செப்டம்பர் 05, 2012

"செலோத்தியர்"

"செலோத்தியர்"  
(Zelotes)
 
புதிய ஏற்பாட்டில் 'செலோத்தே என்னப்பட்ட சீமோன்'  என்னும் ஒரு சீடனைப் பற்றி வாசிக்கிறோம்.  (லூக்கா: 6:15; அப்போஸ்தலர்: 1:13). 'செலோத்தே' என்னும் இச் சொல் 'கடும் முனைப்பானவர்கள்' என்று பொருள். 'கானானியர்' என்ற அரமேயிக் சொல்லின் பொருளுக்கு ஒப்பான கிரேக்கச் சொல் 'செலோத்தியர்' என்பதாகும். கிரேக்கச் சொல் 'சீலாஸ்' (Zelos). இதிலிருந்தே 'செலோத்தே' என்னும் சொல் வந்துள்ளது. 

இவர்கள் விக்கிரக வழிபாடு, மார்க்க துரோகம், வேற்று ஆளுகை ஆகியவற்றை முழுமூச்சாக எதிர்த்தனர். இது சிறையிருப்புக்குப் பின்  யூத மார்க்கத்தில் எழுந்த ஒரு வகுப்பானாலும், இதிலுள்ள மக்கள் பழைய ஏற்பாட்டில் தங்கள் முன்னோடிகளாக சிலரைக் கண்டனர். யாக்கோபின் குமாரர்களில் சிமியோனும், லேவியும், செலோத்தேயர் எனப்பட்டனர். (யூபிலி: 30:5-20; யூடித்: 9:2-4). ஏனெனில் , தங்கள் சகோதரியாகிய தீனாளைக் கற்பழித்த சீகேமியரை இவர்கள் வைராக்கியத்துடன் பழி வாங்கினர். (ஆதியாகமம்: 34:4).

எண்ணாகமம்: 25:1-8 - ல் இன்னொரு வரலாறு தரப்படுகிறது. இஸ்ரவேலன் ஒருவன் மீதியானியப் பெண்ணொருத்தியை பாளையத்திற்குள் கொண்டு வந்து விட்டான். அவ்வேளையில் பினெகாஸ் என்பவன் அவர்கள் இருவரையும் ஈட்டியால் ஊடுருவிக் குத்தி, இஸ்ரவேலின் மேல் வர இருந்த தேவகோபத்தை அகற்றினான். இவனும் செலோத்தேயன் எனப்பட்டான். 

எலியாவும் செலோத்தியனாக கருதப்பட்டான். பின்னால், மக்கபேரும் இத்தகைய வைராக்கியவாதிகளாக காணப்பட்டனர். (1மக்கபேயர்: 2:15-28).

புதிய ஏற்பாட்டில் சீமோன் இயேசுவின் சீடனாகும் முன்பு செலோத்திய வகுப்பைச் சார்ந்தவனாக இருந்திருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் செலோத்தே வகுப்பு, ஒரே கடவுள் நம்பிக்கையை ஆதரித்து வைராக்கியமுடன் காணப்பட்ட ஒரு யூத சங்கமாக இருந்திருக்கலாம். பவுலும் இதனைச் சார்ந்தவனாக இருந்திருக்கக் கூடும். (கலாத்தியர்: 1:13,14; பிலிப்பியர்: 3:6).

மக்கபேயர் காலத்திலிருந்து எருசலேம் அழிவு காலம் வரையிலும் அயல் நாட்டார் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக வாய்ப்பு கிடைத்தபொழுதெல்லாம் கலகம் செய்தவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.