பிப்ரவரி 04, 2015

இயற்கையாக வளரும் சபை


ஒரு சபை வளர தேவையான எட்டு விஷயங்களை "இயற்கையாக வளரும் சபை" (Natural  Church Development) என்ற ஒரு புத்தகத்தில் கற்றுக் கொண்டேன். அதையே ஜெபக்குறிப்பாக வைத்து ஜெபிக்கிறோம். பிரசங்கிக்கிறோம். இதை வாசிக்கும் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்பதால் இதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

     


இவையிரண்டும் கடினமானதை  எளிதாகச் செய்யும் எளிய வழிகள்


           

-  இது இருப்பதை இன்னும் கடினமாக்குபவை

ஒரு சபை வளர வேண்டுமெனில், அதன் தரிசனங்கள், இலக்குகள், திட்டங்கள், செயல்பாடுகள் கடைபிடிக்க எளிதானதாக, மக்களை சென்றடையத்தக்கதாக காணப்பட வேண்டும். ஒரு சபையை வளர அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வட்டமான சக்கரங்கள் கொண்ட வாகனமா? சதுர சக்கர வாகனமா? எது எளிதானதென்று கவனிக்க வேண்டும். ஒரு போதகர் தன் சபையை எப்படிப்பட்ட சக்கரத்தின் மீது அமைத்து நகர்த்திக் கொண்டிருக்கிறார் என கவனித்தாலே போதுமானது. வளருமா? வளராதா? என சொல்லி விடலாம். வளருவதற்கேற்ற வழிகளை கீழே காண்போம்.

திருச்சபையே கிரியை செய்வாய்

1. பெலப்படுத்தப்பட்ட தலைமைத்துவம்:

ஒரு திருச்சபை வளர்வதற்கு மிக முக்கியமானது அந்த சபையின் தலைவர்கள், போதகர்கள், மற்றும் பல்வேறு ஊழிய பொறுப்புகளில் இருப்பவர்கள் யாவரும் தெய்வ பயமுள்ளவர்களாகவும், ஆவிக்குரிய வாழ்வில் முன்மாதிரி உள்ளவர்களாகவும், குடும்பம், குடியிருக்கும் பகுதி, வேலை செய்யும் இடம், சபை, சமுதாயம் இவைகளில் நற்சாட்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாகவும், ஆவியின் வரங்களினால் செயல்படுகிறவர்களாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கும்போது சபை வளர்ச்சியடையும்.

2. வரங்களின் அடிப்படையில் விசுவாசிகள் அனைவரும் ஊழியம் செய்ய வேண்டும்:

திருச்சபையில் உள்ள அங்கத்தினர்கள் யாவரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் அருளப்படும் இரட்சிப்பை பெற்றவர்களாகவும், வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனோடு தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினால் உடன்படிக்கை செய்தவர்களாகவும், பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாகவும், ஆவியின் கனிகள் மற்றும் ஆவியின் வரங்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும். தங்களுக்கு தேவன் எந்த வரத்தை தந்திருக்கிறார் என்று கண்டு பிடித்து, அதை அபிவிருத்தி செய்து தேவ நாமத்திற்கு மகிமையாக திருச்சபை வளர்ச்சியடைய பயன்படுத்துகிறவர்களாக திகழும்போது சபை பல மடங்கு வளர்ச்சி பெறும்.

3. தீவிரமான ஆவிக்குரிய தன்மை - ஜெபம், வேத தியானம், வைராக்கியமான விசுவாசம்:

திருச்சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ஞாயிறு ஆராதனைகளில் தவறாமல் பங்கு பெறுகிறவர்களாக மாத்திரம் இராமல், தினமும் முறையான குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேத தியானம் செய்கிறவர்களாகவும், எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தை மறுதலியாமல் காத்துக் கொள்கிறவர்களாகவும் இருக்கும்போது சபை ஆரோக்கியமாக இருக்கும்.

4. செயல்படும் அமைப்புகள்: 

சில நேரங்களில் சபைகளில் பல நிகழ்ச்சிகள், பல பிரிகள் இருக்கும். ஆனால், அவைகள் நல்ல உற்சாகமாக, தீவிரமாக செயல்படாமல் பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படியிராமல் ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், சிறுவர்கள், சுவிசேஷ ஊழியம், பின் தொடர் ஊழியம், சீஷத்துவம், சமூக சேவை, ஜெபம் இவைகளை ஊக்கமாக, விறுவிறுப்பாக, எல்லோரின் ஒத்துழைப்போடு, ஆழமான அர்ப்பணிப்போடு நடைபெறும்போது சபை வேகமாக வளரும்.

5. எழுச்சியான ஆராதனை:

ஒரு திருச்சபையின் முக்கியமான அம்சம், நிகழ்ச்சி ஞாயிறு ஆராதனையாகும். எந்த சபையில் துதிப் பாடல்கள், செய்திகள், ஜெபங்கள், சாட்சிகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஆராதனை நல்ல உற்சாகமானதாகவும், உணர்வுள்ளதாகவும், அவியில் அனலாகவும் இருக்கிறதோ அந்த சபை வளரும். அங்கே தேவ பிரசன்னம் உண்டு. விடுதலை உண்டு. வளர்ச்சியும் உண்டு.

6. ஆசீர்வாதமான சிறு குழுக்கள்: 

ஒரு திருச்சபை கொண்டாடக்கூடிய அளவில் பெரிதாகவும், அதே சமயம் பராமரிக்கக்கூடிய அளவில் சிறிதாகவும் இருக்க வேண்டும். எட்டு பேரிலிருந்து  15 நபர்கள் கூடி, வார நாட்களில் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டில் கூடி ஜெபிக்கவும், ஐக்கியப்படவும், ஒருவரையொருவர் நேசிக்கவும்,  பராமரிக்கவும், அந்த பகுதி மக்கள் சுவிசேஷத்தை அறியவும், குழு அங்கத்தினர்கள் சீஷத்துவத்தில் வளரவும், தேவன் தங்களுக்கு அருளியிருக்கிற வரங்களை கண்டு பிடித்து பயன்படுத்தவும் சிறிய அளவில் கூடி வருவது  மிக அவசியம். இது சபை வளர்ச்சிக்கு உதவும் பக்க வேர்களாக திகழும்.

7. வல்லமையோடு நற்செய்தியை அறிவித்தல்: 

திருச்சபையின் முக்கியமான நோக்கம் சீஷராக்குதல், அதற்கு முதலில் செய்யப்பட வேண்டியது இயேசு கிறிஸ்துவை பற்றியும், அவர் மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக பட்டபாடுகள், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் பற்றியும்,  இயேசுவை விசுவாசித்தால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்ற செய்தியும் அறிவிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நிரூபிக்கப்பட வேண்டும். மனிதர்களின் இரட்சிப்புக்காக திட்டமிட்டு முறையாக ஜெபிக்க வேண்டும். தெளிவாக திருவசனத்தை பிரசங்கிக்க வேண்டும். மனந்திரும்புதல், விசுவாசம், கீழ்படிதல் போதிக்கப்பட வேண்டும். அறியாதவர்கள் அறியவும், சந்திக்கப்படாதவர்கள் சந்திக்கப்படவும் வேண்டும் என்பதை தலையாய பணியாக கொண்ட சபை வளர்ச்சி அடையும்.

8. அன்பின் ஐக்கியமும் விருந்தோம்பலும் உள்ள சபை:

வளரும் சபையின் அடையாளம் அன்பின் ஐக்கியம். புதிதாக வருபவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டு அவர்களின் தேவைகளை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் சபை வளரும். அங்கத்தினர்களுக்குள் ஒரே குடும்பம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபேசியர்: 4:1-3).

தேவனிடத்தில் அழியாத அன்பு, ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் அன்பு, உலக மக்கள் மேல் மனதுருகும் அன்பு, குழு மனப்பான்மையுள்ள சபை, கிறிஸ்துவின் நிமித்தமும் தேவ ராஜ்யத்தின்  நோக்கத்தினிமித்தமும்  ஐக்கியத்தை காத்துக் கொள்ளும் சபை வளர்ந்து பெருகும்.

அபிஷேகம் பெற்ற திருச்சபைகள் அகிலமெங்கும் வளர்ந்து பெருக ஜெபிப்போம்! திட்டமிடுவோம்!  ஒன்று சேர்ந்து செயல்படுவோம்!