மார்ச் 23, 2015

உத்தமனாயிரு ...

Image result for integrity
உத்தமம் - நேர்மை

"... கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: நான் சர்வ வல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு" (ஆதியாகமம்: 17:1)

"உத்தமம்" என்பதின் பொருள்:

"முழுமையான"  /   "பூர்த்தி"  /   "பூரணம்"   /   "உறுதித் தன்மை"

உத்தமத்தில் ஒரு பகுதி - நேர்மை

ஆதாம் ஏவாள்  இழந்ததற்கு முன் இருந்த நிலையை நாம் அடையும்படிக்கு இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

ஆபிரகாம் நாட்களில் இருந்த உலகம் நேர்மையற்ற உலகம். அதில் கர்த்தர் உண்மையுள்ள உத்தமனைத் தேவன் தேடினார். ஆபிரகாமைக் கண்டறிந்தார். ஆபிரகாமிடம் தேவன் உத்தமத்தை எதிர் பார்த்தார். அதை அவன் வாழ்நாள் முழுவதும் அவனிடம் எதிர்பார்த்தார். இன்று ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளிடமும் தேவன் உத்தமத்தை எதிர்பார்க்கிறார். உத்தமத்தை உருவாக்க விரும்புகிறார்.

"... பூரண புருஷராகும்வரைக்கும்" (எபேசியர்: 4:11) கர்த்தர் நம்மில் உத்தமத்தை உருவாக்க விரும்புகிறார். "உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்" (நீதிமொழிகள்: 10:9).

முழுமையை, பூரணத்தை தேவன் ஏன் விரும்புகிறார்?

நாம் ஆராதிக்கும் தேவன்  பூரணராயிருப்பதினால், நாமும் முழுமையாகவும், பூரணராகவும் இருக்க விரும்புகிறார். நம்முடைய குணாதிசயம் தேவனோடு இணைந்திருந்தால் அனைத்தும் சரியாகி விடும். ஏனென்றால், நாம் ஆராதிக்கும் தேவன் மாறாதவர். "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" (எபிரெயர்: 13:8). மாறாத பூரணரான இயேசுவோடு நாம் இணையும்போது நமது முழுமையற்ற தன்மை முழுமையடையும்.

எப்போதும் நாம் கடைபிடிக்க வேண்டியவைகள்:

விசுவாசிப்பதை செயல்படுத்த வேண்டும். விசுவாசமும், செயல்பாடும் இணைந்தே செயல்பட வேண்டும். வார்த்தையும், வாழ்க்கையும் ஒன்றாக செயல்பட வேண்டும். நமது மதிப்பீடும், நடவடிக்கையும் ஒன்றாகவே செயல்பட வேண்டும். 

மத்தேயு: 19:16-23 / மாற்கு: 10:17 / லூக்கா: 18:18 - நித்திய ஜீவனை சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும்?

வாலிபன் கேட்ட கேள்விக்கு - நீங்களாயிருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இயேசுவின் பதில்: "நீ  பூரண சற்குணணாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னை பின்பற்றி வா என்றார்" (மத்தேயு: 19:21). கிட்டத்தட்ட அந்த வாலிபன் ஒன்றுமில்லா நிலைக்கு இயேசு கிறிஸ்து அவனைக் கொண்டு வந்தார். சகேயு, சீஷர்கள் அந்நிலைக்குத்தான் வந்திருந்தார்கள். "அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே;..." என்றான். (மத்தேயு: 19:27). நம்முடைய அர்ப்பணிப்பு எப்படிப்பட்ட நிலையில் உள்ளது?!

 பூரண சற்குணணாயிருப்பது என்பது ஒரே நாளில் வருவதல்ல.  நாம் முழுமையடைய,  பூரணமடைய அனுதினமும் அதில் அர்ப்பணிக்கின்றவர்களாக, அப்பியாசப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

உத்தமத்திற்கு உதாரணபுருஷன் - சாமுவேல் தீர்க்கதரிசி:

தன் உத்தமத்தைக் குறித்து பரிசோதிக்கும்படி சாமுவேல் ஐந்து கேள்விகளை கேட்பதை வாசிக்கிறோம்.

"... நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயது முதல் இந்நாள் வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்து வந்தேன்." 

"இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநிநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்." 

"அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநிநியாஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்." 

"அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்." (1சாமுவேல்: 12:1-5).

நம்மால் நடத்தப்படுகிற மக்கள் நம்மைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?

நம்மில் உத்தம குணத்தை வளர்த்துக் கொள்வது எப்படி?

"என் சொந்த ஆத்துமா பரிசுத்தப்படுத்துதலே எனது முக்கியப் பணி" - ஹென்றி மார்டின்

1. நேர்மறையான உத்தம பரிசோதனை
2. எதிர்மறையான உத்தம பரிசோதனை

- இவையிரண்டையும் நம் வாழ்வில் அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

உதாரணமாக:

1. ஆபிரகாம் - தன் ஏகசுதனாகிய ஈசாக்கை பலி செலுத்தும்படியான பரிசோதனை.

பரிசோதனையின் முடிவில் - தேவனுக்கு பயந்தவன், தேவ நோக்கத்தை தவறவிடாதவன், தேவ சித்தம் நிறைவேற உறவு பாசத்திற்கு இடங் கொடாதவன் - உத்தமன் என பேர்பெற்றான்.

2. யோபு: - இழப்புகளில் தன் உத்தமத்தை இழக்காதவன்.

ஒருவன் தேவனால் சோதிக்கப்படுகிறான். மற்றொருவன் சாத்தானால் சோதிக்கப்படுகிறான். உத்தமன் எதினால் பரிசோதிக்கப்பட்டாலும், முடிவில் சுத்தப் பொன்னாக விளங்குவார்கள். ஏனென்றால், அப்படிப்படவர்கள் உத்தமர்கள்.

எதிர்மறையான உத்தம பரிசோதனை வரும்போது - மேற்கொள்வது எப்படி?

யாத்திராகமம்: 17:1-7 - வனாந்திரத்தில் தண்ணீரில்லாமல் தவித்த இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலை நம் ஊழியப் பாதையிலோ, வாழ்விலோ வரும்போது - நாம் என்ன செய்வோம்?

நாமும் முறுமுறுப்போமா? அல்லது கர்த்தரிடம் சலித்துக் கொள்வோமா? அல்லது நம்மை நாமே நொந்து கொள்வோமா? அல்லது விரக்தியின் உச்சக்கட்டத்திற்கே செல்வோமா?

நிதானத்தை இழக்காமல், கர்த்தரிடம் சேர்ந்து, அவருடைய வழிநடத்துதலை பொறுமையோடு செயல்படுத்த வேண்டும். உள்ளான வாழ்வில் உத்தமமான பொறுமை, தேவசித்தத்தை நிறைவேற்ற தவறவிடாது செயல்படுத்த வெளியரங்கமான வாழ்வில் பொறுமை நிறைந்த உத்தமம் தேவை. உள்ளான வாழ்க்கையும், வெளியரங்கமான வாழ்க்கை முறையும் ஒத்ததாக, இணைந்தே இருக்க வேண்டும்.

"இருளிலே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்பதே உங்கள் குணாதிசயம்" - டி.எல்.மூடி.

உத்தம குணதிசயத்தை  இருதயத்தில் உருவாக்க வேண்டும்:

* தாவீதின் உத்தம குணாதிசயத்தை அவனது இருதயத்தில் தேவன் கண்டார். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனை புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1சாமுவேல்: 16:7).

தேவன், தாவீதின் இருதயத்தில் உள்ள உத்தம குணத்தைக் கண்டு அபிஷேகித்தார். எனவே, தாவீது தன் குமாரனாகிய சாலமோனுக்கு பின்னாட்களில் ஆலோசனை கூறும்போது,  "என் குமாரனாகிய சாலமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடு உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்" (1நாளாகமம்: 28:9) என்றான். இருதயம், சிந்தனை, நோக்கம் மிக முக்கியமானது.

பவுலின் சுய பரிசோதனை:

1கொரிந்தியர்: 15:9 - அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவன் - கடைசி அப்போஸ்தலன்  / அப்போஸ்தலன் என்பதற்கு பாத்திரன் அல்ல.

எபேசியர்: 3:8 - பரிசுத்தவான்களில் சிறியவன் - கடைசி பரிசுத்தவான்

1தீமோத்தேயு: 1:15 - பாவிகளில் பிரதான பாவி - முதன்மையான பாவி

முதிர்வடைய முதிர்வடைய பவுலின் விசுவாச வார்த்தைகளும் முதிர்வடைகிறதைக் காண்கிறோம்.

அன்பானவர்களே!

தேவனாகிய கர்த்தர் ஆபிரகாம், பவுலிடம் மட்டுமல்ல... நம் ஒவ்வொருவரிடமும் உத்தம குணாதிசயத்தை இருதயத்தில் எதிர்பார்க்கிறார். நாட்கள் செல்லச் செல்ல... அனுபவங்களும் அதிகமாகிறது. அனுபவங்கள் நம்மை இன்னும் இன்னும் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்வடையச் செய்யும். முதிர்ச்சி நம்மில் உத்தம விசுவாச வசனிப்பை கொடுக்கும். நாமும் முதிர்வடைந்து பிறரையும் முதிர்வடையச் செய்வோம். தேவனாகிய கர்த்தரின் கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்! அல்லேலூயா!