டிசம்பர் 06, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - IV


6. நற்குணம் - Goodness

நற்குணம் - மற்றவர்களுக்கு நன்மை செய்யும் குணம், தீங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டு விலகுவதற்கான வாஞ்சை

மத்தேயு:5:44 - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."

- நமது நண்பர்களுக்கு மட்டுமின்றி, நம்முடைய சத்துருக்களையும் சிநேகித்து, சபிக்கிறவர்களை ஆசீர்வதித்து, பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து, நிந்திக்கிறவர்களுக்கு ஜெபம் செய்து நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தலாம்.

ரோமர்:12:20 - "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்."

நீதிமொழிகள்:25:21 - "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு."

- நமது சத்துருவாக இருந்தாலும் அவர்களுக்கு நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

ரோமர்:15:14 - "என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்;"

- நாம் சகலவித நற்குணங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

மத்தேயு:5:16 - "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது."

- நம்மிடத்தில் மற்றவர்கள் நற்குணங்களைக் காணும்போது தேவ நாமம் நம் மூலமாக மகிமைப்படும்.


நற்குணமுள்ள ரூத்: 



  •   தன் கணவன் இறந்த பின் மாமியாரை விட்டு தன் இனத்தாரிடம் சென்று மறுமணம் செய்து வசதியாக வாழ விரும்பாமல், வேதனையின் மத்தியிலும் தன் மாமியாரை நேசித்து, வாழ்நாள் முழுவதும் ஆதரிக்கும் நற்குணம் ரூத்திற்கு இருந்தது.  (ரூத்:1:15-18)



  •    சோம்பலாயிருந்து நகோமிக்கு பாரமாய் இருக்காமல் சுறுசுறுப்பாய் வேலை செய்து, தனக்கு மட்டுமன்றி, தன் மாமிக்கும் ஆகாரம் கொண்டு வந்தாள். தான் வயலில் சாப்பிட்ட போது, சிறிது எடுத்து வைத்திருந்து நகோமிக்கும் கொடுத்தாள். தன் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவளாக இருந்தாள். 


ரூத்:2:14,18 - "பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்."


  •  தனக்கு துணையை தானே தேடிக்கொள்ளாமல், தேவனுடைய வழியின்படி செல்வதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள். 


ரூத்:3:10,11 - "அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்."


  • ரூத்தின் நற்குணம் போவாஸைக் கொண்டு வந்தது. அவள் நற்குணமுள்ளவள், குணசாலி என்று ஊரெல்லாம் பரவியது. மேலும் அரசனாகிய தாவீதையும் இயேசு கிறிஸ்துவையும் வாரிசாக பெறும் பாக்கியம் பெற்றாள்.


இப்படிப்பட்ட நற்குணமுள்ள ரூத்தின் பெயர் இன்று வரை சொல்லப்பட்ட வருகிறது. நற்குணத்தை உடையவர்கள் தேவனுக்கு புகழ்ச்சியைக் கொண்டு வருவார்கள்.


7. விசுவாசம் - Faithfulness

கிரேக்க வார்த்தை - "பிஸ்டிஸ்"

விசுவாசம் - அனுதின வாழ்வின் தேவைகளுக்காக, வழிநடத்துதலுக்காக நாம் தேவனிடம் சார்ந்திருப்பது (அ) நம்பத்தக்கவர்களுக்காக இருப்பது

நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது வாழ்வின் ஒவ்வொரு பிரச்சனையிலும் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

1 யோவான்:5:4 - "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

எபிரேயர்:11:1 - "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."

தோமாவைப் போல் "பார்த்தால் தான் நம்புவேன்" என்பது விசுவாசமல்ல; ஆபிரகாமை போல் காணாதிருந்தும் நம்புவதே விசுவாசம்.

 2கொரிந்தியர்:5:6 - "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்."

நமது விசுவாசம் வாக்குத்தத்தங்களைக் கொண்டு வரும்! நாம் எல்லா காரியங்களிலும் தேவனை நம்பி, அவரை விசுவாசித்தால் அவர் நமக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுப்பார்.

ரோமர்:1:17 - "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது."

யோவான்:1:50 - "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்."

இயேசு நாத்தான்வேலிடம் கேட்ட கேள்வி இதுதான் - "நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய் ?"

யோவான்:20:29 - "அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்."

ஏனென்றால் தேவன் நமது விசுவாசத்தின் அளவை சோதிக்கிறார். நமது விசுவாசம் எத்தகையது என்று தேவன் பார்க்கிறார். நாம் காண்கிறதினால் தேவனை விசுவாசிக்கிறோமா அல்லது சொன்னதினால் விசுவாசிக்கிறோமா அல்லது காணாதிருந்தும் விசுவாசிக்கிறோமா என்றெல்லாம் அவர் நம்மை சோதித்தறிகிறார்.

எபேசியர்:3:12 - "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."

நாம் விசுவாசமென்னும் கேடகத்தை பிடித்தவர்களாய் எந்த பிரச்சினை வந்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். தேவனை விசுவாசிக்கிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை.

2 தீமோத்தேயு:4:7 -  விசுவாசத்தை காத்துகொள்ள வேண்டும்

தீத்து:1:14 - விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

எபிரேயர்:11:17 - 40 - விசுவாசத்தினாலே ஜெயித்தவர்கள்

செயலில் காட்டப்பட வேண்டிய விசுவாசம்:


யாக்கோபு:2:18 - "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது"

எல்லா காரியங்களிலும் விசுவாசம் காணப்பட வேண்டும். நம் குடும்பத்திலும் சுற்றுபுறத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

மாற்கு:2:5 - "இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்."

இயேசு நோயாளிகளை குணமாக்கும்போது, அவர்களது விசுவாசத்தை கண்டு குணமாக்கினார். ஆகவே நமது செயலில் விசுவாசம் காணப்பட வேண்டும். நமது விசுவாசத்தின் அளவை கண்டு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

விசுவாச பலவீனம்:


வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும் விசுவாசத்தில் பலவீனம் ஏற்படக்கூடாது.


  • ஆபிரகாம் தனக்கு வயதாகி கொண்டே வருகிறது என்று தன்னுடைய விசுவாசத்தில் சோர்ந்து போகாமல் தனக்கு ஒரு மகனை தருவார் என்று உறுதியுடன் வாக்குத்தத்தங்களை விசுவாசித்தார். சரீரம் செத்து போயிற்று என்று சொல்லப்பட்டாலும் தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு உயிர் இருந்தது. ஆகவே ஏற்ற காலத்தில் ஒரு மகன் பிறந்தான். (எபிரேயர்:11:12)


விசுவாசத்தில் பலவீனம் ஏற்பட்டால், தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் பலவீனம் ஏற்படும். ஆபிரகாம் ஒரு கட்டத்தில், விசுவாசத்தில் பலவீனப்பட்டு ஆகார் மூலமாக சந்ததி உண்டாக செய்ததினால், தொடர்ந்து அந்த சந்ததி மூலம் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டது.


  • பேதுரு கற்பாறையாக இருந்தாலும் விசுவாசத்தில் பலவீனப்பட்டவனாக இருந்தான். இயேசுவை விசுவாசித்து கடலின் மேல் நடக்க முற்பட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் சந்தேகத்தினால் தண்ணீரில் மூழ்க நேரிட்டது. (மத்தேயு:14:31) பின் நாட்களில் அவன் விசுவாச வீரனாக மாறி பெரிய காரியங்களை செய்தான்.


யோபுவின் வாழ்க்கையிலும் விசுவாச சோதனை வந்தது. ஆனாலும் பலவீனத்துக்கு இடங்கொடுக்காமல், எல்லாவற்றையும் தாங்கி கொண்டும் சகித்து கொண்டும் தேவனை இன்னும் அதிகமாக விசுவாசித்தான். கர்த்தர் அவனது விசுவாச அளவினை பார்த்து அவன் முன்னிலைமையை பார்க்கிலும் அவன் பின்னிலைமையை அதிகமாக ஆசீர்வதித்தார். 

"தேவன் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் 
அவர்மேல் விசுவாசம் வை; திரும்ப கொடுக்கப்படும்"

தொடரும்....

டிசம்பர் 02, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits - Part III

4. நீடிய பொறுமை - Long Suffering

நீடிய பொறுமை - சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொள்ளுதல்

2 பேதுரு:3:9 - "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்."

தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இராதிருந்தால், நாம் பாவம் செய்த போது நம்மை அழித்திருப்பார். அவர் நாம் மனந்திரும்புவதற்கு அநேக வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறார்.

எபிரேயர்:12:2 - "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."

1பேதுரு:2:23 - "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்."

தம்மால் உருவாக்கப்பட்ட மனிதன் தம்மை அவமதித்து, பாடுபடுத்தி, சிலுவையில் அறைந்த போதும் அவர் நீடிய பொறுமையோடு சகித்தார்.

நீடிய பொறுமையுடன் இருந்த பரிசுத்தவான்கள்:


1. யோபு

யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."

தன்னுடைய பொருள்கள் யாவும் அழிந்து போன போதிலும், தன் பிள்ளைகள் யாவரும் சடுதியில் மரணமடைந்த போதிலும், தன் உடல் முழுவதிலும் வியாதியால் வேதனைப்பட்ட போதிலும், தன் மனைவி, நண்பர்கள் நிந்தித்த போதிலும் தேவனை குறை கூறாமல் யாவற்றையும் சகித்துப் பொறுயோடே இருந்தான்.

2. தாவீது

தான் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட போதிலும், அரசராக இருந்த சவுலின் கொடுமைகளை பொறுமையுடன் சகித்து, சவுலை கொல்வதற்கு தனக்கு வாய்ப்புகள் கிடைத்த போதும் அதை வெறுத்து தள்ளினான். அபிஷேகம் பண்ணப்பட்டவர் மேல் தன் கையை போட கூடாது என்று தன் காலம் வரும் வரை பொறுமையுடன் சோதனைகளை சகித்து வந்தான்.

இவர்கள் இருவருமே பொறுமையுடன் துன்பங்களை சகித்துக்கொண்டனர். முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டனர்.  யோபுவின் முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை மேலானதாக இருந்தது. தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகி 40 வருஷம் அரசாண்டான்.

நீதிமொழிகள்:25:15 - "பொறுமையினால் பிரபுக்களையும் சம்மதிக்கப்பண்ணலாம்"

லூக்கா:21:19 - "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்."

யாக்கோபு:1:4 - "நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது."

1பேதுரு:2:19,20 - "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்."

எப்பொழுது பொறுமையை இழக்கிறோம்?


  • தேவனைப் பார்க்காமல் சூழ்நிலையை பார்க்கும்போது பொறுமையை இழக்கிறோம்.


சங்கீதம்:106:32,33 - "மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்."

எண்ணாகமம்:20:3- 11 - மோசே தேவனை பார்க்காமல் தன்னை சுற்றியுள்ள முறுமுறுக்கும் ஜனங்களை பார்த்து தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான். 


  • தேவனை முழுமையாக நம்பாமல், மாம்சத்துக்கு இடம் கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம்.


ஆதியாகமம்:16:2-4 - "சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்"

ஆபிரகாம் தேவன் கொடுத்த வாக்கை விசுவாசிக்காமல், தன் மனைவியின் பேச்சை கேட்டு ஆகார் மூலம் தன் சந்ததி உருவாகட்டுமென்று தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான்.


  • கோபத்திற்கு இடங்கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம். 
பிரசங்கி:7:8,9 - "ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்."


பொறுமையின்மையின் விளைவுகள்:


  • பகை
  • பிரிவினை 
  • சண்டை
  • கொலை


நாம் நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம் தேவன் நீடிய பொறுமையாக இருந்தது போல நாமும் அதே பண்பை எல்லா சூழ்நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும்.

5. தயவு


தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:6,7 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தர் நம்மேல் வைத்த தயவினால், பாவத்திலிருந்து நம்மை இரட்சித்து, நீதிமானாக்கி, ஆபிரகாமின் பிள்ளைகளாகும் பாக்கியத்தை தந்து, உன்னத பரலோகத்தை பெறும்படி செய்தார்.


தயவுள்ளவனாயிருந்த யோசேப்பு:

         தன் சகோதரர்கள் தன்னை பகைத்து, துன்புறுத்தி, அடிமையாக விற்ற போதிலும், தன்னுடைய ஆளுகைக்கு கீழ் வந்தபோதிலும் அவர்களை வெறுக்காமலும், கடிந்து கொள்ளாமலும், தண்டிக்காமலும் தயவாய் அவர்களை மன்னித்து இரக்கம் பாராட்டினான்.
(ஆதியாகமம்:50:15-21)

தயவுள்ளவனாயிருந்த தாவீது:

         சவுல் தன்னை எவ்வளவு தான் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்தாலும், தன்னை ஏமாற்றியிருந்தும், அவன் இறந்த பின் அவன் வீட்டாரை அழிக்காமல் அவர்களுக்கு தயை செய்தான். யோனத்தானின் மகன் மேவிபோசெத்திற்கு சவுலின் நிலங்களை திரும்பக் கொடுத்து ஒரு இளவரசன் போல அனுதினமும் தன்னுடைய பந்தியில் விருந்துண்ணும் படி தயை செய்தான். (2சாமுவேல்:9:1-13)

தயவுள்ளவர்களாயிருக்க நாம் செய்ய வேண்டியவை:


1. மன்னிக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

கொலோசெயர்:3:12,13 - "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

மற்றவர்களுடைய குறைகளை மிகைப்படுத்தாமல், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் மன்னிக்க வேண்டும்.

2. கடுஞ்சொல்லை தவிர்த்து இனிமையான சொல்லை பேச வேண்டும்

எபேசியர்:6:9 - "... கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்."

நீதிமொழிகள்:25:15 - "நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்."

மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தேவ அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தும் போது நம்மில் உள்ள தேவ சாயலை கண்டு அநேகர் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க வாய்ப்புள்ளது.

3. இரக்க குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

லூக்கா:10:29-37 -  நல்ல சமாரியனை போல மற்றவர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்.

நாம் தயவை தரித்துக்கொண்டு (கொலோசெயர்:3:12), பிறர் குறைகளை பெரிதாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மன்னித்து இரக்கம் காட்டவேண்டும்.



தொடரும்......