ஆகஸ்ட் 28, 2012

புத்திர சுவிகாரம்: (Adoption)


கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக நாம் தேவனுடைய தத்துப்பிள்ளை ஆகின்றோம். இது கிறிஸ்துவில் இரட்சிப்பின் ஒரு அம்சம்.

முதலில் நாம் எல்லோருமே பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாய் இருந்தோம். நாம் தேவனுடைய குடும்பத்தினராய் இருக்கவில்லை. சகல மனிதர்களையும் படைத்தவர் தேவனே. ஆனால், சகல மனிதர்களுக்கும் தகப்பன் தேவன் அல்லர். கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்போருக்கு மட்டுமே அவர் தகப்பன். நாம் விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக் கொள்ளும்போது, மாத்திரமே, தேவன் நம்மைத் தமது குடும்பத்தில் சேர்த்துக் கொள்கிறார்.

எந்தத் தத்துப் பிள்ளையும், தன்னைத் தத்தெடுத்துக் கொண்டவருடைய சகல சொத்து சுகங்களுக்கும் வாரிசுரிமைப் பெறுவான். அவன் ஒருவேளை மாம்சத்தின்படி, இயற்கையாக அவருக்குப் பிறந்த மகனாயிரா விட்டாலும், சட்டப்படி அவன் மகனாகவே கருதப்படுவான். ஒரு மகனுக்குரிய அனைத்து சிலாக்கியங்களையும் உரிமைகளையும் அடைவான்.

அது போலவே, ஒரு காலத்தில் சுபாவத்தின்படி பாவிகளாய் இருந்த நாம் இப்பொழுது கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு மெய்யான ஆவிக்குரிய குமாரரும் குமாரத்திகளும் ஆகிறோம். பரலோகத்திலே நமக்குரிய வாரிசுரிமையைப் பூரணமாய் பெற்று அனுபவிப்போம். (ரோமர்: 8:15-17; கலாத்தியர்: 4:3-7; எபேசியர்: 1:4,5).

தேவனுடைய தத்துப்பிள்ளையாவது, நமது இரட்சிப்பின் அரும்பெரும் பாக்கியங்களில் ஒன்று. இதன் பொருள் தேவனுடைய சுபாவம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள்ளே வருகிறது என்பதாகும். அதாவது, ஒரு பிள்ளை தனது பூலோகத் தகப்பனுடன் இருக்கும் அளவிற்கு நாம் தேவனுடன் அந்நியோன்யமாக இருக்கிறோம்.

அதோடு, நாம் தேவனுடைய பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுமாகும். தேவனுடைய பிள்ளையாய் இருப்பது என்பது மகத்தான சிலாக்கியமும் இன்பமும் ஆகும். அது ஒரு மாபெரும் பொறுப்பும் கூட.