பிப்ரவரி 13, 2015

வருஷத்தில் மூன்றுதரம் ...


யாத்திராகமம்: 34:23,24 - "வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள். நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, எங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை".

வேடிக்கையாக ஒரு விஷயத்தை கூறுவார்கள். ஒரு ஆண் தேவாலயத்திற்கு மூன்றுமுறை வருவானாம். 

முதலில் -  தூக்கி வரப்படுவானாம்:

 ஒரு ஆண் குழந்தையாக இருக்கும்போது பிரதிஷ்டை பண்ணும்படி பெற்றோர்களால் தூக்கிக்கொண்டு வரப்படுவானாம். அப்போது அவன் குழந்தையாக இருப்பதால் ஏன்? எதற்காக தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம் என அறிய இயலாது.

இரண்டாம் முறை - அழைத்து வரப்படுவானாம்:

 அந்த ஆணுக்கு திருமணமாகும்போது, அந்த ஆண்மகனாகிய மணமகன் தேவாலயத்திற்கு அழைத்து வரப்படுவானாம். அப்போது திருமணசிந்தையோடு இருப்பதால், ஏன்? எதற்காக தேவாலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளோம் என அறிய இயலாது.

மூன்றாம் முறை - சுமந்து கொண்டு வரப்படுவானாம்:

 அந்த ஆண், பின்பு வயதாகி மரிக்கும்போது, நான்கு பேரால் சுமந்து கொண்டு வரப்படுவானாம். இப்போது அவன் மரித்தநிலையில் இருப்பதால், ஏன்? எதற்காக தேவாலயத்திற்கு சுமந்து கொண்டு  வரப்பட்டுள்ளோம் என அறிய இயலாது.

இப்படி மூன்றுமுறையும் ஒரு ஆண்மகன், ஏன்? எதற்காக தேவாலயத்திற்கு வந்தோம் என அவன் அறியாமலே பிறந்து, வளர்ந்து, மடிந்தும் போய்விடுகிறான் என வேடிக்கையாக சொல்வார்கள்.

இன்று அநேக சபைகளில் பெரும்பாலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம் என பெரும்பாலான ஊழியர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. எவ்விதமான கூடுகையாயிருந்தாலும் அதிக எண்ணிக்கையில் கூடிவருவது பெண்களாகத்தான் இருக்கும்.  இந்த நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை பெண்களைவிட பக்திவைராக்கியத்தில் ஆண்கள் குறைந்துபோயிருக்கிறார்களா? அப்படியும் சொல்ல முடியாது. விசுவாசிகளாகிய ஆண்களாகட்டும், புறஜாதியராகிய ஆண்களாகட்டும்... பக்தி வைராக்கியத்தில் ஆண்கள் பெண்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல. பின் ஏனிந்த நிலை? அதையறிந்து விட்டால் அவர்களை கூட்டிச்சேர்ப்பது மிக எளிதாகி விடும்.

பொதுவாக ஆண்கள் தங்கள் குடும்பபாரத்தை பொருளாதாரத்தில் சுமக்க விருப்பமுள்ளவர்கள். குடும்பத்தின் எதிர்கால நன்மைகளுக்காக உழைப்பதில் மிக ஆர்வமுள்ளவர்களாய் இருப்பார்கள். தங்கள் ஓய்வுநேரத்தைக்கூட பொருளீட்டுவதில் அதிக ஆர்வமுள்ள எத்தனையோ ஆண்களை நம் அன்றாட வாழ்வில் காணலாம். அது அவர்களின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது. குடும்பத்தின்மேல் உள்ள அக்கறை, கரிசனை, கடமையை நாம் உணர முடிகிறது.

இப்படிப்பட்ட குடும்ப பொறுப்பும் பாரமுமுள்ள ஆண்களின் கடமையை பாராட்டுகிற அதேவேளையில்... அந்த பொறுப்பில், குடும்பம் ஆசீர்வதிக்கப்பட ஆண்டவர் இயேசுவுக்கும் அதே அளவு சிறிதேனும் குறையாமல் இருக்கிறது என்றும், பொருளீட்டுவதற்கு வெறும் உழைப்பும், குடும்ப அக்கறை மட்டும் போதுமானதல்ல... அதோடு கடவுளின் கிருபையும், ஆசீர்வாத அனுக்கிரகமும் தேவை என்பதை அவர்களை உணரச் செய்ய வேண்டும். இன்றைக்கும் எத்தனையோ ஆண்கள் மிக பொறுப்போடு கடினமாக உழைக்கிற ஆண்கள் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருப்பதை காணலாம்.

'கர்த்தரால் வரும் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். அதனோடே தேவன் வேதனையைக் கூட்டார்' என வேதம் கூறுகிறது. தேவனில்லாமல் ஈட்டும் ஐசுவரியத்தில் தேவாசீர்வாதம் இல்லாதபடியினால், அந்த உழைப்பின் பலனில் குடும்பத்திற்கு ஆசீர்வாதமில்லாமல் போகிறது. கடின உழைப்பின் மூலம் வந்த பொருளின் ஆசீர்வாத மகிமை அனுபவிக்க இயலாமல் போககூடாத இடங்களுக்கு போய், வீண் செலவாகி  மீதமின்றி போகிறது. இதனால் உள்ளத்தில் விரக்தியும்  மற்றவர்கள்மேல் எரிச்சலும், பொறாமையும் வந்து தொற்றிக் கொள்கிறது.

உலகம் கற்றுக் கொடுத்ததை மனதில் கொண்டு செயல்படுகிற எவருடைய உழைப்பும் அதில் வரும் நன்மைகளில் இளைப்பாறுதல், சமாதானமின்றியே காணப்படுவர். அப்படி என்னதான் உலகம் கற்றுக் கொடுத்திருக்கிறது? 'உழைப்பே உயர்வு தரும்' ; 'மனித சக்தி ஆற்றல் மிக்கது' ; 'மனித சக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என தன்னம்பிக்கை ஆற்றலை வளர்க்க சொல்வது போல சொல்லிக் கொடுத்து மனிதனை சுயபெலத்தின்மேல் நம்பிக்கை வைக்க தூண்டிவிட்டது இவ்வுலகம்.

உழைப்பில் உயர்வு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. அதில் தேவனுக்கு மகிமை செலுத்தப்பட வேண்டும் எனபதைத்தான் வலியுறுத்துகிறோம். தேவனோடு மனிதன் இணைந்து செயல்பட்டால் உயர்வு, சமாதானம், இளைப்பாறுதல், வெற்றி என்பதுதான் வேதம் கூறுவது.

எத்தனையோ இவ்வுலக ஐசுவரியவான்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து தேவையானதை பெற்றுக் கொண்டு இவ்வுலகில் வெற்றி பெற்றுவிட்டார்கள். சாதித்தும் விட்டார்கள்.

ஆனால், நடந்தது என்ன? அவர்கள் உள்ளத்திலோ சமாதானமில்லை. நிம்மதியில்லை. அனைத்தும் உள்ளது. ஆனால், 'ஆத்துமாவிற்குத் தேவையான ஏதோ ஒன்றை நாம் இழந்து விட்டோம்' என முடிவிலே உணர்கிறார்கள். உணர்ந்து உள்ளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வெறுமையாக, சூன்யநிலையில் ஐசுவரியவான்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.

ஆத்துமாவில் ஏதோ ஒரு தாகம், ஒரு தேடல் இருப்பதை முடிவில்தான் உணருகிறார்கள். அந்த தாகமும், தேடலும் தேவ பக்தி, தேவகிருபை, தேவசமூகம், தேவ பிரசன்னம், தேவ வல்லமை என்பதை அவர்களுக்கு புரிந்து விட்டால் தேவனுடைய இளைப்பாறுதலை பெற்று விடுவார்கள். அதை உணரச்செய்வது ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளின் வேலை, தலையாய கடமையென உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

அடுத்து, ஆண்களைப்பற்றி தேவனது எதிர்பார்ப்பை காண்போம். வாரந்தோறும் ஆராதனை செய்ய ஆண்மக்கள் எல்லோரும் கர்த்தரின் சமூகத்திற்கு வரவேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறவராயிருக்கிறார்.

ஆனால், ஆண்களோ... ஆராதனைக்கும் கர்த்தருடைய சமூகத்திற்கும் வருவதால்... வாழ்வில் தொழிலிலோ, வியாபாரத்திலோ, அலுவல்களிலோ ஏதாகிலும் பின்னடைவு மற்றும் குறைவு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக வராமல் தவிர்த்து விடுகிறார்கள். வீட்டில் சும்மாயிருக்கும் இல்லத்தரசிகள் வேண்டுமானால் போய் வரட்டுமே என வாளவிருக்கின்றனர். இதற்கு தேவன் கூறும் பதில் என்ன?

தேவன் மூன்று வாக்குறுதிகளை ஆண்மக்களுக்கு தருகிறார். அவை: (யாத்திராகமம்: 34:24)

1. நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்தி விடுவேன்.

2. உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்.

3. ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.


1. நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்தி விடுவேன்: (யாத்: 34:24)

வாரந்தோறும் தவறாமல் கர்த்தரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்லும் ஒருவருக்கு தேவன் தரும் முதல் ஆசீர்வாதம் இதுதான்.

உங்கள் சத்துருக்களை தேவன் உங்கள் முன்னின்று துரத்திவிடுவார். உங்களை துரத்தி விட நினைப்பவர்கள், உங்களை வாழ விடாமல் கெடுக்க நினைப்பவர்கள், உங்களை உயர்வடையாமல் தடுக்க நினைப்பவர்கள், உங்களுக்கு விரோதமாக சர்ப்பணையை பிணைக்கிறவர்கள், பில்லிசூனியம் செய்பவர்கள், பொறாமைபடுபவர்கள் அனைவரையும் உங்கள் கண்காண உங்கள் முன்னின்று கர்த்தர் துரத்தி விடுவார். அவர்கள் ஓடுவதை உங்கள் கண்கள் காணும். அவர்கள் ஓடுவது உங்களால்தான் என்பது உலகிற்கு தெரியாது. ஆனால், ஓடுவது என்னவோ... உங்கள் நிமித்தமாகத்தான் இருக்கும். வெளிதோற்றத்திற்கு வேறு ஒரு பிரச்சினையில் சத்துருக்கள்  விலகி ஓடிப்போனதாக பேசிக்கொள்வார்கள். உண்மை அதுவல்ல. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்திருப்பார் என்பதை அறிந்திடுங்கள். "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (உபாகமம்: 28:7)

உங்கள் சத்துருக்களுக்கு எது நடந்தாலும் அது உங்களுக்கு முன்பாகவும், உங்கள் கண்களுக்கு முன்பாகவும் தான் கர்த்தர் செய்வாரே தவிர, உங்கள் கண்களுக்கு மறைவாக எதையும் தேவன் செய்ய மாட்டார் என்பதை அறியுங்கள். அல்லேலூயா! தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என பாருங்கள்.


2. உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்: (யாத்: 34:24)

வாரந்தோறும் தவறாமல் கர்த்தரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்லும் ஒருவருக்கு தேவன் தரும் இரண்டாவது ஆசீர்வாதம் இதுதான்.

"முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது  இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்" (மத்தேயு: 6:33).

ஆம்! பிரியமானவர்களே! முதலில் தேவசமூகத்தை, தேவநீதியை தேடுவீர்களானால் உலகில் வாழ தேவையான அனைத்துவித ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் இயேசு உங்களுக்கு நிச்சயமாக தருவார்.

கர்த்தரைத் தேடிவருகிறவர்களுடைய வியாபார எல்லைகள், விவசாயநிலங்களின் எல்லைகள், ஆசீர்வாத எல்லைகள் அனைத்தையும் தேவனாகிய கர்த்தர் விஸ்தாரமாக்குவார். குறுகிப்போன உன் எல்லைகள் விரிவாகும். சிறுத்துப்போன எல்லைகள் எதுவாயிருந்தாலும் பெருத்துப்போகப் பண்ணுவார். குறிக்கோளோடு, வாஞ்சையோடு, தாகத்தோடு அவர் சமூகத்திற்கு நித்தமும் வருவாயானால் உன் எல்லைகளை விஸ்தாரமாக்கி உன்னை ஆசீர்வதிப்பார். நெருக்கத்திலிருக்கிற உனக்கு விசாலமான இடத்தை அவர் தருவார்.

நாம் ஆராதிக்கும் தேவன் வாக்குமாறாதவர் என்பதை விசுவாசியுங்கள். ஆராதியுங்கள். நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் மேலாக உங்கள் எல்லைகள் விஸ்தாரமாவதைக் காண்பீர்கள். நாடற்ற, நாதியற்ற இஸ்ரவேலருக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி எல்லைகளை விஸ்தாரப்படுத்தி, இன்று உலகவரைபடத்தில் நிலையான ஒரு இடத்தை ஏற்படுத்தித் தந்தவர் நம் தேவன் என்பதை மறந்து விடாதீர்கள்.


3. ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை: (யாத்: 34:24)

வாரந்தோறும் தவறாமல் கர்த்தரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்லும் ஒருவருக்கு தேவன் தரும் மூன்றாவது ஆசீர்வாதம் இதுதான்.

வாரந்தோறும் ஞாயிறு என்றால் ஆராதனைக்கு போகிறோம். இடைப்பட்ட நாட்களில் இரவு ஜெபங்கள், உபவாச ஜெபம் என போய்விடுகிறோம். இதனால் நாம் விட்டுச் சென்ற  நமது உடமைகளுக்கு, மிருக ஜீவன்களுக்கு, அலுவல்களுக்கு, குடும்பத்திற்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு ஏதாகிலும் நேர்ந்து விடுமோ? என்ற அச்சம் நமக்கு வருகிறதா? பயப்படாதீர்கள்!

வசனத்தை கவனியுங்கள்:  "... உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை" (யாத்: 34:24).

கர்த்தரை ஆராதிக்க போகும் எவருடைய உடைமைகளும், உயிர் உள்ள எவையும், எதற்கும் எவ்வித நஷ்டமும், இழப்புகளும், இச்சிப்புகளும் ஏற்படாது என்பதே தேவவாக்கு.

விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். ஒன்றும் சேதப்படுத்தப்படுவதில்லை. இச்சிக்கப்படப்போவதுமில்லை.
தேவன் அப்படி அனுமதியார். அவரே நம்து பெலன்!
அவரே நம் பாதுகாப்பு! அவரே நம் பங்கு!

உனக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஒரு ஆயுதமும் வாய்க்காதே போகும்! அல்லேலூயா!

உன் உடைமைகளை ஒருவரும் இச்சிக்க தேவன் அனுமதியார்! உன் பிள்ளைகளை இச்சிக்க தேவன் அனுமதியார்! உன் கணவரை இச்சிக்க தேவன் அனுமதியார்! உன் மனைவியை இச்சிக்க தேவன் அனுமதியார்! உன் வேலையை, தொழிலை  வேறொருவன் இச்சிக்க தேவன் அனுமதியார்! உனக்குள்ள எதையும் ஒருவரும் இச்சிக்க ஒருபோதும் தேவன் அனுமதியார்!

உன்மேல் வன்கண் வைக்க, உன் பேரில் பில்லி சூனியம் செய்ய, உன் மீது பொறாமைபட, உன்மேல் பழி போட, வீண் அவதூறுகளை அள்ளி வீச தேவனாகிய கர்த்தர் ஒருபோதும் அனுமதியார். அனுமதித்தால் அதற்கு பின்பு உனக்கு ஒரு உயர்வு, மேன்மை, கனம் தானியேலுக்கு உண்டானதுபோல் உங்களுக்கு உண்டாகுமே தவிர வேற ஒன்றையும் சத்துரு செய்து விட முடியாது. பயப்படாதிருங்கள்.

 "... உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ..."  தேவன் தம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் மூன்றுவித வாக்குத்தத்தங்கள் இவைகளே!

இவைகளில் நம்பிக்கை விசுவாசம் உடையவர்களாயிருங்கள். கர்த்தரைத் தேட சாக்குப் போக்கு கூறாதிருங்கள். உங்கள் நினைவுகளை அவர் அறிவார். உங்கள் ஐயங்களை அவர் போக்கி உங்கள் வாழ்வின் சகல தேவைகளையும் அவர் சந்திப்பார். நம்பிக்கையோடு அவரை ஆராதிக்க அவரது சந்நிதிக்கு செல்வோம். தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்! அல்லேலூயா! ஆமென்!