ஆகஸ்ட் 02, 2012

வேதாகமத்தின் நூலாசிரியர்

“ஆனால் ஒரு உண்மை நூலாசிரியர்”

வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பல வகையான தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். பல்வ‌ேறுபட்ட சமுதாயத்தில் வாழ்ந்தார்கள். வேறுபட்ட கல்வி நிலையைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் அரசர்களாகவும், இராஜதந்திரகளாகவும், போர்வீரர்களாகவும், வரிவசூலிப்பவர்களாகவும், வேத சாஸ்திரிகளாகவும், எழுத்தாளர்களாகவும், மருத்துவர்களாகவும், உக்கிராணக்காரர்களாகவும், மேய்ப்பர்களாகவும், மீனவர்களாகவும்; இன்னும் பலவித தொழில்களை செய்பவர்களாகவும் இருந்தனர்.

வேதாகமம் பல்வ‌ேறுபட்ட எழுத்தாளர்களால், பல்வேறுபட்ட காலங்களில், பல்வேறுபட்ட மொழிகளில், பல்வ‌ேறுபட்ட இடங்களிலிருந்து எழுதப்பட்டது.

என்றாலும், வேதாகமம் அளிக்கும் செய்தி அற்புதவிதமாக ஒன்றுபட்டதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது. வேதாகமத்திற்கு ஒரு உண்மை நூலாசிரியர் இருந்தார் என்பது தெளிவாகிறது. அந்த நூலாசிரியர் தேவனே.

நீங்கள் ஒரே தலைமுறையில், ஒரே கால கட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே மொழியை பேசும் 20 எழுத்தாளர்களை ஒன்று திரட்டி, ஒரே தலைப்பைக் குறித்து அவர்களை எழுதச் செய்வீர்களானால், அவர்கள் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவார்கள்!!

வேதாகமம் பல சிக்கலான, சர்ச்சைக்குரிய தலைப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், அது இன்னும் ஒன்றுபட்ட ஒரே புத்தகமாக விளங்குகிறது.

 எனவே, வ‌ேதாகமத்தின் கட்டமைப்பு மற்றும் நோக்கத்தின் மூலாதாரம், அனைத்தும் அறிந்த, அனைவரையும் நேசிக்கிற, அனைத்து வல்லமையும் படைத்த தேவன் மட்டுமே என்பது புலனாகிறது.