ஜனவரி 21, 2018

அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களும்

Image result for Isaiah: 45:4

“அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களும்”

திறவுகோல் வசனம்: ஏசாயா: 45:4 – “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்…”

பகுத்தறிவும் ஆறறிவும் கொண்டவர்களாக நாம் இருந்தாலும் … நாம் அறியாதவைகள், கண்களுக்கு தெரியாதவைகள், புத்திக்கெட்டாதவைகள், கேட்டிராதவைகள் இவ்வுலகில் இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளாவிடின் நாம் இழந்த எவைகளையும் மற்றும் பெற வேண்டியவைகளை திரும்பப்பெற சாத்தியமில்லாமற்போகும்.

நமக்குரியவைகளும், நம் வாழ்வில் பெற்றிராத பொக்கிஷமும், புதையல்களும் அந்தகாரத்திலும், ஒளிப்பிடத்திலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அல்லது ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என வேதம் சொல்கிறது. 

நமக்குரியதை, நாம் சுதந்தரிக்க வேண்டியதை யார் அந்தகாரத்திலும் ஒளிப்பிடத்திலும் மறைத்து வைத்திருப்பார்கள்? எதற்காக அவைகளை ஒளித்து வைக்க வேண்டும்?

பொக்கிஷங்களையும், புதையல்களையும் நாம் பெறுவதினால், அதை மறைத்து வைத்தவனுக்கு என்ன இழப்பு நேரிடும்? நாம் அதைப் பெறவே கூடாது என்று முடிவெடுத்தது எதற்காக? பெறுவதினால் நாம் என்ன முன்னேற்றம் அடைந்து விடுவோம்?

 எதற்காக அதைக் கொண்டுபோய், அந்தகாரத்திலும், ஒளிப்பிடத்திலும் மனிதன் பெற முடியாதபடி, அறியவோ அடையவோ முடியாதபடி ஒளித்தும் மறைத்தும் வைக்க வேண்டும்?

 அதில் அப்படி என்னதான் இருக்கிறது? நாம் ஏன் அதை அறிய முயற்சிக்கவோ, சிந்திக்கவோ மறுக்கிறோம்? அதை தடைசெய்கிறவனுக்கு என்ன லாபம்?

மனிதன் அறிய முடியாத அந்தகாரத்திற்குள்ளும், ஒளிப்பிடத்திற்குள்ளும் கொண்டு போய் வைக்கும் அளவிற்கு மனிதனுக்கு அது அவ்வளவு அதிமுக்கியமான ஒன்றா?

 அந்தகாரம், ஒளிப்பிடம் என்பதற்கே மனிதனுக்கு அர்த்தம் தெரியாதபோது, அதை அடையவே கூடாது என விரும்புகிற எதிரி எதற்காக அதற்கு வெண்கல கதவும் இருப்புத் தாழ்ப்பாளும் போட வேண்டும்? அப்படியானால், அதில் ஏதோ இரகசியம் இருக்கிறது என தெரிகிறது. ஆகவே, அதை ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபத்தோடு தியானிப்போம் வாருங்கள்.

அந்தகாரம்


“அந்தகாரம்” என்றால் என்ன? அந்தகாரம் என்பது “பிசாசின் ஆதிக்கம் நிறைந்திருக்கிற இடம்” ; “இருள்” ; “பிசாசின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்” என பல பொருள்படும்.

அந்தகாரத்திற்கு இரண்டு பாதுகாப்பு கவசம் உண்டு. 1. வெண்கல கதவு 2. இருப்புத்தாழ்ப்பாள்.

பொக்கிஷம் புதையல்களில் இரண்டு வகை உண்டு. 1. ஆவிக்குரியவை 2. பூமிக்குரியவை.

இவ்விரண்டையும் சாத்தான் "அந்தகாரத்திலும் ஒளிப்பிடத்திலும்" மறைத்து வைத்திருக்கிறான்.


  • அந்தகாரம் என்பது – “ஒருவரிடத்தில் உள்ள ஆவிக்குரிய பொக்கிஷங்களை திருடி பதுக்கி வைக்குமிடம்”


  • அந்தகாரம் என்பது – “மனிதன் தான் இழந்ததை தன்னுடைய அறிவின் மூலம் அறியவோ, அடையவோ முடியாத இடம்”


  • அந்தகாரம் என்பது – “கர்த்தருடைய பிள்ளைகளின் ஆசீர்வாதங்கள் அடைபட்டுக்கிடக்குமிடம்”

வேதம் அதைக் குறித்து என்ன சொல்கிறது என பார்ப்போம்.

உபாகமம்: 28:29; யோபு: 5:14 – பட்டப்பகலில் தடவி திரிதல், வாய்க்காதே போகும் நிலை, உதவியற்றநிலை, ஒடுக்கப்பட்ட நிலை, பறிகொடுக்கும் நிலை
யோபு: 3:4 – தேவன் விசாரியாத இடம்; ஒளி பிரகாசியாத இடம்
யோபு: 3:6 – “சந்தோஷப்படுகிற நாட்களல்லாத இடம்”
யோபு: 23:17; ஏசாயா: 58:10 – “இருளான இடம்”
யோபு: 37:19 – “முறை தப்பிப்பேசும் இடம்”
சங்கீதம்: 11:2 – “செம்மையான இருதயத்தார் மேல் தாக்குதல் நடத்தும் இடம்”
சங்கீதம்: 82:5 – “அறியாமலும் உணராமலும் செய்யுமிடம்”
சங்கீதம்: 107:11 – “மரண இருளிலும், ஒடுக்கத்திலும், இரும்பிலும் கட்டுண்டு கிடக்கும் இடம்”
நீதிமொழிகள்: 2:13 – “நீதிநெறிகளை விட்டு விடும் இடம்”
ஏசாயா: 5:30 – “வியாகுலம் நிறைந்த இடம்”
ஏசாயா: 29:15 – “தேவனுக்கு எதிர்த்து நிற்கும் இடம்”
எசேக்கியேல்: 8:12 – “விக்கிரகங்கள் நிறைந்த இடம்”
மத்தேயு: 27:45; மாற்கு: 15:33 – “மரண இருள் சூளும் நேரம்”
எபேசியர்: 5:11 – “கனியற்ற இடம்”
2பேதுரு: 2:4; யூதா: 1:6 – “பாவஞ்செய்த தூதர்களை கட்டி வைக்கும் இடம்”

அந்தகாரத்தில் வாழும் ஜனங்கள், அந்தகாரத்திற்குட்பட்டவர்களின் வாழ்க்கை முறைகள், சுபாவங்கள் எப்படியெல்லாம் இருக்கும் என்பது மேற்கண்ட வசனங்கள் நமக்கு விளங்கப்பண்ணுகிறதல்லவா?

இப்படிப்பட்ட இடத்தை பலவானாகிய சாத்தான் ஆக்கிரமித்துள்ளான். இதை உடைக்க வல்லவர் யார்? முறிக்க வல்லமையுள்ளவர் யார்? உள்ளே இருக்கும் பொக்கிஷத்தையும் புதையலையும் நமக்காகத் தருவித்துக் கொடுப்பவர் யார்?

ஏசாயா: 9:2; மத்தேயு: 4:15 – “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது

ஒளிப்பிடம்


ஒளிப்பிடம் என்பது – அந்தகாரத்தில் உள்ள ஒரு “ உட்புறத்தில்உள்ள அறை” என கூறலாம். கீழே உள்ள படத்தை கவனியுங்கள்
 


                                                                                                                  
அந்தகாரத்தில் பொக்கிஷத்தையும், ஒளிப்பிடத்தில் புதையல்களையும் பிசாசு மறைத்து வைத்துள்ளான். 

அந்தகாரம் என்பதே ஒரு இருள் நிறைந்த இடம். அந்த அந்தகார இருளுக்குள் ஒரு ஒளிப்பிடத்தை சாத்தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறானாம்.

அந்தகார இருளுக்குள் - ஒரு இருள் - "காரிருள்". அந்தக் காரிருள் நிறைந்த இடமே ஒளிப்பிடம்.

பொக்கிஷம்


ஏசாயா: 33:6 – “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்;கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

நீதிமொழிகள்: 1:7 – “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்

பொக்கிஷத்திற்குள் இருப்பவை: 1. பூரண இரட்சிப்பு 2. ஞானம் 3. அறிவு –   பூரண இரட்சிப்பும், தேவஞானமும், கர்த்தரைக்குறித்து அறிகிற அறிவும் பொக்கிஷமாக தேவன் நமக்குத் தந்துள்ளார்.

புதையல்


நீதிமொழிகள்: 2:4 – “அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்” – எதை தேட வேண்டுமாம்? ஞானத்தை.

நீதிமொழிகள்: 2:3 – “ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,” 

நீதிமொழிகள்: 2:1,2 – “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,”

தேவன் தரும் ஞானத்தை புதையல் தேடுகிறதுபோல தேடு. கிடைத்த ஞானத்திற்கு செவி கொடு. ஞானம் சொல்லும் புத்தியையும், வார்த்தைகளையும், கட்டளைகளையும் பத்திரப்படுத்து.

பொக்கிஷமும் ஞானம்தான். புதையல் என்பதும் ஞானம்தான். 
அப்படியானால் ஞானம் என்பது எதைக் குறிக்கிறது? ஞானம் என்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கிறது. இந்த ஞானத்தை அடைபவர்களுக்கு பரலோக பாக்கியம் உண்டு. பூலோக நன்மைகளும் உண்டு.

இதை அடைவதற்குத்தான் எத்தனையோ ஆன்மீகவாதிகள் தேடித்தேடி அலைகின்றனர். சரியான இடத்தில் தேடாததினால் தவறானதை கண்டடைந்து இவ்வுலக மக்களுக்கு தாங்கள் கண்ட தவறானவைகளையே கொள்கைகளாக, மதங்களாக, மார்க்கங்களாக விட்டுச் சென்றனர். அதை அறியாத மக்கள் இன்னும் பகலிலும் தடவித்தடவி திரிகின்றனர் என்று வேதம் கூறுகிறது.

இந்த பொக்கிஷமாகிய ஞானமும், புதையலாகிய ஞானமும் நமக்கு கொடுக்கும் நன்மைகள் :– ஆவிக்குரிய ஆசீர்வாதமும், பூமிக்குரிய ஆசீர்வாதமும்தான். இவ்விரண்டு நன்மைகளையும் ஜனங்கள் சுதந்தரிக்கக்கூடாது என்பதற்காகத்தான் சாத்தான் அவ்விரண்டையும் அந்தகாரத்திலும், ஒளிப்பிடத்திலும் மறைத்து வைத்தான். அவைகளை சுதந்தரிப்பதற்குத்தான் தேவன் வெண்கல கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறிக்கிறார்.

ரோமர்: 10:12,13 – “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்”

அந்தகாரத்தில் இருப்பது பூமிக்குரிய ஆசீர்வாதம்; ஒளிப்பிடத்தில் இருப்பது (இரட்சிப்பு) ஆவிக்குரிய ஆசீர்வாதம். 

சாத்தான் முதலில் உலக ஆசீர்வாதத்தையும் பின்பு ஒளிப்பிடத்திலே இரட்சிப்பையும் ஒளித்து வைத்திருப்பதின் இரகசியம் என்னவென்று பாருங்கள். உலக ஆசீர்வாதம் போனாலும் பரவாயில்லை. ஆவிக்குரிய உன்னத ஆசீர்வாதத்தை விட்டுக் கொடுக்க அவன் மனதாயில்லை.

ஆதியாகமம்: 14:21 – “சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்”.

யாத்திராகமம்: 10:24 – “அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்” 

யாத்திராகமம்: 10:10,11 – “அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, …”. “… புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்…” .

ஆத்துமாக்களின் விலை என்னவென்று நம்மை விட சாத்தானுக்கு நன்கு தெரியும். அந்த ஆத்துமாவானது பூரண ரட்சிப்பும், ஞானமும், கர்த்தரைக் குறித்த அறிவும் அடைந்துவிடக்கூடாது என்பதில் சாத்தான் எவ்வளவு தீவிரமாய் கவனம் செலுத்துகிறானென்று பாருங்கள்.

 பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் உயிரற்ற ஜடப் பொருட்கள். ஒன்றுக்கும் உதவாதவைகள். அப்பிரயோஜனமானவைகள். ஆவிக்குரிய ஆசீவாதங்கள் அனைத்தும் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற உயிருள்ள ஆத்துமாக்கள்.

 உயிரற்ற உலகப் பொருட்களின் மேல் மனிதனுக்கு ஆசையைத்தூண்டி விட்டு, விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை திருடிக்கொள்வது சாத்தானின் தந்திரங்களில் ஒன்று. விழிப்பாயிருங்கள். ஆறறிவுள்ள பகுத்தறிவாளனாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டுவிடாதிருங்கள்.

வெண்கல கதவு


மிகவும் வலிமையானது; தட்டினால் பலத்த ஓசை எழுப்பக்கூடியது. எதற்காக ஓசையுள்ள கதவை தெரிந்தெடுத்தான்? 

சாத்தான் விழுந்துபோன தூதன் என்பதை நாம் அறிவோம். எனவே, அவனுக்கு “சர்வ வியாபகத்தன்மை” என்பது அவனுக்கு இல்லை. தேவனைத் தவிர வேறு எவருக்கும், எதற்க்கும் சர்வவியாபகத்தன்மை என்பது கிடையாது. 

சர்வ வியாபகத் தன்மை என்பது என்ன?

“சர்வ வியாபகம்” என்பது “எங்கும் நிறைந்திருத்தல்” என்று பொருள்படும். நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வியாபகர். எங்கும் நிறைந்தவர். 

ஆதார வசனங்கள்:

சங்கீதம்: 97:5 – “சர்வ பூமியின் ஆண்டவரின் பிரசன்னம்”
சங்கீதம்: 103:19 – “கர்த்தரின் ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது”
ஏசாயா: 54:5 – சர்வ பூமியின் தேவன்”
ரோமர்: 9:5 – “சர்வத்திற்கும் மேலான தேவன்”

சர்வ வியாபகத்தின் விளக்கம்: 

சாத்தானோ, தேவதூதனோ யாராக இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும், வீடுகளிலும், மனிதருக்குள்ளும் இருக்க இயலாது. அது முடியாத காரியம். 

ஆனால், கர்த்தராகிய தேவனோ எல்லா நேரங்களிலும், எல்லா சமயங்களிலும், எவ்விடத்திலும், பூமியின் எல்லைகளிலெங்கிலும் ஒரே சமயத்தில் அனைத்து இடங்களிலும், அனைவருக்குள்ளும் இருக்கவும், செயலாற்றவும், கேட்கவும், பேசவும் இருக்கவும் முடியும். ஆகவேதான் அவர் சர்வ வியாபகர் என்றும், சர்வ வல்லவர் என்றும் வேதம் குறிப்பிடுகிறது. ஆமென்! அல்லேலூயா!

1இராஜாக்கள்: 18:27 – “மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்”

எலியா – சாத்தானை பரியாசம் பண்ணுகிறான். 1. தியானம் (தியான பீடங்கள்) 2. அலுவல் 3. பிரயாணம் 4. தூக்கம்

மனிதனைப்போல சாத்தானுக்கும் இவ்வித பலவீனம் இருக்க காரணம் என்ன? பாவமானது மனிதனை மட்டும் பாதிக்கவில்லை. சாத்தானையும், மனிதனையும், உலகத்தையும் பாதித்தது. ரோமர்: 8:22 – “ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது”.

எனவே, சாத்தானுக்கு சர்வ வியாபகத்தன்மை இல்லாததினால், அவனை அழைக்க அழைப்பு (கோயில்) மணி ஓசை மற்றும் வெண்கல கதவின் சத்தம் தேவைபடுகிறது. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் … இந்தியாவில் இருக்கும் ஒரு மனிதனை தாக்கி அவனது ஆத்துமாவை கட்டிப்போட்டுவிட்டு, ஜெர்மனுக்கோ, ஜப்பானுக்கோ போய்விட்டால் அவனை யாராவது இயேசுவின் நாமத்தினால் விடுவிக்கவோ, ஜெபிக்கவோ, கட்டுகளை அவிழ்க்கவோ முற்பட்டால் எப்படி அவனுக்குத் தெரியும்? அந்த அந்தகாரக்கட்டுகளை உடைப்பதற்கு முன்பு, வெண்கல கதவையும், இருப்புத் தாழ்ப்பாளையும் உடைக்கப்பட வேண்டும். அப்போது வெண்கல கதவு பலத்த ஓசை எழுப்பும். அதைக் கேட்டு அவன் ஓடிவந்து அதைத் தடுக்கவோ, அல்லது மேலும் கட்டுக்களை வலுப்படுத்தவோ, அல்லது தன்னைக் காத்துக் கொள்ளவோ உதவியாயிருக்கவே – வெண்கல கதவை சாத்தான் போட்டு வைத்திருக்கிறான்.

இருப்புத்தாழ்ப்பாள் (Bars of Iron)


உறுதியானது. வலிமை மிக்கது. ஆதிகால அரசர்களிலிருந்து இக்கால அமெரிக்கர்கள் வரையிலும் தாழ்ப்பாள்கள் என்றாலே அது இரும்பிலேதான் செய்யப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணிகளுக்கும்கூட இரும்புக் கம்பிகளே வலிமைமிக்கதாகவும், தரம் வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. இருப்புத் தாழ்ப்பாள்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் “Bars of Iron” என்று உள்ளது. அதாவது பார் சைசில் மொத்தமாக சாத்தான் தாழ்ப்பாளை போட்டு வைத்திருக்கிறான். சாதாரண கட்டுகளல்ல. வலிமை வாய்ந்த கட்டுகளால்தான் ஒவ்வொரு முறையும் கட்டுகிறான். அதை உடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? முழங்கால்களை முடக்கினால் மட்டும் போதுமானதா? போதுமானதல்ல. அப்படியானால், அதனோடு வேறு எதை சேர்க்க வேண்டும்?

பொக்கிஷத்தையும், புதையலையும் அடைய ஒரேவழி – அபிஷேக நிறைவே

ஏசாயா: 10:27 – “அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்”
எசேக்கியேல்: 47:1-12 வரை வாசித்துப் பாருங்கள்: அபிஷேகத்தைப் பெறுவதற்கு திரும்பவும் ஆலயத்தின் வாசலுக்கு அழைத்து வரப்பண்ணுகிறாராம். எதற்கு?

அபிஷேகம் பெறாதவர்கள் அபிஷேகம் பெற்று நிறைவடைய வேண்டும். அபிஷேக நிறைவடையும்போதுதான் சாத்தானின் கட்டுகளை அறுத்து பெற வேண்டியதை பெற முடியும். அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள திரும்பவும் பெந்தேகொஸ்தே சபைக்குள் வர ஆவியானவர் அழைப்புக் கொடுக்கிறார். 

பெந்தேகொஸ்தே அனுபவமில்லாத ஆவியின் நிறைவு அந்நியபாஷை அடையாளமில்லாத அநேக சபைகள் இன்று ஆவிக்குரிய உலகில் ஏராளம் உண்டு. அங்கே ஆவிக்குரிய ஜனங்கள் அபிஷேக நிறைவின்றி வறட்சியோடு காணப்படுகிறார்கள். அவ்வறட்சி நீங்கிட, திரும்பி, மீண்டும் பெந்தேகொஸ்தே ஆலய வாசலுக்குள் கடந்துவர தேவபிள்ளைகள் முன்வர வேண்டும்.

47:1 – “ஆலயத்தின் வாசலுக்கு திரும்பிவரப் பண்ணினார்”
47:3 – “கணுக்கால் அளவு
47:4 – “முழங்கால் அளவு; இடுப்பளவு
47:5 - :நீச்சல் ஆழம்; கடக்க முடியாத அளவு. – இதுதான் அபிஷேக நிறைவு என்பது.

பரிசுத்த ஆவியானவரின் அபிஷேக நிறைவு தரும் ஆசீர்வாதங்கள்:

1.   ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் 2. பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்

இவைகளைப் பெற – ஆவியின் நிறைவை வாஞ்சிப்போமாக. ஆவியின் நிறைவின்றி ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மற்றும் பூமிக்குரிய நன்மைகள் பரிபூரணமாக நமக்கு கிடைக்காது. அவ்வாறு நிறைவின்றி கிடைத்தாலும் நிம்மதி இராது. பலன் இராது. அது நிலைத்திராது.


உலக ஆசீர்வாதங்களை அந்தகாரத்திலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை ஒளிப்பிடத்திலும் மறைத்து வைத்துள்ளான். அதை நம் சுயபெலத்தால் சுதந்தரிக்க முடியாது. அறிவு பெலத்தால் அடையவும் முடியாது. அதை தேவனே நமக்காக தருவேன் என்கிறார். நாம் செய்ய வேண்டியது இதுதான். முழங்கால்களை முடக்குவோம். ஆவியின் அபிஷேகத்தை அந்நியபாஷை அடையாளத்தோடு பெற்றுக் கொள்வோம். ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள அபிஷேகம் நிறைந்த திருச்சபைக்கு திரும்பவும் திரும்பி வரும்படி ஆவியானவர் அழைக்கிறார். கீழ்ப்படிவோம்.

ஆவியின் நிறைவினால் சாத்தானின் கட்டுகள், கதவுகள் உடையும். தாழ்ப்பாள்கள் முறியும். அந்தகாரத்திலும், ஒளிப்பிடத்திலும் உள்ள பொக்கிஷங்களும், புதையல்களும் உங்களுடையதாகும். ஆவிக்குரிய பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தமாகும்.

முழங்கால் ஜெபமும் அபிஷேக நிறைவும் – வெண்கல கதவுகளையும், இருப்புத்தாழ்ப்பாள்களையும் உடைக்க உதவி செய்யும். உங்களுடைய ஆவிக்குரிய குறைகளும், பூமிக்குரிய குறைகளும் நீங்கும். ஆமென்! அல்லேலூயா!