மார்ச் 11, 2015

நீங்கள் உயிரடைவீர்கள்


எசேக்கியேல்: 37:14 - "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்".

1.  "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்":                                         

மனிதனுடைய ஆவியானது எளிதில் சோர்ந்து போகக்கூடியது. (நீதிமொழிகள்: 15:13). எளிதில் முறிந்து போகக் கூடியது (நீதிமொழிகள்: 18:14) என வேதம் கூறுகிறது. 

உலகில் வரும் உபத்திரவங்கள், வாழ்வில் வரும் போராட்டங்கள், சத்துருக்களின் நெருக்கங்கள், அவமானங்கள், நிந்தைகள் நேரிடும்போது மனம் சோர்ந்துபோய், பயமும் திகிலும் அடைய, முடிவில் தற்கொலை மரணத்தை நோக்கி செல்லும் முடிவை எடுத்து விடுகிறார்கள். இதிலிருந்து விடுபட, மீள வழிவகை தெரியாமல் மனிதர்கள் அல்லல்படுகின்றனர். 

சோர்ந்து போன ஆவியை பலப்படுத்தவே, தேவ ஆவி அருளப்பட்டது. சோர்ந்து போன ஆவி பெலனடையவே பரிசுத்தாவி அருளப்பட்டது.

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன் என தேவன் உரைக்கிறார். எதற்காக?

ஆதியாகமம்: 1:2 - "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்" என வாசிக்கிறோம்.

தேவ ஆவியானவர் இல்லாத பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்ததுபோல... மனினுடைய வாழ்வில் வழிகாட்டும் தேவ ஆவியானவர் இல்லாதததினால், ஒழுங்கீனங்கள், ஆசீர்வாதமில்லாத வெறுமையை, மாயையை அனுபவிக்கின்றனர்.

அன்றாட வாழ்வில் ஒழுங்கீனம்; தனிமனித வாழ்வில் ஒழுங்கீனம்; குடும்ப வாழ்வில் ஒழுங்கீனம்; எங்கு பார்த்தாலும் ஒழுங்கீனங்களும், சீர்கேடுகளும் நிறைந்து காணப்பட காரணம்... தேவ ஆவி இல்லாமையே.

அன்றாட வாழ்வில் வெறுமை; குடும்பத்தில் வறுமை, பற்றாக்குறை, கடன் தொல்லை; தொழிலில் வெறுமை; காலையில் பொருளீட்ட சென்றவர் மாலையில் திரும்பும்போது வெறுமையாக தோல்வியோடு திரும்ப காரணம்? தேவ ஆவி இல்லாமையே.

தேவ ஆவியானவர் இல்லாத பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆனால், ஆவியானவர் அசைவாடினபோதோ... இருள் அகன்றது. வெளிச்சம் தோன்றியது. புதுப்புது சிருஷ்டிப்புகள் உற்பத்தியாகி, வெறுமை மாறி... நிறைவு பரிபூரணமாக வந்ததை காண்கிறோம். ஒழுங்கீனங்கள் சரிசெய்யப்பட்டு, மனிதன் வாழ தகுதிபடுத்தப்பட்டது.

அதேபோல, உங்களுக்குள் தேவன் தமது ஆவியை வைப்பேன் என்று சொல்கிறார். தேவ ஆவியை நீங்கள் சுதந்தரிக்கும்போது... உங்களுடைய ஒழுங்கீனம் சீராகும். வெறுமை நிறைவாகும். வாழ்வு வளமாகும்.

ஒழுங்கற்று திரியும் மனிதர் மாறுவர். விடமுடியாத தீய பழக்கவழக்கங்கள் விடுபட்டு விடுதலையாவர். குடும்பத்தில் வீடு தங்காத கணவர், பிள்ளைகள், மனைவி மனந்திரும்பி குணப்படுவர். எனவே, தேவ ஆவிக்கு நேராக திருப்பப்பட வேண்டும். ஆவியில் நிரம்பி ஜெபிக்க பழக்குவிக்கப்பட வேண்டும். அந்நிய பாஷை அடையாளத்தோடு ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும். 


கர்த்தருடைய ஆவி நம்மை நிரப்பும்போது - தேவையற்ற அசுத்தாவிகள் ஓடிவிடும். அதனுடைய கிரியைகள் இனி நம்மில் காணப்படாது. மாம்சீக குணங்கள் மாறி, தேவனுடைய திவ்வியசுபாவங்கள் தோன்றும். (2பேதுரு: 1:4-8). கடுஞ்சொற்கள் பேசியநாவு, நவமான பாஷைகளை பேச ஆரம்பிக்கும். குடும்பத்தில் இனியசூழல், தேவகிருபை, தெய்வீக அமைதி ஏற்படும். எனவே, ஆவியானவர் நம்மில், குடும்பத்தில் அசைவாட இடங்கொடுப்போம். புதுமைகள், அதிசயங்கள், அற்புதங்கள் அனுதின வாழ்வில் நடக்கச் செய்வார்.

"கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு" (2கொரிந்தியர்: 3:17)

2. நீங்கள் உயிரடைவீர்கள்:

கர்த்தர் நம்மை உயிர்ப்பிக்க விரும்புகிறர். நாம் எதிலெல்லாம் உற்சாகமிழந்திருக்கிறோமோ, எதிலெல்லாம் சோர்வுற்றிருக்கிறோமோ, எதிலெல்லாம் மரித்த நிலையில் காணப்படுகிறோமோ அதையெல்லாம் மாற்றி இன்று உயிரடையச் செய்யப் போகிறார். 

மரித்த நிலையில் காணப்படுகிற ஆசீர்வாதங்கள், மங்கியெரிகின்ற நிலையில் உள்ள ஆவிக்குரிய வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வியாபாரம் அனைத்தையும் தேவன் உயிர்ப்பிக்க வல்லவர். கர்த்தருடைய ஆவி அதை செய்து முடிக்கும்.

உலர்ந்த எலும்புகளை உயிரடையச் செய்த தேவன் - நம்மையும் உயிர்ப்பிப்பார். நம்மிடத்தில் உலர்ந்து போய் காணப்படுகிற எவ்வித குறைவையும் உயிர்பெறச் செய்ய தேவஆவியினால் கூடும்.

செயலற்றுக்கிடக்கிற அவயவயங்கள் செயல்பட செய்வார். படுத்துகிடக்கிற 38 வயது வியாதியஸ்தனை "படுக்கையை எடுத்துக் கொண்டு நட" என்று சொன்ன இயேசுவின் வல்லமை இன்று படுத்த நிலையில் இருக்கிற தொழில், வியாபாரம் அனைத்தையும் தூக்கி நிறுத்துகிற வல்லமை அவரது ஆவிக்கு உண்டு. விசுவாசியுங்கள். ஜெபியுங்கள். ஆவியானவரின் அசைவாடுதலுக்கு இடம் கொடுங்கள். படுத்தபடுக்கையாக உள்ளதை எழுந்து நடக்கச் செய்வார். இன்றே அற்புதங்களைக் காண்பீர்கள்.


"... பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்". (சகரியா: 4:6).


3. நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்:

இது கர்த்தருடைய வார்த்தை. நாம் வாழும் இந்த தேசத்தில் எத்தனையோ மதவாத சக்திகள் விரோதமாக எழும்பி தேவையற்ற தகாத வார்த்தைகளை அபத்தமாக தேவஜனத்திற்கு விரோதமாக பேசி வருகிறது. 'ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்ட வந்ததாம்' என கூறுவார்கள். கைபர், போலன் கணவாய் வழியே வந்த வந்தேறிகள், இந்தியாவிற்கே இல்லாத தெய்வ வழிபாட்டையும், கலாச்சாரத்தையும், ஒற்றுமையாக காணப்பட்ட மக்கள் நடுவே ஜாதி என்ற வர்ணாசிரமத்தை கொண்டு வந்து, இன்றுவரை பிரிவினையை ஏற்படுத்தி, ஒன்றுபட்ட இந்தியாவை பிளவுபடுத்தி வருகிறது.

அன்பு தெய்வம் இயேசுவோ வெளிநாட்டுத் தெய்வம் அல்ல. முழு உலகிற்கும், முழு மனுக்குலத்திற்கும் ஆண்டவர். முழு மனித குலத்தையும் மீட்க வந்தவர். அவர் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல... இந்தியாவிற்கும்... ஏன் ...அவர் முழு உலகத்திற்கும் ஒரே தெய்வம், ஒப்பற்ற தெய்வம். அவராலேயன்றி வேறொருவராலேயும் இரட்சிப்பு இல்லை.

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளும் இந்திய மண்ணின் சொந்தக்காரர்களே!. கர்த்தருடைய பிள்ளைகள் வந்தேறிகளால் விரட்டப்பட வேண்டியவர்கள் அல்ல. விரட்டப்பட வேண்டியவை விக்கிரகமும், விபச்சாரமும், வர்ணாசிரமும்தானே தவிர வேறல்ல.

கர்த்தருடைய வார்த்தை இதுதான் -  "நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்". "வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், அவரது வார்த்தைகள் ஒழிந்துபோவதில்லை". ஆமென்! அல்லேலூயா!


கர்த்தருடைய ஜனமே!


நீ வாழ்ந்து வருகிற வீடாகட்டும், வாழ்ந்து வருகிற ஊராகட்டும். வாழ்ந்து வருகிற தேசமாகட்டும். உன்னை விரட்ட ஒருவராலும் முடியாது. நீங்கள் இருக்கிற இடத்தில் நிலைத்து சுகமாய் வாழ வைப்பார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.

நீங்கள் செய்து வருகிற தொழிலாகட்டும், நீங்கள் செய்து வருகிற வியாபாரமாகட்டும், பார்த்து வருகிற வேலையாகட்டும். அவ்விடத்திலிருந்து உன்னை ஒருவராலும் விரட்ட முடியாது. நான் உங்களை அவ்விடத்தில் வைப்பேன் என கர்த்தர் சொல்லியிருக்கிறார். நீதிமான் செய்வதெல்லாம் வாய்க்கும்.

நீங்கள் செய்து வருகிற ஊழியமாகட்டும், அறிவிக்கிற சுவிசேஷமாகட்டும், சொல்லுகிற தேவசெய்தியாகட்டும். அவ்விடத்திலிருந்து ஒருவராலும் உங்களை விரட்ட முடியாது. "உனக்கு விரோதமாக எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (உபாகமம்: 28:7).  பயப்பட வேண்டாம். உங்களைக் கொண்டு தேவன் என்ன செய்ய வேண்டுமென்று சித்தம் வைத்து அழைத்து வந்தாரோ... அதை செய்து முடிக்குமட்டும் உங்களை கைவிட மாட்டார். தைரியமாயிருங்கள். கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.

சத்துரு நமக்கு விரோதமாக வீணான வார்த்தைகளால் அலப்பத்தான் முடியும். உடனே நிறைவேறுவதற்கு அவையென்ன கர்த்தருடைய வார்த்தைகளா?! என்ன? பயப்படாதேயுங்கள். ஜீவனுள்ள தேவன் நம் தேவன். கர்மேலில் வெளிப்பட்ட தேவன் நம் தேவனல்லவா?! அக்கினியில் பதிலளிக்கும் தேவன் நம் தேவன் என்பதை மறந்து போக வேண்டாம்.

இது நாம் பிறந்து வாழும் சொந்த தேசம். நமது சொந்த தேசத்தை மதவாதிகள், தீவிரவாதிகள் ஆளுகை செய்ய அனுமதியாமல் தேச சமாதானத்திற்காக நம் தேவனாகிய இரட்சகர் இயேசுவிடம் வேண்டுதல் செய்வோம். இனத்தால், மதத்தால், வர்ணாசிரமத்தால், துவேஷத்தால் பிரித்தாள நினைக்கும் சத்துருவின் சகல வலிமையான சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு அபத்தமாய் போகும்படி வேண்டுதல் செய்வோம். இந்திய தேசத்தில் தேவனுடைய இராஜ்யம் பலமாய் ஸ்தாபிக்கப்பட ஜெபிப்போம்.

"பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்; அதற்கு கிருபையுண்டாவதாக" (சகரியா: 4:7)