செப்டம்பர் 29, 2012

எபேசு சபை

எபேசு சபை

எபேசு சபை என்பதற்கு "விரும்பப்படத்தக்கது" என்று பொருள். இப்பட்டணத்தில்தான் பரிசுத்த பவுல் ஊழியம் செய்து சபையை ஸ்தாபித்தார். இப்பட்டணத்தில் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டு பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றனர்.(அப்போஸ்தலர்: 19:5,6). இச்சபையில் அற்புதங்கள் நடைபெற்றன. (அப்போஸ்தலர்: 19:11,12). மாயவித்தைக்காரர் அநேகர் தங்கள் புத்தகத்தை கொண்டு வந்து எரித்தனர். அதன் மதிப்பு அந்நாட்களில் 50,000 வெள்ளிக்காசாக மதிப்பிடப்பட்டது. 

யோவான் அப்போஸ்தலன் தனது கடைசிக் காலத்தில் எபேசுவில் தங்கி இருந்தார். இயேசுவின் தாயும் அவரிடமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இச்சபைக்கு, தீமோத்தேயு கண்காணிப்பாக இருந்தார் என்றும், தியானாள் கோவிலில் நடைபெற்ற பெரிய பண்டிகை நாளில் அதற்கு விரோதமாய் தீமோத்தேயு பேசினபடியால் அவனை கொன்று போட்டார்கள் என்று பாரம்பரியம் கூறுகிறது.

எபேசு பட்டணம்

சின்ன ஆசியாவில் ஒரு முக்கியமான கடற்கரைப் பட்டணமாய் இருந்தது. இது சிமிர்னாவின் தென் கிழக்கில் 40 மைல் தொலைவில் இருந்தது. இப் பட்டணத்தின் அருகில் 'கெய்ஸ்டர்' என்ற நதி இருந்தபடியினால் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தது. மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் இப்பட்டணத்தின் வழியாக சென்றது. கிழக்கத்திய நாடுகளில் இருந்தும்  சின்ன ஆசியாவிலிருந்தும் இந்த நெடுஞ்சாலைகளின் வழியாய் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டிருந்தது.


ரோம சாம்ராஜ்யத்திலிருந்த  இராஜ்யங்களில் ஒன்றுக்கு எபேசு தலைமைப் பட்டணமாக இருந்தது. அப் பிரதேசக் கவர்னர் இப் பட்டணத்தில் வசித்து வந்தார். எனவே, இது அரசியல் சம்பந்தப்பட்ட  விஷயங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. ஆதிகாலத்தில் 7 உலக அதிசயங்களில் ஒன்றான 'தியானா'ளின் கோவில் இப் பட்டணத்தில் இருந்தது.(அப்போஸ்தலர்: 19:28,29).

தியானாவின் கோவில் 425 அடி நீளம், 220 அடி அகலம், 60 அடி உயரம் உள்ளதாய் இருந்தது. இக்கோவில் உள்ளே 127 தூண்கள் இருந்தது. இவை பளிங்கு கற்களினால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு அரசனால் வெகுமதியாய் கொடுக்கப்பட்டது.


உள்ளே மகா பெரிய வெல்வெட் திரையும்,  அதற்குள் மறைக்கப்பட்ட தியானாளின் சிலையும் இருந்தது. ஆர்டிமிஸ் தேவதையின் சிலையும் இருந்தது. இச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்று அதன் பக்தர்களினால் நம்பப்படுகிறது.


இக் கோவிலில் ஒழுக்கக்கேடான காரியங்கள் அனுதினமும் நடைபெற்றன. இக்கோவில் குற்றவாளிகளுக்கு புகலிடமாக விளங்கிற்று. குற்றம் செய்த ஒருவன் அதிகாரிகளால் பிடிபடுமுன் இக் கோவிலுக்குள் போய் ஒளித்துக் கொண்டால் அவனைப் பிடிக்க அதிகாரம் இல்லை. எனவே, இக் கோவிலினுள் ஒழுக்கங்கெட்டவர்களும் குற்றவாளிகளுமே நிறைந்திருந்தனர்.

எபேசுவில் இன்றைய நிலை:

14 ஆம் நூற்றாண்டில் துருக்கியரும் மங்கோலியரும் தொடர்ந்து இப்பட்டணத்தை தாக்கினர். எனவே, தியானாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. அந்நாளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் இது அழிந்ததாய் எழுதி வைத்துள்ளனர். ஆங்காங்கே இடிந்து கிடக்கும் மதில்களையும், அஸ்திபாரத்தையும் இன்றும் நாம் காணலாம்.

எபேசு சபைக்கு செய்தி: (வெளிப்படுத்தல்: 2:1-7)

1. கிறிஸ்துவின் வெளிப்பாடு:

 ஏழு நட்சத்திரங்களை தமது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தேவனுடைய வலது கரத்தினால் காக்கப்படுகின்றனர். சபைகளுக்கு மத்தியில் கிறிஸ்து தமது ஆவியானவர் மூலம் அசைவாடிக் கொண்டிருக்கிறார். ஆவியானவரே சபையைக் கண்காணிக்கிறார். ஒரு தோட்டக்காரனுக்கு தன் தோட்டத்தில் உலவுகிறதற்கு எவ்வளவு சந்தோஷமோ, அது போல கிறிஸ்துவும் சபைக்கு மத்தியில் உலவுகிறதற்கு பிரியம் கொள்கிறார்.

2.சபையின் நற்குணங்கள்:  (வெளிப்படுத்தல்: 2:2,3)

இச் சபையில் பல நற்குணங்கள் இருந்தன. அவைகளை குறித்து கிறிஸ்து மெச்சிக் கொள்கிறார். இயேசு நமது நற்கிரியைகளை கவனிக்கிறார். அதற்கு பலனளிக்கிறார்.

3. தீமையான குணங்கள்: (வெளிப்படுத்தல்: 2:4-5)

ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டது. நற்குணங்களைப் புகழ்வதுபோல தீமைகளைக் கர்த்தர் கண்டிக்கிறார். பல நற்குணங்கள் இருப்பதினால் தீய குணமே இல்லை என்பது பொருளல்ல. பல நற்குணங்கள் இருப்பதனால் தீய குணங்களை பாரா முகமாக இருந்து விடுவார் என்று எண்ணி விடக் கூடாது. கர்த்தர் நீதியுள்ளவர்.

இச்சபையில் பெரிய பாவத்தை தேவன் காணவில்லை. அன்பே இல்லை என்று கூறவில்லை. ஆதியிலே கொண்டிருந்த அதே அன்பு இப்போது குறைந்து போனதே இச்சபையின் குறைவு. நாம் தீமை செய்யாமல் இருந்தாலும் கர்த்தரில் அன்பு கூர வேண்டிய அளவிற்கு அன்பு கூராமலிருப்பது குறையாகும்.

4. எச்சரிப்பு: (வெளிப்படுத்தல்: 2:5,6).

"இன்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நினை." நம்மிடமுள்ள நற்குணங்களை நினைத்துக் கொண்டிருப்பதனால் பிரயோஜனமில்லை. நமது பெலவீனத்தை, குறையை உணர்ந்து நமது ஆவிக்குரிய ஜீவிய நிலையை நன்கு உணர வேண்டும்.

மனந்திரும்பு: 

 குறையை உணர்ந்தால் மட்டும் போதாது. அதினின்று மனம் திரும்ப வேண்டும். அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். (1நாளாகமம்: 7:14).

ஆதியில் செய்த கிரியைகளை செய்: 

மனம் திரும்பினால் மட்டும் போதாது. ஆதியில் செய்த கிரியைகளை செய்ய வேண்டும். அன்பு கிரியையில் வெளிப்பட வேண்டும்.  

விளக்குத் தண்டை நீக்கி விடுதல்:

 மனம் திரும்பாவிடில் என்ன சம்பவிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதி அன்பை விட்டு விட்டபடியால் (எரேமியா: 2:2 - பக்தி, நேசம்) உடனே தண்டனை கொடுக்கப்படவில்லை. மனம் திரும்ப கர்த்தர் சந்தர்ப்பம் கொடுக்கிறார். இது கர்த்தருடைய கிருபையைக் காட்டுகிறது. விளக்குத் தண்டு கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. தேவ மகிமையைக் குறிக்கிறது. இது எடுபட்டால் சபையில் இருள் வந்து விடும்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்:

கிறிஸ்து ஒருவனையும் கட்டாயப்படுத்துவது இல்லை. 'கேட்க மனதானால் கேள்' என்பதே பொருள்.

5. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தங்கள்: 

கிறிஸ்தவ ஜீவியம் ஜெயம் கொள்ளுகிற ஜீவியம். பாவத்தையும், மாம்சத்தையும், பிசாசையும் ஜெயித்தவர்களுக்கு பரலோக வாக்குத்தத்தம். 1யோவான்:5:4 - ல் "தேவனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." வெற்றி பெற்றவர்களுக்கு விருது கொடுப்பது அவசியம்.

ஜீவ விருட்சத்தின் கனி:

ஆதியாகமம்: 2:9 - ல் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவ விருட்சம் இருந்ததாகப் பார்க்கிறோம். மனிதன் பாவம் செய்தபடியினால் ஜீவ விருட்சத்தின் மீதுள்ள அதிகாரத்தை இழந்தான். இங்கே ஜெயம் கொள்ளுகிறவனுக்கு இந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுக்கிறார். அதை புசித்து என்றும் உயிரோடிருக்கும்படி அப்படிச் செய்தார்.

எபேசு சபை முதல் நூற்றாண்டு அப்போஸ்தல சபைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. யோவான் இதை எழுதும்போது முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் மறைந்து இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலம். அப்போஸ்தலர் காலத்திலிருந்த ஆர்வமும், உற்சாகமும் குறைய ஆரம்பித்தது. எனவே, ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார்.

நிக்கொலாய் மதஸ்தர்: (வெளிப்படுத்தல்: 2:6)

ரோம சக்கரவர்த்திகளால் ஏற்பட்ட உபத்திரவங்களை சகிக்கமாட்டாமல் சில கிறிஸ்தவர்கள்  உலகத்தோடு ஒத்துப்போக விரும்பினர். விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிப்பதினாலும், புறஜாதியாரின் பண்டிகைகளில் கலந்து கொள்வதினாலும் அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வதினாலும் தவறில்லை என்று போதித்தனர். இவர்களுக்கு நிக்கொலாய் மதத்தினர் என்று பெயர்.