யாத்திராகமம்: 34:26 - "உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற்பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்"
யாத்திராகமம்: 23:19 - "உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக".
முதற் பலனை செலுத்தும் கட்டளை எப்போது, எதனால் வந்தது?
"கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்" ( யாத்திராகமம்: 13:13-16).
430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலரை மீட்க, தேவனாகிய கர்த்தர் 10 வாதைகளை அனுப்பினார்.
430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலரை மீட்க, தேவனாகிய கர்த்தர் 10 வாதைகளை அனுப்பினார்.
- யாத்திராகமம்: 7:19 - தண்ணீர் இரத்தமாகுதல்
- யாத்திராகமம்: 8:2 - தவளை
- யாத்திராகமம்: 8:16 - பேன்கள்
- யாத்திராகமம்: 8:21 - வண்டுகள்
- யாத்திராகமம்: 9:3 - கொள்ளை நோய்
- யாத்திராகமம்: 9:9 - எரிபந்த கொப்புளங்கள் (சொறி, சிரங்கு)
- யாத்திராகமம்: 9:19 - கல்மழை
- யாத்திராகமம்: 10:4 - வெட்டுக்கிளி
- யாத்திராகமம்: 10:22 - காரிருள்
- யாத்திராகமம்: 11:5 - தலைப்பிள்ளை சங்காரம்
ஒன்பது வாதைகளுக்கும் பார்வோன் பயப்படவில்லை. மாறாக, அவனது இருதயம் மேலும் கடினப்பட்டது என வாசிக்கிறோம். மக்களை விடுவிக்கவில்லை. ஆனால், 10 வது வாதை வந்தபோதோ... இருதயம் கடினப்பட்டவனாக தென்படவில்லை. மகா கூக்குரலிட்டவர்களில் அவனும் ஒருவனாக இருப்பதை பார்க்கிறோம். (யாத்திராகமம்: 12:29,30).
இஸ்ரவேலர்கள் ஒன்பது வாதைகளால் மீட்கப்படாமல், தலைப்பிள்ளை சங்காரத்தினால், அதாவது, "எகிப்தில் உள்ள பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல், காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றுகளனைத்தையும் கர்த்தர் அழித்தார்" (யாத்திராகமம்: 12:29) அதனால் மீட்கப்பட்டார்கள்.
தங்களையும், தங்கள் உடைமைகளையும், தங்களுக்குண்டான யாவையும், தலைப்பிள்ளைகளையும் அனைத்தையும் இஸ்ரவேலர்கள் எகிப்தின் (தலைப்பிள்ளை சங்காரத்தினால்தான்) தலையீற்றுகளால்தான் மீட்கப்பட்டார்கள். எனவே, அதை நினைவுகூறும் வகையில்...
கர்த்தருடைய சமூகத்திற்கு வரும்போதெல்லாம் தங்களிடத்தில் விளைந்த முதற்பலனை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மீட்பை உணர்ந்து, மறவாமல் நினைவுகூர்ந்து முதற்பலனை செலுத்த வேண்டும் என தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.
"... ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்" (யாத்திராகமம்: 13:15).
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்...(யாத்திராகமம்: 13:14, 8/ 12:26)
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்...(யாத்திராகமம்: 13:14, 8/ 12:26)
ஒவ்வொரு முறையும் முதற்பலனை கர்த்தருக்கு செலுத்தும்போதும்... பிள்ளைகளுக்குத் தெரியாமல் செலுத்தக்கூடாது. அவர்கள் கண்கள் காண கர்த்தருக்கு செலுத்த வேண்டும். அதை பிள்ளைகள் கண்ணால் கண்டு... விவரம் புரிந்து... பெற்றோரைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்கும்போது... அவர்களை அதட்டி விரட்டிவிடக் கூடாது. அது அவர்களுக்குப் புரியும் வகையில் பக்திவிருத்திக்கேதுவாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிட்டால்... நீங்கள் கர்த்தருக்கு வெகு பக்தி வைராக்கியமாக இருந்ததைப்போல, பின்னாட்களில் அவர்கள் உங்களைப்போல கர்த்தருக்கு பக்தி வைராக்கியமாக இருக்க மாட்டார்கள்.
கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு காணிக்கையும் நம் பிள்ளைகள் கண்காண எடுத்து வைத்து, அதை ஏன் செலுத்துகிறோம் என்பதை கூடுமானவரைக்கும் அவர்கள் புரியும்படி ஒவ்வொரு தடவையும் கற்றுத்தருவது நல்ல ஆவிக்குரிய பெற்றோர்களின் தெய்வீக சுபாவங்களில் ஒன்றாகும். முடிந்தால் காணிக்கைகளை பிள்ளைகளின் கரங்களில் கொடுத்து செலுத்த வைப்பது சாலச் சிறந்தது. ஏனெனில், பிற்காலத்தில் அவர்களும் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும் என்ற சத்தியத்தையும், கொடுப்பதினால் வருகிற ஆசீர்வாதத்தையும் நடைமுறை வாழ்வில் கற்றறிய உதவியாக இருக்கும்.
கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமுள்ளஅடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களான உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறவாதீர்கள். பிள்ளைகளின் உக்கிராணத்துவப் பொறுப்பு உங்களிடமே! அவர்களை அக்கினியாக மாற்றுவதும், வெதுவெதுப்பாக மாறுவதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறீர்கள்?
முதற்பலனைப் பற்றி பெற்றோர்களாகிய நாமே முதலாவது இச்சத்தியத்தை அறிந்திராதபோது... பிள்ளைகளுக்கு எப்படி விளங்கும்? முதற்பலனைக் குறித்து நாமே முதலில் அறியாததினால்தான் நாம் இன்னும் கர்த்தருடைய சபைக்கு அதை இன்னமும் சரிவர செலுத்தாமல் இருக்கிறோம். எனவே, அதனால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பெறாமல் போகிறோம்.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் நாம், முதற் பலன்களை செலுத்த வேண்டுமா?
செலுத்துவது நலம். கர்த்தருக்கு செலுத்த நினைக்கிற காணிக்கை எதுவாயிருந்தாலும்... அறிந்து செலுத்தினாலும் சரி... அறியாமல் செலுத்தினாலும் சரி... அதற்குண்டான பலனை நிச்சயம் கர்த்தர் தருவார். இருப்பினும், வேதத்தின் வழியே விளக்கம் தேடுவோம்...
"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்" (ரோமர்: 8:29)
"அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்" (கொலோசெயர்: 1:15)
"அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்" (கொலோசெயர்: 1:18)
* பிதாவாகிய தேவனுக்கு அவர் முதற்பேறானவர் (கொலோசெயர்: 1:15)
* அநேக தேவபிள்ளைகளுக்கு அவர் முதற்பேறானவர் (ரோமர்: 8:29)
* மரித்து உயிர்த்தெழுந்ததில் அவர் முதற்பேறானவர் (கொலோசெயர்: 1:18/ 1கொரிந்தியர்: 15:23)
* யோசேப்பு, மரியாளுக்கு அவர் முதற்பேறானவர் (மத்தேயு: 13:55)
முதற்பேறு (First Born) - முதல் பிறப்பு
முதற்பலன் (First Fruit) - முதற்கனி
"அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." (1கெரிந்தியர்: 15:23)
"... இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்" (வெளிப்படுத்தல்: 14:4)
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரை மீட்க முதல்பேறான தலையீற்று தலைச்சன்களால் மீட்டதைப்போல, புதிய ஏற்பாட்டில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் நம்மை மீட்க, முதற்பேறான முந்தின பேறுமான தலைக்கல்லாகிய இயேசுகிறிஸ்துவை கல்வாரி சிலுவை மரணத்தின் மூலம் மீட்டெடுத்தார்.
எனவே, பழைய ஏற்பாடானாலும் சரி... புதிய ஏற்பாடானாலும் சரி... முதற்பலன் கர்த்தருக்கு உரியது. அதை புதிய ஏற்பாட்டில் இருக்கிற நாமும் செலுத்துவது நலம். கட்டாயமாயுமல்ல... விசனமாயுமல்ல... விருப்பமிருந்தால்... முதற்பலனால் வரும் தேவாசீர்வாதங்கள் பெற விரும்பினால்... செலுத்தலாம்.
எவையெல்லாம் முதற்பலன்? அதன் வரையறை என்ன? (நெகேமியா: 10:35 - 37)
நெகேமியா: 10:35 - 1. தேசத்தின் முதற்பலன் :- அரசாங்க சம்பளத்தில் வரும் முதல் சம்பளம், தொழில் வியாபாரத்தில் வரும் முதல் லாபம்,
2. சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனி:- வீட்டுத்தோட்ட விருட்சமானாலும், கொல்லைப்புற விருட்சமானாலும், வயல்வெளி விருட்சமானாலும் - வருடாவருடம் ஒவ்வொரு சீசனிலும் முதற்கனி
நெகேமியா: 10:36 - 3. குமாரரில் முதற்பேறு:- முழுநேர ஊழியத்திற்கு
4. ஆடுமாடுகளில்:- தலையீற்றுகள்
நெகேமியா: 10:37 - 5. பிசைந்த மாவில் முதல் பாகம்:- இஸ்ரவேலில் பிசைந்த மா. இந்தியாவில்... குறிப்பாக தமிழ்நாட்டில் - சமைக்கும்போது எடுக்கும் அரிசியில் ஒரு பிடி அரிசி எடுத்து வைத்து செலுத்துதல்
6. படைப்புகளில் முதல் பாகம்:-
7. திராட்சைப்பழரசம்:-
8. நிலப்பயிர்களில் தசமபாகம்:-
9. வெள்ளாண்மை பட்டனங்களில் தசமபாகம்:-
10. நீதிமொழிகள்: 3:9 - உன் பொருளில், எல்லா விளைவின் முதற்பலன்:-
கர்த்தருக்கு முதற்பலனை செலுத்துவதினால் வரும் ஆசீர்வாதங்கள்:
"அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சம் புரண்டோடும்" (நீதிமொழிகள்: 3:10)