தீகிக்கு
(கி.பி.54 - 64)
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணியைச் செய்வதில் தீகிக்கு பவுலின் பிரியமான சகோதரனும் உடன் ஊழியனுமாயிருந்தான். (எபேசியர்: 6:21; கொலோசெயர்: 4:7). கிரேக்க சீஷர்கள் எருசலேமிலுள்ள சீஷர்களுக்கு கொடுத்த பண உதவியை பவுல் கொண்டு போனபோது, அவனுடனே சென்ற சிறந்த சகோதரர்களில் தீகிக்கும் ஒருவனாயிருந்தபடியினால், சீஷர்களின் பொது அபிப்பிராயப்படி இவன் உண்மையுள்ளவனென்று அறிகிறோம்.
(அப்போஸ்தலர்: 20:4)
பவுல் பிலமோனுக்கு ஒநேசிமுவைப் பற்றி எழுதிய கடிதத்தை தீகிக்குவின் மூலமாய் அனுப்பினதால், பிலமோன் அவனை மதித்தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது.
தீகிக்கு, ரோம ராஜ்யத்திற்குட்பட்ட ஆசிய நாட்டில் பிறந்தவன். பிலமோன் வசித்த கொலோசெயாவும் அதே நாட்டிலிருந்தது. (அப்போஸ்தலர்: 19:4). ஒருவேளை பவுல் எபேசு பட்டணத்திலிருந்த காலத்தில் பிலமோனும் தீகிக்கும் அவருடைய தோழர்களாயிருந்திருக்க வேண்டும். (அப்போஸ்தலர்: 19:10; 2தீமோத்தேயு: 4:12).
பவுல் கொலோசெயாவுக்கு தீகிக்குவையும் ஒநேசிமுவையும் அனுப்புமுன் அந்த ஊரிலிருந்து பவுலிடம் எப்பாப்பிரா என்னும் சீஷன் வந்து அவரை சந்தித்து, கொலோசெயாவில் உள்ள சீஷர்களின் வரலாற்றை விவரித்துச் சொன்னான். (கொலோசெயர்: 1:8; 4:12; தீத்து: 3:12).
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணியைச் செய்வதில் தீகிக்கு, பவுலின் பிரியமான சகோதரனும் உடன் ஊழியனுமாயிருந்ததைப்போல இக்கால உண்மையுள்ள ஊழியர்களுக்கு உடன் ஊழியராயிருக்கும் பொருட்டு, தீகிக்குவைப் போன்ற உடன் ஊழியர்களை சபைகளின் நடுவே எழுப்பித் தரும்படி ஜெபிப்போம்.