ஆகஸ்ட் 13, 2012

எண்ணாகமம் விளக்கவுரை - பக்கம்: 2.


 கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

1.  கோத்திரப் பிதாக்களின் அட்டவனையில் லேவி, யோசேப்பு இல்லாததற்கான காரணங்கள்:

    அ) யோசேப்பு:  

ஆதியாகமம்: 48:5,6  "நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப் பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்கு பெறுவார்கள்" என்று சொல்லி, யாக்கோபு தன் வம்ச அட்டவணையில் சேர்த்து விட்டார். 

எனவே, யோசேப்புக்கு பதிலாக அவனது இரண்டு பிள்ளைகளை வம்ச அட்டவணையில் சேர்த்ததினால், யோசேப்பின் பெயர் வம்ச அட்டவணையில் இல்லாமற்போனது.

அதனால் என்ன?

யோசேப்பிற்கு தன் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் இரண்டு பங்கு கிடைத்ததில் சந்தோசப்பட வேண்டிய ஆசீர்வாதந்தானே!

ஆ) லேவி:   

யாத்திராகமம்: 32:26 - "... கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான்; அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்" - என்று வாசிக்கிறோம்.

விக்கிரகாராதனைக்கு விரோதமாக இஸ்ரவேல் கோத்திரங்களில் லேவிக் கோத்திரம் மட்டுமே கர்த்தருடைய பட்சத்தில் பக்தி வைராக்கியமாக பட்டயத்தை உருவிக் கொண்டு முன் வந்தார்கள்.

அதினிமித்தம்...

உபாகமம்: 10:8,9 - "அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள் வரைக்கும் நடந்து வருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தை கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். ஆகையால், லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்".

எண்ணாகமம்: 3:12 - "இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக் கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்"

இவ்விதமாக தேவன் தமக்கென லேவியரைத் தெரிந்து கொண்டதினால், இஸ்ரவேலரின் வம்ச அட்டவணையில் லேவியின் பெயர் இல்லாமற் போனது.

அதனால் என்ன?

கர்த்தருக்கே ஊழியம் செய்யும் மாபெரும் பாக்கியம் கிடைத்ததே!