செப்டம்பர் 12, 2012

"மகா ஏரோது"

 
 "மகா ஏரோது"
(The Great Heroad)
கி.மு.37 முதல் கி.பி.4 வரை

ஏரோது ஒரு இராஜ தந்திரமுள்ள மனிதன். சுயநலத்திற்காக தனது செயலை மாற்றிக் கொள்வான். யூதரையும் ரோமரையும் பிரியப்படுத்த விரும்பினான். ரோமை எதிர்ப்பது அழிவு தரும் என அறிந்திருந்தான். யூதர்கள் ரோம ஆதிக்கத்தை விரும்பவில்லை. இது ஏரோதுவிற்கு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது.

 இவன் சுத்தமான யூதன் அல்ல. இதுமேயாவிலிருந்து வந்தவன். இவன் ஒரு அரை யூதன். இவன் அதிகமான கட்டிட வேலையில் ஈடுபட்டான். 'செபஸ்தே' என்னும் பட்டணத்தைக் கட்டினான். இது சமாரியாவில் அழிந்த ஒரு பட்டணம். அகுஸ்துராயன் பேரில் 'செசரியா' என்னும் துறைமுகப் பட்டணத்தைக் கட்டினான்.

எருசலேமிலும், எரிகோவிலும் அரண்மனையைக் கட்டினான். சவக்கடலின் மேற்குப் பகுதியில் 'மசாதா' கோட்டையும், எருசலேம் தேவாலய சதுக்கத்தில் 'அந்தோனியா' கோட்டையையும் கட்டினான். இவன் தேவாலயத்தையும் பழுது பார்த்தான். கட்டிட பணிகளுக்கெல்லாம் மக்களிடம் வரிவிதித்து வசூலித்தான். (மத்தேயு: 24:1).

இவன், தான் ஒரு யூத இனத்தான் என நிருபிக்க ஹாஸ்மோனிய இளவரசி 'மரியாம்னே' என்ற பெயருடைய 'ஹிர்ஹேனஸ் II' - ன் பேத்தியை திருமணம் செய்து கொண்டான். யூதர் இதனாலும் திருப்தியடையவில்லை.

இவன் அநேகம் பெண்களை திருமணம் செய்தான். வாழ்வின் முடிவில் பைத்தியக்காரன்போல் ஆனான். தனது இரு மகன்களை இவன் கொன்றதிலிருந்து புலனாகிறது. இவன் தனது வாழ்வின் இறுதிப் பகுதியில் யோவான்ஸ்நானகனும், இயேசு கிறிஸ்துவும் பிறந்தார்கள். (மத்தேயு: 2:1; லூக்கா: 1:5).

இவன் ரோம ஆட்சிக்கு ஆதரவு அளித்ததால் 'மீட்பர்'  என்னும் கருத்துக்கு எதிராக இருந்தான். இதனால், இயேசுவை கொல்லத் திட்டமிட்டான். இவன் கி.மு.4 ல் இறந்தான். பின்பு இவனது நாடு அர்கிலேயு, பிலிப்பு, ஏரோது அந்திப்பாஸ் என்னும் மூன்று மகன்களுக்கும் பங்கிடப்பட்டது. ரோம அரசு இதை அங்கீகரித்தது. கி.பி. 6 - ல் அர்கிலேயு பதவி இறக்கப்பட்டு, ஆளுநர்களால் (தேசாதிபதிகளால் ஆளுகை செய்யப்பட்டது. அப்படி வரும் ஆளுநர்தான் பிலாத்து.

 

1. மகா ஏரோது - கி.மு.37 முதல் கி.மு.4 வரை

2. ஏரோது அந்திப்பாஸ் - கி.மு.4  முதல் கி.பி.39 வரை

3. பிலிப்பு - கி.மு.4 முதல் கி.பி. 34 வரை

4. அர்கிலேயு - கி.மு.4 முதல் கி.பி.6 வரை

5. அகிரிப்பா - கி.பி.37 முதல் கி.பி.44 வரை

6. ஏரோது அகிரிப்பா - கி.பி.44 முதல் கி.பி.70 வரை.