செப்டம்பர் 14, 2012

"ஏரோது ஆண்டிபஸ்"

 
 "ஏரோது ஆண்டிபஸ்"
(Herod Antipas)
கி.மு.4 முதல் கி.பி.39 வரை

இவன் கலிலேயா, பெரியா நாடுகளுக்கு மகாணத் தலைவராக 'எத்நார்க்'  (Ethnarch) அதாவது, "தேசாதிபதி" யாக இருந்து ஆண்டு வந்தான். தன் தந்தை ஏரோதுவைப் போலவே இவனும் நல்ல திறமைசாலி. இயேசு இவனை ஒரு 'நரி' என குறிப்பிடுகிறார். (லூக்கா: 13:32). தற்பெருமை கொண்டவன். 

செப்போரிஸ் (Sepphoris), ஜீலியஸ்(Julius), திபேரியஸ் (Tiberius) ஆகிய அரணான நகரங்களை கட்டினான். இவன் கட்டியவைகளில் சிறந்தது ரோம ராயன் திபேரியு பேரில் கட்டிய திபேரியஸ் பட்டணமே. ஆகிலும், யூதர்களில் ஒருவரும் அங்கு குடியேறவில்லை. காரணம்? அது இறந்தவர்களை புதைத்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது.

ஏரோது ஆண்டிபஸ் ஒரு முறை ரோம் சென்ற போது, தன் தம்பியாகிய 'பிலிப்பு ஏரோது' வீட்டில் தங்கியிருந்தான். அப்பொழுது தன் தம்பி மனைவி மேல் இச்சை கொண்டு, அவளைத் தன்னோடு அழைத்து வந்து மணம் செய்து கொண்டான். இச் செய்கையை யோவான்ஸ்நானகன் கண்டித்தார். கணவன் உயிரோடிருக்கையில் மனைவியை  மணந்து கொள்வது மாபெரும் பாவமாகக் கருதப்பட்டது.

ஆண்டிபஸ் தன் முதல் மனைவியைத் தள்ளி விட்டதால், அவள் தந்தை நபாற்றிய மன்னன் அரிற்றாஸ் ஆண்டிபசின் மேல் போர் தொடுத்து கி.பி.36 ல் ஆண்டிபஸை தோற்கடித்தார். கி.பி.37 - ல் 'கலிகுலா' என்ற பேரரசன் ஆளத் துவங்கினான்.
கலிகுலா, ஆண்டிபஸின் மேல்  அவ்வளவு நல்லெண்ணம் கொண்டவர் அல்ல. எனவே, 'திராக்கொனேத்தி' (லூக்கா: 3:1) தலைவர் பிலிப்பு கி.பி.37 ஆம் ஆண்டில் இறந்தபோது, பிலிப்பின் நாட்டை ஏரோதியாளின் தம்பி 'அகிரிப்பா'விற்கு கொடுத்தான் கலிகுலா. இதை ஏரோதியாள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த நாட்டை தன் கணவன் ஆண்டிபஸிற்கு கொடுத்திருக்க வேண்டும் என நினைத்தாள். அதற்காக, ரோமராயன் கலிகுலாவை நேரடியாக சந்தித்து முறையிட, தன் கணவனை தூண்டி விட்டு, இருவரும் ரோமுக்கு பயணமானார்கள்.

அச்சமயம், "ஆண்டிபஸ் ரோமராயனுக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்" என்று கலிகுலாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான் அகிரிப்பா. ஆண்டிபஸை, ரோமராயன் கலிகுலா விசாரித்தபொழுது, ஆண்டிபஸ் போர்க்கருவிகளை மிகுதியாகச் சேர்த்து வைத்திருந்த செய்கையை மறுக்க முடியாமல் போகவே, கலிகுலா அவனை நாட்டை விட்டு துரத்தி விட்டான். ஏரோதியாளும் தன் கணவனுடன் சென்று விட்டாள். ஆண்டிபஸின் நாடும் கி.பி.39 - ல் 'அகிரிப்பா'வுக்கே கொடுக்கப்பட்டது.