மார்ச் 21, 2015

ஊழியத்தில் தவறுகளை களையும் அணுகுமுறை

Image result for Approach to correcting mistakes


ஊழியத்தில் தவறுகளை திருத்தும் அணுகுமுறை

தவறு செய்யும் ஊழியர்களை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து, இடமாற்றம் செய்வது அந்தக் காலம். தவறு செய்த ஊழியர்களிடம், தவறை உணர்த்தி தட்டிக் கொடுத்து, மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்ய முடியாதபடிக்கு மாற்றுவது இந்தக் காலம்.

தவறு செய்தவர்களை தனிமைப்படுத்துவதைவிட, அவர்கள் செய்த தவறை உணரச் செய்வது மேலானது.

அரைத்த மாவையே அரைக்கும் ஊழியர்கள் பெரும்பாலும் தவறு செய்வதில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நடைமுறைகளையே நூல்பிடித்த மாதிரி  செய்து ஒப்பேற்றுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட கனமான இந்த கர்த்தருடைய வேலையை, இன்னும் திறமையாகச் செய்வது பற்றி இவர்கள் கனவில்கூட நினைக்க மாட்டார்கள். இவர்களால் சபைக்கோ, ஊழியத்திற்கோ, ஸ்தாபனத்திற்கோ எவ்வித வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படாது.

மாறாக, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அங்கீகரிக்க வேண்டும். சில உலகப்பிரகாரமான நிறுவனங்களில் உள்ள குழுக்களில் ஏதாவது ஒன்றில் தவறுகளே வரவில்லையென்றால், அக்குழுவில் உள்ள நபர்களை வேறு குழுவிற்கு மாற்றி விடுவார்கள். தவறுகள் நடக்கவில்லையென்றால், அங்கே புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். 

எனவே, புதுபுது முயற்சியினால் வளர்ச்சியை அடைய வேண்டுமானால், சிறுசிறு தவறுகளினால் ஏற்படும் திருத்தங்களினாலே வளர்ச்சியை நோக்கி செல்ல ஏதுவாகும். நான் இங்கு குறிப்பிடுவது வேதத்திற்கு முரணான தவறோ, பரிசுத்தத்திற்கு விரோதமான பாவங்களோ அல்ல. பராமரிப்புக் குழுக்கள், ஜெபக் குழுக்கள், வீட்டுக் கூட்டங்கள் போன்றவைகளில் சபையில் வரும் நிர்வாகப் பிரச்சினை மற்றும் அணுகுமுறையில் உள்ள  தவறுகளையே.

இன்றுள்ள பல வல்லமையான தலைசிறந்த ஊழியத்தை செய்து வரும் பிரபலமான மூத்த ஊழியர்கள் பலரும் தங்களது தொடக்கக் காலத்தில் பல்வேறு நிர்வாக தவறுகளைச் செய்தவர்கள்தாம். அதிலிருந்து தங்களை திருத்திக்கொண்டு தேவகிருபையை புதுப்பித்துக் கொண்டதினாலும், அவர்களுக்கு முன்னிருந்த மூத்த ஊழியர்களின் அன்பான வழிகாட்டுதலினாலும் பண்படுத்தப்பட்டு உயிர்ப்பிக்கப்பட அர்ப்பணித்ததினால்தான் இன்று அவர்கள் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். பலரையும் பிரகாசிக்க உதவுகிறார்கள்.

நமக்குக் கீழே உள்ள ஊழியர்கள் மற்றும் குழுவினரின் தவறுகளை எப்படி அணுக வேண்டும்?:

1. குழு ஊழியங்களில் தவறு செய்தால் உடனடியாக அதன் தாக்கத்தை அறிந்து கொண்டு டிவிஷன் மற்றும் தலைமை போதகரிடம் தெரிவித்து விடுவது நல்லது. மறைக்காமல் சொல்லப்படும் தவறுகளுக்கு எவ்வித பாடுகளும் இல்லை என்பதை உறுதிபட தெரிவிக்கும்போது, எவ்வித தயக்கமும் இன்றி தானாகவே முன் வந்து சொல்வார்கள்.

2. தவறு செய்தால் அதைச் செய்தது யார் என்ற ஆராய்ச்சியில் இறங்குவதற்குப் பதில், அதனால் ஏற்படும் பாதிப்பைச் சரி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

3. தவறு செய்த ஊழியரை மன்னித்து விட்டு, அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 

4. தவறு செய்த ஊழியர்களை பிற ஊழியர்கள் முன்பு திட்டுவதோ, விமர்சிப்பதோ கூடாது. இதனால், அந்த ஊழியர் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, நிர்வாகத்தின் இமேஜிம் கடுமையாக பாதிப்படையும்.

5. தவறு ஏற்படும்போது சில புதிய அனுபவங்கள், சிந்தனைகள் கிடைக்கலாம். அதனால் சில புதிய யோசனைகள், சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம்.

6. தவறு நடந்துள்ளது என்றால், அது ஏன் நடந்தது என்ற நிகழ்வைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, காரணமானவர்களை கை காட்டுவது வளர்ச்சிக்கு உதவாது.

7. நிறைய தவறு செய்தவர்கள் பெரிய அனுபவசாலியாக இருப்பார்கள். நிறையமுறை தவறு செய்தவர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தவறே செய்யாத பல நூறு பேரை நம்மால் உருவாக்க முடியும்.

8. சிக்கலான பல பிரச்சினைகளுக்கு அபத்தமாக பேசுபவர்களிடமிருந்து கூட தீர்வு கிடைக்கலாம். எனவே, எதையும் வீண் என்று ஒதுக்கித் தள்ளத் தேவையில்லை.

9.  தவறு நடந்து விட்டது என்று நாம் கண்டு பிடித்து சொன்னால் மட்டும் போதாது அதற்கான தீர்வையும் நாம் கண்டு பிடித்துச் சொன்னால் மட்டுமே புகழை அடைய முடியும். (உ.ம்) யோசேப்பு.

10. தவறே நடக்காத இடத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தவறு நடக்கும் இடத்திலிருந்துதான் எதிர்கால எழுப்புதலின் ஊழியத்தை  நிர்ணயிக்கும் தகுதியான தலைவர்கள் உருவாகிறார்கள். 

- அநேக வேளைகளில் சிற்சில தவறுகளே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்துகிற நெம்புகோல் என்பதை நாம் மறக்கக்கூடாது.