செப்டம்பர் 02, 2012

எண்ணாகமம் விளக்கவுரைத் தொடர் - 15


 Image result for Number: 3 Ch in a Bible

பழைய ஏற்பாட்டு லேவியர்களும்  புதிய ஏற்பாட்டு போதகர்களும்
ஒரு ஒப்பீடு

எண்ணாகமம்: 3:41 – “இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்”.

அக்காலங்களில் லேவியர்கள் மிருக ஜீவன்களை வளர்த்து வந்துள்ளதை காணமுடிகிறது. 

எனவே, இன்றைய போதகர்கள் மிருக ஜீவன்களை மற்றும் பறவையினங்களை வளர்க்கலாமா? வேண்டாமா? மற்றும் உலகப்பிரகாரமான வேலை செய்யலாமா? 


இதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது?

2தீமோத்தேயு: 2:4 – “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான்”.

மத்தேயு: 6:24 – “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”.

புதிய ஏற்பாட்டில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய அனுமதியில்லை என திட்டவட்டமாத் தெரிகிறது.

2இராஜாக்கள்: 18:21 – “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திகுந்தி நடப்பீர்கள், கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்; ஜனங்கள் பிரதியுத்திரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை”.

1தீமோத்தேயு: 3:3 – “… இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல் …”.

1தீமோத்தேயு: 6:10-14 – “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”. “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு”. “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்”. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,” “எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்”.

2தீமோத்தேயு: 4:10 – “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்”.

மேற்கண்ட வசனங்கள் யாவும் … முழுநேர ஊழியம் செய்கிற ஊழியர்களுக்கு ஒரு எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. பிசாசானவன் கூடுமானவரை முழுநேர ஊழியர்களை வஞ்சிக்கவும், கர்த்தருக்கு அவர்கள் செய்த பிரதிஷ்டையை அழிக்கவும், அவர்களது ஊழிய அழைப்பை அவமாக்கவும் பின்பு ஊழியத்தை விட்டே துரத்தி விடவும் முயற்சிப்பான்.

மகா கனம் பொருந்திய கர்த்தருடைய தாசர்களே! சோர்ந்து போகாதீர்கள்!

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். மரணபரியந்தம் நம்மை நடத்த போதுமானவர். அவரை நம்பிய ஒரவரையும் அவர் கைவிடுவதில்லை. ஊழியரின் குடும்பங்களை, மனைவி பிள்ளைகளை போஷித்தக் காப்பாற்றவும், வழிநடத்தவும் அவர் வல்லவர். போதுமானவர். விசுவாசியுங்கள். விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் என்றும் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்றும் வேதம் கூறுகிறதே.

ஊழியர்களின் வாழ்வில் தாழ்ச்சி ஏற்படுகையில் …


சாத்தான், தேவன் பேரில் உள்ள விசுவாசத்தை மட்டுப்படுத்தி, “நீ (விசுவாசத்தால்) இப்படி இருப்பாயானால் உன் குடும்பத்தை, பிள்ளைகளை, ஊழியங்களை எப்படி காப்பாற்றப் போகிறாய்? நான் சொல்கிறபடி நீ கேள். குறுக்கு வழியில் வரும் ஆதாயத்தை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?
தாழ்வடையும் காலத்தில் உதவியாக இருக்கும் பொருட்டு, சைடு பிசினஸ்சாக இவற்றை செய்யலாமே. அது உனக்கு உதவியாக இருக்குமே. ஆம்வே, மல்டி லெவல் மார்க்கெட்டிங், ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட், முதியோர் இல்லம், சிறுவர் அனாதை பள்ளி, வாடகை கார் மற்றும் வேன், சிறு விவசாயம், பண்ணை நிலம், வட்டிக்கு அல்லது கைமாற்றுக்கு என எதையாவது செய்து உன்னைக் காப்பாற்றிக் கொள். வெளிப்படையாக செய்ய கூச்சப்படுவாயானால், அல்லது பயப்படுவாயானால் அதை இரகசியமாக செய்யலாமே. கஷ்டகாலத்தில் உனக்கு உதவி செய்ய ஒருவரும் வரமாட்டார்கள். ஏதோ உன் நன்மைக்கு சொல்கிறேன்” என்பான் ஈனச்சாத்தான்.

அபிஷேகம் பண்ணப்பட்ட கர்த்தரால் முழு நேர ஊழியத்திற்கென அழைப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு வரும் ஊழியரை, அவரது பிரதிஷ்டையை உடைப்பது போன்ற வார்த்தைகளை சாத்தான் இவ்விதமாக சொல்வான். விழித்திருங்கள். அவனது வார்த்தைகள் நமக்கு சாதகமாகவும், தேவனாகிய கர்த்தரோ நமது தாழ்ச்சியின் காலத்தில் உதவிடாதவர் என்பது போன்றும், குறைவுகளிலும், தாழ்ச்சியிலும் நம்மை நாம்தான் சுயமாக காத்துக்கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் எவ்விதத்திலும் நமக்கு உதவி செய்திட மாட்டார் என்பதுபோல பேசுவான். நாம் மிகுந்த எச்சரிக்கையாக இராவிடில்… அவனது வஞ்சக வலையில் விழுந்து விடுவோம். அதுமட்டுமல்ல …

மேலும் அவன் இவ்விதமாக சொல்வான்: “கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி ஏன் மக்களிடம் கையேந்த வேண்டும். ஒருவரை நம்பி எதற்காக வாழ வேண்டும். ஏதாகிலும் உலகப்பிரகாரமாக வேலை செய்து பிழைப்பை பார்த்துக் கொண்டு செய்யலாமே! காணிக்கை பணத்திலே வாழ்வது பிறரை எதிர்நோக்கி பிறர் கைகளை நோக்கி வாழ வேண்டிய அவசியம் ஏற்படுமே. இது தேவையா… கௌரவமாக வாழ்வதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட பிழைப்பு தேவையா… பட்டணங்களில் ஊழியம் செய்தாலாவது ஏதாகிலும் பிழைப்புக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் வழியுண்டு. கிராமங்களில் சொல்லவே வேண்டாம்… கொடுமையிலும் கொடுமை… கஷ்டத்திலும் கஷ்டம்” என்பான். எதற்காக … ஊழியக்காரருடைய பிரதிஷ்டையை அர்ப்பணிப்பை அழைப்பை எந்தளவுக்கு உடைக்க முடியுமோ… அந்தளவுக்கு அவன் தீவிரமாக செயல்படுவான் என்பது உங்களுக்கு தெரியாததில்லை. நமது ஆண்டவர் இயேசுவையே வஞ்சிக்கும்படி வரவில்லையா?

மத்தேயு: 4:8-10 – “… உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவென் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானன் உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்”.

இன்றைக்கும் பிசாசானவன் தேவமனுசரை வீழ்த்தும்படிக்கு இன்றைய அறிவியல் உலகில் உள்ள அனைத்து சாதனங்களையும் உபயோகித்து வருகிறானே… பிசாசின் தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகள் அல்லவே! அநேக போன்கால்கள் மூலம் எத்தனை வியாபார அழைப்புகள், முதலீட்டிற்கான அழைப்புகள், கார்டுகளுக்கான அழைப்புகள் அவனது ஏஜெண்ட்டுகள் மூலம் நமது விசுவாசத்தை கெடுத்துப்போட நம்பிக்கையை தகர்க்க, அழைப்பை இழக்க, அர்ப்பணிப்பை, பிரதிஷ்டையை அவமாக்க வருகிறது??!! அது மட்டுமா?! முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், எதையெதையோ உபயோகப்படுத்துகிறானே…

பிசாசின் தந்திரங்களை அறிந்து அவனது கிரியைகளுக்கு எதிர்த்து நில்லுங்கள். அழைப்பில் உறுதியாயிருங்கள். கற்றுக் கொண்டதில் நிலைத்திருங்கள். கர்த்தருக்காக செயல்பட வேண்டிய நாம் இப்போது யாருக்காக? எதற்காக? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் அழைக்கப்பட்ட அழைப்பை, ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை நினைவு கூர்ந்து தேவனுக்கு அர்ப்பணியுங்கள். இதுவரை நடத்தின தேவன் இனிமேலும் நடத்துவார்.

சாத்தானுக்கு தெரியாது உங்களது விசுவாச ஊழிய அழைப்பின் மகிமை மற்றும் அர்ப்பணிப்பின் மேன்மை. ஒருவேளை அவனுக்கு அது தெரிந்ததினால்தான் உங்களை திசைதிருப்ப முயற்சிக்கிறான் போலும்.

எனக்கன்பானவர்களே!

தேவன் பேரில் நீங்கள் வைத்திருக்கிற விசுவாசமானது – தாழ்விலும், குறைவிலும், துன்பத்திலும் அவிசுவாசமாய் மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையோடு விசுவாசமென்னும் அந்த நற்பொருளை காத்துக் கொள்ளுங்கள். பல பரிசுத்தவான்களின் விசுவாச வார்த்தைகளை அவர்கள் வாழ்வில் பல்வேறுவிதமான போராட்டங்களில் மற்றும் அழைப்பின் அஸ்திபாரமே அசைக்கப்படும் சூழ்நிலையில் … தங்களை எவ்விதம் காத்துக் கொண்டார்கள்… பிரதிஷ்டை உடையாமல் காத்திட்டார்கள் என்பதை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தியானியுங்கள். அது உங்களை பலப்படுத்தும்.

உங்களுக்காக சில பரிசுத்தவான்களின் வார்த்தைகள்…


யோபு: 2:10 – “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ என்றான்…”

பிலிப்பியர்: 4:12,13 – “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு”.

யூதா: 1:3 – “… பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது”.

லூக்கா: 10:7 – “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்”

1தீமோத்தேயு: 5:18 – “போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே”

ஒரு ஊழியர் எதனால் உலகப்பிரகாரமான ஆதாயத்தை எதிர்பார்க்கிறார்? தன் தேவனால் இத்தேவையை சந்திக்க இயலாதென்கிற அவிசுவாசம் வந்ததினால்தானே! இது யாருடைய தவறு? அவிசுவாசமாய் ஊழியம் செய்கிற ஊழியருடையதுதானே??!! மேலே கண்ட வேதவசனங்களின் மீது அசையாத விசுவாச நம்பிக்கை வைத்து தன் வாழ்வில் அதை அப்பியாசப்படுத்துவாரெனில், தோல்வியும், குறைவும் ஏது?! ஆடுமாடு ஏன் மேய்க்க வெண்டும். அனாதை பள்ளி ஏன் நடத்த போக வேண்டும்? அழைப்பு எதற்கு கொடுக்கப்பட்டது? முழுநேரமாய் கர்த்தருக்கு சேவை செய்ய. அழைத்தவர் உண்மையுள்ளவர். அதற்கேற்ற கூலியை அவர் தருவார். பின் எதற்கு ஒரு ஊழியர் உலகை அதன் ஆதாயத்தை சார்ந்திருக்க வேண்டும்?

அக்கால ஊழியர்கள் தங்களை விசுவாச வாழ்க்கைக்கு அர்ப்பணித்து வேதவசனத்திற்கு பழக்கியிருந்தனர். அதனால் வந்த குறைவை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். இக்காலத்தில் ஆடம்பரம், சுயவிருப்பத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க விசுவாச அழைப்பை, அர்ப்பணிப்பை, பிரதிஷ்டையை இழந்துபோயினர்.

யோவான்: 12:26 – “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்:.

உண்மையுள்ள ஊழியரே!

சோர்ந்து போகாதீர் … உங்கள் விசுவாச பிரயாசத்திற்கேற்ற பலனை தேவன் நிச்சயம் தருவார். ஏனெனில், அவர் நீதியின் தேவன். யாக்கோபின் சம்பளத்தை பத்துமுறை மாற்றினபோதும், மந்தையை பெருகப்பண்ணி சம்பளத்தை பலமடங்கு பெருகப்பண்ணினவர் இன்னும் இன்றும் இப்பொழுதும் உங்கள் அருகாமையில்தான் இருக்கிறார். உங்களை கை விடவே மாட்டார். உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

சங்கீதம்: 121:1,2 – “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்”.

ஆமென்! அல்லேலூயா!