மார்ச் 24, 2015

காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்

Image result for book of job:13:4

காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்

"நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்" (யோபு: 13:4)

"துன்பம் வரும்போது உண்மையான நண்பர்களை அறியலாம்" என்றொரு பழமொழி சொல்வார்கள். யோபு தன் துன்பத்தில் நண்பர்களை மட்டுமல்ல... தனக்கு துணையாயிருக்க வேண்டிய மனைவியே வினையாக இருப்பதை அப்போது யோபு அறிந்து கொண்டான்.

செல்வமும், செல்வாக்கும் ஒரு மனிதனுக்கு இருக்கும்போது, அவன் தவறு செய்தால்கூட உலகம் அதை சரியென அங்கீகரிக்கும். ஆனால், அதே செல்வம்  அம்மனிதனை விட்டு நீங்கும்போது, அவன் நீதியைப் பேசினால்கூட அங்கீகரிக்காது.

இதுதான் பக்தன் யோபுவின் வாழ்வில் நடந்தது. யோபு உத்தமன்; சன்மார்க்கன், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன். நீதிமான். இவனது செல்வமும், செல்வாக்கும் அவனை விட்டு நீங்கினபோது, அவனை நேசித்த மனைவி, நெருங்கிய சிநேகிதர்கள் அனைவரும் தூஷித்தனர். குறைகண்டுபிடித்தனர். குற்றம் சுமத்தினர். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல, நொந்துபோன யோபுவை தொடர்ந்து வார்த்தைகளால் தொடர்ந்து வாதித்தார்கள்.

உயிர் காப்பான் தோழன் என்பார்கள். யோபுவின் நண்பர்களோ உயிர் போகும்படி மனமடிவாக்கினார்கள். ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டியவர்களோ ஆழமான மனக்காயங்களை ஏற்படுத்தினார்கள். எனவே, யோபு அவர்களைப் பார்த்து, "காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்" என்று சொன்னான்.

முழு வேதாகமத்தில் வாசிப்போமானால் இப்படிப்பட்ட காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள் அநேகம் பேர் இருப்பதை காணலாம். அவர்கள் வேதத்திலேயே திருஷ்டாந்தங்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், நம்மை சுற்றிலும் அப்படிப்பட்டவர்கள் இராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 காரியத்துக்குதவாதவர்கள் யார் என்பதை தொடக்கத்திலேயே நாம் கண்டறிந்து களைய வேண்டும். இல்லாவிட்டால்... வெகு இழப்பை ஏற்படுத்தி விடுவார்கள். எப்படி கண்டறிவது? அவர்களுடைய கிரியைகளினால் கண்டறியலாம். அவர்களின் முதன்மையான சில குணங்கள் உண்டு. அவைகளை வைத்து இனங் காணலாம்.

1. பொய்யைப் பிணைத்தல்: (யோபு: 13:4)

காரியத்துக்கு உதவாத வைத்தியர்களின் முதல் வேலையே பொய்யைப் பிணைப்பதுதான். காணாததை கண்டேன் என்பார்கள்; இல்லாததை இருக்கிறது என்பார்கள்; நல்லவனை தூஷிப்பார்கள்; தீயோனை மெச்சிக் கொள்வார்கள்; வாயின் பிரதியுத்தரங்கள் அனைத்தும் மிகைப்படுத்தலாகவே இருக்கும். ஒரு காரியத்தை உள்ளதை உள்ளபடி சொல்லாமல் கண், காது, மூக்கு வைத்து, பிரம்மாண்டப்படுத்தி,  கதை கட்டி பேசுவார்கள். அதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி பிரியம். விசாரித்துப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாக நடந்திராது. 

2. சொப்பனங்களை தீர்க்கதரிசனமாக சொல்வார்கள்: (எரேமியா: 23:32)

சொப்பனங்களை தீர்க்கதரிசனமாக சொல்வார்களாம். இரவில் கண்ட மாயைகளை பகலில் கர்த்தர் சொன்னார் என உளறித் தள்ளுவார்கள். மனதில் தோன்றும் சுய கருத்துக்களை கர்த்தர் சொன்னார் என எடுத்து விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் - மரித்துப்போனவர்கள் கனவில் வந்து சொன்னார்கள்; அதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று. வேறுசிலர் இருக்கிறார்கள்: உங்களைப்பற்றி நானொரு கனவு கண்டேன் என்பார்கள். எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

3. காட்டாறு போல் மோசம் பண்ணுவார்கள்: (யோபு: 6:15)

இப்படிப்பட்டவர்கள் மோசம் பண்ண நினைத்தார்களானால் விளைவுகள் படுபயங்கரமானதாக இருக்கும். சிநேகிதன் செய்யும் மோசமே உலகில் படுபயங்கரமானது. ஏனென்றால், சிநேகிதன் நம்மிட்ம் நெருங்கி இருப்பவன். நம் நிறை, குறை, பலம், பலவீனம், அந்தரங்கம் அனைத்தையும் நன்கு அறிந்தவன். எனவே, அவன் ஏற்படுத்தும் விளைவுகள் காட்டாறு போலத்தான் இருக்கும். 

பாவமற்ற யோபுவையே குற்றப்படுத்தினவர்கள்தான் அவனது சிநேகிதர்கள். பாவமற்ற நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவையே சிநேகிதனாகிய  யூதாஸ்காரியோத்து காட்டிக் கொடுத்தானே! விளைவுகள் பயங்கரமானதானதே!

"அகங்காரிகள் எனக்கு விரோதமாய் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்" (சங்கீதம்: 119:69).

ஆய்வு செய்யுங்கள்:

நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து பார்ப்போம். நம்மைச் சுற்றிலும் சிநேகிதர்கள் அநேகம்பேர் இருக்கலாம். ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? காரியத்திற்குதவாத அநேகம்பேரை வைத்திருப்பதனால் என்ன பயன்? ஆவிக்குரிய நல்ல சிநேகிதர்களை, காரியத்திற்குதவும் நண்பர்களை சம்பாதியுங்கள்.  

தானியேல் தனக்காக ஜெபிக்கும் நல்ல நண்பர்கள் குழுவை வைத்திருந்தான். தாவீது, தனக்காக யோனத்தானை நட்பாக வைத்திருந்தான்.

நல்ல நட்பென்பது இருபுறமும் பரஸ்பர அன்பைப் பிரதிபலன் பாராது பகிர்ந்து கொள்வதாகும். நட்பு பாராட்டுங்கள். நல்ல நட்பை தொடருங்கள். ஒருவரிலொருவர் உதவும் மனப்பான்மை, ஜெபிக்கும் மனப்பான்மை, ஒருவருக்கொருவர் பாரங்களை சுமக்கும் மனப்பான்மையை வளர்த்தக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் உதவியாயிருங்கள். நாம் பிறரிடம் எதிர்பார்ப்பதுபோலவே,  நம்மிடமும் மற்றவர் எதிர்பார்ப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, நம்மை நம்பியிருப்பவர்களுக்கும்,  நட்புகளுக்கும் நாமும் காரியத்திற்குதவுபவர்களாக விளங்குவோமாக!