மார்ச் 04, 2015

நாம் இன்னும் வீடுப் போய் சேரவில்லை!


ஒரு வயதான மிஷனெரி தம்பதிகள் ஆப்பிரிக்காவில் தங்கள் ஊழியத்தை பல வருடங்கள் செய்து முடித்து விட்டு, தங்கள் சொந்த தேசமாகிய அமெரிக்காவிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சுகத்தை இழந்து, எந்த வித சொத்தோ, பென்ஷனோ எதுவும் இன்றி, சோர்வோடு ஒருக் கப்பலில் வந்துக் கொண்டிருந்தனர்.

அதே கப்பலில், அமெரிக்க அதிபர் டெட்டி ரூசிவெல்ட், (Teddy Roosevelt) தனது விடுமுறை நாளில், ஆப்பிரிக்கா சென்று வேட்டையாடி, முடித்து விட்டு, தனது சொந்த தேசத்திற்கு திரும்புவதற்காக, பிரயாணம் செய்ததை அப்போது தான் கண்டனர்.

இந்த தம்பதிகளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அதே சமயம் அமெரிக்க அதிபரைக காண சகப்பிரயாணிகள் மிகவும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அளிக்கப்படும் மரியாதைகளையும் இந்த தம்பதியினர் கண்டபோது, அந்த மிஷனெரி தம் மனையிடம், ‘நாம் ஏன் இப்படி நமது வாழ்வை ஆப்பிரிக்காவில் கஷ்டப்பட்டு ஊழியம் செய்திருக்கவேண்டும்? யாரும் நம்மை கண்டுக் கொள்வில்லை. இதோ இந்த மனிதர், ஏதோ வேட்டையாடிவிட்டு திரும்பி போய்க் கொண்டிருக்கிறார்; அவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கனமும் எத்தனை!’ என்று மனம் கசந்துக் கொண்டார்.

அப்போது மனைவி ‘இல்லை, நீங்கள் இப்படி சொல்லக் கூடாது’ என்றுக் கூறினார்.

அதற்கு மிஷனெரி, ‘இல்லை என் மனது பொறுத்துக் கொள்ள மறுக்கிறது’ என்றுக் கூறினார்.

கப்பல் கரையை சேர்ந்தவுடன், அதிபரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்தது. மக்கள் திரள் கூட்டமாய், கொடிகளை உயர்த்தியபடி, அவரை வரவேற்க கூடி வந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களும், பெரிய பதவியிலிருப்பவர்களும் அவருக்கு கைகொடுத்து, வரவேற்றனர். ஆனால் இந்த தம்பதியினரை வரவேற்க ஒரு ஈ காக்கைகூட இல்லை. அவர்கள் அந்த கப்பலிலிருந்து, இறங்கி, வெளியே வந்து, பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து  அடுத்த நாள் முதல் சாப்பிடுவதற்கு என்னச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அன்று இரவு அந்த மிஷனெரி இருதயம் உடைந்தவராய், மனைவியிடம், ‘கர்த்தர் பட்சபாதம் உள்ளவர், ஏன் நமக்கு இப்படி’ என்று புலம்ப ஆரம்பித்தார்.

அப்போது மனைவி, ‘நீர் ஏன் உள்ளேப் போய் கர்த்தரிடமே இதைக் கேட்கக்கூடாது’ என்றுக் கூற, அவர் போய் ஜெபிக்க உள்ளேச் சென்றார்.

சற்று நேரம் கழித்து. அவர் வெளியே வந்தபோது அவர் முகம் தெளிவாக இருப்பதைக் கண்ட அவர் மனைவி, ‘என்னப்பா? என்ன நடந்தது?’ என்றுக் கேட்டார்.

அதற்கு அவர், ‘நான் கர்த்தரிடம், நான் எவ்வளவு கசந்துப் போனேன், அமெரிக்க அதிபர் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கும், எனக்கு கிடைத்த வரவேற்பிற்கும் உள்ள வித்தியாசத்தை அவரிடம் சொல்லி, முறையிட்டேன்.

அப்போது கர்த்தர் என்தோளைச் சுற்றி தம் கரத்தை வைத்து அணைத்தவராக, ‘இன்னும் நீ வீடு வந்துச் சேரவில்லையே’ என்று கூறினார், 

என் துக்கம் கசப்பு எல்லாம் பறந்து போய் விட்டது என்று குதூகலத்தோடுக் கூறினார்.

அன்பு ஊழியர்களே, மற்றவர்கள் உங்களை பாராட்டவில்லை, உங்களை கண்டுக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

உங்கள் மனம் சோர்ந்துப் போயிருக்கிறதா? நான் கர்த்தருடைய ஊழியத்தை தானே செய்கிறேன் ஏன் என்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை, என்று மனம் நொந்துப போயிருக்கிறீர்களா?

Don’t Worry! நாம் இன்னும் வீடுப் போய் சேரவில்லை!

நம்மை மெச்சிக் கொள்ளும் தேவன் ஒருவர் உண்டு. நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே! என்று அனைவர் முன்பும் நம்மை கனப்படுத்தும் சர்வ வல்லமையுள்ள தேவன் நமக்கு உண்டு. 

"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரேயர் : 6:10) என்று வேதம் கூறுகிறது.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று கூறின இயேசுகிறிஸ்து மெய்யாகவே சீக்கிரமாய் வருகிறார். ஆமென் அல்லேலூயா! சீக்கிரமாய் வாரும் ஆண்டவரே!

- Selected