ஆகஸ்ட் 05, 2012

"கிருபை"

கிருபை:

கிருபை - என்பது தேவன் மனிதனிடம் காட்டும் அன்பு மற்றும் இரக்கம் ஆகும்.

தேவன் மனிதர்களுக்கு இலவசமாகக் கிருபையை வழங்குகின்றார். மனிதர்கள் தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பெறச் சற்றும் தகுதியற்றவர்கள். காரணம், அவர்கள் பாவமுள்ளவர்கள். ஆனால், மனிதன் தேவனுடைய அன்புக்கு பாத்திரவானாய் இல்லாவிடினும், தேவன் இன்னும் மனிதனை நேசிக்கின்றார். நாம் பாவிகளாக, தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த போதே, நம்மை மீட்பதற்காக அவர் தமது சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். (ரோமர்: 5:8).

தேவனுடைய கிருபையினாலே நாம் இரட்சிப்பை அடைகிறோம். (எபேசியர்: 2:8; தீத்து: 2:11). தேவனுடைய கிருபையினாலே நாம் கிறிஸ்தவ ஜீவியம் செய்கிறோம். மனிதன் பெற்றுக் கொண்ட எந்த ஆசீர்வாதமும், அது உலகப் பிரகாரமானதோ, ஆவிக்குரியதோ எதுவாயினும் தேவனுடைய கிருபையினாலே கிடைத்ததுவே. தமது கிருபையினாலே தேவன் நம்மை இரட்சிக்கும்படி தமது குமாரன் இயேசுவை அனுப்பினார். தமது கிருபையினாலே தேவன் நம்மைப் பரிசுத்தமாக்கத் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். கிருபையினாலே, கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளானவர்கள் தேவனோடு என்றென்றுமாய் வாழ்வார்கள்.