிரமாணப் பிரதிகள் எரிக்கப்பட்டன. புறஜாதிகளின் பலிபீடங்கள் எழுப்பப்பட்டு சுத்தமில்லாத மிருகங்களின் பலிகள் இடப்பட்டன. யூதர்கள் பன்றி கறி சாப்பிட வற்புறுத்தப்பட்டனர்.
கி.மு.167 - ல் "ஜீயஸ்" (Zaus) என்னும் கடவுளுக்கு பலிபீடம் எழுப்பப்பட்டு எருசலேமில் பலியிடப்பட்டன. இது யூதர்களுக்கு பரிசுத்தக்குலைச்சலான ஒரு செயல். இக்காரியங்கள் சரித்திரத்தை எழுதும் மக்கபேயருக்கு மிகவும் துக்கத்தைக் கொடுத்தது. பக்தியுள்ள யூதர்களுக்கு இது மிகவும் கோபத்தைத் தூண்டியது. ஆங்காங்கே கலவரம் நடக்கத் தூண்டியது.
எருசலேமில் வடமேற்கு பகுதியான "மோதின்" (Modin) என்னுமிடத்தில் 'மத்தத்தியாஸ்' (Mattathaias) என்பவனும், அவனது மகன்களும் நான்காம் அந்தியோகஸ் நடவடிக்கைகளை எதிர்த்தனர். இராஜாவின் அதிகாரிகள் இந்த இடத்திற்கு வந்து, மத்தத்தியாஸை 'ஜீயஸிற்கு' பலி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதிகாரிகளின் கட்டளைகளுக்கு மத்தத்தியாஸ் கீழ்படிய மறுத்தான்.
கூட்டத்திலிருந்த யூதன் ஒருவன் பலி கொடுத்தான். மத்தத்தியஸிற்கு கோபம் அதிகரிக்கவே, யூதனையும், அதிகாரியையும் கொன்று போட்டான். சீரியர்களுக்கு எதிராக கோஷ்டியை உருவாக்கினான். 'ஹசிடியர்கள்' என்ற ஒரு குழு நான்காம் அந்தியோகசிற்கு எதிராக உருவாக்கப்பட்டது. பக்திற்குரிய யூதர்கள் மதசுதந்திரத்திற்காக போராடினார்கள். அதினிமித்தம் 'ஹஸிடின்ஸ்' என்ற குழு ஏற்பட்டது.
கி.மு.166 - ல் மத்தத்தியாசும், அவன் மகனும் 'யூதாஸ்' (Judas) தலைமைப் பொறுப்பை ஏற்றான். யூதாஸ் என்பவன் செயல்களில் சிங்கத்தைப் போலிருந்தான். இவன் 'யூதாஸ் மக்கபேஸ்' (Judas Maccabees) என அழைக்கப்பட்டான்.
இந்த நேரத்தில் நான்காம் அந்தியோகஸ், பார்த்தியர்களுக்கு எதிராக அணிவகுத்துக் கொண்டு இருந்தான். யூதேயாவுக்கு 'லீசியஸ்' (Lysias) என்பவன் தளபதியாக இருந்தான். யூதேயாவிற்கு அதிகமான படைகள் அனுப்ப லீசியாவிற்கு முடியவில்லை. இத்தருணத்தில் 'யூதகொரில்லா படை' சிரியா மக்களை தாக்கியது. யுத்தத்தில் புதிய முறை கையாளப்பட்டன. சாதாரணமாக யூதர்கள் யுத்தத்திற்கு செல்வதில்லை. ஒருமுறை இதனால் ஓய்வு நாளில் (Sabbath Day) அநேகர் கொல்லப்பட்டனர். அதனால், இப்போது ஓய்வுநாளிலும் யுத்தம் செய்தனர்.
சீரிய மக்கள் அதிகமாக குடியிருந்த சமாரியா 'பெத்-ஹாரன்' (Bath-Horn), 'எம்மாவூர்' (Emmaaur), 'பெத்சூர்' (Beth - Zur) இவைகள் மக்கபேயரால் தோற்கடிக்கப்பட்டது. யூதாஸ் மக்கபேயர் இந்த வெற்றிகளுடன் கி.மு.164 - ல் எருசலேமுக்கு மகிழ்ச்சியுடன் வந்தான். தேவாலயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதிலிருந்து இது 'பிரதிஷ்டை பண்டிகை' அல்லது 'ஹனுக்கா' (Feast of Henukkah) என கொண்டாடி வருகின்றனர். (யோவான்: 10:22).
நான்காம் அந்தியோகஸ் கி.மு.164 - ல் பெர்சியாவில் மரித்தான். அவனுடைய மகன் 'அந்தியோகஸ் V' பத்து வயது மகனாக இருந்தான். தென் நாடுகளின் சமாதானம் உருவாக்க 'லீசியஸ்' மத சமாதானம் கொடுத்தான். ஆனால், மக்கபேயர் ஒரு முழு முறியடிப்பை விரும்பினர். முழு சுதந்திரத்தை விரும்பினர்.
மத்தத்தியசின் மகனும், யூதாசின் சகோதரன் யோனத்தானும் இருந்தனர். கி.மு.160 - ல் யூதாஸ் மக்கபேயர் இறந்தான். கி.மு.160 லிரந்து அவன் சகோதரன் யோனத்தான் கி.மு.142 வரை ஆண்டான்.
யோனத்தான் கொரில்லா படையைத் தொடர்ந்து நடத்தினான். செலுக்கியர்களுக்குள்ளே குழுப்பங்கள் ஏற்பட, அது யோனத்தானுக்கு உதவியாக இருந்தது. மக்களுக்கு நியாயாதிபதியாக 'மிக்மாஸ்' (Michmeash) என்பவன் இருந்தான்.
செலுக்கியர்களுக்குள்ளே தலைமைப் பதவி கிடைக்க விரும்பி 'அலெக்சாண்டர் பால்ஸ்' என்பவனுக்கு யோனத்தான் இராணுவ உதவி செய்தான். கி.மு.142 - ல் யோனத்தான் அலெக்சாண்டர் பால்சின் உதவியுடன் பிரதான ஆசாரியன் ஆனான். அத்துடன் ஏராளமான அரசியல் ஆதிக்கமும் பெற்றுக் கொண்டான். யோனத்தான் கி.மு.143 - ல் மரித்தான்.
'சீமோன்' என்னும் மற்றொரு சகோதரன் ஆட்சிக் காரியங்களை கவனித்தான். 'அக்ரா' (Acra) என்னுமிடத்தில் உள்ள சீரியர்களை துரத்தினான். இப்படி யூதேயாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்தாலும் பக்கத்து நாட்டுத் தொந்திரவுகள் இருந்து வந்தன.
இந்த சுயாட்சி கி.மு.142 - ல் கி.மு.63 வரை நீடித்தது. இக்காலத்தை 'ஹாஸ்மோனியன் ஆட்சி' எனலாம்.