உடன்படிக்கை: (Covenant):
ஒரு உடன்படிக்கை என்பது - இரு தனி நபர்களுக்கோ அல்லது இரு சாராருக்கோ இடையிலான ஓர் ஒப்பந்தம் ஆகும்.
பழைய ஏற்பாட்டிலே தேவன் யூதர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்தார். அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். (ஆதியாகமம்: 15:18; யாத்திராகமம்: 19:5,6; 2சாமுவேல்: 23:5).
ஆனால், யூதர்கள் தங்கள் பங்குக்கு, தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். பழைய ஏற்பாட்டில், யூதர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படியவில்லை. அவர்கள் உடன்படிக்கையில் தங்கள் பாகத்தை நிறைவேற்றத் தவறினர்.
ஆகவே, தேவன் அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறுத்தி வைத்தார். மனிதர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். தமது குமாரனாகிய இயேசுவில் விசுவாசம் வைக்கும் எவரக்கும் இரட்சிப்பைத் தருவதாக வாக்குப் பண்ணினார். இந்தப் புதிய உடன்படிக்கை எரேமியா: 31:31 - 34 மற்றும் எபிரேயர்: 8:6-13 - ல் விவரிக்கப்படுகின்றது.
பழைய ஏற்பாட்டில், உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இரத்தம் சிந்தப்பட்டது. ஒரு மிருகம் பலி செலுத்தப்படும். உடன்படிக்கை செய்து கொள்ளும் இரு சாராரும் அந்த மிருகத்தின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களினூடே நடந்து செல்வார்கள்.
அதன் அர்த்தம்:
"இந்த உடன்படிக்கையை மீறுபவனுக்கு, இந்த மிருகத்துக்கு நேரிட்ட இதே கதி நேரிடட்டும்" - என்று சொல்வதாகும். (ஆதியாகமம்: 15:17-18; எரேமியா: 34:18-20). மிருகத்தின் சிந்தப்பட்ட இரத்தம் "உடன்படிக்கையின் இரத்தம்" என்றும் அழைக்கப்பட்டது. (யாத்திராகமம்: 24:5-8).
அதைப் போலவே, இயேசு சிந்திய இரத்தம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான புது உடன்படிக்கையின் இரத்தமாயிற்று. (மாற்கு: 14:24; 1கொரிந்தியர்: 11:25)
நமது பாவங்களுக்கான தண்டனையைத் தமது குமாரனாகிய இயேசுவின் மேல் சுமத்த தேவன் ஒப்புக் கொண்டார். தமது குமாரனைத் தியாகபலியாக ஒப்புக் கொடுப்பதே உடன்படிக்கையில் தேவனின் பங்கு.
நமது பங்கு - இயேசுவில் விசுவாசம் வைத்து அவருக்கு கீழ்படிவது. நமக்கும் தேவனுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை இயேசுவின் இரத்தத்தால் உறுதி பண்ணப்படுகிறது.