மார்ச் 21, 2015

தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

Image result for leadership development
தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

"தலைமைத்துவம்" என்று சொன்னால் இன்று யாரும் அதிகம் விரும்பி படிக்க முன் வருவதில்லை. இது ஏதோ ஒரு நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டது அல்லது ஊழிய ஸ்தாபனத்திற்கும் மற்றும் மிகப் பெரிய நிர்வாகத்திற்கும் மட்டுமே உரியது என நினைத்து இப்பகுதியை வாசிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர், நமக்கு தெரியாத எந்த விஷயத்தை இவர் புதிதாக சொல்லி விடப் போகிறார்? என விலகி போகிறார்கள். தலைமைத்துவத்தில் உள்ள உண்மையான தலைவர்கள் யாரும் புதிதுபுதிதாக கற்றுக் கொள்ளவே விரும்புவர். அதன் மூலம் தங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக்கொள்ள வாஞ்சிப்பார்கள். இதுபோதும் என திருப்தி அடைய மாட்டார்கள். எப்போதும் தாகமுள்ளவர்களாய் இருப்பார்கள்.

தலைமைத்துவம் என்பது வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட வேண்டியது அவசியம். தலைமைத்துவம் உள்ள குடும்பம், நிறுவனம், ஸ்தாபனம், சமுதாய அமைப்பு அனைத்தும் மிக சிறப்பு வாய்ந்ததாக விளங்கும். 

தலைமைத்துவத்தில் உள்ள ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்?

1. முன்யோசனை உள்ளவனாக இருக்க வேண்டும்:

தலைவன் என்பவன் அல்லது போதகர் என்பவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவனாக இருக்க வேண்டும். மற்றவர்கள் யோசிக்கும் முன்பே யோசிக்க வேண்டும். முக்கியமாக மாத்தி யோசிக்க வேண்டும். இந்த ஞானத்தை சாலமோனைப்போல, கர்த்தரிடம் ஜெபத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். (1இராஜாக்கள்: 3:5-14)

2. ஊழியத்தில் உள்ள நுணுக்கங்களில் வளர வேண்டும்:

ஊழிய யுக்தியில் நாம் பலவீனமாக இருப்போமென்றால் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணப்படுவதென்பது இயலாத ஒன்று. ஊழிய யுக்தியில் திறன் வாய்ந்தவர்களாயிருந்தால்தான், உங்களுக்கு கீழே உள்ளவர்களை நீங்கள் வழி நடத்த முடியும். தாவீதைப் பற்றி சவுலிடம், அவனது ஊழியக்காரர் கொடுத்த சாட்சி: "... காரிய சமர்த்தன்..." (1சாமுவேல்: 16:18). எதை? எப்படி? எப்பொழுது? யாரைக் கொண்டு? எந்த இடத்தில்? எந்நேரத்தில்? எதைக் கொண்டு? என்ற நுணுக்கம் தெரிந்திருத்தலே காரியங்களை வாய்க்கச் செய்யும். இதை அறிந்து செயல்பட்டு வெற்றி காண்பவனே "காரிய சமர்த்தன்" எனப்படுவான்.

3. தரம் உள்ளவனாக இருக்க வேண்டும்:

தன்னுடைய இமேஜ் பாதிக்கின்ற எந்த காரியத்திலும் வெளியரங்கமாகவோ, மறைமுகமாகவோ செயல்படவோ, ஈடுபடவோக் கூடாது. அகமும் புறமும் பரிசுத்தம் காணப்பட வேண்டும். பேச்சில், நடக்கையில், செயலில், பார்வையில் தரம் காணப்பட வேண்டும். இலக்கண தமிழில் பேசாவிட்டாலும், விரும்பத்தக்க மதிப்பிற்குரிய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரியாசம், கேலிப் பேச்சு நம் தரத்தை தாழ்த்தி விடும். பிறர் வருந்தா வண்ணம் தரமுள்ள வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வோடு பகிரலாம். அது மதிப்பை கூட்டும். சத்தியத்தில் தெளிவு, வசனத்தில் தெளிவு, பேச்சில் தெளிவு, ஆலோசனையில் தரம், செயலில் கருத்து, வாக்கு வன்மை, வாக்கு மாறாத தன்மை, நேசிப்பதில், அக்கறை செலுத்துவதில் உண்மை, கரிசனை இவையெல்லாம் நம்மை தரம் உள்ளவர்களாக உயர்த்திக் காண்பிக்கும். இவைகளில் அன்றாடம் நம் வாழ்க்கை முறைகளாக மாற பழகிக் கொள்ள வேண்டும்.

4. தொலைநோக்குப் பார்வை வேண்டும்:

நாம் செய்யும் சபை ஊழியம் எதை நோக்கி? எந்த இடத்தில்? எப்படிப்பட்ட வளர்ச்சியை நோக்கி இருக்கிறது? இப்போது இருக்கும் ஊழிய திட்டங்களை வைத்து, மேலும், எந்த அளவிற்கு வளர்ச்சியை நோக்கி செல்லும்? எப்படி வளர்ச்சியை நோக்கி கொண்டு போக முடியும்? என்று தொலை நொக்கு பார்வையோடு யோசித்து செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
5 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
10 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
15 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
20 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
25 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?

இதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான உபகரணங்கள்  எங்கு கிடைக்கும்? யார்? யாரை? எதெதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?அதற்கான தேடலை தொடருவதே தலைவனின் வேலை.

5. குழுவாக வேலை செய்ய வேண்டும்:

தனி மரம் தோப்பாகாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் பாலமாக நீங்கள் இருக்க வேண்டும். தலைவனுக்கு முதலில் குழு மனப்பான்மை இருப்பது மிக அவசியம். நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்து சீஷர் குழுவோடுதான் ஊழியம் செய்தார் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. ஊழியத்திற்கு அனுப்பும்போதுகூட இரண்டிரண்டுபேராக சிறுசிறு குழுவாக அனுப்பி வைத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில நிறுவனங்கள்  பணியாளர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று பலவிதமான போட்டிகளை வைப்பார்கள். அப் போட்டிகளில் எப்படி குழுவாக வேலை செய்கிறார்கள் என்பதை வைத்து, தலைவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்வார்கள். சொந்த வாழ்வில் இயல்பாக சில விஷயங்களில் குழுவாக வேலை செய்ய இயலாதவர்கள், ஊழியத்தில் மட்டும் குழுவாக இணைந்து வேலை செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? "ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?" (1தீமோத்தேயு: 3:5).

6. பலம், பலவீனம் - அறிந்திருக்க வேண்டும்:

உங்கள் பலம் எது? பலவீனம் எது? என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, மற்றவர்களின் பலம், பலவீனமும் எது? என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்தால்தான் சரியான நபரிடம், சரியான வேலையை கொடுக்க முடியும். இது பற்றிய சரியான கண்ணோட்டம் தாவீதுக்கு இருந்ததினால்தான், பின்னாட்களில் அவனைச் சுற்றிலும் பராக்கிரமசாலிகளை எதெதற்கு? யார்?யாரை? எப்படியெப்படி? அமர்த்திக் கொள்ள முடியுமோ? அப்படியப்படி தாவீது அமைத்து அரசாட்சியை திடப்படுத்திக் கொண்டதை வேதத்தில் நாம் வாசித்தறிய முடிகிறது.

7. தகவல் தொடர்பு சரியாக இருக்க வேண்டும்:

மற்றவர்களுடன் உரையாடுவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கியதே தகவல் தொடர்பு. நீங்கள் மனதில் நினைக்கும் ஒரு விஷயத்தை பிழையில்லாமல், தெளிவாக மற்றவருக்கோ அல்லது குழுவினருக்கோ தெரியப்படுத்துவதுதான் "தகவல் தொடர்பு". இந்த உரையாடலில் உங்கள் வார்த்தைகளின் தன்மை, உடல்மொழி போன்றவை மிக முக்கியம். இவை தவிர, வேத அறிவு, அபிஷேக நிறைவு, புத்திக்கூர்மை, சமூகப் பிரச்சினை குறித்த அறிவு, மற்றவர்கள் மீதான கரிசனை, இரக்கம், பரிவு போன்றவை தேவைப்படும்.