"சதுசேயர்"
(Sadducee)
'சதுசேயர்' என்ற பதம் 'சாதோக்' (Zadok) என்ற பதத்திலிருந்து வந்திருக்கலாம். சாதோக் தாவீது ராஜாவின் காலத்தில் பிரதான ஆசாரியனாக இருந்தவன். (1இராஜாக்கள்: 2:35). சதுசேயர் என்பதற்குரிய கிரேக்கச் சொல் "சாடுக்கை". ஒருமையில் "சாடுக்கையாச்". இதற்கு 'பழமைப் பற்றாளர்' என்று பொருள்.
சதுசேயர்கள் கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த ஒரு முக்கியமான யூத மதப் பிரிவினர். பெரும்பாலான யூதப் பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களே. ஆனால், எல்லா ஆசாரியர்களும் சதுசேயர்கள் அல்ல. சதுசேயர்கள் சரீர உயிர்த்தெழுதலையோ நித்திய ஜீவனையோ நம்பாதவர்கள். பரிசேயரைப் போலவே, இவர்களும் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் எதிர்த்தனர்.
'யோவான் கிர்ஹேனஸ்' (John Hgircanous) காலத்தில் சதுசேயர்கள் முக்கிய இடத்திற்கு வந்தனர். யோவான் கிர்ஹேனஸ் பரிசேயர்களை வெறுத்து சதுசேயர்களை நேசித்ததினால் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
யூத கலாச்சாரமும், கிரேக்கக் கலாச்சாரமும் கலப்பதற்கு "ஹெலனாசேஷன்" (Hellenization) என அழைக்கின்றனர். கிரேக்கக் கலாச்சாரமும், யூதக் கலாச்சாரமும் சேர்ந்த இராஜா 'அந்தியோகஸ் எபிபனேஸ்' (Antiochus Epipanas) (அதாவது, ஹெலனாசேஷன்) என்பவன் யூதர்களை ஒடுக்கினான். இதனால், உண்மையான சதுசேயர்கள் மறைந்து போனார்கள். இந்த ஹெலனாசேஷன் வந்ததும் ஆசாரியர்கள் வழிகள் மாறி, சீர்கெட்டுப் போயின.
'அந்தியோகஸ் IV' (Antiochus IV) என்பவன் காலத்தில் சாதோக்கிய வழிவந்த பிரதான ஆசாரியனாகிய 'ஒனியாஸ் III' (Onias III) சை பதவியிலிருந்து விலக்கினான். அதனால் ஒனியாஸின் மகன் பயந்து போய் எகிப்திற்கு ஓடிப்போய்விட்டான்.
இப்படியிருந்த சதுசேயர்கள் இராஜாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சதுசேயர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள். அரசியலில் இவர்கள் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததினால், அதிகாரத்தையும், ஆட்சியையும் விரும்பியதாலும் மிக ஞானத்துடன் நடந்து கொண்டார்கள். சமய நெறியை கடைபிடித்து வாழ ஆட்சியாளர்கள் தடை செய்யாவிட்டால் அவர்கள் அரசியலை, ஆட்சியாளர்களை எதிர்ப்பதில்லை. ரோம ஆட்சியாளர்கள் ஆன்மீக வாழ்வில் தலையிட்டபொழுதுதான் அவர்கள் எதிர்த்தார்கள்.
பாரசீக மன்னர் காலத்திலிருந்து அயல் நாட்டினர் யூத நாட்டை ஆண்ட பொழுதெல்லாம் அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கு தக்கவாறு தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்வதற்குச் சிறிதும் பின்வாங்கவில்லை. சமயக்கருத்துக்கள், சடங்குகளில் கூட, பரிசேயரைப்போல கண்டிப்பாயிராமல், எவ்வளவுக்கெவ்வளவு வளைந்து கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தனர்.
காலத்துக்கேற்றப்படி தங்களை மாற்றிக் கொண்டார்கள். பரிசேயரோ, அவ்வாறு காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள மறுத்தார்கள்.
'ராணி சலோமி அலெக்சாண்டிரா' ஆட்சிகாலத்தில் மட்டும் இவர்களுடைய அரசியல் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. தீத்துராயன் கி.பி.66 முதல் கி.பி. 70 வரை எருசலேமை முற்றிக்கையிட்ட காலத்தில் இவர்கள் சமாதானத்தை விரும்பினர். இருப்பினும், எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.
இதனால், தங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்பும் மதிப்பு பரிசேயருக்குப் போனதே ஒழிய சதுசேயர்களைப் பற்றி சரித்திரம் எதுவும் சொல்வதில்லை.
சதுசேயர்கள் கிரேக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றினார்கள். பரிசேயர்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். மோசேயின் நியாயப் பிரமாணத்தை வெறும் சடங்காச்சாரமாகக் கைக் கொண்டவர்கள். இவர்கள் தோராவின் எழுத்தின்படி வியாக்கியானம் கொடுத்தவர்கள். இந்த மார்க்கம் அறநெறி கொள்கையுடையது. அரசியல் நிலைமைக்கு ஏற்ப மாறுபவர்கள். எருசலேம் அழிவுக்குப் பின் 'சதுசேய சமயம்' அழிந்து போனது.
இயேசுவும் சதுசேயரும்:
இயேசுவுக்கும் சதுசேயருக்கும் உள்ள தொடர்பில் உயிர்த்தெழுதலைக் குறித்து கேள்வி கேட்டனர். உயிர்த்தெழுதலில் ஒருத்திக்கு ஏழு கணவர்களைக் கொண்டவள் பரலோகில் யாருக்கு உடையவளாவாள்? என்ற கேள்விக்கு - இயேசு பிரதியுத்தரமாக: "கொள்வனையும் கொடுப்பினையும் இல்லை. தேவதூதர்களைப் போல இருப்பார்கள்" என கூறுகிறார். (லூக்கா: 20:27 - 36). இதிலிருந்து இவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்றவர்களாய் இருந்தனர் எனத் தெரிகிறது.