ஏரோது அகிரிப்பா
(Herod Agrippa)
இவன் பெரிய ஏரோதுவின் மனைவி மரியாம்னேயின் பேரன். ஆண்டிபஸ் முறைகேடாகத் திருமணம் செய்த ஏரோதியாளின் தம்பி. இவன் கல்வி கற்க ரோம் நகருக்குச் சென்று, அங்கு இளவரசர்களோடு சேர்ந்து, குதிரைப் பந்தயம் போன்ற விளையாட்டக்களில் காலத்தை வீணே கழித்து, வீண் செலவு செய்து கடன்பட்டு, கடன்காரர்கள் நெருக்க ரோமை விட்டு ஓட வேண்டியதாயிற்று.
அவன் அக்காள், ஏரோதியாள் பேரில், ஆண்டிபஸ் அவனை சந்தை மேற்பார்வையாளராக மாற்றினான். அங்கும் கடன்பட்டுத் திரும்பவும் ஓடிப் போய், ரோமின் இளவரசர் கலிகுலாவின் இணைபிரியா நண்பரானான். ஆனால், திபேரியஸ் (Tiberius) பேரரசன் அதை விரும்பவில்லை. அத்துடன் கடன்காரர்கள் இவனைக் குறித்து பேரரசன் திபேரியஸிடம் முறையிட்டனர். எனவே, அகிரிப்பாவை கலிகுலா சிறையிலடைத்தார்.
கி.பி.37 - ல் திபேரியஸ் இறந்தபோது, கலிகுலா அரசன் ஆனான். அவன் முதலாவது செய்த வேலை, தன் நண்பன் அகிரிப்பாவை விடுதலை செய்ததே. சிறையில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தபடியால், ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக அகிரிப்பாவுக்கு கொடுத்தான் கலிகுலா. அதே ஆண்டில், இத்தூரியா, திராக்கொனித்தி நாடுகளுக்கு ஆட்சித் தலைவராயிருந்த பிலிப்பு இறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப்பின் அந்நாடுகளுக்கு அகிரிப்பாவை ஆட்சித் தலைவராக்கினான்.
ஆனால், அகிரிப்பா உடனே தன் நாட்டிற்கு வரவில்லை. ஒண்ணறை ஆண்டுகள் கழித்தே பாலஸ்தீனா வந்தான். அங்கு வரும்வழியில் அலெக்ஸ்சாண்டிரியா பட்டணத்தில் சிறிது காலம் தங்கினான். அவன் அங்கிருக்கையில் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மற்ற மக்களும் யூதர்களைப் பல வகைகளில் துன்புறுத்தினார்கள். ஆனால், அது பலன் தரவில்லை. கிலவுதிராயன் காலத்தில்தான் (Claudius) யூதர்கள் தங்கள் அரசுரிமையையும், சமய உரிமையையும் திரும்பப் பெற்றனர்.
அகிரிப்பா ஆட்சித் தலைவரானபின் தெய்வ பக்தன் போல நடந்து கொண்டான். அகிரிப்பா கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தினான். இயேசுவின் சீஷனாகிய யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தான். சீமோன் பேதுருவை சிறையிலிட்டான். (அப்போஸ்தலர்: 12). அதன் காரணமாக, யூதர் அவனை விரும்பினர். கி.பி.39 - ல் கலிகுலா, ஆண்டிபஸை நாட்டை விட்டுத் துரத்தியப் பின் ஆண்டிபஸின் நாட்டையும் அகிரிப்பாவிற்கே கொடுத்தான். யூதேயா நாடும் கி.பி.41 - ம் ஆண்டில் அவன் குடையின்கீழ் வந்தது.
ஆகவே, பெரிய ஏரோதுவின் அரசு முழுவதிற்கும் அகிரிப்பா அரசன் ஆனான். அதன்விளைவாக அவனுக்கு செருக்கும், கர்வமும், அகந்தையும் மேட்டிமையுமானான். எருசலேமுக்கு வடக்கே ஒரு பெரிய மதிலைக் கட்டினான்.
திபேரியஸ் பேரரசனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களையெல்லாம் அழைத்து ஒரு மாநாடு கூட்டினான். மதிலைக் கட்டினபொழுதும், மாநாட்டைக் கூட்டினபொழுதும், ரோம அரசியலறிஞர்கள் தலையிட்டுத் தடுத்தார்கள். அகிரிப்பா பேரரசனின் (கலிகுலாவின்) நம்பிக்கையை இழந்தான்.
கி.பி.44 - ல் யாரும் எதிர்பாரா வண்ணம் கர்த்தரால் அடிக்கப்பட்டு புழுபுழுத்து செத்தான். (அப்போஸ்தலர்: 12:23). சாகும்போது அகிரிப்பாவுக்கு வயது 54.