ஆகஸ்ட் 30, 2012

விருத்தசேதனம்

                                                                                  விருத்தசேதனம்
                                                                                        (Circumcision)

விருத்தசேதனம் என்பது ஆண்குறியின் நுனியிலுள்ள உபரியான தோலை வெட்டியெடுப்பதாகும். விருத்தசேதனம் - எபிரேயச் சொல் - "மூலா" (Mulah) என்பதாகும்.

தேவன் ஆபிரகாமும் அவன் சந்ததியார் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படும்படி கட்டளையிட்டார். இது தேவன் யூதமக்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாகும். (ஆதியாகமம்: 17:9-14). யூத ஆண்கள் அனைவரும் பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். புதிய ஏற்பாட்டில் குழந்தை பிறந்த 8 ஆம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டு வந்ததாக அறியலாம். (லூக்கா: 1:59; 2:21) விருத்தசேதனமானது, ஒருவன்  யூதன் என்பதற்கான வெளிப்பிரகாரமான அடையாளம்.

தீர்க்கதரிசிகள் இதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என உறுதிபட கூறலாம். தீர்க்கதரிசிகள் அனைவரும் நுனித்தோலை நீக்குவதை விட இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படுவதையே அதிகமாக வலியுறுத்தி வந்தனர். (உபாகமம்: 10:16; 30:6; எரேமியா: 9:25,26).

எனினும், இரட்சிப்பு பெறுவதற்கும் விருத்தசேதனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.(கலாத்தியர்: 5:6). உண்மையில், வெளியாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் இருப்பதாலேயே ஒருவன் உண்மையான யூதன் என்றாகி விடாது. (ரோமர்: 2:28,29). எனவே, புறஜாதிக்கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.(அப்போஸ்தலர்: 15:5-11).

கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினால் எந்த ஒரு மனுஷனும் நீதிமானாக முடியும் என்ற உபதேசத்தை வலியுறுத்த தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார்.

'இஸ்ரவேலர்' என்று அழைக்கப்படுகிற  யூதர்களுக்கு ஆபிரகாம் தகப்பனாயிருந்தான்.எனவே, தாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று யூதர்கள் மேன்மை பாராட்டினர். (யோவான்: 8:33,39). தேவன் ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். எனவே, விருத்தசேதனத்தினிமித்தம் தாங்கள் 'தேவனுடைய பிள்ளைகள்' ஆகிறோம் என்று யூதர் உறுதியாக நம்பினர்.

இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படாமல் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்படுவதில் பிரயோஜனமில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. (உபாகமம்: 10:12,16; கலாத்தியர்: 5:6).

தேவனோடுகூட உடன்படிக்கை செய்திருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகவும், அதினிமித்தம், தான் "தேவனுக்கு சொந்தமானவன்" என்று அடையாளம் காட்டவும் ஒவ்வொரு யூதனுக்கும் அவசியமாயிற்று. (ஆதியாகமம்: 17:13). அதாவது, ஆபிகாமுடன் யூதமக்களுக்கு தொடர்பு உண்டாகும்படிக்கு விருத்தசேதனம் அவசியமாயிற்று.

அப்படியானால், ஆபிரகாம் எதினால் நீதிமானாக்கப்பட்டான்? தேவனுக்கு சொந்தமானமானவன் என்று எதினால் அடையாளங் காணப்பட்டான்? விருத்தசேதனத்தினாலா?  இல்லையே...

விருத்தசேதனத்தினால் விசுவாசத்தைப் பெறவில்லை. விசுவாசத்தினால் அடைந்த நீதிக்குத்தான் - அடையாளமாகவும், முத்திரையாகவும் விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொண்டான். விருத்தசேதனத்தை தேவன் ஆபிரகாமுக்கு கட்டளையிடும் முன்பே ஆபிரகாம் நீதிமானாகத் தீர்க்கப்பட்டான்.(ரோமர்: 4:11,12 ).

எனவே, "விருத்தசேதனமும் இல்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும் பொருட்டாக, அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்...நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும் அந்த அடையாளத்தைப் பெற்றான்..." (ரோமர்: 4:11,12 ) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால், யூதரல்லாதவரின் விசுவாசம் ஆபிரகாமின் விசுவாசம் ஆகும்.

எனவே, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் அடையாளமாயிராமல், விசுவாசமே முக்கியமாகக் கருதப்படுகிறது. (ரோமர்: 4:13). பவுல் உதாரணமாக தாவீதை குறிப்பிடுகிறார்:  தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்தான். அதிலும், அவன் முழுவதும் தேவனுடைய இரக்கத்தை கிருபையை சார்ந்து கொண்டான். தன்னுடைய கிரியைகளால் சம்பாதிக்க முடியாத தேவ நீதிக்காக அவன் தேவனிடம் வேண்டி நின்றான்.(ரோமர்: 4:6-8; சங்கீதம்:32).

தேவனுக்கு முன்பாக ஒருவன் நீதிமானாக வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. விருத்தசேதனம் பண்ணுவதற்கு முன் ஆபிரகாம் விசுவாசித்து நீதிமானாகத் தீர்க்கப்பட்டது போல, ஒருவன் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தால் போதுமானது.

எனவே, விசுவாசமார்க்கத்தார் எவர்களோ? அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. அந்தப்படி, விசுவாசமார்க்கத்தார்அனைவரும் விசுவாசமுள்ள விசுவாசமுள்ள  ஆபிரகாமுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இவ்விதமாக ஆபிகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினாலே விசுவாசமார்க்கத்தாராகிய நமக்கு வருகிறது. (கலாத்தியர்: 3:6-9). இவ்விதமாக கிறிஸ்து இயேசுவை நாம் விசுவாசிப்பதன் மூலம் ஆபிரகாமுக்கு குமாரரும், குமாரத்திகளுமாய் இருப்போம்.