ஆகஸ்ட் 29, 2012

"பஸ்கா பலியும் தேவாட்டுக்குட்டியும்"

                                                      "பஸ்கா பலியும் தேவாட்டுக்குட்டியும்"

பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும், யூதர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறும் வண்ணமாகக் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகை ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அந்த நாட்களில் எல்லாம் யூதர்கள் புளிப்பில்லா அப்பம் மட்டுமே சாப்பிட வேண்டும். எனவே, பஸ்கா பண்டிகையானது 'புளிப்பில்லா அப்பப் பண்டிகை' என்றும் பெயர் பெற்றது. பண்டிகையின் முதல் நாளன்று பஸ்கா விருந்து புசிக்கப்படும், பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும். (லேவியராகமம்: 23:4-8; உபாகமம்: 16:1-8).

'பஸ்கா' என்றால் கடந்து செல்வது என்று பொருள். யூதர்கள் எகிப்திலிருந்த அந்த கடைசிநாள் இரவு அன்று, தேவன் எகிப்தியரின் தலையீற்றுகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தார். காரணம், எகிப்தின் ராஜாவான பார்வோன் யூதர்களை விடுதலை செய்ய சம்மதிக்கவில்லை.

அதற்கு முன், தேவன் யூதர்களை ஒரு ஆட்டுக் குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அவர்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசச் சொன்னார். சங்காரத்தூதன் வந்து, அந்த நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்கும் இரத்தத்தைக் காணும்போது, அந்த வீடுகளில்உள்ள தலையீற்றுக்களை அழிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வான். (யாத்திராகமம்: 12:1-14,21-30; எபிரேயர்: 11:28).

அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். (1கொரிந்தியர்: 5:7). ஏசாயா: 53:7 - "...அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகின்ற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்திரிக்கிறவனுக்கு முன்பாக சத்திமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் , அவர் தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்."  வெளிப்படுத்தல்: 13:8 - "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி..."

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (அவரது சிலுவை மரணத்தினாலே) நாம் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனக் கட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். வெளிப்படுத்தல்: 7:14 - "...இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்".

"உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" 1பேதுரு: 1:18,19).

எனவே, யூதர்களின் பஸ்கா பண்டிகையை அதாவது புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நாம் ஆசரியாமல், அதற்குப் பதிலாக, இயேசுவின் 'மரணம்' மற்றும் 'உயிர்த்தெழுதலை' ஆசரிக்கின்றோம். அவருடைய மரணம் 'பெரிய வெள்ளி' என்ற பெயரிலும், அவருடைய உயிர்த்தெழுதல் 'ஈஸ்டர்' என்ற பெயரிலும் ஆசரிக்கபடுகின்றன.