பிப்ரவரி 05, 2015

வயதான பாட்டியும் வாக்குத்தத்தமும்


வயதான ஏழைத்தாயார் ஒருவர் தன்னுடைய ஒரே மகனை அதிக கஷ்டத்தோடு கடன்பட்டு , படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கினார்கள். அவர்களுடைய மகனும் நன்றாகப் படித்தான். வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. அவனுடைய தாயார் தன் மகனிடம்: நீ வேலையில் அமர்ந்தவுடன் எனக்கு இருக்கும் கடன்களை தீர்க்க பணம் அனுப்பு என்று கேட்டுக் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின. மகன் வெளிநாட்டிற்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் அவனிடமிருந்து  பணம் எதுவும் வரவில்லை. ஆனால், அந்த ஒவ்வொரு மாதமும் மகனிடமிருந்து ஒரு கவர் வரும். அதை ஆவலோடு அந்த தாயார் பிரித்து பணம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். 

ஆனால், அந்த கவரில் ஒரே ஒரு மஞ்சள் நிற தாள் மாத்திரமே இருக்கும். இதைப்பார்த்து சோர்ந்துபோன தாயார் மிகுந்த வேதனையடைந்தார்கள். தன் மகன் பணம் அனுப்பாததை எண்ணி அநேகரிடம் சொல்லிபுலம்பினார்கள்.

ஒருநாள் தன் சபை போதகரிடம் தன்னுடைய நிலைமையையும், தன் மகன் பணம் அனுப்பாததையும் சொல்லி,  எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். போதகரோ,  நான் உங்கள் வீட்டிற்கு வந்து ஜெபிக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார்.

ஒருநாள் போதகர் அந்த தாயார் வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டிற்குள் சென்றபோது அந்த தாயார், தன்னுடைய மகன் அனுப்பியிருந்த அந்த மஞ்சள் நிறத்தாள்களை சுவரில் ஒட்டி வைத்திருந்ததை போதகருக்கு காண்பித்து, என்னுடைய மகன் எனக்கு ஒரு பணமம் அனுப்பவில்லை; ஆனால், இந்த தாள்களை மாத்திரமே அனுப்பியுள்ளான் என்றார்கள்.

போதகர் அந்த தாள்களை பார்த்தார். அவை அனைத்தும் தன்னுடைய அன்பு தாயாருக்கு மகன் அனுப்பிய பெரும் தொகைகளின் வங்கி காசோலைகளாகும். போதகரோ, அவர்களுடைய மகனின் அன்பையும், தாயாரின் அறியாமையையும் எடுத்துக்கூறி ஜெபித்தார்.

ஆம், பிரியமானவர்களே! கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தங்களை மாற்றப்படாத காசோலைகளாகவே அந்த தாயாரைப்போல நாமும் மிக அழகாக சுவர்களில் மாட்டி வீட்டை அலங்கரிக்கிறோம். ஆனால், அவைகள் நமக்கு ஆசீர்வாதங்களை கொண்டு வருகின்றனவா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம்மை ஆசீர்வதிக்கவே தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களைத் தந்துள்ளார். ஆகவே, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி ஜெபித்து இருதயத்தில் வைத்து அறிக்கை செய்வோம். கர்த்தர் தமது வாக்குத்தத்தங்களை நம் வாழ்வில் நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்.

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம்: 119:105). 

-- Selected