ஜூன் 28, 2020

Trusting the Lord Amidst the Pestilence - வாதையின் மத்தியில் கர்த்தரை நம்புவது

எபேசியர்:3:16,17 - "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,..."

இந்த சூழ்நிலையில் (கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை) நம்மில் அநேகர் பயந்து போய், ஆத்துமாவில் சோர்ந்து போனவர்களாக, உற்சாகம் இல்லாதவர்களாக இருக்ககூடும். பலமில்லாதவர்களாக, நம்மை சுற்றி நடக்கும் காரியங்களை நினைத்து கலங்கி போய் விசுவாசத்தில் குறைந்து போயிருப்போம்.

அதை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டிய 2 காரியங்கள்:


  • ஆவியினாலே வல்லமையாய் பலப்பட வேண்டும்.
  • விசுவாசத்திலும் அன்பிலும் வேரூன்ற வேண்டும்.

இந்த நாட்களில் நாம் சபைக்கு போக முடியாமல் வீட்டிலிருந்தே ஆராதிப்பதினால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலும் வல்லமையிலும் அனலில்லாதவர்களாக வல்லமை இழந்து காணப்படுகிறோம்.

- இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி சென்ற பிறகு, சீஷர்கள் பலமிழந்து, வல்லமையின்றி பயந்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் கூடி ஜெபித்த போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர்களை நிரப்பியது.

நம்மை சுற்றி நடக்கும் காரியங்களை கண்டோ, மாறி வரும் சூழ்நிலைகளை கண்டோ கலங்காமல், கர்த்தருடைய வல்லமையில் பலப்பட வேண்டும். நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படும் போது, நம்மில் இருக்கும் பயம், நம்பிக்கையற்ற தன்மை போன்ற பழைய காரியங்கள் மறைந்து தைரியம், விசுவாசம், நம்பிக்கை போன்ற புது காரியங்கள் வரும். இந்த புதிய காரியங்கள், நம்மை சுற்றியுள்ள உலகமே பயத்தில் மூழ்கும் போது, நாம் நேராக பலமுடன் நிற்க உதவுகிறது.

2கொரிந்தியர்:5:17 - "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."

1. வாதையை குறித்ததான பயத்தை மேற்கொள்வது எப்படி?

What we should do to overcome the fear of Epidemics?

நமக்கு வரும் வாதையை நினைத்து பயப்படும் பயத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை குறித்து பார்ப்போம்.


  • கர்த்தர் தந்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறு:  Remember the Promise of the Lord
சங்கீதம்:91:1-6 வரை வாசியுங்கள்.

வரலாறு முழுவதிலும், வேதாகம காலங்களிலிருந்து இன்று வரை நோய்கள் உள்ளன. கிறிஸ்து வரும் வரையிலும் நோய்கள் வந்து போகும். அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் நோய்கள் இருக்க தான் செய்யும். அதன் விளைவுகளும் பயங்கரமாக இருக்கும்.

ஆகவே அதை குறித்து பயப்படாமல், வேத வசனங்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டு ஜெபியுங்கள். தேவனே நமது அடைக்கலமாயிருக்கிறார். ஆகவே எதை குறித்தும் பயப்பட தேவையில்லை. 

நம் வாழ்க்கை கட்டுப்பாட்டை மீறி போகும் போது நாம் உணரும் ஒரு விரக்தியின் உணர்வை ஒரே ஒரு வார்த்தையால் மட்டுமே விவரிக்க முடியும். அது தான் "பயம்".

நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் வரும் போது நாம் சோர்ந்து போகிறோம். காரணம், உள்ளான மனுஷனில் நாம் பலப்படாததினால் தான்.

ஆகவே கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நினைவுகூரும்போது, நாம் விசுவாசத்தில் பெலப்பட உதவியாக இருக்கும்.

சங்கீதம்:23:1 - "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்."

எந்த காரியங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி நடந்தாலும் பயப்படாதிருங்கள். ஏனென்றால், கர்த்தரே நமது மேய்ப்பர். அவர் நமக்கு புல்லுள்ள செழிப்பான இடத்திற்கு நேராக வழிநடத்துவார். ஆகவே வழியில் முட்களை கண்டாலும், கற்களை கண்டாலும் தாழ்ச்சியடையாமல், சோர்ந்து போகாமல் மேய்ப்பர் இருக்கிறார் என்று அவரையே பின்தொடருங்கள்.


தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை பிடித்து கொண்டு பயத்தை புறம்பே தள்ளி அவரை மட்டும் விசுவாசியுங்கள். நம் வாழ்வில் சோதனைகள் வரத்தான் செய்யும். ஆனால் நம்முடைய திராணிக்கு மேலாக சோதனை வருவதில்லை. நாம் செய்ய வேண்டியது கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பது தான்.

  • கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்: Hold the Lord Firmly
கர்த்தரை நம்முடைய வாழ்வில் எந்த வித சூழ்நிலையிலும் உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். அவர் காரியத்தை வாய்க்க செய்வார்.

யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."

தனக்கு சோதனை வந்தபோதிலும் யோபு கர்த்தரை விட்டு பிரியாமல், தூஷிக்காமல் அவர்மேல் இன்னும் அதிகமாக நம்பிக்கை வைத்து, கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டான்.

எபிரேயர்:4:14-16 - "வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்."

இயேசுவும் நம்மை போலவே சோதிக்கப்பட்டார். பாடுகளை அநுபவித்தார். ஆகவே, அப்படிப்பட்ட மகா பிரதான ஆசாரியர் நம்முடன் இருப்பதினால் நாம் உறுதியை கைவிடாமல் கர்த்தரை பற்றிக்கொள்வோம்.இயேசுவுக்கு நாம் சந்திக்கும் வலிகள், வேதனைகள் தெரியும். ஏனென்றால், இந்த உலகில் மனிதனாக வாழ்ந்த நாட்களில் அவரும் அதை அநுபவித்திருக்கிறார்.

மத்தேயு:4:4 - "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்."

நாம் விசுவாசத்தில் உறுதியாக இருக்க கர்த்தருடைய வார்த்தை உதவுகிறது. நாம் விசுவாசத்தில் குறைவுப்படும்போது, கர்த்தர் தமது வார்த்தையை கொண்டு தைரியப்படுத்துகிறார். 

2இராஜாக்கள்:18:5,6 - "அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்."

எசேக்கியா ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். அவரை சார்ந்து கொண்டான். கர்த்தருடைய வார்த்தையை, கற்பனைகளைக் கைக்கொண்டான்.

2 இராஜாக்கள்:18:7 - "ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்."

கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்ட எசேக்கியா ராஜாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம் : அவன் செல்லுமிடமெல்லாம் அநுகூலம்

2. வேதாகமத்தில் வாதைகள்: Biblical Epidemics/ Plagues


பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்காததினால் கர்த்தர் 10 வாதைகளை எகிப்தியருக்கு அனுமதித்தார்.  இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் கற்பனைகளையும் நியமங்களையும் கொடுத்து பின்பற்றாமல் போனால் கொள்ளைநோய் வரும் என்று சொன்னார்.

உபாகமம்:28:15,21 - "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்....நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்."

தாவீது தன் ஜனங்களை எண்ணி தொகையிட நினைத்து, யோவாபை அனுப்பினான். அது தவறு என்று அவன் மனம் வாதித்ததினால் பாவத்தை அறிக்கை செய்தான். 

2சாமுவேல்:24:13 - 15 - "அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டு போக வேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்."

காத் தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் மூன்று வாய்ப்புகள் கொடுத்து தேர்ந்தெடுக்க சொன்னார். தாவீது கர்த்தர் கையிலே விழுவோம் என்று சொன்னதினால், கர்த்தர் கொள்ளைநோயை வரப்பண்ணினார். 70,000 பேர் செத்து போனார்கள்.
ஆனாலும் கர்த்தர் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார். தாவீது தேசத்துக்காக வேண்டுதல் செய்தான். வாதை நிறுத்தப்பட்டது. (2சாமுவேல்:24:25)

2 நாளாகமம்:7:14 - "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."

ஆகவே, தாவீதை போல நாம் தேவனுடைய சமூகத்தில் விழுந்து ஜெபிப்போம்! இந்த வாதை நிற்கும்படி வேண்டுதல் செய்வோம். கர்த்தர் நம் தேசத்துக்கு ஷேமத்தை கொடுப்பார்!

2 கொரிந்தியர்:4:17 - "மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."

ஆகவே, இக்காலத்தில் நமக்கு அனுப்பப்பட்ட இந்த உபத்திரவம் நமக்கு நித்திய கனமகிமைக்கேதுவானது. ஆகவே நாம் கவலைப்படாமல் வசனத்தை விசுவாசித்து, பலப்பட்டு, கர்த்தரை உறுதியாக பற்றி கொள்வோம்!

ஆமென்!








ஏப்ரல் 19, 2020

NTAG Sunday Service | 19.04.2020 | Pr.C.Regina Charles


நமது நேசரின் தோட்டம் சபையின் ஆராதனை காணொளி இன்று (19.04.2020) காலை 10.00 மணியளவில் நமது சேனலில் (Rev.M.Charles - NTAG Church) ஒளிபரப்பப்படும். காணத்தவறாதீர்கள்! எங்களோடு சேர்ந்து தேவனை ஆராதிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்!!! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

https://youtu.be/rSbzIzOzEuk

ஏப்ரல் 06, 2020

நோக்கி பார்க்கிறவர் நம் தேவன்

நோக்கி பார்க்கிறவர் நம் தேவன்




சங்கீதம்:86:16 - "என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்"

தாவீது, தேவன் தன்மேல் இரக்கம் காட்டும்படியாக கதறுகிறான். இந்த சங்கீதம் "தாவீதின் விண்ணப்பம் (அ) ஜெபம்" என்று அழைக்கப்படுகிறது. தாவீது கர்த்தரின் கவனத்தை தன் பக்கமாக திருப்பும்படியாக வேண்டுகிறார். தேவன் தன்னுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுக்கும்படியாக, தனக்கு இரங்கும்படியாக, தன்னை நோக்கி பார்க்கும்படியாக இந்த சங்கீதத்தை பாடுகிறார் தாவீது.

உலகம் யாரை நோக்கி கொண்டிருக்கிறது?

படித்தவரை, பணக்காரரை, அதிகாரிகளை நோக்கி பார்க்கிறது. எளியவனை, ஏழையை நோக்கி பார்ப்பதில்லை. ஆனால் நம் தேவன் பாரபட்சம் பார்க்காதவர்! நாம் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நோக்கி பார்க்கிறார். 

நம் தேவன் - எளியவனையும், ஏழையையும், குருடனையும், செவிடனையும் அவர் நோக்கி பார்ப்பார்.

"எளிமையான என்னையுமே - என்றும் நினைப்பவரே"

 ஏசாயா:66:2 - "ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்."

அ) சிறுமைப்படுகிறவர்களை:

நமது தேவன் பெரியவராயிருக்கிறார். வானம் அவருக்கு சிங்காசனம், பூமி அவருக்கு பாதபடி.

நம் தேவன் தேவாலயத்திலும் பெரியவர். சாலமோனிலும் பெரியவர். இவ்வளவு பெரிய தேவன் சிறுமையானவர்களை நோக்கி பார்க்கிறார்.

நாம் உயர்ந்திருக்கும்போது, அநேகர் நம்மை நோக்கி பார்ப்பார்கள். நம்மிடம் பணம், பொருள், அந்தஸ்து இருக்கும்போது, நம்மை சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், தாழ்ந்திருக்கும்போது, சிறுமைப்படும்போது நம்மை பார்க்க, நம் துக்கத்தை அறிந்து ஆறுதல் சொல்ல ஒலுவரும் இருக்கமாட்டார்கள். இது தான் உலகம்!

கெட்ட குமாரன் தன் தகப்பனின் ஆஸ்திக்கு அதிபதியாக இருக்கும்வரை அவனை சுற்றி நண்பர்கள் இருந்தனர். ஆனால் பணத்தை இழந்த மறுகணமே அவனை விட்டு போய் விட்டார்கள். சிறுமைப்பட்டான். தாழ்மைப்பட்டான். தனிமைப்படுத்தப்பட்டான். இப்போது அவன் தகப்பனின் அன்பை உணர்ந்தான். தன்னை நோக்கி பார்க்கும் ஒருவரை விட்டு விலகி வந்ததை நினைத்து வருந்தினான்.

"நாம் சிறுமைப்படும்போது, நம்மை 
நோக்கி பார்ப்பவர் நம் தேவன் ஒருவரே!"

சங்கீதம்:40:17 - "சிறுமையானவர்கள் மேல் நினைவாயிருக்கிறார்."

ஆம்! தேவன் சிறுமையானவர்கள் மேல் நினைவாயிருக்கிறார். சிறியவனையும் எளியவனையும் நினைவுகூர்ந்து குப்பையிலிருந்து எடுத்து ராஜாக்களோடும் பிரபுக்களோடும் அமர செய்கிறார்.

உங்களது பிரச்சனைகளை, உங்களது எதிர்காலத்தை, உங்களது பாரங்களை, உங்களது தேவைகளை குறித்து நினைப்பதற்கு யாருமில்லை. எல்லாவற்றையும் நீங்கள் மட்டுமே தாங்கி கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்று புலம்ப தேவையில்லை. ஏனென்றால், தேவன் உங்கள் மேல் நினைவாயிருக்கிறார்.

சங்கீதம்:9:18 - "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை."

ஏசாயா:44:21 - "இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை."
  • சிறுமையான, சிறிய கோத்திரமாகிய பென்யமீன் கோத்திரத்தில் இருந்து, இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருக்கும்படி சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான். (1சாமுவேல்:9:21)
  • சிறுமைப்படுத்தப்பட்ட லேயாளை தேவன் கண்டார். அவள் குமாரர்களை பெற்று கோத்திரங்கள் உருவாக காரணமானாள். (ஆதியாகமம்:29:31,32)
  • சிறியதாயிருந்த பெத்லகேமை தேவன் நினைவுகூர்ந்து, மீட்பராகிய மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்க செய்தார். (மீகா:5:2)

சங்கீதம்:140:12 - "சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்."

"உங்களுக்கு எதிராக இருக்கும் வழக்குகளை தேவனே விசாரித்து 
உங்களுக்கு ஆதரவாக மாற்றுவார்"


சில சமயம் சிறுமைப்பட்டிருக்கும் போது, தேவன் நமக்கு மறைந்திருப்பது போல தோன்றும். ஆனால், நாம் நினைப்பது தவறு. தேவன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, நம்மை தகுதிப்படுத்தி கொண்டிருப்பார். ஏற்ற வேளை வரும் போது, எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி நம்மை உயர்த்துவார்.

யோசேப்பு சிறுமைப்படுத்தப்பட்டான். அவன் மேல் சுமத்தப்பட்ட அநீதியான வழக்கு அவனை பல வருடங்கள் சிறையில் இருக்கும்படி செய்தது. ஆனால் ஏற்ற வேளையில் வழக்கு விசாரிக்கப்படாமலேயே நீக்கப்பட்டு உயர்த்தப்பட்டான்.

ஆ) ஆவியிலே நொருங்குண்டவர்களை:

ஒருவன் தன் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்து, நம்பிக்கையை இழந்து, ஆசைகளை இழந்து, கனவுகளை இழந்து எல்லாம் முடிந்து போயிற்று என்ற நிலையில் இருந்தால் ஆவியில் நொருங்குண்டவன் என்று சொல்லலாம்.

சங்கீதம்:51:17 - "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்."

இங்கே தாவீது பத்சேபாளிடம் பாவம் செய்த பிறகு தீர்க்கதரிசி பாவத்தை உணர்த்தினான். பின்னர், ஆவியில் நொருங்குண்டவனாக மனதில் பாரம் நிறைந்தவனாக தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் மனதில் குடும்பபாரம், இராஜ்ய பாரம் இருந்தது. காரணம், குழந்தை சாக கிடக்கிறது. ஆனால், தனக்கடுத்து அரசனாக தன் மகன்களில் யாரும் தகுதியானவன் இல்லை என்பது தாவீதுக்கு தெரியும். இவன் செய்த தவறு மக்களுக்கு தெரிந்தால் கிளர்ச்சி ஏற்படும். இராஜ்யம் பிரிந்து விடும். இராஜாவே இப்படி செய்வாரென்றால் நாமும் செய்யலாம் என்று சிலர் பாவத்தில் விழுந்து விடக்கூடும். ஆகவே பாரத்தோடு ஆவியில் நொருங்குண்டவனாக வேண்டுகிறான்.

நாம் தேவனுடைய வார்த்தையால் நொறுக்கப்படவேண்டும். தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்திருந்தால் நொறுக்கப்பட வேண்டும். தீர்க்கதரிசியின் மூலம் தேவனின் வார்த்தை வந்த உடனே, தாவீது தன்னை தாழ்த்தினான். நொறுக்கப்பட்டான்.

லூக்கா:22:44 - "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது."

ஒரு மனிதனுக்கு தான் மரிக்க போகும் நாள் முன்னரே தெரிந்தால், அவன் நிம்மதியாக இருக்க முடியுமா? யோசித்து பாருங்கள்.

ஆனால், இயேசுவுக்கு தான் பூமிக்கு வருவதற்கு முன்பே எல்லாம் தெரியும். அவர் வருவதற்கு முன்பே எல்லாம் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. இப்படியிருக்கையில், தான் எப்படி மரிக்க போகிறோம் என்பதை நினைத்து வியாகுலப்பட்டார்.

விளைவு: இயேசுவின் வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாக விழுந்தது.

மத்தேயு:26:37,38 - "அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."


இயேசு எதற்காக வியாகுலப்பட்டார்?

1. சிலுவையில் படப்போகும் பாடுகள்
2. ஆத்துமபாரம்


  • இயேசு, தான் சிலுவையில் ஏற்க போகும் வலிகள், வேதனைகள், பாடுகள் குறித்து நினைத்து மரணத்துக்கேதுவான துக்கமடைகிறார். ஆகவே, பாத்திரம் நீங்ககூடுமானால் நீங்கட்டும் என்று வேண்டுகிறார்.

  • இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தபின், 3 நாட்கள் உலகம் பிசாசின் கரத்திலே கொடுக்கப்பட்டது. ஆகவே, இந்த நேரத்தில் ஊழியம் செய்யவோ, மக்களுக்காக ஜெபிக்கவோ, சுவிசேஷம் அறிவிக்கவோ ஒருவருமில்லை. ஒருவன் மறுதலித்து விட்டான். மற்றொருவன் காட்டிக்கொடுத்து விட்டான். ஆகவே, சீஷர்கள் பயந்து போய் தங்களை ஒளித்து கொண்டார்கள். இப்போது ஊழியம் செய்ய யாருமில்லை. இதை முன்னரே இயேசு அறிந்ததினால், மரணத்துக்கேதுவான துக்கமடைந்து ஆத்துமபாரத்தினால் நிறைந்தவராய் ஜெபித்தார்.
மத்தேயு:12:40 - "யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்."

1பேதுரு:3:18-20 - "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்."

- இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார். நமக்கு ஆத்துமபாரம் வேண்டும். அழிந்து போகும் மக்களை குறித்த பாரம் ஏற்பட வேண்டும்.

  • தேவ வசனத்துக்கு நடுங்க வேண்டும். ஏனென்றால், வசனமே நியாயந்தீர்க்கும். (யோவான்:12:48)
  • வேத வசனத்தில் பிரியமாயிருக்க வேண்டும். தியானிக்க வேண்டும். (சங்கீதம்:1:2)
  • வசனத்தின்படி செய்கிறவன் பாக்கியவான். (வெளி:1:3)

2. தேவன் நம்மை நோக்கி பார்;க்கும் போது என்ன நடைபெறும்?

லூக்கா:22:61>62 - "அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்."

இயேசு பேதுருவை நோக்கி பார்த்தார். மனங்கசந்து அழுது மனந்திரும்பினான். 

இயேசுவின் மனஉருக்கமான பார்வை பேதுருவை மாற்றியது!!!

மனந்திரும்புதலின் 2 பக்கங்கள்:


  • மாம்சத்தின் கிரியைகளை விலக்குதல்
  • ஆவியின் கனிகளை விளைவித்தல்

பேதுரு தன்னுடைய மாம்ச கிரியையான மறுதலிப்பதை விலக்கி ஆவியின் கனிகளை விளைவித்தான். ஆதி திருச்சபையின் போதகரானான். மனந்திரும்புதல் என்பது தேவனோடு மட்டுமல்ல. மனிதரோடும் காரியங்களை சரி செய்தலாகும்.

சிலுவையின் இரண்டு கட்டைகள்:

நெடுக்கு கட்டை - கர்த்தரோடு ஒப்புரவாகுதல்
குறுக்கு கட்டை - மனிதனோடு ஒப்புரவாகுதல்

யோவான்:5;:6 - "முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்." 

38 வரு~ம் வியாதியுள்ள மனிதனை இயேசு நோக்கி பார்த்தார். அற்புதம் நடந்தது.

முடிவாக, நமது தேவன் சிறுமைப்பட்டவர்களை, ஆவியில் நொருங்குண்டவர்களை, வசனத்துக்கு நடுங்குகிறவனை நோக்கி பார்ப்பார். நாம் அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் நம்மை நோக்கி பார்ப்பார். மனந்திரும்புதலும் அற்புதமும் வரும்.

ஆமென்!

ஜனவரி 20, 2020

எல்லாம் தவறாக நடக்கும்போது தேவன் எங்கே? - Where is God when Everything goes wrong?








ஆதியாகமம்:39:20,21 - "யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.   கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்."

- யோசேப்பின் வாழ்வில் அநேக இருளான நாட்கள் இருந்தது. பல காரியங்கள் தவறாகவே நடந்தது. அவன் ஒரு இருளான அழுக்கான அறையில் சிறை வைக்கப்பட்டான்.

   தவறு செய்ததற்காக அல்ல; சரியானதை செய்ததால்!
   மோசமான குற்றத்திற்காக அல்ல; நல்ல குணத்தின் காரணமாக!

- யோசேப்பு உயர்மலையிலிருந்தாலும் சமவெளியிலிருந்தாலும் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தார். ஆகவே துன்பத்தையும் செழிப்பையும் எப்படி கையாள்வது என்பது அவருக்கு தெரியும்.

- யோசேப்பின் வாழ்க்கையில் பல நேரங்களில் வாசல்கள் அடைக்கப்பட்டது. இருளான வேளைகள் வந்தது. அவனது வாழ்வில் அநீதிகள் நடந்தது. எவ்வளவு தான் உத்தமமாக உண்மையாக உழைத்தாலும் அவனுக்கு அதற்கேற்ற ஊதியமில்லாமல் அநீதி மட்டுமே கிடைத்தது.

- கதவுகள் அடைக்கப்பட்ட நிலை, விலக்கப்பட்ட நிலை, வரவேற்கப்படாத நிலை, வாய்ப்புகள் கொடுக்கப்படாத நிலை, கனவுகள் நிறைவேறாத நிலை - இப்படிப்பட்ட நிலையில் தான் யோசேப்பு இருந்தார். ஆனாலும் கர்த்தர் அவனோடு கூட இருந்தார்.

யோசேப்பின் வாழ்வில் நடந்த 3 அநீதிகள்:

1. கீழ்ப்படிந்து நடந்த போதும் வெறுக்கப்பட்டான் -  Obedient, But hated


ஆதியாகமம்:37:2-4 - "யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய  துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லி வருவான்.   இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.  அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்."

- யோசேப்பு தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். தன் சகோதரர்கள் துன்மார்க்கமான காரியங்களை செய்யும்போது அவர்களுடன் சேர்ந்து அந்த காரியத்தில் ஈடுபடாமல், தேவனுக்கு பயந்து கீழ்ப்படிந்து தன்னை பரிசுத்தமாக காத்துக்கொண்டான்.

- யாக்கோபு யோசேப்புக்கு தன் குடும்பத்தின் காரியங்களை கவனிக்கும்படி பொறுப்புகளைக் கொடுத்து, அதிகம் நேசித்து, பலவர்ண அங்கியை கொடுத்து உயர்த்தி வைத்தான்.

- யோசேப்பு சரியான காரியங்களையே செய்து வந்தான். அவன் தன் தகப்பனுக்கும், தேவனுக்கும் கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் அது அவன் சகோதரர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது. அடிமையாக விற்கப்பட்டான்.

2. மரியாதையாக நடந்த போது தூஷிக்கப்பட்டான்    -  Honourable, But Slandered

ஆதியாகமம்:39:2-5 - "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு: யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது."

- குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு அடிமையாக அந்நிய தேசத்தில் விற்கப்பட்ட போதிலும், கர்த்தருக்கு கீழ்ப்படிந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்து வந்தான்.

- யோசேப்புடன் கர்த்தர் இருப்பதை போத்திபார் கண்டு, அவனிடம் தன் வீட்டின் பொறுப்புகளை கொடுத்தான். அவன் மற்ற அடிமைகள் மத்தியில் கௌரவமாக மதிக்கப்பட்டான்.

- தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக நடந்து திறம்பட செய்தான். அவன் மூலம் போத்திபாரின் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம்:39:19,20 - "உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.  யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்."

சங்கீதம்:105:17-19 - "அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.   கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது."

இம்முறையும் யோசேப்பு நல்லதையே செய்தான். தன்னுடைய ஆத்துமாவை பரிசுத்தமாக காத்துகொண்டான். ஆனால் அவன் தூஷிக்கப்பட்டான்.


3. கர்த்தரால் பயன்படுத்தப்பட்டான்; மறக்கப்பட்டான்-    Used of God; But Forgotten


ஆதியாகமம்:40:13-15 - "மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்."


- சிறையில் அடைக்கப்பட்ட பார்வோனின் பிரதானிகளை கவனிக்கும்படி யோசேப்பு ஏற்படுத்தப்பட்டான். அவர்கள் இருவருக்கும் வந்த சொப்பனத்தினிமித்தம் அவர்களின் முகம் துக்கமாயிருப்பதை கண்டு யோசேப்பு அவர்களை விசாரித்து அதற்கு விளக்கம் கொடுத்தான்.

- யோசேப்புக்கு தேவன் சொப்பனத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஞானத்தை கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம்:40:8 - "அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்."

- கர்த்தர் கொடுத்திருக்கும் ஞானத்தினால் பானபாத்திரக்காரனுடைய சொப்பனத்திற்கு விளக்கம் கூறி அவனுடைய நிலையை மாற்றினான். ஆனால், அவனோ தனது ஸ்தானத்திற்கு திரும்பியதும் யோசேப்பை மறந்து போனான்.

ஆதியாகமம்:40:22,23 - "சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப் போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்."

இந்த காரியத்திலும் யோசேப்பு நல்லதையே செய்தான். ஆனால் அவன் மறக்கமாட்டான். யோசேப்புக்கு அநீதியான காரியங்கள் நடந்தாலும், எல்லா காரியங்களிலும் கர்த்தர் அவனோடு கூட இருந்தார்.

எல்லாமே தவறாக நடந்தாலும், யோசேப்பின் வாழ்விலிருந்து அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.

கர்த்தர் தந்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறு: Remember the Promises given by the Lord 

ஆதியாகமம்:37:5-11  - கர்த்தர் யோசேப்புக்கு 2 சொப்பனங்களின் மூலம் வார்த்தையை கொடுத்தார். இதுவே தேவன் அவனுக்கு கொடுத்த வாக்குத்தத்தம்!

முதல் சொப்பனத்தில் யோசேப்பை உலக செல்வங்களில் (Worldly Resources) உயர்த்த போவதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்.

இரண்டாம் சொப்பனத்தில் யோசேப்பை உலக ஆட்சியாளர்களுக்கு (Worldly Rulers) மேலாக உயர்த்த போவதாக வாக்குகொடுத்தார். 

- யோசேப்பு தனது பிரச்சனைகளை நினைத்து வாழ்வதை பார்க்கிலும், தேவன் தந்த வாக்குத்தத்தங்களை நம்பியே வாழ்ந்தான்.

அவன் மனதிலும், இதயத்தின் ஆழத்திலும், தேவன் உயரத்தையும் (Elevation), உயர்வையும் (Exaltation) கொடுக்க போகிறார் என்ற வாக்குத்தத்தம் இருந்து கிரியை செய்து கொண்டே இருந்தது.

- உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பாராத காரியங்கள் நடந்து பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை நினைத்து வருத்தப்படாமல் கர்த்தர் தந்த வாக்குறுதிகளை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

நீதிமொழிகள்:3:25,26 - "சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்."

யோசேப்பு பானபாத்திரக்காரனிடம் வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினையென்று சொன்னான். ஆனால் அவன் உயர்வுக்கு சென்ற பின், யோசேப்பை நினையாமல் மறந்து போனான்.

மனிதர்கள் மாறலாம்; மறந்து போகலாம். ஆனால், நம்மை அழைத்த தேவன் நம்மை ஒருபோதும் மறவார். அவர் சொன்ன வார்த்தை ஒன்றும் தரையில் விழுவதில்லை. வாக்கை நிறைவேற்றுவார். If he says, He'll do it!

கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்:Hold the Lord Firmly

- யோசேப்பு குழியில் தள்ளப்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டான். பிறகு, சிறையில் தள்ளப்பட்டு, நண்பர்களால் மறக்கப்பட்டான்.

தவறு செய்ததற்காக அல்ல; சரியானதை செய்ததற்காக!

1. யோசேப்பின் கனவுகளால், தகப்பன் அவனுக்கு கொடுத்த மேலங்கியினால் சகோதரர்கள் பொறாமைப்பட்டு குழிக்குள் தள்ளினர்.
2. போத்திபாரின் மனைவி யோசேப்பின் அர்ப்பணிப்புள்ள பயபக்தியுள்ள வாழ்வின் காரணமாக சிறையில் தள்ளினாள்.

- யோசேப்பு தன்னுடைய தூய்மையை காத்துக்கொண்டதினால், நேர்மையாக நடந்ததினால், தனது சுதந்தரத்தை இழந்தான். ஆனாலும் அவன் கர்த்தரை இழக்கவில்லை. உறுதியாக பற்றிக்கொண்டான்.

1பேதுரு:2:20 - "நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்"

யோபு:12:13-16 - "அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்க முடியாது. இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும். அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

- கர்த்தர் அனுமதிக்காமல், ஒரு காரியமும் நம் வாழ்வில் நடைபெறாது. எந்த ஒரு காரியமும் நம்மை சோர்வுக்குள்ளாக நடத்தினாலும் கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டால் போதும்.  

ரோமர்:8:28 - "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."

சங்கீதம்:138:8 - "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்"

- மனிதர்கள் உங்களை கைவிடலாம்; குழியில் தள்ளிவிடலாம்; ஆனால் தேவன் உங்களை கரம்பிடித்து நடத்துவார்.

ஏசாயா:2:22 - "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்."

ஆம்! அடுத்த சில நிமிடங்களுக்கு சரியாக மூச்சு விட முடியாமல் திணறினால் இறந்து விடும் மனிதர்களை நம்பாமல், ஜீவ சுவாசத்தை தரும் தேவனை நம்புங்கள். 

எரேமியா:17:7,8 - "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்."

- மனிதர்மேல் நம்பிக்கை வைக்காமல், கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்போது நம்மை கனிகொடுக்கிற மரத்தை போல மாற்றுவார்.

சில ஆசீர்வாதங்கள் நாம் பெறுவதற்கு முன்பு தேவன் நம்மை தகுதிப்படுத்துகிறார். நாம் காத்திருந்து, சோதனைகளை சகித்து கொண்டு உயர்வுக்காக கர்த்தரை பற்றிக்கொண்டால், கர்த்தர் ஏற்றகாலத்திலே நம்மை உயர்த்துவார். 

ஏசாயா:40:31 - "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."

கர்த்தருடைய வழிகளும் நினைவுகளும் நம்மை போன்றதல்ல; அவரது நேரம் எப்போதும் சரியானதாக இருக்கும். 

ஆதியாகமம்:50:20 - "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்."

- யோசேப்பு எத்தனையோ வலிகள், சோர்வுகள், இழப்புகள்,வேதனைகள் ஊடே வந்தாலும் முடிவில் அவனுக்கு தேவன் தாம் சொன்னபடி, காண்பித்தபடி உயரத்தையும் உயர்வையும் அடைய செய்தார்.

- யோசேப்பு சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் தேவனது மகத்தான திட்டத்தை கொண்டுவருவதில் பங்களித்தது.


  • யோசேப்பின் நன்மை (ஆதி:41:39-44)
  • அவனுடைய மக்களின் நன்மை (ஆதி:45:17-20)
  • கர்த்தரின் மகிமைக்கான திட்டம் (யாத்:14:17,18)


"உங்களுடைய வாழ்வில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்தால், கர்த்தர் ஒரு உன்னத திட்டத்திற்காக உங்களை ஆயத்தம்செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். "


நமக்கு எல்லாமே தவறாக நடக்கும்போது தேவன் எங்கே இருக்கிறார்? 

           அவர் நம்மோடு தான் இருக்கிறார். நமக்காகவே தான் இருக்கிறார். ஆனால் ஒருநாள் நாம் கேட்கவோ கற்பனை செய்யவோ முடியாத அளவிற்கு உயர்த்தி வைக்க போகிறார். இக்காலத்தில் நாம் அனுபவிக்கிற பாடுகளையும் இழப்புகளையும் தேவன் நாம் உயர்வை அடைய எவ்வாறு அதை பயன்படுத்தினார்... நம்மை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை பிற்காலத்தில் நாம் உயர்வை அடையும் போது நினைத்து பார்ப்போம்.

2கொரிந்தியர்:4:17 - "மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."

சில பாடுகள் வரும்போது கர்த்தர் உங்களை கைவிட்டது போல காணப்படலாம். ஆனால் அவர் உங்களோடு தான் இருப்பார். 

  • யோசேப்பு குழியில் தள்ளப்பட்ட போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். போத்திபாரிடம் அடிமையாக இருந்த போதும்  கர்த்தர் அவனோடு இருந்தார். சிறைச்சாலையில் இருந்த போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக இருந்த போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். 
  • சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ நெருப்பில் போடப்பட்ட போதும் நான்காவது நபராக அவர்களுடைய முடிகூட கருகாமல் பாதுகாக்க கர்த்தர் அவர்களோடு இருந்தார்.
  • தானியேல் சிங்க கெபிக்குள் தள்ளப்பட்ட போதும், சிங்கத்தின் வாயை கட்டிப்போட கர்த்தர் அவனோடு இருந்தார். 
  • கடும் புயல்கள், அலைகள் மத்தியில் சீஷர்கள் படகில் தத்தளித்து கொண்டிருக்கும் போதும், கர்த்தர் அவனோடு இருந்தார். 
இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிலைகள் வந்த போதும், இவர்களோடு கூட இருந்து பாதுகாத்து உயர்த்தின தேவன் உங்களையும் எல்லா வித பாதகமான சூழ்நிலையிலிருந்து மீட்டு உயர்த்த வல்லவராயிருக்கிறார். 


ஏசாயா:43:2 - "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது."


Where is God when Everything goes wrong? 

 Yes, He's right here with us !!!

ஆமென்!

ஜனவரி 02, 2020

Memories of NTAG in 2019







நேசரின் தோட்டம் ஏஜி சபையின் 2019 ஆம் ஆண்டின் நினைவலைகள்.... கடந்த ஆண்டில் நடந்த முகாம்கள், கூட்டங்கள், பண்டிகைகள் குறித்த சில தொகுப்புகள், தேவன் தந்த புதிய திட்டமான ஆலயம் கட்டுதல்......

Sing to the lord - Hebrew song Dance for Christmas 2019