மார்ச் 27, 2015

சுவிசேஷப்பணியில் செய்திப் பரிமாற்றம்


சுவிசேஷப்பணியில் சிறப்பான செய்திப் பரிமாற்றம்

2000 ம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிறிஸ்தவம் வளராமல் இருக்கக் காரணம் என்ன?

  • செயல்படாமை
  • அறிவிக்கும் முறையில் மாற்றம்
  • எதிர்தரப்பு எதிர்பார்ப்பு நிறைவேறாமை
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

சுவிசேஷப் பணி என்பது என்ன?

*     "இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்து, மனந்திரும்புதல் மூலமாக கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த உதவுதல்"

*   ஒருவர் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து , அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, திருச்சபையில் இணைந்து, இராஜாவாகிய அவருக்கு ஊழியம் செய்யும் வகையில், அவருக்கு பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு கிறிஸ்துவை அறிமுகம் செய்வது.

சொல்லும் வகையில் ஒரு சிறப்பு இருக்க வேண்டும்:

* ஒவ்வொரு சந்திப்பும் விலையேறப் பெற்றது. 

* மக்கள் பாவத்தில் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்

* பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான செய்தி நமக்கு உண்டு

* கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது

* ஒரு நாள் ஒருவர் நமக்கு பகிர்ந்து கொண்டார். அதுபோல் நாமும் ஒருவருக்கு பகிர வேண்டும்

*  ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் (யோவான்: 1016)

சிறப்பான செயல்பாடு என்பது என்ன?

....................................................... அடைய விரும்பும் நோக்கத்தை மனதில் வைத்து .......................................................  செயல்படுதல்.

சுவிசேஷப்பணி 

வேதாகம செயல் மாதிரி:

" பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு: 16:15).

தரிசனம்:

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு: 28:19,20).

சுவிசேஷப்பணியின் தரிசனம்: 

"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும்" (யோவான்: 10:16).

* திருச்சபை தனக்காக இயங்காமல், வெளியில் இருக்கும் பிறரை உள்ளிழுக்க செயல்பட வேண்டும். (தரிசனம்)

- இந்த பாரம் உங்களை அழுத்துகிறதா?
- உங்களைத்தான் இயேசு அழைக்கிறார்.

* ஆத்தும வாஞ்சை
* திருச்சபையின் தரிசனம்
* செய்திப் பரிமாற்றத் திறன்

-  ஒவ்வொரு விசுவாசியும் ஆத்துமாதய வீரராய், பரிமாறுகிற திறனுள்ளவராய் மாற வேண்டும்

- பாரம் தரிசனம் இருக்கிறது. ஆனால், நமக்கு இப்போதைய தேவை செய்திப் பரிமாற்ற திறன். இதுதான் சிறப்பாய் சுவிசேஷம் அறிவிக்க உதவும். 

- இயல்பாய் அமைய பெறாத திறனை - உருவாக்க வேண்டும்.

- முயன்று ஈடுபடலாம் - வளர்த்துக் கொள்ளலாம்.

திறன் ஏற்றம்

1. திறமையின்மையைப் பற்றிய உணர்வு இல்லாத நிலை

2. திறமையின்மையைப் பற்றிய உணர்வு பெறும் நிலை

3. திறமை பெற்று, உணர்வுடன் செயல்படும் நிலை

4. திறமை பற்றிய நினைவின்றி, இயல்பாகவே செயல்படும் நிலை

சிறப்பான செய்திப்பரிமாற்றத்தின் ஆயத்தங்கள்

செய்திப் பரிமாற்றத்தின் நோக்கம்:

"பரிமாற்றத்தின்போது என் அனுபவம் கேட்பவரின் அனுபவமாக ஆகிவிட வேண்டும்." 

பூரணமாக  /   முழுமையாக

செய்திப் பரிமாற்றம்:

எதிர்பார்க்கும் முடிவை அடைய உதவும்  ஓர் உபகரணம்.

- தகவல்களை தெரிவிப்பதற்கு மட்டும் அல்ல

- ஒரு சிறந்த வெகுமதி

- ஒரு பயனுள்ள அனுபவம்

- பகிர்வு

செய்திப் பரிமாற்றம் ஒரு உணர்வுப்பூர்வ ஈடுபாடு:

சில விளைவுகள் ஏற்பட வேண்டும்.

1. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: 

கேட்பவர் அனைவருக்குள்ளும்.  உதாரணமாக....

* தற்கொலை செய்து கொள்பவரிடம் நாம் எப்படி பேசுகிறோம்?

- அவரது தவறான எண்ணத்தை மாற்றும்படி - தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.

* அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தக் காரணம் என்ன?

- நம் நியாயமான கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது.

2. சீர்திருத்தம் நடைபெற வேண்டும்:

மிஷினெரிகள் ஆதிவாசிகளிடம் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினர்.

-  கலாச்சாரம், கருக்கலைப்பு, பெண் குழந்தை கொலை, எய்ட்ஸ் போன்றவைகள்...

 3. வளர்ச்சி பெற வேண்டும்: 

தொலைக்காட்சியில் விளம்பரம் எதற்கு?

பொருட்கள் விற்பனை சதவீத வளர்ச்சியை அடைவதற்கு.

4. ஆரோக்கியம் பெற வேண்டும்: 

- உறவில் ஆரோக்கியம் பெற வெண்டும்.

- வியாதியில் ஆரோக்கியம் பெற வேண்டும்.

இதற்கு தேவை:  ஜெபம், வீடு சந்திப்பு

இதனை யார் செய்வது?  யார் பொறுப்பு? 

1. இதனை ................................  (நான்தான் /  பிறர்தான்) நடைபெறச் செய்ய வேண்டும்.

2. பரிமாற்ற சிறப்பிற்கு ..................... (நான்தான் /  பிறர்தான்) பொறுப்பு.

இயேசு பேசும்போது ....

1. ஆச்சரியப்பட்டனர் - லூக்கா: 4:22

2. இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது - லூக்கா: 24:32

3. விசுவாசித்தார்கள் - அப்போஸ்தலர்: 14:1

4. மறுரூபமானார்கள் - யோவான்: 4:அதிகாரம்.

மார்ச் 26, 2015

உத்தம வெளிப்பாடு

Image result for integrity of revelation

"நான் உத்தமமாய் இருக்கும்போது , என்னுடைய எண்ணங்களும், செயல்களும் ஒத்துப்போகின்றன" - யாரோ

உத்தம பரிசோதனை

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரல்ல" (யாக்கோபு: 1:12,13).

யாக்கோபு: 1:12 - தேவன் தருவது - பரிட்சை - Test

யாக்கோபு: 1:13 - சாத்தான் தருவது - சஞ்சலம், சலனம் - Temptation

* உத்தம பரிசோதனையின் மூலம் ஆண்டவர் நம்முடைய நடத்தையை உருவாக்குகிறார்.

* நம்முடைய நடத்தையின் முதிர்வு - நாம் அந்த பரிசோதனையை எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

* உத்தம பரிசோதனை நம்முடைய முதிர்வுக்கு ஆண்டவர் அமைக்கும் படிக்கற்கள். உதாரணம்: யோபு.

* நேர்மறையாக கையாளுதல் - யோபு: 1:8 - யோபுவைக் குறித்து தேவன் கொடுத்த சாட்சி

* எதிர்மறையாகக் கையாளுதல் - 1சாமுவேல்: 8 அதிகாரம் - சாமுவேலின் பிள்ளைகளின் தகாத நடத்தையும், இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதிகளைப்போல தங்களுக்கும் ஆள ஒரு அரசன் வேண்டும் என கேட்பதும்.

யோபு பெற்றுக் கொண்ட ஆசீர்வாதம்:

* யோபு: 42:8 - "அவன் முகத்தைப் பார்த்து..." அவன் ஜெபத்தைக் கேட்கிறார் - இது நேர்மறை

* யோபு: 29:9 - தன்னைக் குறித்து மேன்மையாகப் பேசுதல் - எதிர்மறை

Egotist - தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல்

Egoist - தன்னலமற்ற (ஆங்கில அகராதியைக் கண்க)

சோதனைக்குப் பின் யோபு நேர்மறையாக மாறினான். முறுமுறுக்கவில்லை.

உத்தம பரிசோதனை விதங்கள்: 

1. வார்த்தைக்கு கீழ்படிவது

2. உறவு பிரச்சினையைக் கையாளும் விதம்

3. நெருக்கமான சூழ்நிலையை சமாளிக்கும் நிலைமை

4. அதிகாரத்துக்குப் பணிதல்

5. பண விஷயங்களில் நேர்மை

6. கற்பில் நேர்மை

(1சாமுவேல்: 8.அதிகாரத்தை ஆய்வு செய்து ஒப்பிட்டு பாருங்கள்)

உலக சட்டங்கள், மனித சட்டங்கள், இந்திய பீனல் கோட் சட்டங்கள் சிலவேளைகளில், பல சமயங்களில் - பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக உள்ளது. 

உதாரணமாக...

* விவாகரத்து சட்டம் - கருத்து வேறுபாடு காரணமாக

* கருக்கலைப்பு - இரண்டுக்குமேல் வேண்டாம்

* கருணைக் கொலை - கோமா ஸ்டேஜ் - நினைவற்ற நிலை

உலகபிரகாரமான இம்முறைகள் வேதத்திற்கு எதிராக உள்ளது.

உத்தம செயல்முறை

1. என் உபதேசத்தின்படியே என் வாழ்வும், வாழ்க்கை முறையும் :

"நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக" (தீத்து: 2:7,8)

2. என் வாக்கின்படியே செயலும்:

"மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்" (அப்போஸ்தலர்: 7:22)

3. பிறரிடத்தில் நேர்மை:

"சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்" (நீதிமொழிகள்: 12:17)

"நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்" (ஏசாயா: 57:2)

4. என்னைவிட அடுத்தவர்களின் நன்மைக்கு முக்கியத்துவம்:

"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவான்: 15:12,13).

5. வெளியரங்கமான செயல்பாடுகள்:

"அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது" (1தீமோத்தேயு: 5:25).

உத்தம செயல்முறைக்கு உதாரணங்கள்

1. மகாத்மா காந்தி - இவர் இரட்சிக்கப்படாததற்கு காரணம் கிறிஸ்தவர்களே. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கிறிஸ்து இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசித்தறிந்து, அதன்படி உத்தமமாய் நடந்து, அஹிம்சா கொள்கையை வகுத்தும் அவர் இரட்சிப்புப் பெறாமல் போனதற்கு காரணம் கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற ஜீவியமே என கருதப்படுகிறது.

2.தீர்க்கதரிசி சாமுவேல் - 1சாமுவேல்: 12:1-5 - வெளியரங்கமான சாட்சி, குற்றஞ்சாட்டப்படாத வாழ்க்கை. இதற்கு சாட்சிகள் யாரெனில், தேவனாகிய கர்த்தர் மற்றும் இஸ்ரவேல் மக்கள். (1சாமுவேல்: 12:5).

வேளாண்துறையில் ஒரு விசுவாசி வேலை பார்க்கிறார். நிர்வாகம் அவரை தரமற்ற விதைகளை விற்கச் சொல்கிறது. அவரோ அதை மறுக்கிறார். 'நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்' என்கிறது நிர்வாகம். ஆனால் இவரோ உறுதியாக மறுக்கிறார். உத்தம விசுவாசி என்னதான் செய்வார்? உடனடியாக தன் வேலையை தாமதமின்றி ராஜினாமா செய்தார். இன்று அவர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தார். சில ஆண்டுகளில் தரமற்ற விதை விற்பனை செய்த நிர்வாகம் திவாலாகி கம்பனியை விற்கும் நிலைக்கு வந்தது. இப்போது தரமற்ற விதை விற்பனை நிர்வாகம், இவரை அழைத்து, 'நிர்வாகியுங்கள்' என மீண்டும் அழைத்தது. அவரோ மறுத்தார். காரணம்... அவர் தன்னைவிட மற்றவர்களின் நன்மையை விரும்பினார்.

உத்தமத்தில் நின்று உயர்வு பெறுங்கள்

"கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்" (நீதிமொழிகள்: 10:29)

"உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்" (நீதிமொழிகள்: 11:5)

"... உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்" (நீதிமொழிகள்: 11:20)


எழுப்புதல் வீரர்

Image result for Spiritual Revival player

எழுப்புதல் வீரர்

 வட அமெரிக்காவில் செவ்விந்தியரிடையே மிஷினெரியாயிருந்த "டேவிட் பிரெய்னர்ட்" 29 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தவர். அவர் மரித்து 200 வருடங்கள் கழித்து இன்னமும் அவரைக் குறித்துப் பேசப்படுகிறதே!? அது ஏன்? அவரது இரகசியம் என்ன? 

டேவிட் பிரெய்னார்ட் தமது மாபெரும் பணியை ஜெபத்தின் மூலமாகச் சாதித்திருக்கிறார். அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் வசித்து வந்த செவ்விந்தியரின் மொழியைப் பேச அறியாத நிலையில், அவர் தனது முழு நேரத்தையும் ஜெபத்திலேயே செலவிட்டார்.

அவர் எதற்காக ஜெபித்தார்? செவ்விந்தியரின் மொழியை அறியாமல் அவர்களைச் சந்திப்பது கடினமாயிருந்தது. எனவே, அவர் அந்த மொழியை பேச வேண்டுமானால் அவரது எண்ணங்களை சரியாக விவரிக்கக்கூடிய ஒருவர் தேவை.

ஆகையால், தான் செய்கிற எந்தவொரு காரியமும் தேவனுடைய வல்லமையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென அறிந்திருந்தார். எனவே, பரிசுத்த ஆவியானவர் தன்மேல் இறங்கும்படி நாள் முழுவதும் ஜெபித்து வந்தார்.

அவர் மரித்தப்பின், அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்த "வில்லியம் கேரி" இந்தியாவிற்கும், "இராபர்ட் மச்செய்ன்"  யூதர்களிடத்திற்கும் மற்றும் ஹென்றி மார்டின் இந்தியாவிற்கும் மிஷினெரிகளாகச் சென்றனர்.

19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் எழுப்புதலுக்கு, மற்ற எதையும் விட டேவிட் பிரெய்னார்டின் ஜெபமே முக்கிய காரணமென - ஏ.ஜெ.கோர்டன் கூறியிருக்கிறார்.



Image result for Spiritual Revival player


எழுப்புதல் வீரர்களின் வெற்றிக்கு அடித்தளம்:

* ஜெபம்

* கர்த்தருடைய அழைப்புக்கும், ஏவுதலுக்கும் கீழ்படிந்து முழுமையான அர்ப்பணிப்போடு சென்றனர்.

* சூழ்நிலை எதிராகவோ, கடினமாகவோ இருக்கும் நிலையில் அதை முறியடிக்க அதிக நேரம் ஜெபத்தில் உறுதியாக தரித்திருந்திருந்தனர்.

* கர்த்தருடைய வல்லமையை மட்டுமே சார்ந்திருந்தனர்.

* பரிசுத்தாவியானவர் தன்மேல் இறங்கும்படி, எடுத்து பயன்படுத்தும்படி நாள்முழுவதும் ஜெபித்து வந்தனர்.

* ஊழியத்தில் எந்த பகுதி கடினமானது என முதலில் கண்டறிந்து அது நீங்கும்படி, அதற்கு உதவும்படி ஜெபித்தனர்.

* எந்த சூழ்நிலையிலும் ஊழியத்தினிமித்தம் வந்த சோதனைகளில் சோர்வோ, பயமோ, பற்றாக்குறைகளினாலோ, திரும்பி விடுவோம் என்ற எண்ணங்களுக்கோ இடங் கொடுக்கவில்லை. மாறாக, விசுவாசத்தில் உறுதியாக நின்றனர்.

*  அழைக்கப்பட்ட  அழைப்பின் நோக்கம் - முழுவதும்  நிறைவேறும்வரை தங்களை பாடுகளுக்குட்படுத்தினார்கள்.

   இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை சரித்திரம் பலபேரை எழுப்புதலுக்குள்ளாக்கும். இப்படிப்பட்டவர்களையே "எழுப்புதல் வீரர்" என அழைக்கிறோம். 



Image result for Spiritual Revival player



எழுப்புதலுக்கு அடித்தளம் - ஜெபமே! 


ஜெபம் இல்லாவிட்டால் ஜெயம் இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம்.

ஜெபத்தைக் குறித்து இ.எம்.பௌண்ட்ஸ் கூறிய சிந்தனை துளிகள்:


  • ஜெபிக்காத மனிதன் தேவனிடத்திலிருந்து பெற வேண்டிய உதவியை இழப்பதன் மூலம் தன்னைத்தானே கொள்ளையிடுகிறவனாகவும் மனிதனுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் தேவனை நிறுத்துகிறவனாகவும் இருக்கிறான்.

  • தேவனுடைய ஒவ்வொரு பணியிலும் ஜெபம் மிகவும் முக்கியமாக இருப்பதுடன் ஒழுங்குமுறையான ஜெப வாழ்வில்லாத மனிதன் ஒருபோதும் அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை நடத்த முடியாது.

  • ஜெபத்தை இரண்டாவது இடத்தில் வைப்பது, வாழ்வின் சகல காரியங்களிலும் தேவனை ஒதுக்கி வைப்பதற்குச் சமம்.


  • தேவனுடைய பணியை சீராக நடத்திச் செல்வதற்கு ஜெபம் ஒன்றுதான் அடிப்படை அத்தியாவசமாகும்.

  • ஜெபத்தை மறுதலிப்பது, தேவனை மறுதலிப்பதாகும். தேவனையும், ஜெபத்தையும் ஒருபோதும் வேறு பிரிக்கவே முடியாது.

  • ஜெபத்தைக் குறித்து கற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல, நடைமுறைப்படுத்துபவர்களே இன்றைய சபையின் தேவையாயிருக்கிறார்கள்.

  • ஜெபிக்கிற மனிதர்கள் மட்டுமே இவ்வுலகத்தில் தேவனை வெளிப்படுத்தும் தகுதியை உடையவர்கள்.

  • ஜெபிக்கிறவர்களிடமே தேவன் தமது காரியங்களையும், சுவிசேஷத்தையும் ஒப்புக் கொடுக்கிறார்.

  • ஜெபிக்கிற மனிதர்களிடம்தான் இயேசு தமது சரீரமாகிய சபையின் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  • பணமோ அல்லது புத்தியையோ கொண்ட மனிதர்கள் அல்ல; ஜெபிக்கிறவர்கள் மட்டுமே இன்றைய திருச்சபைகளுக்குத் தேவைப்படுகின்றனர்.

  • இவ்வுலகில் தேவனுடைய இராஜ்யத்தை விரிவுபடுத்துவதே மற்றும் ஸ்தாபிப்பதே ஜெபிப்பதன் முக்கிய நோக்கமாகும்.

ஜெபித்து ஜெபித்து ஜெயமெடுப்போம்! எழுப்புதல் அடைவோம்!


மார்ச் 24, 2015

கிறிஸ்தவ தலைமைத்துவம்





 இருக்கிற நிலையிலிருந்து முன்னோக்கி அடுத்த நிலைக்கு செல்வதுதான் தலைமைத்துவம்.

எங்கே இருக்கிறேன்? எங்கே போகிறேன்? என்ற பயிற்சியே மதிப்பெண் தருவது.

What?  Why?  When?  Where?  - இதெல்லாம் கேள்வி சொற்கள்

How?! - இது மட்டுமே ஆச்சர்யக்குறி வரும் கேள்வி.

1. வேதாகம அடிப்படையில் தலைமைத்துவம்:

ஒரு போதகர் - போதிக்கிறவராக, பிரசங்கியாராக, தலைவராக  செயல்படுவார். எந்த நோக்கத்திற்காக தலைமைத்துவம்? தேவனுடைய மிகப் பெரிய கட்டளையை நிறைவேற்ற அழைப்பை பெறுதல். மறுரூபமாகுதல் - பயிற்சியின் மூலம்.

* முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் சொல்கிறார்: 2020 ல் இந்தியா மறுரூபமாகும்.

* கிறிஸ்தவ தலைவர்கள் சொல்கிறார்கள்: 2020 ல் கிறிஸ்தவம் மறுரூபமாகும்.

வளர்ச்சி - என்பது "இருக்கிற நிலையிலிருந்து கொண்டு, அடுத்த நிலைக்கு போவது. இதுவே 'தலைமைத்துவம்' ஆகும். தானியேலுக்கு இப்படிப்பட்ட விசேஷித்த ஆவி இருந்தது.

மதிப்பெண் தருக: (நான்கிற்கும்)

அ) வேதாகம அடிப்படையில் தலைமைத்துவம்
ஆ) எந்த நோக்கத்திற்காக தலைமைத்துவம்
இ) அழைப்பு - மிகப் பெரிய கட்டளை
ஈ) மறுரூபமாகுதல் - பயிற்சி

2. தலைமைத்துவத்திற்கு எது தேவை?:

1தீமோத்தேயு: 1:12 - "என்னை பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன்"

Walk with God
Service for God - இவையிரண்டும் தேவை.

தேவனோடு நடப்பதன் மூலம் கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.
கடவுளுக்கு சேவை செய்வதனால் அவரோடு நடக்கவில்லை.

"மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்" (எபேசியர்: 6:6).

கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாக தேவனோடு நடப்பதனால், அவரைப் பிரியப்படுத்துகிறோம். அவரது சித்தத்தை அறிகிறோம். 

"உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாய் ..." (1பேதுரு: 5:2) - இதுதான் கிறிஸ்தவ தலைமைத்துவத்தின் நோக்கம்.

1பேதுரு: 5:2,3 -ன் படி ...

அ) கட்டாயமாய்
ஆ) மனப்பூர்வமாய் 
இ) அவலட்சணமான ஆதாயமாய்
ஈ) உற்சாக மனதாய்
உ) இறுமாப்பாய்
ஊ) மாதிரியாய்
எ) கண்காணிப்பு

மதிப்பெண் தருக:

1. தேவனோடு நடத்தல்
2. தேவனுக்கு சேவை செய்தல்

3. கடவுள் கொடுத்த திறமையை வைத்து (ஆண்/பெண்) சிறுகுழுவின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது:

* தேவனுடைய நோக்கத்திற்காக மக்களை வழி நடத்துதல்

"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும்..." யோவான்: 10:16).

மற்ற ஆடுகளையும் வழி நடத்த வேண்டும்.

4. வேதாகம தலைமைத்துவம்:

Image result for leadership of christianity

மேய்ப்பன்:  (Shepherd)  - யோவான்: 10:11 -  எடுத்துச் செல்லுதல், அக்கறை செலுத்துதல், வழிநடத்துதல்

வேலைக்காரன்: (Servant)  - மாற்கு: 10:45 - சேவை, உதவி, ஊக்குவிப்பு

உத்தமன்:  (Steward)  - லூக்கா: 12:42,43 - நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு, கணக்கொப்புவித்தல்

தலைவராக இருப்பதன் மூலம்...

* தலைவர் எவ்வளவு உயரமாய் போகிறார் - என்பதல்ல ... - (Wrong  - தவறு)

* மற்றவர்கள் எத்தனை பேர் உயர்வைப் பெற்றனர் என்பதே... சரி

மாற்கு: 10:45 - "அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல்,  ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகவுமே ... வந்தார்".

மதிப்பெண் தருக:

அ) வேலைக்காரன்
ஆ) மேய்ப்பன்
இ) உத்தமன்

5. தலைவன் தன் வழியை அறிந்திருக்க வேண்டும்:

தலைமைத்துவம் என்பது - பதவியைப் பொறுத்ததல்ல - செயலைப் பொறுத்தது.

சிலர்... 

 பதவி கொடுத்தால் செயல்படுவர்
பதவியை பறித்தால்... செயலும் போய்விடும், ஆளும் போய்விடும்

மதிப்பெண் தருக:

அ) பதவியா?
ஆ) செயல்பாடா?

6. அழைப்பு;

ஆதியாகமம்: 1:26 - உக்கிராணத்துவ உத்தியோகத்திற்கு அழைத்திருக்கிறார்.

7. மாற்றத்தைக் கொண்டு வரும்படியாக செயல்படும் தலைமைத்துவம்:

தலைமைத்துவம் என்பது - மாற்றத்தின் வழியாக சென்று மாற்றத்தைக் கொண்டு வருதல்

* தகப்பன் - பிள்ளை மாற வேண்டும் என நினைக்கிறார்
பிள்ளை - தகப்பன் மாற வேண்டும் என நினைக்கிறான்

* போதகர் - விசுவாசிகள் மாற வேண்டும் என நினைக்கிறார்
விசுவாசிகள் - போதகர் மாற வேண்டும் என நினைக்கிறார்கள்

* ஆசிரியர் - மாணவன் மாற வேண்டும் என நினைக்கிறார்
மாணவன் - ஆசிரியர் மாற வேண்டும் என நினைக்கிறான்

உதாரணம்:

Image result for Connecting with the fingers of both hands   Image result for Connecting with the fingers of both hands  

இரு கைகளை விரல்களால் கோர்த்தால், பெருவிரல் இரண்டும் எது மேல் பகுதி?  வலது? / இடது?   சிலருக்கு  இடது/வலது - இதை மாற்றுவது சற்று கடினமாக உள்ளது. அதுபோலவே, மனிதனை மாற்றுவது சற்று கடினமே.

முதலில் நாம் மாற வேண்டும்; அப்போது பிறர் மாறுவர்

8. நீங்கள் தலைவரா? இல்லையா? என்பது - உங்களின் உறவு நிலையை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது:

நீங்கள் தலைவர் - மற்றவர்கள் உங்களை பின்பற்றுகிறார்கள்தான்.

தலைவர் - பிறரோடுள்ள உறவில் சரியில்லையென்றால்...

தலைவருக்கு தேவனோடுள்ள உறவில் ஏதோ பிரச்சினை என்று பொருள்.

அது சரி செய்யப்பட வேண்டும்.

தலைமைத்துவத்திற்கு - அனைவரிடமும் - விருப்பு / வெறுப்பு என்பதே இல்லை.

மதிப்பெண் தருக:

உறவு நிலை எப்படி?

அ) ஊழியர்களுக்குள்
ஆ) விசுவாசிகளுக்குள்

* ஒருவருக்கொருவர்
* எதைச் செய்தாலும் - மனப்பூர்வமாய் செய்யுங்கள்

நிர்பந்தமாய், பயந்து போய், கடமைக்காய், கட்டாயமாய், பேர் புகழுக்காக அல்ல.

* கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது - தன்னலமற்ற தலைமைத்துவமே.

* சுயநலத்திற்கு இடமில்லை.

"கிறிஸ்துவை மையப்படுத்தி - தன்னலமற்ற தலைமைத்துவமே - கிறிஸ்தவ தலைமைத்துவம்"

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலாத்தியர்: 2:20).

9. உலகத்தின் தலைமைத்துவம் நமக்கு காண்பிப்பது என்ன?


  • பதவி
  • புகழ்
  • அதிகாரம்
  • மரியாதை
  • பணம்
  • செல்வாக்கு
  • ஆள்பலம்
  • ஆஸ்தி
பெருமை வரும்போது நம்மில் ஏற்படும் மாற்றம்:

  • நடை, உடை, பார்வை
  • மற்றவரை அற்பமாக கருதுதல்
  • பெருமையாக பேசுதல்
  • சாதனையை எடுத்துரைத்தல்
  • செய்த சேவையை கணக்கு பார்த்தல்
  • நானே ஆரம்பித்தேன், நானே உருவாக்கினேன், நானே படைப்பாளி
  • யாரும் குறை சொல்லக் கூடாது
 -  இவைகளை அடையாளம் காணுங்கள்

மதிப்பெண் தருக:

அ) பெருமை
ஆ) தாழ்மை

10. தலைமைத்துவத்தைப் பின்பற்றுதல்:

"ஒருவன் என்னை பின்பற்ற விரும்பினால்..."

- கிறிஸ்துவைப் பின்பற்று
 - கிறிஸ்துவைப் போல மாறு

தலைமைத்துவத்தை விரும்புகிறவர் - கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்

கிறிஸ்துவைப் பின்பற்றி தலைமைத்துவத்தில் வெற்றி பெறுங்கள்.

சபை பெருக்கம் - சபை வளர்ச்சி - ஆத்தும பெருக்கம் - தலைமைத்துவத்தில் அடங்கியுள்ளது. தலைமைத்துவத்தில் பெருக்கமடைந்தால் அனைத்திலும் பெருக்கமடையலாம்.

ஒரு கணக்கு:


10+5= 15 கூட்டினால் 15
10×5=50 பெருக்கினால் 50  

எப்படி?

அதே எண்கள்தான் X அதே சபை / அதே விசுவாசிகள்தான் ... சிந்திக்க

கூட்டவா? பெருக்கவா? - எதை நடைமுறைப்படுத்த வேண்டும்? 

தலைமைத்துவத்தில் எதை செயல்படுத்த வேண்டும்? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

கர்த்தர் உங்களோடிருந்து உங்களை சகல காரியங்களிலும் பெருகப் பண்ணுவாராக. ஆமென்! அல்லேலூயா!


காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்

Image result for book of job:13:4

காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்

"நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்" (யோபு: 13:4)

"துன்பம் வரும்போது உண்மையான நண்பர்களை அறியலாம்" என்றொரு பழமொழி சொல்வார்கள். யோபு தன் துன்பத்தில் நண்பர்களை மட்டுமல்ல... தனக்கு துணையாயிருக்க வேண்டிய மனைவியே வினையாக இருப்பதை அப்போது யோபு அறிந்து கொண்டான்.

செல்வமும், செல்வாக்கும் ஒரு மனிதனுக்கு இருக்கும்போது, அவன் தவறு செய்தால்கூட உலகம் அதை சரியென அங்கீகரிக்கும். ஆனால், அதே செல்வம்  அம்மனிதனை விட்டு நீங்கும்போது, அவன் நீதியைப் பேசினால்கூட அங்கீகரிக்காது.

இதுதான் பக்தன் யோபுவின் வாழ்வில் நடந்தது. யோபு உத்தமன்; சன்மார்க்கன், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன். நீதிமான். இவனது செல்வமும், செல்வாக்கும் அவனை விட்டு நீங்கினபோது, அவனை நேசித்த மனைவி, நெருங்கிய சிநேகிதர்கள் அனைவரும் தூஷித்தனர். குறைகண்டுபிடித்தனர். குற்றம் சுமத்தினர். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல, நொந்துபோன யோபுவை தொடர்ந்து வார்த்தைகளால் தொடர்ந்து வாதித்தார்கள்.

உயிர் காப்பான் தோழன் என்பார்கள். யோபுவின் நண்பர்களோ உயிர் போகும்படி மனமடிவாக்கினார்கள். ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டியவர்களோ ஆழமான மனக்காயங்களை ஏற்படுத்தினார்கள். எனவே, யோபு அவர்களைப் பார்த்து, "காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்" என்று சொன்னான்.

முழு வேதாகமத்தில் வாசிப்போமானால் இப்படிப்பட்ட காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள் அநேகம் பேர் இருப்பதை காணலாம். அவர்கள் வேதத்திலேயே திருஷ்டாந்தங்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், நம்மை சுற்றிலும் அப்படிப்பட்டவர்கள் இராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 காரியத்துக்குதவாதவர்கள் யார் என்பதை தொடக்கத்திலேயே நாம் கண்டறிந்து களைய வேண்டும். இல்லாவிட்டால்... வெகு இழப்பை ஏற்படுத்தி விடுவார்கள். எப்படி கண்டறிவது? அவர்களுடைய கிரியைகளினால் கண்டறியலாம். அவர்களின் முதன்மையான சில குணங்கள் உண்டு. அவைகளை வைத்து இனங் காணலாம்.

1. பொய்யைப் பிணைத்தல்: (யோபு: 13:4)

காரியத்துக்கு உதவாத வைத்தியர்களின் முதல் வேலையே பொய்யைப் பிணைப்பதுதான். காணாததை கண்டேன் என்பார்கள்; இல்லாததை இருக்கிறது என்பார்கள்; நல்லவனை தூஷிப்பார்கள்; தீயோனை மெச்சிக் கொள்வார்கள்; வாயின் பிரதியுத்தரங்கள் அனைத்தும் மிகைப்படுத்தலாகவே இருக்கும். ஒரு காரியத்தை உள்ளதை உள்ளபடி சொல்லாமல் கண், காது, மூக்கு வைத்து, பிரம்மாண்டப்படுத்தி,  கதை கட்டி பேசுவார்கள். அதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி பிரியம். விசாரித்துப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாக நடந்திராது. 

2. சொப்பனங்களை தீர்க்கதரிசனமாக சொல்வார்கள்: (எரேமியா: 23:32)

சொப்பனங்களை தீர்க்கதரிசனமாக சொல்வார்களாம். இரவில் கண்ட மாயைகளை பகலில் கர்த்தர் சொன்னார் என உளறித் தள்ளுவார்கள். மனதில் தோன்றும் சுய கருத்துக்களை கர்த்தர் சொன்னார் என எடுத்து விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் - மரித்துப்போனவர்கள் கனவில் வந்து சொன்னார்கள்; அதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று. வேறுசிலர் இருக்கிறார்கள்: உங்களைப்பற்றி நானொரு கனவு கண்டேன் என்பார்கள். எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

3. காட்டாறு போல் மோசம் பண்ணுவார்கள்: (யோபு: 6:15)

இப்படிப்பட்டவர்கள் மோசம் பண்ண நினைத்தார்களானால் விளைவுகள் படுபயங்கரமானதாக இருக்கும். சிநேகிதன் செய்யும் மோசமே உலகில் படுபயங்கரமானது. ஏனென்றால், சிநேகிதன் நம்மிட்ம் நெருங்கி இருப்பவன். நம் நிறை, குறை, பலம், பலவீனம், அந்தரங்கம் அனைத்தையும் நன்கு அறிந்தவன். எனவே, அவன் ஏற்படுத்தும் விளைவுகள் காட்டாறு போலத்தான் இருக்கும். 

பாவமற்ற யோபுவையே குற்றப்படுத்தினவர்கள்தான் அவனது சிநேகிதர்கள். பாவமற்ற நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவையே சிநேகிதனாகிய  யூதாஸ்காரியோத்து காட்டிக் கொடுத்தானே! விளைவுகள் பயங்கரமானதானதே!

"அகங்காரிகள் எனக்கு விரோதமாய் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்" (சங்கீதம்: 119:69).

ஆய்வு செய்யுங்கள்:

நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து பார்ப்போம். நம்மைச் சுற்றிலும் சிநேகிதர்கள் அநேகம்பேர் இருக்கலாம். ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? காரியத்திற்குதவாத அநேகம்பேரை வைத்திருப்பதனால் என்ன பயன்? ஆவிக்குரிய நல்ல சிநேகிதர்களை, காரியத்திற்குதவும் நண்பர்களை சம்பாதியுங்கள்.  

தானியேல் தனக்காக ஜெபிக்கும் நல்ல நண்பர்கள் குழுவை வைத்திருந்தான். தாவீது, தனக்காக யோனத்தானை நட்பாக வைத்திருந்தான்.

நல்ல நட்பென்பது இருபுறமும் பரஸ்பர அன்பைப் பிரதிபலன் பாராது பகிர்ந்து கொள்வதாகும். நட்பு பாராட்டுங்கள். நல்ல நட்பை தொடருங்கள். ஒருவரிலொருவர் உதவும் மனப்பான்மை, ஜெபிக்கும் மனப்பான்மை, ஒருவருக்கொருவர் பாரங்களை சுமக்கும் மனப்பான்மையை வளர்த்தக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் உதவியாயிருங்கள். நாம் பிறரிடம் எதிர்பார்ப்பதுபோலவே,  நம்மிடமும் மற்றவர் எதிர்பார்ப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, நம்மை நம்பியிருப்பவர்களுக்கும்,  நட்புகளுக்கும் நாமும் காரியத்திற்குதவுபவர்களாக விளங்குவோமாக!


மார்ச் 23, 2015

உத்தமனாயிரு ...

Image result for integrity
உத்தமம் - நேர்மை

"... கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: நான் சர்வ வல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு" (ஆதியாகமம்: 17:1)

"உத்தமம்" என்பதின் பொருள்:

"முழுமையான"  /   "பூர்த்தி"  /   "பூரணம்"   /   "உறுதித் தன்மை"

உத்தமத்தில் ஒரு பகுதி - நேர்மை

ஆதாம் ஏவாள்  இழந்ததற்கு முன் இருந்த நிலையை நாம் அடையும்படிக்கு இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

ஆபிரகாம் நாட்களில் இருந்த உலகம் நேர்மையற்ற உலகம். அதில் கர்த்தர் உண்மையுள்ள உத்தமனைத் தேவன் தேடினார். ஆபிரகாமைக் கண்டறிந்தார். ஆபிரகாமிடம் தேவன் உத்தமத்தை எதிர் பார்த்தார். அதை அவன் வாழ்நாள் முழுவதும் அவனிடம் எதிர்பார்த்தார். இன்று ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளிடமும் தேவன் உத்தமத்தை எதிர்பார்க்கிறார். உத்தமத்தை உருவாக்க விரும்புகிறார்.

"... பூரண புருஷராகும்வரைக்கும்" (எபேசியர்: 4:11) கர்த்தர் நம்மில் உத்தமத்தை உருவாக்க விரும்புகிறார். "உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்" (நீதிமொழிகள்: 10:9).

முழுமையை, பூரணத்தை தேவன் ஏன் விரும்புகிறார்?

நாம் ஆராதிக்கும் தேவன்  பூரணராயிருப்பதினால், நாமும் முழுமையாகவும், பூரணராகவும் இருக்க விரும்புகிறார். நம்முடைய குணாதிசயம் தேவனோடு இணைந்திருந்தால் அனைத்தும் சரியாகி விடும். ஏனென்றால், நாம் ஆராதிக்கும் தேவன் மாறாதவர். "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" (எபிரெயர்: 13:8). மாறாத பூரணரான இயேசுவோடு நாம் இணையும்போது நமது முழுமையற்ற தன்மை முழுமையடையும்.

எப்போதும் நாம் கடைபிடிக்க வேண்டியவைகள்:

விசுவாசிப்பதை செயல்படுத்த வேண்டும். விசுவாசமும், செயல்பாடும் இணைந்தே செயல்பட வேண்டும். வார்த்தையும், வாழ்க்கையும் ஒன்றாக செயல்பட வேண்டும். நமது மதிப்பீடும், நடவடிக்கையும் ஒன்றாகவே செயல்பட வேண்டும். 

மத்தேயு: 19:16-23 / மாற்கு: 10:17 / லூக்கா: 18:18 - நித்திய ஜீவனை சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும்?

வாலிபன் கேட்ட கேள்விக்கு - நீங்களாயிருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இயேசுவின் பதில்: "நீ  பூரண சற்குணணாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னை பின்பற்றி வா என்றார்" (மத்தேயு: 19:21). கிட்டத்தட்ட அந்த வாலிபன் ஒன்றுமில்லா நிலைக்கு இயேசு கிறிஸ்து அவனைக் கொண்டு வந்தார். சகேயு, சீஷர்கள் அந்நிலைக்குத்தான் வந்திருந்தார்கள். "அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே;..." என்றான். (மத்தேயு: 19:27). நம்முடைய அர்ப்பணிப்பு எப்படிப்பட்ட நிலையில் உள்ளது?!

 பூரண சற்குணணாயிருப்பது என்பது ஒரே நாளில் வருவதல்ல.  நாம் முழுமையடைய,  பூரணமடைய அனுதினமும் அதில் அர்ப்பணிக்கின்றவர்களாக, அப்பியாசப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

உத்தமத்திற்கு உதாரணபுருஷன் - சாமுவேல் தீர்க்கதரிசி:

தன் உத்தமத்தைக் குறித்து பரிசோதிக்கும்படி சாமுவேல் ஐந்து கேள்விகளை கேட்பதை வாசிக்கிறோம்.

"... நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயது முதல் இந்நாள் வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்து வந்தேன்." 

"இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநிநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்." 

"அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநிநியாஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்." 

"அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்." (1சாமுவேல்: 12:1-5).

நம்மால் நடத்தப்படுகிற மக்கள் நம்மைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?

நம்மில் உத்தம குணத்தை வளர்த்துக் கொள்வது எப்படி?

"என் சொந்த ஆத்துமா பரிசுத்தப்படுத்துதலே எனது முக்கியப் பணி" - ஹென்றி மார்டின்

1. நேர்மறையான உத்தம பரிசோதனை
2. எதிர்மறையான உத்தம பரிசோதனை

- இவையிரண்டையும் நம் வாழ்வில் அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

உதாரணமாக:

1. ஆபிரகாம் - தன் ஏகசுதனாகிய ஈசாக்கை பலி செலுத்தும்படியான பரிசோதனை.

பரிசோதனையின் முடிவில் - தேவனுக்கு பயந்தவன், தேவ நோக்கத்தை தவறவிடாதவன், தேவ சித்தம் நிறைவேற உறவு பாசத்திற்கு இடங் கொடாதவன் - உத்தமன் என பேர்பெற்றான்.

2. யோபு: - இழப்புகளில் தன் உத்தமத்தை இழக்காதவன்.

ஒருவன் தேவனால் சோதிக்கப்படுகிறான். மற்றொருவன் சாத்தானால் சோதிக்கப்படுகிறான். உத்தமன் எதினால் பரிசோதிக்கப்பட்டாலும், முடிவில் சுத்தப் பொன்னாக விளங்குவார்கள். ஏனென்றால், அப்படிப்படவர்கள் உத்தமர்கள்.

எதிர்மறையான உத்தம பரிசோதனை வரும்போது - மேற்கொள்வது எப்படி?

யாத்திராகமம்: 17:1-7 - வனாந்திரத்தில் தண்ணீரில்லாமல் தவித்த இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலை நம் ஊழியப் பாதையிலோ, வாழ்விலோ வரும்போது - நாம் என்ன செய்வோம்?

நாமும் முறுமுறுப்போமா? அல்லது கர்த்தரிடம் சலித்துக் கொள்வோமா? அல்லது நம்மை நாமே நொந்து கொள்வோமா? அல்லது விரக்தியின் உச்சக்கட்டத்திற்கே செல்வோமா?

நிதானத்தை இழக்காமல், கர்த்தரிடம் சேர்ந்து, அவருடைய வழிநடத்துதலை பொறுமையோடு செயல்படுத்த வேண்டும். உள்ளான வாழ்வில் உத்தமமான பொறுமை, தேவசித்தத்தை நிறைவேற்ற தவறவிடாது செயல்படுத்த வெளியரங்கமான வாழ்வில் பொறுமை நிறைந்த உத்தமம் தேவை. உள்ளான வாழ்க்கையும், வெளியரங்கமான வாழ்க்கை முறையும் ஒத்ததாக, இணைந்தே இருக்க வேண்டும்.

"இருளிலே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்பதே உங்கள் குணாதிசயம்" - டி.எல்.மூடி.

உத்தம குணதிசயத்தை  இருதயத்தில் உருவாக்க வேண்டும்:

* தாவீதின் உத்தம குணாதிசயத்தை அவனது இருதயத்தில் தேவன் கண்டார். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனை புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1சாமுவேல்: 16:7).

தேவன், தாவீதின் இருதயத்தில் உள்ள உத்தம குணத்தைக் கண்டு அபிஷேகித்தார். எனவே, தாவீது தன் குமாரனாகிய சாலமோனுக்கு பின்னாட்களில் ஆலோசனை கூறும்போது,  "என் குமாரனாகிய சாலமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடு உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்" (1நாளாகமம்: 28:9) என்றான். இருதயம், சிந்தனை, நோக்கம் மிக முக்கியமானது.

பவுலின் சுய பரிசோதனை:

1கொரிந்தியர்: 15:9 - அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவன் - கடைசி அப்போஸ்தலன்  / அப்போஸ்தலன் என்பதற்கு பாத்திரன் அல்ல.

எபேசியர்: 3:8 - பரிசுத்தவான்களில் சிறியவன் - கடைசி பரிசுத்தவான்

1தீமோத்தேயு: 1:15 - பாவிகளில் பிரதான பாவி - முதன்மையான பாவி

முதிர்வடைய முதிர்வடைய பவுலின் விசுவாச வார்த்தைகளும் முதிர்வடைகிறதைக் காண்கிறோம்.

அன்பானவர்களே!

தேவனாகிய கர்த்தர் ஆபிரகாம், பவுலிடம் மட்டுமல்ல... நம் ஒவ்வொருவரிடமும் உத்தம குணாதிசயத்தை இருதயத்தில் எதிர்பார்க்கிறார். நாட்கள் செல்லச் செல்ல... அனுபவங்களும் அதிகமாகிறது. அனுபவங்கள் நம்மை இன்னும் இன்னும் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்வடையச் செய்யும். முதிர்ச்சி நம்மில் உத்தம விசுவாச வசனிப்பை கொடுக்கும். நாமும் முதிர்வடைந்து பிறரையும் முதிர்வடையச் செய்வோம். தேவனாகிய கர்த்தரின் கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்! அல்லேலூயா!

மார்ச் 21, 2015

ஊழியத்தில் தவறுகளை களையும் அணுகுமுறை

Image result for Approach to correcting mistakes


ஊழியத்தில் தவறுகளை திருத்தும் அணுகுமுறை

தவறு செய்யும் ஊழியர்களை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து, இடமாற்றம் செய்வது அந்தக் காலம். தவறு செய்த ஊழியர்களிடம், தவறை உணர்த்தி தட்டிக் கொடுத்து, மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்ய முடியாதபடிக்கு மாற்றுவது இந்தக் காலம்.

தவறு செய்தவர்களை தனிமைப்படுத்துவதைவிட, அவர்கள் செய்த தவறை உணரச் செய்வது மேலானது.

அரைத்த மாவையே அரைக்கும் ஊழியர்கள் பெரும்பாலும் தவறு செய்வதில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நடைமுறைகளையே நூல்பிடித்த மாதிரி  செய்து ஒப்பேற்றுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட கனமான இந்த கர்த்தருடைய வேலையை, இன்னும் திறமையாகச் செய்வது பற்றி இவர்கள் கனவில்கூட நினைக்க மாட்டார்கள். இவர்களால் சபைக்கோ, ஊழியத்திற்கோ, ஸ்தாபனத்திற்கோ எவ்வித வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படாது.

மாறாக, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அங்கீகரிக்க வேண்டும். சில உலகப்பிரகாரமான நிறுவனங்களில் உள்ள குழுக்களில் ஏதாவது ஒன்றில் தவறுகளே வரவில்லையென்றால், அக்குழுவில் உள்ள நபர்களை வேறு குழுவிற்கு மாற்றி விடுவார்கள். தவறுகள் நடக்கவில்லையென்றால், அங்கே புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். 

எனவே, புதுபுது முயற்சியினால் வளர்ச்சியை அடைய வேண்டுமானால், சிறுசிறு தவறுகளினால் ஏற்படும் திருத்தங்களினாலே வளர்ச்சியை நோக்கி செல்ல ஏதுவாகும். நான் இங்கு குறிப்பிடுவது வேதத்திற்கு முரணான தவறோ, பரிசுத்தத்திற்கு விரோதமான பாவங்களோ அல்ல. பராமரிப்புக் குழுக்கள், ஜெபக் குழுக்கள், வீட்டுக் கூட்டங்கள் போன்றவைகளில் சபையில் வரும் நிர்வாகப் பிரச்சினை மற்றும் அணுகுமுறையில் உள்ள  தவறுகளையே.

இன்றுள்ள பல வல்லமையான தலைசிறந்த ஊழியத்தை செய்து வரும் பிரபலமான மூத்த ஊழியர்கள் பலரும் தங்களது தொடக்கக் காலத்தில் பல்வேறு நிர்வாக தவறுகளைச் செய்தவர்கள்தாம். அதிலிருந்து தங்களை திருத்திக்கொண்டு தேவகிருபையை புதுப்பித்துக் கொண்டதினாலும், அவர்களுக்கு முன்னிருந்த மூத்த ஊழியர்களின் அன்பான வழிகாட்டுதலினாலும் பண்படுத்தப்பட்டு உயிர்ப்பிக்கப்பட அர்ப்பணித்ததினால்தான் இன்று அவர்கள் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். பலரையும் பிரகாசிக்க உதவுகிறார்கள்.

நமக்குக் கீழே உள்ள ஊழியர்கள் மற்றும் குழுவினரின் தவறுகளை எப்படி அணுக வேண்டும்?:

1. குழு ஊழியங்களில் தவறு செய்தால் உடனடியாக அதன் தாக்கத்தை அறிந்து கொண்டு டிவிஷன் மற்றும் தலைமை போதகரிடம் தெரிவித்து விடுவது நல்லது. மறைக்காமல் சொல்லப்படும் தவறுகளுக்கு எவ்வித பாடுகளும் இல்லை என்பதை உறுதிபட தெரிவிக்கும்போது, எவ்வித தயக்கமும் இன்றி தானாகவே முன் வந்து சொல்வார்கள்.

2. தவறு செய்தால் அதைச் செய்தது யார் என்ற ஆராய்ச்சியில் இறங்குவதற்குப் பதில், அதனால் ஏற்படும் பாதிப்பைச் சரி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

3. தவறு செய்த ஊழியரை மன்னித்து விட்டு, அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 

4. தவறு செய்த ஊழியர்களை பிற ஊழியர்கள் முன்பு திட்டுவதோ, விமர்சிப்பதோ கூடாது. இதனால், அந்த ஊழியர் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, நிர்வாகத்தின் இமேஜிம் கடுமையாக பாதிப்படையும்.

5. தவறு ஏற்படும்போது சில புதிய அனுபவங்கள், சிந்தனைகள் கிடைக்கலாம். அதனால் சில புதிய யோசனைகள், சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம்.

6. தவறு நடந்துள்ளது என்றால், அது ஏன் நடந்தது என்ற நிகழ்வைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, காரணமானவர்களை கை காட்டுவது வளர்ச்சிக்கு உதவாது.

7. நிறைய தவறு செய்தவர்கள் பெரிய அனுபவசாலியாக இருப்பார்கள். நிறையமுறை தவறு செய்தவர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தவறே செய்யாத பல நூறு பேரை நம்மால் உருவாக்க முடியும்.

8. சிக்கலான பல பிரச்சினைகளுக்கு அபத்தமாக பேசுபவர்களிடமிருந்து கூட தீர்வு கிடைக்கலாம். எனவே, எதையும் வீண் என்று ஒதுக்கித் தள்ளத் தேவையில்லை.

9.  தவறு நடந்து விட்டது என்று நாம் கண்டு பிடித்து சொன்னால் மட்டும் போதாது அதற்கான தீர்வையும் நாம் கண்டு பிடித்துச் சொன்னால் மட்டுமே புகழை அடைய முடியும். (உ.ம்) யோசேப்பு.

10. தவறே நடக்காத இடத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தவறு நடக்கும் இடத்திலிருந்துதான் எதிர்கால எழுப்புதலின் ஊழியத்தை  நிர்ணயிக்கும் தகுதியான தலைவர்கள் உருவாகிறார்கள். 

- அநேக வேளைகளில் சிற்சில தவறுகளே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்துகிற நெம்புகோல் என்பதை நாம் மறக்கக்கூடாது. 

தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

Image result for leadership development
தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

"தலைமைத்துவம்" என்று சொன்னால் இன்று யாரும் அதிகம் விரும்பி படிக்க முன் வருவதில்லை. இது ஏதோ ஒரு நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டது அல்லது ஊழிய ஸ்தாபனத்திற்கும் மற்றும் மிகப் பெரிய நிர்வாகத்திற்கும் மட்டுமே உரியது என நினைத்து இப்பகுதியை வாசிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர், நமக்கு தெரியாத எந்த விஷயத்தை இவர் புதிதாக சொல்லி விடப் போகிறார்? என விலகி போகிறார்கள். தலைமைத்துவத்தில் உள்ள உண்மையான தலைவர்கள் யாரும் புதிதுபுதிதாக கற்றுக் கொள்ளவே விரும்புவர். அதன் மூலம் தங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக்கொள்ள வாஞ்சிப்பார்கள். இதுபோதும் என திருப்தி அடைய மாட்டார்கள். எப்போதும் தாகமுள்ளவர்களாய் இருப்பார்கள்.

தலைமைத்துவம் என்பது வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட வேண்டியது அவசியம். தலைமைத்துவம் உள்ள குடும்பம், நிறுவனம், ஸ்தாபனம், சமுதாய அமைப்பு அனைத்தும் மிக சிறப்பு வாய்ந்ததாக விளங்கும். 

தலைமைத்துவத்தில் உள்ள ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்?

1. முன்யோசனை உள்ளவனாக இருக்க வேண்டும்:

தலைவன் என்பவன் அல்லது போதகர் என்பவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவனாக இருக்க வேண்டும். மற்றவர்கள் யோசிக்கும் முன்பே யோசிக்க வேண்டும். முக்கியமாக மாத்தி யோசிக்க வேண்டும். இந்த ஞானத்தை சாலமோனைப்போல, கர்த்தரிடம் ஜெபத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். (1இராஜாக்கள்: 3:5-14)

2. ஊழியத்தில் உள்ள நுணுக்கங்களில் வளர வேண்டும்:

ஊழிய யுக்தியில் நாம் பலவீனமாக இருப்போமென்றால் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணப்படுவதென்பது இயலாத ஒன்று. ஊழிய யுக்தியில் திறன் வாய்ந்தவர்களாயிருந்தால்தான், உங்களுக்கு கீழே உள்ளவர்களை நீங்கள் வழி நடத்த முடியும். தாவீதைப் பற்றி சவுலிடம், அவனது ஊழியக்காரர் கொடுத்த சாட்சி: "... காரிய சமர்த்தன்..." (1சாமுவேல்: 16:18). எதை? எப்படி? எப்பொழுது? யாரைக் கொண்டு? எந்த இடத்தில்? எந்நேரத்தில்? எதைக் கொண்டு? என்ற நுணுக்கம் தெரிந்திருத்தலே காரியங்களை வாய்க்கச் செய்யும். இதை அறிந்து செயல்பட்டு வெற்றி காண்பவனே "காரிய சமர்த்தன்" எனப்படுவான்.

3. தரம் உள்ளவனாக இருக்க வேண்டும்:

தன்னுடைய இமேஜ் பாதிக்கின்ற எந்த காரியத்திலும் வெளியரங்கமாகவோ, மறைமுகமாகவோ செயல்படவோ, ஈடுபடவோக் கூடாது. அகமும் புறமும் பரிசுத்தம் காணப்பட வேண்டும். பேச்சில், நடக்கையில், செயலில், பார்வையில் தரம் காணப்பட வேண்டும். இலக்கண தமிழில் பேசாவிட்டாலும், விரும்பத்தக்க மதிப்பிற்குரிய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரியாசம், கேலிப் பேச்சு நம் தரத்தை தாழ்த்தி விடும். பிறர் வருந்தா வண்ணம் தரமுள்ள வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வோடு பகிரலாம். அது மதிப்பை கூட்டும். சத்தியத்தில் தெளிவு, வசனத்தில் தெளிவு, பேச்சில் தெளிவு, ஆலோசனையில் தரம், செயலில் கருத்து, வாக்கு வன்மை, வாக்கு மாறாத தன்மை, நேசிப்பதில், அக்கறை செலுத்துவதில் உண்மை, கரிசனை இவையெல்லாம் நம்மை தரம் உள்ளவர்களாக உயர்த்திக் காண்பிக்கும். இவைகளில் அன்றாடம் நம் வாழ்க்கை முறைகளாக மாற பழகிக் கொள்ள வேண்டும்.

4. தொலைநோக்குப் பார்வை வேண்டும்:

நாம் செய்யும் சபை ஊழியம் எதை நோக்கி? எந்த இடத்தில்? எப்படிப்பட்ட வளர்ச்சியை நோக்கி இருக்கிறது? இப்போது இருக்கும் ஊழிய திட்டங்களை வைத்து, மேலும், எந்த அளவிற்கு வளர்ச்சியை நோக்கி செல்லும்? எப்படி வளர்ச்சியை நோக்கி கொண்டு போக முடியும்? என்று தொலை நொக்கு பார்வையோடு யோசித்து செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
5 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
10 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
15 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
20 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?
25 ஆண்டுகளில் சபை வளர்ச்சி எப்படி இருக்கும்?

இதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான உபகரணங்கள்  எங்கு கிடைக்கும்? யார்? யாரை? எதெதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?அதற்கான தேடலை தொடருவதே தலைவனின் வேலை.

5. குழுவாக வேலை செய்ய வேண்டும்:

தனி மரம் தோப்பாகாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் பாலமாக நீங்கள் இருக்க வேண்டும். தலைவனுக்கு முதலில் குழு மனப்பான்மை இருப்பது மிக அவசியம். நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்து சீஷர் குழுவோடுதான் ஊழியம் செய்தார் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. ஊழியத்திற்கு அனுப்பும்போதுகூட இரண்டிரண்டுபேராக சிறுசிறு குழுவாக அனுப்பி வைத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில நிறுவனங்கள்  பணியாளர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று பலவிதமான போட்டிகளை வைப்பார்கள். அப் போட்டிகளில் எப்படி குழுவாக வேலை செய்கிறார்கள் என்பதை வைத்து, தலைவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்வார்கள். சொந்த வாழ்வில் இயல்பாக சில விஷயங்களில் குழுவாக வேலை செய்ய இயலாதவர்கள், ஊழியத்தில் மட்டும் குழுவாக இணைந்து வேலை செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? "ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?" (1தீமோத்தேயு: 3:5).

6. பலம், பலவீனம் - அறிந்திருக்க வேண்டும்:

உங்கள் பலம் எது? பலவீனம் எது? என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, மற்றவர்களின் பலம், பலவீனமும் எது? என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்தால்தான் சரியான நபரிடம், சரியான வேலையை கொடுக்க முடியும். இது பற்றிய சரியான கண்ணோட்டம் தாவீதுக்கு இருந்ததினால்தான், பின்னாட்களில் அவனைச் சுற்றிலும் பராக்கிரமசாலிகளை எதெதற்கு? யார்?யாரை? எப்படியெப்படி? அமர்த்திக் கொள்ள முடியுமோ? அப்படியப்படி தாவீது அமைத்து அரசாட்சியை திடப்படுத்திக் கொண்டதை வேதத்தில் நாம் வாசித்தறிய முடிகிறது.

7. தகவல் தொடர்பு சரியாக இருக்க வேண்டும்:

மற்றவர்களுடன் உரையாடுவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கியதே தகவல் தொடர்பு. நீங்கள் மனதில் நினைக்கும் ஒரு விஷயத்தை பிழையில்லாமல், தெளிவாக மற்றவருக்கோ அல்லது குழுவினருக்கோ தெரியப்படுத்துவதுதான் "தகவல் தொடர்பு". இந்த உரையாடலில் உங்கள் வார்த்தைகளின் தன்மை, உடல்மொழி போன்றவை மிக முக்கியம். இவை தவிர, வேத அறிவு, அபிஷேக நிறைவு, புத்திக்கூர்மை, சமூகப் பிரச்சினை குறித்த அறிவு, மற்றவர்கள் மீதான கரிசனை, இரக்கம், பரிவு போன்றவை தேவைப்படும்.