எழுப்புதல் வீரர்
வட அமெரிக்காவில் செவ்விந்தியரிடையே மிஷினெரியாயிருந்த "டேவிட் பிரெய்னர்ட்" 29 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தவர். அவர் மரித்து 200 வருடங்கள் கழித்து இன்னமும் அவரைக் குறித்துப் பேசப்படுகிறதே!? அது ஏன்? அவரது இரகசியம் என்ன?
டேவிட் பிரெய்னார்ட் தமது மாபெரும் பணியை ஜெபத்தின் மூலமாகச் சாதித்திருக்கிறார். அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் வசித்து வந்த செவ்விந்தியரின் மொழியைப் பேச அறியாத நிலையில், அவர் தனது முழு நேரத்தையும் ஜெபத்திலேயே செலவிட்டார்.
அவர் எதற்காக ஜெபித்தார்? செவ்விந்தியரின் மொழியை அறியாமல் அவர்களைச் சந்திப்பது கடினமாயிருந்தது. எனவே, அவர் அந்த மொழியை பேச வேண்டுமானால் அவரது எண்ணங்களை சரியாக விவரிக்கக்கூடிய ஒருவர் தேவை.
ஆகையால், தான் செய்கிற எந்தவொரு காரியமும் தேவனுடைய வல்லமையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென அறிந்திருந்தார். எனவே, பரிசுத்த ஆவியானவர் தன்மேல் இறங்கும்படி நாள் முழுவதும் ஜெபித்து வந்தார்.
அவர் மரித்தப்பின், அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்த "வில்லியம் கேரி" இந்தியாவிற்கும், "இராபர்ட் மச்செய்ன்" யூதர்களிடத்திற்கும் மற்றும் ஹென்றி மார்டின் இந்தியாவிற்கும் மிஷினெரிகளாகச் சென்றனர்.
19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் எழுப்புதலுக்கு, மற்ற எதையும் விட டேவிட் பிரெய்னார்டின் ஜெபமே முக்கிய காரணமென - ஏ.ஜெ.கோர்டன் கூறியிருக்கிறார்.
எழுப்புதல் வீரர்களின் வெற்றிக்கு அடித்தளம்:
* ஜெபம்
* ஜெபம்
* கர்த்தருடைய அழைப்புக்கும், ஏவுதலுக்கும் கீழ்படிந்து முழுமையான அர்ப்பணிப்போடு சென்றனர்.
* சூழ்நிலை எதிராகவோ, கடினமாகவோ இருக்கும் நிலையில் அதை முறியடிக்க அதிக நேரம் ஜெபத்தில் உறுதியாக தரித்திருந்திருந்தனர்.
* கர்த்தருடைய வல்லமையை மட்டுமே சார்ந்திருந்தனர்.
* பரிசுத்தாவியானவர் தன்மேல் இறங்கும்படி, எடுத்து பயன்படுத்தும்படி நாள்முழுவதும் ஜெபித்து வந்தனர்.
* ஊழியத்தில் எந்த பகுதி கடினமானது என முதலில் கண்டறிந்து அது நீங்கும்படி, அதற்கு உதவும்படி ஜெபித்தனர்.
* எந்த சூழ்நிலையிலும் ஊழியத்தினிமித்தம் வந்த சோதனைகளில் சோர்வோ, பயமோ, பற்றாக்குறைகளினாலோ, திரும்பி விடுவோம் என்ற எண்ணங்களுக்கோ இடங் கொடுக்கவில்லை. மாறாக, விசுவாசத்தில் உறுதியாக நின்றனர்.
* அழைக்கப்பட்ட அழைப்பின் நோக்கம் - முழுவதும் நிறைவேறும்வரை தங்களை பாடுகளுக்குட்படுத்தினார்கள்.
இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை சரித்திரம் பலபேரை எழுப்புதலுக்குள்ளாக்கும். இப்படிப்பட்டவர்களையே "எழுப்புதல் வீரர்" என அழைக்கிறோம்.
எழுப்புதலுக்கு அடித்தளம் - ஜெபமே!
ஜெபம் இல்லாவிட்டால் ஜெயம் இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம்.
ஜெபத்தைக் குறித்து இ.எம்.பௌண்ட்ஸ் கூறிய சிந்தனை துளிகள்:
- ஜெபிக்காத மனிதன் தேவனிடத்திலிருந்து பெற வேண்டிய உதவியை இழப்பதன் மூலம் தன்னைத்தானே கொள்ளையிடுகிறவனாகவும் மனிதனுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் தேவனை நிறுத்துகிறவனாகவும் இருக்கிறான்.
- தேவனுடைய ஒவ்வொரு பணியிலும் ஜெபம் மிகவும் முக்கியமாக இருப்பதுடன் ஒழுங்குமுறையான ஜெப வாழ்வில்லாத மனிதன் ஒருபோதும் அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை நடத்த முடியாது.
- ஜெபத்தை இரண்டாவது இடத்தில் வைப்பது, வாழ்வின் சகல காரியங்களிலும் தேவனை ஒதுக்கி வைப்பதற்குச் சமம்.
- தேவனுடைய பணியை சீராக நடத்திச் செல்வதற்கு ஜெபம் ஒன்றுதான் அடிப்படை அத்தியாவசமாகும்.
- ஜெபத்தை மறுதலிப்பது, தேவனை மறுதலிப்பதாகும். தேவனையும், ஜெபத்தையும் ஒருபோதும் வேறு பிரிக்கவே முடியாது.
- ஜெபத்தைக் குறித்து கற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல, நடைமுறைப்படுத்துபவர்களே இன்றைய சபையின் தேவையாயிருக்கிறார்கள்.
- ஜெபிக்கிற மனிதர்கள் மட்டுமே இவ்வுலகத்தில் தேவனை வெளிப்படுத்தும் தகுதியை உடையவர்கள்.
- ஜெபிக்கிறவர்களிடமே தேவன் தமது காரியங்களையும், சுவிசேஷத்தையும் ஒப்புக் கொடுக்கிறார்.
- ஜெபிக்கிற மனிதர்களிடம்தான் இயேசு தமது சரீரமாகிய சபையின் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
- பணமோ அல்லது புத்தியையோ கொண்ட மனிதர்கள் அல்ல; ஜெபிக்கிறவர்கள் மட்டுமே இன்றைய திருச்சபைகளுக்குத் தேவைப்படுகின்றனர்.
- இவ்வுலகில் தேவனுடைய இராஜ்யத்தை விரிவுபடுத்துவதே மற்றும் ஸ்தாபிப்பதே ஜெபிப்பதன் முக்கிய நோக்கமாகும்.
ஜெபித்து ஜெபித்து ஜெயமெடுப்போம்! எழுப்புதல் அடைவோம்!