மார்ச் 02, 2015

தரிசனத்திற்கு நேராக செல்லும் மனிதன்

Image result for vision

தரிசனத்திற்கு நேராக செல்லும் மனிதன்

தரிசனம் என்பது ...

தேவன் நம்மை குறித்து என்ன நோக்கம் வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்வதே தரிசனம். 

உங்கள் வாழ்நாளில் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?

கனவு, விருப்பம், வாஞ்சை, பாரம், ஆசை, இலக்கு.

தரிசனம் எப்படி பெற முடியும்?

தேவசமூகத்தில் ஜெபம் பண்ணும்போது, வேதத்தை வாசிக்கையில், தேவசெய்தியின் மூலமாக, பல பரிசுத்தவான்களின் வாழ்வின் மூலம், 
உள்ளான ஆசை, தேவன் நமக்கு தந்திருக்கும் வரங்களின் அடிப்படையில், நமக்கு இருக்கும் திறமைகளின் அடிப்படையில், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின்படி...

தரிசனம் பெற்றவன் எப்படி இருப்பான்?

தரிசனத்தை நோக்கியே எல்லா அசைவுகளும் இருக்கும். எப்போதும் தரிசனத்தை மட்டுமல்ல தரிசனம் தந்தவரை தன் கண்முன் நிறுத்தி வைத்திருப்பான்.

தரிசனம் பெற்றவனுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள்:
(பத்து கட்டளைகள்)

1. தேவனுக்கு முதலிடம் கொடுப்பவன். ஆராதனை, ஜெபம், வேதவாசிப்பு, தேவ சித்தம்...

2. தரிசனத்தையோ, வேறு எந்த மனிதனையோ, பொருட்களையோ, பணத்தையோ பின்பற்ற மாட்டான். தேவனுடைய மகிமையை வேறு எதற்கும் கொடுக்க மாட்டான்.

3. தேவனுக்கு இழுக்கு ஏற்படுகிற மாதிரி நடந்து கொள்ள மாட்டான். தேவனுடைய நாமத்தையே சொல்லி மாய்மால வாழ்க்கை வாழ மாட்டான். போலித்தனத்தையும், நேர்மையற்ற காரியத்தையும்  வெறுப்பான். 

4. தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கு கொடுப்பான். ஞாயிறு ஆராதனையில் உண்மை. நன்றாக உழைப்பவன். கற்றுக் கொள்பவன்.

5. பெற்றோரை கனம் பண்ணுகிறவன், கீழ்படிகிறவன். ஆவிக்குரிய தலைவர்களுக்கும், மூப்பர்களுக்கும் கனத்தைக் கொடுப்பவன். பெரியவர்களைக் கண்டவுடன் அன்பு காட்டுதல், மரியாதை செலுத்துதல், கீழ்படிதல், அதிகாரங்களை மதித்தல்.

6. பிறரை காயப்படுத்தாமை, கொல்லாமை, சொல்லாலும் செயலாலும் வேதனைப்படுத்தக் கூடாது. பிறரை புண்படுத்தி, பழி வாங்கும் சுபாவம் அல்ல. மன்னிக்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள்.

7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. பார்வை சுத்தம், பேச்சு சுத்தம், காதல், கீதல் வேண்டாம். ஆபாச படம் வேண்டாம். பாலியல் பாவங்களுக்கு விலகியிரு. சோதனை வராமல் இருக்கவும், சோதனைக்குட்படாதபடி இருக்கவும், தீமையிலிருந்து இரட்சிக்கப்படும்படிக்கும் தினமும் ஜெபம் செய்.

8. களவு செய்யாதிரு. பிறன் பொருளுக்கு ஆசைப்படாதிரு. எப்போதும் கொடுக்க வேண்டும் என்று பார். எடுக்க நினைக்காதே. வாங்குவதிலும் கொடுப்பதே மேல். எதிலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று அல்ல. நான் என்ன கொடுக்கலாம்? என் பங்கு எதுவாக இருக்க முடியும்? என்பதையே சிந்தித்துக் கொண்டிரு. நேர்மையற்ற செல்வத்தை வெறுத்துவிடு. அநீதத்தின் கூலியை வெறுத்து விடு.

9. பொய்சாட்சி சொல்லாதே. பொய் உன் தரிசனத்தையே கெடுத்து விடும். அது நேர்மையற்ற தன்மை. பொய் பேசின நாவை கர்த்தர் அறுத்துப் போடுவார். பொய்யானது அனனியா, சப்பீராள் வாழ்வைக் கெடுத்தது. ஆதி திருச்சபையில் எழும்பின முதல் பாவம் 'பொய்' எனவும் சொல்லலாம். உண்மையே பேசுங்கள். உண்மையே வெல்லும். உண்மைக்கு வலிமை அதிகம்.

10. இச்சியாதே. இச்சை அடக்கம் தேவை. தேவைக்காக ஜெபம் செய். இல்லாத ஒன்றை அடைய உன் வாழ்நாளை வீணாக்காதே. போதுமென்ற மனம் அவசியம். தேவன் உனக்கு கொடுத்தவைகளுக்காக நன்றி உடையவனாயிரு. நன்றியுள்ள இதயம் இச்சிக்காது. பேராசைப்படாதே. தேவன் தந்தவைகளில் திருப்தியாயிரு. அதிருப்தியான இதயம் இச்சைக்கு வழி நடத்தும்.


* மாம்சத்தின் கிரியைகளை ஆவியினால் மேற்கொள். மாம்சத்தின் கிரியையின்மேல் ஜெயம். அதற்கு ஆவியானவரால் நடத்தப்படுதல், நிரப்பப்படுதல், பெலப்படுத்தப்படுதல் அவசியம்.

* சரீரத்தின் பெலவீனங்களை அவருடைய கிருபையால் மேற்கொள். சரீர பெலவீன நேரங்களில் அவரின் கிருபையை சார்ந்து ஜெயம் பெறுதல். சரீர பெலவீனங்களின் ஊடாகவும், அவரின் பெலத்தை சார்ந்து தரிசனத்திற்கு நேராக செல்லுதல்.

* தரிசனத்திலிருந்து உன்னை வழிவிலகச் செய்யும் சாத்தானின் தந்திரங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, வேத வசனத்தால் அதை மேற்கொள்.

நேர்மறையான எண்ணங்கள்  & நேர்மையான எண்ணங்கள்:

  • பிறரை குற்றம் சொல்லும் குணமல்ல, பிறர் குறை கூறினாலும் சகித்துக் கொண்டு தரிசனத்தை நோக்கி நடைபோடும் குணம்.
  • தமக்கு தீமை செய்தோரை பழி வாங்கும் எண்ணமல்ல, தீமை செய்தோருக்கு நன்மை செய்து திணறடிக்கும் எண்ணம்.
  • தடங்கல்களைக் கண்டு துவண்டு விடாது, கடினமாய் உழைத்து தரிசனத்தை நிறைவேற்ற விரும்பும் நபர்.
  • பிறர் தன்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அதனால் தண்டிக்கப்பட்டாலும், அதையும் தேவசித்தம் என்றெண்ணி, தொடர்ந்து தேவப்பிரசன்னத்தைக் காத்துக் கொண்டு, பழி வாங்கும் எண்ணமோ, பிறரை நம் உயர்வுக்கு தடையாக எண்ணாமல் அதையும், தேவன் நன்மைக்கேதுவாக நடந்தது என கருதுபவன்.
  • சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவன் (ரோமர்: 8:28). 
  • எல்லா சம்பவங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பின்னால், செயலாற்றும் தேவனுடைய கரத்தைக் காண்பவன்.
  • எல்லாக் காரியங்களிலும் தன்னுடைய தரிசனத்தின் அங்கமாகவே கருதுபவன்.
  • கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. தேவன் நமக்குத் தந்த தரிசனம் நிறைவேறுவதற்கு முன், நாம் அதற்கு தகுதியுள்ளவர்கள் என்று நிரூபிக்கப்பட வேண்டும்

தரிசனம் நிறைவேற நாம் கடந்து செல்ல வேண்டிய பாதைகள்:


  1.  பொறாமை
  2. தனிமை
  3. வெறுமை
  4. சிறையின் அனுபவம்
  5. காட்டிக் கொடுக்கப்படுதல்
  6. மறக்கப்படுதல்
  7. புறக்கணிக்கப்படுதல்
  8. சிறுமைப்படுத்தப்படுதல்
  9. பொய்க்குற்றம் சாட்டப்படுதல், அவதூறு, நிந்தை, அவமானம்
  10. சோதனைகள், பரிட்சைகள்
  11. பாலியல் பாவ சோதனைகள்
  12. பணத்தினால் சோதிக்கப்படுதல்
  13. பதவியினால் சோதிக்கப்படுதல்
  14. பசி, பட்டினி, தாகம், உபவாசம், தூக்கமின்மை
  15. போராட்டங்கள், தடைகள், எதிர்ப்புகள், போட்டிகள்
  16. வியர்வை, இரத்தம்
  17. உள்ளே பயம், வெளியே மிரட்டல்
  18. மாமிசத்தின் கிரியைகளை வெளிப்படுத்த தூண்டும் செயல்கள்
  19. சரீர பெலவீனங்கள்
  20. குடும்ப நெருக்கங்கள், பாரங்கள்
 "என்னை இவ்விடத்திற்கு வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம். ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ... ஆதலால், நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னை பார்வோனுக்கு தகப்பனாகவும்... அதிபதியாகவும் வைத்தார்" (ஆதியாகமம்: 45:5-8).

யோசேப்பு யார் மேலேயும் கசப்பு வைக்கவில்லை. வருத்தப்படவில்லை. நல்லநிலைக்கு வந்ததற்கு அப்புறம் அல்ல.அந்த சூழ்நிலை நடுவிலும் அப்படி இருந்ததினால்தான் தேவன் அவனோடிருந்தார். அவன் செய்ததெல்லாம் வாய்த்தது.

"நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்"(ஆதியாகமம்: 50:20)

தன்மேல் பொறாமை கொண்ட, தன்னைப் பகைத்த அண்ணன்மார்களுக்கு ஆகாரம் கொடுக்கவும், விசாரிக்கவும் அவன் தகப்பன் அனுப்பினபோது , அவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, (சிலரோ அதை சரியாய் செய்யாமல் போவார்கள்) அவர்களை நேசித்து அவர்களிடம் சென்றான். (ஆதியாகமம்: 37:5,13,17). அவர்களை அவன் வெறுக்கவில்லை.

தன்னை அவர்கள் தண்ணீரில்லாத குழியில் போட்ட போதும் (ஆதி: 37:24), அவனை 20 வெள்ளிக்காசுக்கு விற்ற போதும், அவன் அவர்களை புரிந்துகொள்ளவில்லை. இவைகளில் தேவசித்தமே நிறைவேறுகிறது. இதுவே அவனுடைய தரிசனம் நிறைவேறும் இடத்திற்கு அவனை கொண்டு செல்லும் பாதையாக இருந்தது. தேவனுடைய நடத்துதல்கள் சிலசமயம் புரியாத புதிராக இருக்கும். நாம் தனிமையின் வேதனையை ருசி பார்த்துத்தான் ஆக வேண்டும். எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டே ஆக வேண்டும். 

எனவே, சூழ்நிலையையோ, நபர்களையோ குறித்து வருத்தம் தெரிவிக்காமல் அவைகளுக்கு பின்னாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிற தேவனின் கரத்தை காணும் கண்கள் உடையவர்களாக இருக்க வேண்டும்

 தன்னுடைய தரிசனம் நிறைவேறினபோது தன்னுடைய சகோதரர்களை பழிவாங்க நினைக்காமல், நன்மையினால் திணறடித்தான். அவர்களை நன்மைகளினால் சோதித்தான். அவர்களை மிகவும் அதிகமாக நேசித்தான். ஒருதடவை கூட அவர்களை சொல்லிக்காட்டவில்லை. அவர்களை விசனப்படுத்தவில்லை.

போத்திபார் வீட்டில் அவன் உயர்த்தப்பட்டபோது உண்மையாய் இருந்தான். சோதனை வந்தபோது, தேவனுக்கு பயந்து அதைத் தவிர்த்தான். தன் பதவியைக் காத்துக் கொள்ள பாவத்தை தெரிந்து கொள்ளவில்லை. அது தன்னுடைய தரிசனத்திலிருந்து தன்னை வழி விலக பண்ண எழும்பின சோதனையாக கண்டு தன்னை பாதுகாத்துக் கொண்டான். தன்மேல் தவறாய் குற்றம் சாட்டப்பட்டபோது அதை நிரூபிக்க முயலவில்லை. அதிலும், தேவகரத்தைக் கண்டான். அவன், தேவனின் நடத்துதலைக் கவனித்து செயல்பட்டான்.

 நேர்மறையான நல்ல குணாதிசயங்கள்: 

  1. உண்மை
  2. நேர்மை
  3. பரிசுத்தம்
  4. மன்னிப்பு
  5. விட்டுக் கொடுத்தல்
  6. மரியாதை
  7. சகோதர அன்பு
  8. பெற்றோரைக் கனம் பண்ணுதல்
  9. நீடிய பொறுமை
  10. இச்சை அடக்கம்
  11. தெய்வ பயம்
  12. கடின உழைப்பு
  13. தாழ்மை
ஒருவர் நம்மை பழி வாங்க வேண்டும் என்று எண்ணி நம்மை தண்ணீரில்லாத குழியில் தள்ளினாலும், தரிசனம் பெற்றவன் அதை தன்னுடைய தரிசனம் நிறைவேறுவதற்காக தான் கடந்து போக வேண்டிய அனுபவமாக கருதுவான். யாரையும் நொந்து கொள்ள மாட்டான். அதற்குப் பின் தனக்கு தரிசனம் அளித்த தேவனின் கரத்தை காண்பான்.

சிறைச்சாலையில் அழுது கொண்டிருக்கவில்லை. பிறரை குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தனக்கு நேரிட்ட பாதக சூழ்நிலையை ஏற்றுக் கொண்டான். அதை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கருதினான். உற்சாகமாய் இருந்தான். சுறுசுறுப்பாய் இருந்தான்.

சிறையிலும் தலைவனானான்.  எங்கிருந்தாலும் வாங்குகிறவனாக அதாவது, பெற்றுக் கொள்பவனாக இராமல் கொடுக்கிறவனாக இருந்தான். "கொள்பவராக இராமல், கொடையாளராக இரு" (அப்போஸ்தலர்: 20:35). இப்படி பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்கு காண்பித்தேன் என்றான்.

 "குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை" (ஆபகூக்: 2:3).

எனவே, கர்த்தருடைய நடத்துதலுக்கு உன்னை உட்படுத்திக் கொள். அப்பொழுது நீ உன் தரிசனத்தை நிறைவேற்றுகிறவனாக இருப்பாய். அவருடைய நடத்துதலைக்குறித்து மனமடிவடையாதே.

"அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையை விட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்" (எண்ணாகமம்: 21:4)

தேவன் உன்னை நடத்திக் கொண்டு போகிற பாதையை குறித்து மனமடிவடையாதே. அதை ஏற்றுக்கொள். அவிசுவாசியாயிராமல் விசுவாசமாயிரு. யோசேப்பு தேவனுக்கு தன்னை முற்றிலும் ஒப்புக் கொடுத்தான். தேவன் தனக்கு தந்த தரிசனத்தை தேவன் விரும்பின பாதையில் சென்று, தேவனால் உயர்த்தப்பட்டான். ஏற்ற காலத்தில் அவர் உன்னை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருங்கள். அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது. மனிதர்களால் உன்னுடைய தரிசனத்தை தடை செய்ய முடியாது. தரிசனம் தந்தவர் உன்னோடு இருக்கிறார். அவர் நிறைவேற்றுவார்.

தேவன் உங்களுக்கு தரிசனம் அருளுவார். அவரிடம் இருந்து உன் வாழ்க்கைக்கான தரிசனத்தை பெற்றுக் கொள். தரிசனத்தை பெற தேவன் வைத்திருக்கிற பாதையின் வழியாக செல்ல ஒப்புக்கொடு. அடிப்படை சத்தியத்தில் உறுதியாயிரு. ஜெபம், வேதவாசிப்பு, ஞாயிறு ஆராதனை, காணிக்கை, ஊழியம்  போன்ற கிறிஸ்தவ சுபாவத்தில் உறுதியாயிரு. தரிசனம் உன்னில் நிறைவேறும். உனக்கு தரிசனம் அளித்தவர் உன் மூலம் மகிமைப்படுவார்.

தரிசனத்தை நோக்கிச் செல்பவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள். உங்கள் தரிசனம் வளரட்டும். நிறைவேறட்டும். உங்களால் தேவனுடைய ராஜ்யம் கட்டப்படும். அநேகர் உங்கள் மாதிரியுள்ள வாழ்வினால் கவரப்படட்டும். தரிசனங்கள் பெற ஊக்கம் பெறட்டும். அல்லேலூயா! ஆமென்!

- Selected