"பேசாதவைகளோடு பேசு"
யோசுவா: 10:12,13 - "... சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியை சரிக்கட்டும் மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; ..."
'பேசாதவைகளோடு பேசு' - என்பது பேசமாட்டாத விக்ரகங்களோடு பேசு என்பதோ, அதனிடம் உன் மன்றாட்டை சொல் என்பதோ அல்ல.
கர்த்தரின் சித்தம் செய்யும்போது, தடையாகவோ, எதிராகவோ, முன்பாகவோ இருப்பதை தேவசித்தம் நிறைவேறும்படி சாதகமாகும்படி மாற்றிக்கொள்ள அவைகளோடு பேச வேண்டும் அதாவது, அதற்கு 'கட்டளையிடு' என்பதை கூறுகிறது.
கட்டளையிடுபவன் - அதிகாரமுள்ளவன் அல்லது எஜமான் என பொருள்.
உத்திரவு பெறுபவன் - வேலைக்காரன் அல்லது அடிமை என பொருள்.
பேசாதவைகளோடு பேச முடியமா?
ஆம். முடியும்.
அதற்கு கேட்கும் திறன் அல்லது செவி இருக்கிறதா?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், விசுவாச வீரர்கள் சொல்வதையெல்லாம் பேசமாட்டாதவைகளும், செவியில்லாதவைகளும், செயல்படாதவைகளும், பார்க்க இயலாதவைகளும், நடக்கமாட்டாதவைகளும் அனைத்தும் கீழ்படியும், செவி கொடுக்கும் என்பதை மாத்திரம் அறிவேன்.
அதற்கு சிந்திக்கும் திறனோ, புரிந்துகொள்ளும் அறிவோ உண்டோ?
இவ்வித ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது. இருப்பினும், விசுவாச வீரன் பேசினாலோ, கட்டளையிட்டாலே, ஜெபித்தாலோ அதற்கு கீழ்படியவும், நிற்கவும், பின்னிட்டு போகவும், தள்ளுண்டு போகவும், இதற்கு மேல் மிஞ்சி வராதிருக்கவும் அதற்கு தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பதை மாத்திரம் அறிவேன்.
பேசாதவைகளோடு பேசினவர்கள் யார்?
* தேவன் - சிருஷ்டிப்பில்... அலைகளைப் பார்த்து ... - "கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு, இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக் கடவது என்று ..." (யோபு: 38:8,10,11)
* திசைகளிடம் பேசும் ஆண்டவர் - "நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி..." (ஏசாயா: 43:6)
* யோசுவா - எமோரியருக்கு விரோதமான யுத்தத்தில்... - சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டளையிடுதல் (யோசுவா: 10:12,13)
* பேதுரு - மரித்துக் கிடந்த தபீத்தாளின் பிரேதத்தைப் பார்த்து - "தபீத்தாளே எழுந்திரு" என கட்டளையிட்டான். (அப்போஸ்தலர்: 9:40)
ஃ இப்படி வேதத்தில் எத்தனையோ உதாரணங்களை நாம் காணலாம். அதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறேன். வேதத்தை தியானியுங்கள்.
பேசாதவைகளிடம் பேசும் முன் - பேசுகிறவரிடம் பேசி விட வேண்டும்:
- யோசுவா: 10:12 - "... அந்நாளிலே யோசுவா, கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: " சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டளையிட்டான்.
- 2இராஜாக்கள்: 4:33 - எலிசா - மரித்துப்போன பிள்ளையை உயிர்ப்பிக்கும் முன் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
பேசாதவைகளிடம் பேசுகிற அதிகாரம் வல்லமை எனக்கு உண்டா?
ஆம்! உண்டு. இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் இவ்வதிகாரம் உண்டு. அது பரத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
".. வானத்திலும் பு+மியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு: 28:18)
"சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;" லூக்கா: 10:22)
"... நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்..." ஓசியா: 1:10; ரோமர்: 9:26)
".. வானத்திலும் பு+மியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு: 28:18)
"சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;" லூக்கா: 10:22)
"... நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்..." ஓசியா: 1:10; ரோமர்: 9:26)
ரோமர்: 8:16 - "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்"
"தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர்: 8:32).
"இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களை சேதப்படுத்தமாட்டாது" (லூக்கா: 10:19)
பேசாதவைகளிடம் பேச தேவையானது எது?
"கடுகளவு விசுவாசம்தான்." வேறென்ன? அசைக்க முடியாத விசுவாசம், அவிசுவாசமில்லாத விசுவாசம், சந்தேமற்ற, அரைகுறையான மனமற்ற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். அதைப் பார்த்து பேச வேண்டும். கட்டளை கொடுக்க வேண்டும்.
"அதற்கு இயேசு: ... கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு: 17:20).
பரலோக அனுமதி கிடைத்து விட்டது. பிறகென்ன?! தாமதமில்லாமல் கட்டளையிட வேண்டியவைகளுக்கு கட்டளையையும், உத்தரவு இட வேண்டியவைகளுக்கு உத்தரவும் கொடுங்கள்.
"வியாதிகளை குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்" (மாற்கு: 3:15)
கட்டளையிடுவதற்கு முன்பு தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று கர்த்தருடைய பிள்ளையாக வேண்டியது மிக அவசியம். இரட்சிப்பு, விசுவாசம் இவையிரண்டும் பரத்திலிருந்து நமக்கு வல்லமையை கொடுத்து, பேசாதவைகளிடம் பேசுகிற வல்லமையை கொடுக்கும்.
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. அதாவது, பேசாதவைகளிடம் பேசுகிறேன் என தேவையில்லாமலும், நியாயமான காரணமில்லாமலும், எவ்வித அவசியமில்லாமலும், சுய விளம்பரத்திற்காக, தேவசித்தமில்லாமல் வீணாக சென்று வீணிலே பேசக்கூடாது, வீணிலே கட்டளையிடக் கூடாது, வீணிலே உத்தரவு இடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பேசாதவைகளோடு நாம் ஏன் பேச வேண்டும்?
உலக வாழ்வில் வெற்றி பெற, வாழ்வை சுகமாய் அனுபவிக்க, சத்துருவை முறியடிக்க, தடைகளை நிர்மூலமாக்க பேசாதவைகளோடு பேசித்தான் ஆக வேண்டும். பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டியவையிடம் பேசினால்தான் பெற வேண்டியதை பெறவும், அகற்ற வேண்டியதை அகற்றவும், நிலைநிறுத்த வேண்டியதை நிலைநிறுத்தவும் முடியும்.
பேச வேண்டிய நேரத்தில் ...
நீங்கள் பேசாததினால் - பேசாதது பேசுகிறவனிடம் கீழ்படிந்து போகிறது.
நீங்கள் பேசாததினால் - பேசாதவைகள் உங்களுக்கு எதிராக நிற்கிறது.
நீங்கள் பேசாததினால் - பேசாதது பேசாமல் அமைதி காக்கிறது.
நீங்கள் பேசாததினால் - பேசாதது உங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறது.
நீங்கள் பேசாததினால் - பேசாதது அடங்க மறுக்கிறது.
பேசாதவைகளிடம் பேசு... அதாவது "கட்டளையிடு" "உத்தரவு கொடு"
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது" (நீதிமொழிகள்: 18:21)
நிலம் வாங்க முயற்சிப்போம்... முடியாமற் போகும். வீடுகட்டுவோம். ஏனோ தெரியாது... பாதியிலேயே நின்று விடும். காரணம் புரியாது. தொழிலில் நஷ்டம் தொடர்ந்து வரும். இழப்புகள் வரும்... ஆனால், ஒன்றும் விளங்காது. அடிக்கடி சுகவீனங்கள், பெலவீனங்கள் குடும்பத்தில் வந்து கொண்டேயிருக்கும். சோர்ந்து போவோம். அது மட்டும்தான் நம்மால் முடியும் என்ற நிலை. என்ன செய்வது? திரும்பிய பக்கமெல்லாம் இருளான நிலைமை!?
எல்லாம் நன்றாகத்தான் செய்கிறேன்... ஆனாலும், நஷ்டங்களை இழப்புகளை தவிர்க்க இயலவில்லை. அது என்னை பின் தொடருகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் மீதம் இல்லை. வருவதுபோல் தெரிகிறது... ஆனால், எங்கே போகிறது என தெரியவில்லை... ஒரு குழப்பம்... தீர்வு இல்லையா? உதவுவோர் இல்லையா? இரவெல்லாம் கண்ணீர்... குடும்பத்தில் சமாதானமில்லை.... ஒரே வழி... ஒன்று எங்கேயாவது ஓடி விடுவது... இல்லை... தற்கொலை...
அருமை நண்பா! சோர்ந்து போகாதே... உனக்கு மாற்று வழியை அதாவது புது வாழ்வை இயேசு தருகிறார். இயேசு தரும் இரட்சிப்பை பெற்றுக் கொள். அவரை விசுவாசி. அவரிடம் ஜெபம் பண்ணு. பின்பு பேசாதவைகளிடம் பேசு. அது உனக்கு கீழ்படியும்.
- உன் ஆசீர்வாதங்களுக்கு தடையாக நிற்கும் எதுவானாலும் சரி... அதைப் பார்த்து கட்டளையிடு
- உன் நலிவடைந்து கொண்டிருக்கும் தொழில், வியாபாரத்தைப் பார்த்து கட்டளையிடு
- நின்று போன உன் வீட்டு கட்டிட வேலையைப் பார்த்து கட்டளையிடு
- வந்து வந்து, பார்த்து பார்த்து தடையாகிப்போன திருமண வரன் நிலைநிற்க ஜெபத்தில் அதை நினைத்து கட்டளையிடு
- உன் குடும்பத்தை அடிக்கடி பெலவீனப்படுத்துபவைகளை பார்த்து உத்திரவு இடு
- திசைகளைப் பார்த்து கட்டளையிடு; நாலா திசைகளிலிருந்தும் சபைக்கு ஆத்துமாக்கள் வரும்படி உத்தரவு இடு
- வறண்டு போய் இருக்கும் பொருளாதார பொக்கிஷசாலை மற்றும் பண்டக சாலை நிரம்பி வழியும்படி கட்டளையிடு
- எதிரான சத்துருக்களின் சதியாலோசனை அபத்தமாகும்படி ஜெபத்திலே உத்திரவு கொடு
- தற்கொலை எண்ணங்களை கொண்டு வரும் சாத்தானின் துர்ஆலோசனை விலகும்படி ஆணையிடு
"உத்திரவு கொடு - கட்டளையிடு - ஆணையிடு"
நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, கழுவப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகள். பரத்திலிருந்து தேவ அதிகாரம் பெற்ற பிள்ளைகள். எனவே, தேவன் தந்த பரலோக அதிகாரத்தை பயன்படுத்து!
அதிகாரத்தைப் பயன்படுத்தும் முன்பு, குறைந்தது ஆண்டவரிடம் ஒருமணி நேரமாவது ஜெபத்தில் பேசிவிடு! விசுவாசமாயிரு! இரட்சிப்பில் நிலைத்திரு! வேதத்தை வாசித்து வசனத்தைக் கைக்கொள்! வசனத்தின்மேல் நம்பிக்கையாயிரு! வாழ்வில் ஜெயம்பெறுவாய்! அல்லேலூயா! ஆமென்!