ஆகஸ்ட் 07, 2012

உயிர்த்தெழுதல்


                                                 உயிர்த்தெழுதல்: (Resurrection )


'உயிர்த்தெழுதல்' என்றால் மரணமடைந்த பின் மீண்டும் உயிர் பெறுவது.

இயேசுவுக்கு மரித்தோரை உயிருடன் எழுப்பும் வல்லமை உண்டு. (யோவான்: 5:24,25). அவர் நாயீனூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார். (லூக்கா: 7:11-17). மரித்து நான்கு நாட்களாகி விட்டிருந்த லாசருவை உயிரோடு எழுப்பினார்.(யோவான்: 11:38-44). அவரும் மரணத்தை வென்று உயிருடன் எழுந்தார். எனவே, அவர் வல்லமையினாலே மற்றவர்களும் மரணத்தை வெற்றி கொள்வர். (1கொரிந்தியர்: 15:20-23).

பூமியில் உள்ளவர்களிலே, கிறிஸ்து உலகத்தின் முடிவிலே திரும்ப வருமபோது முதலாவது எழுப்பப்படப் போகிறவர்கள் கிறிஸ்துவுக்குள் மரித்த விசுவாசிகளே (1தெசலோனிக்கேயர்: 4:16,17).

முடிவிலே எல்லா மனிதர்களும், கெட்டவர்கள், நல்லவர்கள் அனைவரும் எழுப்பப்படுவார்கள். விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் மோட்சத்தில் நடைபெறும். விசுவாசியாதவர்களின் உயிர்த்தெழுதலோ நரகத்தில் இருக்கும். (யோவான்: 5:28,29; அப்போஸ்தலர்: 24:15; வெளிப்படுத்தல்: 20:4-15).

நமது சரீரம் மரணம் அடைகையில், நமது ஆவியோ தொடர்ந்து வாழும். ஆனால், உடனடியாக நாம் புது சரீரத்தைப் பெறுவதில்லை. உலக முடிவில் இயேசு திரும்ப வரும்போது தான் நமது புதிய சரீரத்தைப் பெறுவோம். பவுல் இதை நமது 'சரீர மீட்பு' (ரோமர்: 8:23) என்று அழைக்கிறார். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் தங்களது புதிய சரீரங்களை மோட்சத்தில் பெறுவார்கள். இந்த புதிய சரீரங்களுக்கு மரணம் கிடையாது. அவை மகிமைப்பட்ட சரீரங்கள். அவை கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரீரம் போலிருக்கும். (லூக்கா: 24:36-43; பிலிப்பியர்: 3:21; 1யோவான்: 3:2).

உலக வரலாற்றிலே மிக மிக முக்கியமான சம்பவம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே. (மாற்கு: 16:8).

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலமாக இயேசு தாம் உண்மையாகவே தேவ குமாரன் தான் என்றும், உலக இரட்சகர் தான் என்றும் மனிதர்களுக்கு நிருபித்துக் காட்டினார். (ரோமர்: 1:4).

அவரது உயிர்த்தெழுதலின் காரணமாக, நாமும் நித்திய ஜீவனின் நம்பிக்கையைப் பெறுகிறோம். (யோவான்: 11:25,26).

இயேசு சொன்னார்: "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" (யோவான்: 14:19).