பிப்ரவரி 28, 2015

பராமரிப்புக்குழு

பராமரிப்புக்குழு
(Care Cell)

சபையில் கூடிவரும் விசுவாசிகள், தங்கள் அருகாமையில் இருந்து சபைக்கு வரும் விசுவாசிகளுடன் இணைந்து, ஜெபத்திற்கும், வேதவாசிப்பிற்கும், ஆலோசனைக்கும், உதவிக்கும் அந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் ஏதுவாக கூடிவரும் ஒரு கூட்டமே "பராமரிப்புக்குழு" என அழைக்கிறோம்.

*ஒரு சபை ஆரம்பிக்கும்போது ஒரு 'பராமரிப்புக்குழு' என்ற நிலையில்தான் ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.

சபை

 "சபை" என்றால் - இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரால் அழைக்கப்பட்ட மக்கள். இயேசு கிறிஸ்துவை தங்கள் இராஜாவாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றவர்கள் நிறைந்த கூட்டம். சபை என்பது கட்டிடமல்ல; சபை என்பது மக்கள் கூட்டம். இது ஒரு சமுதாயம்; சபை என்பது ஒரு குடும்பம்; ஒரு சரீரம்; ஒரு மந்தை.

சபையின் நோக்கம்

* தேவனை ஆராதித்து அவரை மகிமைப்படுத்துதல்

* வேதத்தை கற்று அதற்கு கீழ்படிதல்

* ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டு அன்பு கூறுதல்

* சமுதாயத்திற்கு இயேசுவை அறிவித்து ஊழியம் செய்தல்

* உலக சமாதானத்திற்காக ஜெபித்தல்

பராமரிப்புக்குழு  செயல்பாடுகள்

1. தரிசனமும் வேலையும்: (மத்தேயு: 28:19,20)

தேவனுக்காகப் புறப்பட்டுப் போகுதல். சகல ஜாதியாரையும் சீஷராக்குதல், கற்பனைகளைக் கற்றுக் கொடுத்தல், பயிற்சியளித்தல், சமுதாயத்தை மறுரூபப்படுத்துதல்

2. செயல்முறை: (2கொரிந்தியர்: 5:14-18)

ஒப்புரவாக்குதலின் ஊழியம் (2தீமோத்தேயு: 2:2) மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையான மனிதர்களை உருவாக்கி ஒப்புக் கொடுத்தல்.

3. மூலதனம்:

பரிசுத்த ஆவியானவர் (அப்போஸ்தலர்: 1:8) /  வேதப்புத்தகம்  (1தீமோத்தேயு: 3:15-17)

4. அமைப்பு: பராமரிப்புக்குழு:

சிறுகுழுக்கள், பக்திவிருத்தியடைதல், விடுதலை செய்தல், சமுதாயத்தை மறுரூபப்படுத்துதல், விசுவாசிகள் யாவரும் இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் செயல்பட விடுவிக்கப்படுதல்.

5. இரண்டு முக்கிய நோக்கங்கள்:

அ)  இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும். 
ஆ)  இரட்சிக்கப்பட்ட மக்கள் தலைவர்களாக தகுதி பெற வேண்டும்

  •   இரட்சிக்கப்படாத மக்களை பெருக்கி, அதனிமித்தம் பெருக்கத்திற்கு வழிகாட்டுவதற்கு ஒரு குழு.
  • இரட்சிக்கப்பட்ட மக்களை தலைவர்களாக உருவாக்கி தகுதிப்படுத்த மற்றொரு குழு





பயிற்சி

1. பராமரிப்புக்குழு குறித்த தரிசனம், இலக்கு, நோக்கம், அடிப்படை உண்மைகள் அவசியம்.  முக்கியத்தவம், அமைப்பு, நிர்வாகம் இவைகளைக் குறித்த பாடங்கள்.

2. பராமரிப்புக்குழுவில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய பாடங்கள், அதை பயன்படுத்தும் முறைகள், வேதத்தைக்  கற்றுக் கொடுப்பது எப்படி?

3. ஜெபம் செய்தல், ஆராதனை நடத்துதல், பாடல் பாடுதல், ஜெபத்திற்குள் மக்களை நடத்துதல்


4.  பராமரிப்புக்குழு கடந்து செல்லும் நிலைகள்:

* ஆரம்ப நிலை

* மாறும் நிலை

* சமுதாய நிலை

* செயல்படும் நிலை

* பெருகும் நிலை

I. குழுவினரின் எதிர்பார்ப்புகள்:

  • வியாதி பிரச்சினை
  • பல்வேறுபட்ட வகையான மக்களும், அடிப்படை தேவைகளைக்குறித்த எதிர்பார்ப்பு
  • உறவு பிரச்சினைகள், சமாதானம் அற்ற நிலை
  • பிசாசின் தொல்லைகள்
  • தனிப்பட்ட மனநிலை பிரச்சினை: குழப்பம், மனப்போராட்டம், தூக்கம் இல்லை, பயம், குற்ற உணர்வு
II. குழு நடத்த வேண்டிய முறை:

1. இணைப்பு: நல்ல ஐக்கியம், நல்ல உறவு, நல்ல மனநிலை உள்ள நிலையை ஏற்படுத்துதல், இறுக்கத்தை தளர்த்துதல்

2. மகிமைப்படுத்துதல்:  ஆரம்ப ஜெபம், துதி, ஆராதனை பகுதி, பாடல்கள், சாட்சி பகுதிகள்

3. வேத பாடம்:  தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடங்கள் அல்லது தனிப்பட்ட முறையில் தேவனோடு நேரம் செலவழித்தபோது, தேவன் இடைப்பட்ட சத்தியங்கள்

4. ஊழியம்:  இரட்சிக்கப்படாதவர்களுக்காக ஜெபம், சமுதாயத்தை மறுரூபமாக்கப்படும் முயற்சிகள்

5. அறிவிப்பு; நிறைவு;  மற்ற பராமரிப்புக்குழு, பெரிய (தலைமை)சபையின் அறிவிப்புகள், அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்துதல், பயிற்சி வகுப்புகளுக்கு ஆயத்தபடுத்துதல், அறிவிப்பு கொடுத்தல்.

III. ஒரு விசுவாசி கடந்து செல்லும் பயிற்சிகள்:

* சுவிசேஷம்

* ஞானஸ்நான வகுப்பு

* ஆவிக்குரிய பெற்றோர்

* பராமரிப்புக்குழு தலைவர் வகுப்பு

* மூப்பர் பயிற்சி


5. தலைமைத்துவ பண்புகள், குழு மனப்பான்மைகள், உறவுகளைப் புரிந்து கொள்ளுதல், ஆவியின் கனிகள், இராஜ்ய மனப்பான்மைகள்.

6. பராமரிப்பு பணிகள்:  வீடு சந்திப்பு, வியாதியில் உள்ளோரை விசாரித்தல், பிரச்சினையில் உள்ளோருக்கு ஆலோசனை கூறுதல், வியாதியஸ்தரை குணமாக்குதல், ஆவியின் வரங்களை கண்டு பிடித்தலும், பயன்படுத்துதலும்.

7. ஆத்து ஆதாயம் செய்வது எப்படி?  பின் தொடர்பு பணி செய்வது எப்படி?  சாட்சியை பகிர்ந்து கொள்வது எப்படி?  ஒருவரை இரட்சிப்பிற்குள் நடத்துவது எப்படி?  ஞானஸ்நானத்தை சொல்லிக் கொடுப்பது எப்படி?  ஆவிக்குரிய பெற்றோராக்குவது எப்படி?  ஆவிக்குரிய தலைவராக்குவது எப்படி?  பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்குள் வழி நடத்துவது எப்படி?

8. பராமரிப்பு குழுவை நடத்துவது எப்படி? அங்கத்தினரை புரிந்து கொள்வதும், அவர்களை உருவாக்குவதும் எப்படி?  திட்டமிட்டு உருவாக்கும் பணியை செய்வது எப்படி?  குழு பெருக்கத்திற்கு திட்டமிட்டு வேலை செய்வது எப்படி?

  பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள்

* பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள் எவை?  அதை எப்படி கையாள்வது? 

* மனஸ்தாபங்கள், மனவருத்தங்களை கையாள்வது எப்படி?  கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான கருத்துக்களை கையாள்வது எப்படி?

* தலைவர், பராமரிப்புக்குழு நடக்கும் வீட்டுக்காரர் மற்றும் அவர்கள் குடும்பத்தார், மற்ற முதிர்ச்சி பெற்ற விசுவாசிகள், உதவி தலைவர்கள், அவிக்குரிய பெற்றோர், புதிய நபர்கள் - இவர்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள், தகவல்கள் - இவைகளைக் கையாண்டு நல்ல முறையில் குழுவை நடத்தி அதைப் பெருக்கத்திற்குள் நடத்தி, ஒரு குழு மூலமாக பல குழுக்களை ஆரம்பித்து பெருக வேண்டும்.

குழுவுக்கும் அதன் தலைவருக்கும் இருக்க வேண்டிய குணாதிசயங்கள்

1. தேவனை நேசிக்கவும், அவரை அறிகிற எல்லா அறிவிலும் வளர வேண்டும். எல்லாரைக் காட்டிலும் அவரை அதிகம் நேசிக்கிறவனாக இருக்கிறவன். (மாற்கு: 12:29-31)

2. கற்றுக்கொள்ளவும், கீழ்படியவும் ஆர்வமாய் இருக்க வேண்டும். (பிலிப்பியர்: 3:1-14). அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் விட்டு வெறுக்கிறவனாக இருக்க வேண்டும்.

3. வேதத்தை தியானிக்கிறவனாக அதை பகிர்ந்து கொள்ள அறிந்தவனாக இருக்க வேண்டும். (2தீமோத்தேயு: 3:14-17)

4. ஜெபிக்கிறவனாக இருக்க வேண்டும். மன்றாட்டு ஜெபம், ஆசீர்வதிக்கும் ஜெபம், விடுதலைக்காக ஜெபம். (பிலிப்பியர்: 4:4-7)

5. நல்ல உறவை கட்டி எழுப்புகிறவனாக இருக்க வேண்டும். (கொலோசெயர்: 2:2-4)

6. பிறருக்கு ஆறுதலும், ஆலோசனையும் கொடுக்கத்தக்கவனாக இருக்க வேண்டும். (ரோமர்: 12:1,2,10)

7. நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். பிறரை உற்சாகப்படுத்தவும், புத்தி சொல்லவும், பயிற்றுவிக்கவும் கடனாளிகளாக இருக்கிறோம். (எபிரெயர்: 10:24,25)

8. தேவனை ஆராதிப்பதிலும், கூடிக் கொண்டாடுதலும் தேவையான ஒன்று. அன்பை பகிர்ந்து கொள்ளுதல், ஐக்கியப்படுதல், விசாரித்தல். (2கொரிந்தியர்: 2:14,15;  8:23,24)

9. தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால், குழுக்கள் பெருக்கமடைய வேண்டும். உருவாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று. (அப்போஸ்தலர்: 20:20)

10. சந்திக்கப்படாதோரை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் சந்திக்கவும், சந்திக்கப்பட்டோரை வேதாகமத்தை கற்றுக் கொடுத்து அவர்களை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் நல்ல செயல்படும் பொறுப்புள்ள அங்கத்தினராக மாற்றி, சந்திக்கப்படாதோரை சந்திக்கத்தக்கவராக பயிற்சி கொடுத்து, சமுதாயத்தை மறுரூபப்படுத்த வேண்டும். (1பேதுரு: 3:15)

தலைவர்கள் கடமை

ஒரு தலைவன் ஆற்ற வேண்டிய கடமைகள்:

1. தூண்டுகோலாக இருப்பவர்

2. மேய்ப்பர்

3. தலைவர்

4. உருவாக்குபவர்

5. இயக்குநர்


சுவிசேஷத்தை அறிவிக்கும் முறை

  • ஏதாவது இருவருக்கும் உறவு ஏற்படத்தக்கதாக பேசுங்கள்.

  • பாராட்டக்கூடிய ஒன்றைக் கண்டு பிடித்துப் பேசுங்கள்

  • மார்க்க சம்பந்தமாக, குடும்ப சம்பந்தமாக, சபை சம்பந்தமாக கேள்விகளைக் கேளுங்கள்

  • அவர்கள் சொல்வதை அக்கறையாய் கவனியுங்கள்

  • உரையாடலை கிறிஸ்துவுக்கு நேராக திருப்ப அறிந்திருங்கள்

  • சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
- Selected - 

பிப்ரவரி 27, 2015

சபை வளர்ச்சியும், கிருபை வரங்களும்

Image result for church growth and gift of grace
(ஊழியர்களின் தியானப்பகுதி )
(நன்றி: Rev.I.இரத்தினம்பால் அவர்கள்)

சங்கீதம்: 78:72 - "இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்"

பொதுக்குறிப்புகள்

1. வரங்கள் - 27
2. இரட்சிக்கப்பட்ட யாவருக்கும் வரம்
3. பகிர்பவர் - பரிசுத்த ஆவியானவர்
4. சிபாரிசு இல்லை
5. எவ்வரமும் விரும்பிக் கேட்க இயலாது
6. ஜெபம் மற்றும் கடின உழைப்பால் பெற இயலாது
7. பரிசுத்தத்திற்கும் வரத்திற்கும் சம்பந்தமில்லை
8. எல்லா வரமும் சம மதிப்புடையவை
9. ஒருவருக்கு பல வரங்கள் இருக்கலாம்
10. வரம் திணிப்பு தவறு
11. வரம் - கண்டுபிடிப்பது பயன் தரும்
12. வரம் போல் இருப்பவை: கனி, தாலந்து, கடமை, போலி

வரங்களின் பயன்கள்

  1. திறவுகோல் போன்றது
  2. அஸ்திபாரம்
  3. தனி - சபை ஸ்திரம்
  4. தனி - சபை பக்தி விருத்தி (எபேசியர்: 4:12)
  5. தனி - சபை முதிர்ச்சி (எபேசியர்: 4:14)
  6. சபை வளர்ச்சியை நிர்ணயிக்கிறது
  7. சபை ஆட்சி முறையை நிர்ணயிக்கிறது
  8. வரமே "முதல்" - முதலீடு
  9. ஆவிக்குரிய ஆளத்துவத்தை நிர்ணயிக்கிறது
  10. அழைப்பை நிர்ணயிக்கிறது
  11. ஊழிய பதவிகளை நிர்ணயிக்கிறது
  12. அவயவயங்களை நிர்ணயிக்கிறது
  13. தாழ்வு மனப்பான்மையை நீக்குகிறது
  14. சபையின் தேக்கநிலையை நீக்குகிறது
  15. சபையின் ஐக்கியத்தைக் காக்கிறது
  16. சபை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறது (அப்போஸ்தலர்: 15 அதிகாரம்)
வரங்களின் விளக்கம்

  1. தீர்க்கதரிசனம் - (யுதா, சீலா, நான்கு கன்னியாஸ்திரீகள், அகபு)
  2. பணிவிடை - தீமோத்தேயு (பிலிப்பியர்: 2:19,22)
  3. போதித்தல் - அப்பல்லோ, அப்போஸ்தலர்
  4. புத்தி சொல்லுதல் - பவுல் (1தெசலோனிக்கேயர்: 2:12)
  5. கொடுத்தல் - மக்கெதோனியா சபை, அந்தியோகியா சபை
  6. தலைமைத்துவம் - பவுல், யாக்கோபு (அப்போஸ்தலர்: 15 அதிகாரம்)
  7. இரக்கம் - பர்னபா
  8. ஞானத்தை போதிக்கும் வசனம் - பவுல் நிரூபம்
  9. அறிவை உணர்த்தும் வசனம் - பவுல்
  10. விசுவாசம் - பவுல், பேதுரு
  11. அற்புதங்கள் - பிலிப்பு, பேதுரு, பவுல்
  12. ஆவிகளைப் பகுத்தறிதல் - பேதுரு - அனனியா, சப்பீராள்/ பவுல் - இரட்சிப்பின் விசுவாசம்
  13. அந்நியபாஷை - பவுல் , கொரிந்து சபை
  14. வியாக்கியானம் - 
  15. அப்போஸ்தலர் - ஜெபம், போதனை, உபதேசம், அனுப்புதல், அங்கீகரித்தல், தீர்வு
  16. உதவிகள் - ஒநேசிப்போரு, திமிர்வாதக்காரன் - நான்கு பேர்
  17. சுகமளிக்கும் வரம் - பவுல் - மெலித்தா தீவு
  18. நிர்வாக வரம் - பேதுரு, யாக்கோபு, யோவான் (கலாத்தியர்: 2:9)
  19. சுவிசேஷ வரம் - பிலிப்பு, பவுல் (இனப்பெருக்கம்)
  20. மேய்ப்பர் - யோவான், பவுல் (உயிரோட்டம்)
  21. திருமணமாகாத தனிமை - நான்கு குமாரத்திகள்
  22. விரும்பி ஏற்கும் ஏழ்மை - பர்னபா (1கொரிந்தியர்: 13:3)
  23. இரத்தசாட்சி - ஸ்தேவான் (இரத்தசாட்சி ஆவி)
  24. உபசரிப்பு - ஆக்கில்லா, பிரிஸ்கில்லா
  25. மிஷினெரி - பவுல், சீலா
  26. வேண்டுதல் - 
  27. பிசாசுகளைத் துரத்துதல் - பவுல்

உள் ஊழியம்

1. தீர்க்கதரிசனம் :-  

அ) பக்திவிருத்தி
ஆ) புத்தி (1கொரிந்தியர்: 14:3)
இ) ஆறுதல்

2. பணிவிடை - எல்லாவித பணிவுடன் வேலை, ஊழியருக்கு உதவுதல்

3. போதித்தல்: - 
அ) ஓய்வுநாள் பள்ளி
ஆ) சீஷத்துவப் பயிற்சி
இ) தலைமைத்துவப் பயிற்சி
ஈ) வேதபாட வகுப்புகள்

4. புத்தி சொல்லுதல்:-
அ) இளைஞருக்கு
ஆ) இளம் பெண்களுக்கு
இ) ஒழுங்கில்லாதோருக்கு
ஈ) பர்னபா - புதியஏற்பாட்டில் பாதி இல்லை

5. இரக்கம் :-
அ) சரீர
ஆ) மன
இ) உள்ளுணர்வு  - பிரச்சினைகளுக்கு தீர்வு

6. ஞானத்தை போதிக்கும் வசனம் - சபையின் மூளை (சாலமோன் குழந்தையை வெட்டும்படி கூறுதல்)

7. அறிவை உணர்த்தும் வசனம் - சபை வளர்ச்சிக் கருத்துக்கூறும் அறிஞர்

8. ஆவிகளைப் பகுத்தறிதல் -
அ) சுயம்
ஆ) தேவஆவி
இ) பிசாசின் ஆவி
ஈ) அந்திக்கிறிஸ்துவின் ஆவி

9. அந்நியபாஷை - மொழிப்பிரச்சினையை நீக்கும்

10. வியாக்கியானம் - மொழிப் பெயர்ப்பு:-
அ) துண்டுப்பிரதி
ஆ) புத்தகங்கள்
இ) பிரசங்கம்

11. கொடுத்தல்:-
அ) சபையின் பொருளாதாரம்
ஆ) ஏழை விசுவாசிகளுக்கு
இ) அவசர சபை தேவைக்கு

12. உதவிகள்:-  பிற வரங்கள் சிறப்படைய உதவி

13. சுகமளிக்கும் வரம்: -  இல்லையென வெறெங்கும் அனுப்ப இயலாது

14. நிர்வாகம்:- ஆளுகை, திட்டமிட்டு இலக்கை அடைதல்
அ) சண்டேஸ்கூல் நிர்வாகி
ஆ) தாய்மார் சங்க நிர்வாகி
இ) பராமரிப்புக்குழு நிர்வாகி

15. மேய்ப்பர்:-
அ) தலைமை மேய்ப்பர்
ஆ) உதவி மேய்ப்பர்
இ) பராமரிப்புக்குழு தலைவர்கள்
ஈ) நரம்பு மண்டலம்
உ) உயிரோட்டம்

16. திருமணமில்லாத தனிமை :-  நல்ல ஊழியம் செய்வார்

17. உபசரிப்பு:-
அ) போதகர் மனைவி
ஆ) வரவேற்பாளர்
இ) உதவியாளர்

18. வேண்டுதல்:-
அ) ஜெபக்குழுக்கள்
ஆ) அரை இரவு ஜெபங்கள்
இ) உபவாச ஜெபங்கள்

19. பிசாசு துரத்துதல்:-  சகல மாறுபாடான ஆவிகளைத் துரத்துதல்

வெளி ஊழியம்

1. தலைமைத்துவம்:- (முதலாளி)
அ) பாஸ்டர்
ஆ) சண்டேஸ்கூல் டைரக்டர்
இ) வாலிப குழு தலைவர்
ஈ) குழு தலைவர்

2. விசுவாசம்:-  எதிர்கால முன்னேற்ற தரிசனம்

3. அற்புதங்கள்:-  நல்ல விளம்பரங்கள்

4. அப்போஸ்தலர்:-  
அ) பல சபை தலைமை
ஆ) விசேஷ அதிகாரம் (ஜெபம், போதனை, உபதேசம், அனுப்புதல், அங்கீகாரம், தீர்வு)

5. சுவிசேஷகர்:-  இனப்பெருக்க வரம் - இது சபையில் 10% இருந்தால் போதும்

6. விரும்பி ஏற்கும் ஏழ்மை:-  சபைக்கு இலாபம்

7. மிஷினெரி:- அனுப்புதல், தாங்குதல் - நல்ல சபை

8. இரத்த சாட்சி:- 
அ) சுயநலமற்ற விசுவாசிகள்
ஆ) ஒரே நேரம் உபயோகிக்க முடியும்
இ) இரத்தசாட்சியின் ஆவி

வரங்கள் - கணக்கிடுதல்
(கப்பல் எஜமான் - தலைமைத்துவ  வரம்)

1. எங்கு செல்வது? - விசுவாச வரம்

2. எப்படி செல்வது? (மாலுமி)  - நிர்வாக வரம்

3. ஜார்ஜ் முல்லர் - வேண்டுதல் வரம்  

4. திருஷீலர் 10 இலட்சம் டாலர் - விசுவாச வரம்

5. பவுல் - மிஷினெரி வரம்  (பேதுரு - மிஷினெரி வரம் இல்லை)

6. மருத்துவ ஆராய்ச்சியாளர் - அறிவை உணர்த்தும் வசனம், ஞானத்தைப் போதிக்கும் வசனம்

7. சத்திய கருத்தை அறிய வைப்பது :-
அ) அறிவு
ஆ) உணர்வு
இ) ஞானத்தை வாழ்க்கையில் கடைபிடிக்க வைப்பது

8. அன்பான வார்த்தைகள்:- 
அ) புத்தி சொல்லும் வரம்
ஆ) அன்பான செயல்கள்
இ) இரக்கம் செய்யும் வரம்

- Selected 

பிப்ரவரி 24, 2015

இஸ்ரவேலின் விளக்கு


Image result for 2samuel: 21:17

2 சாமுவேல்: 21:17 - "... அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்து போகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்"

விளக்கு:  இருளை அகற்றும். பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும். இருளைக் கண்டு பயப்படுகிற பயத்தை வெளிச்சம் நீக்கும். அதைரியத்தை போக்கி தைரியத்தை கொடுக்கும். நம்பிக்கை பிறக்கும்.

ஆதியில் இருந்து, இந்நாள் வரைக்கும் இருளை அகற்ற மனிதனுக்கு மிக உபயோகமாயிருப்பது விளக்கு. இது இல்லாவிட்டால்... இரவு நேர பயணங்களில் வழி தவறி விடும் வாய்ப்பும், கோரமான விபத்துக்கள் ஏற்படும் நிலையும், சொல்லி மாளாது. கடலில் பயணிக்கும் கப்பலுக்கு ஒரு கலங்கரை விளக்காய், ஆகாய விமானங்களுக்கு ஆகாய வெளிச்சமாய், வாகனங்களுக்கு வெளிச்சமாய் விளங்குவது விளக்கு.

இருளான வீட்டிற்கு வெளிச்சங் கொடுப்பது விளக்கே. இப்படி மனிதனுடைய வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வழிகாட்டும் வெளிச்சமாய் இருப்பது விளக்கு. இந்த விளக்கு அணையா விளக்காய் ஒவ்வொரு வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிவீசி மக்களுக்கு அரும்சேவையாற்றுகிறது. இப்படிப்பட்ட விளக்கிற்கு ஒப்புமையாக... தாவீதின் மனுஷர் தாவீதை ...  'இஸ்ரவேலின் விளக்கு' என குறிப்பிடுகின்றனர். தாவீது அணைந்தால்... இஸ்ரவேல் இருளாகி விடும் என்ற கருத்தில் அவர்கள் இங்கு குறிப்பிடுகிறதை நாம் உணர முடிகிறது.

தாவீது என்கிற விளக்கு அணையாதபடி அவனைக் காப்பதில் தாவீதின் மனுஷர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வதை காண முடிகிறது. தாவீதின் விளக்கு இஸ்ரவேலின் ஜனத்திற்கு முன்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மங்கியெரியவில்லை. அதைக் காப்பதில் அவனது மனுஷர் சிரத்தையெடுப்பதைக் காணும்போது... இக்காலத்தில் இப்படிப்பட்ட விசுவாசமுள்ளவர்கள் உண்டா?! என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

மேய்ப்பனற்ற ஆடுகள் தொய்ந்து போகும்; மேய்ப்பனற்ற ஆடுகள் சிதறுண்டு போகும் என்பதால் (மத்தேயு: 9:36) ஜனங்களை வழிநடத்திச் செல்ல ... தேவன் தம்முடைய ஜனத்தை மேய்ப்பதற்கும், வழிநடத்துவதற்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்களை நியமித்தார். அவர்கள் முறையே... கோத்திரப்பிதாக்கள், மோசே, யோசுவா, நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஆசாரியர்கள். புதிய ஏற்பாட்டில் பார்ப்போமானால், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் (எபேசியர்: 4:13) என காண்கிறோம்.

ஜனங்களை வழிநடத்தக்கூடிய இப்படிப்பட்ட கர்த்தருடைய தாசர்களே தேவஜனத்தின் விளக்கைப் போன்றவர்கள். இந்திய தேசத்தின் இருளைப்போக்க இப்படிப்பட்ட தேவமனுஷர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா இருளாகி விடும். இஸ்ரவேலின் விளக்கு தாவீது என்றால், ஒவ்வொரு பட்டணத்திலும், கிராமங்களிலும் கர்த்தருக்காய் ஊழியம் செய்யும் ஒவ்வொரு ஊழியரும் ஒரு விளக்குதான் என்பதை நாம் அறியக்கடவோம். பாடுகள், உபத்திரவங்கள் வரும் காலங்களில் இவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தேவபிள்ளைகளின் கடமையாகும்.

பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி காலம் சுமார் 400 ஆண்டுகள் என கணிக்கின்றனர் நம் வேத பண்டிதர்கள். அந்த இடைப்பட்ட இடைவெளிகாலங்களில் ஒரு கர்த்தருடைய தாசரும், தீர்க்கதரிசிகளும், கர்த்தருடைய வார்த்தையும் கிடைக்காத காலமாயிருந்தது அந்நாட்களில். அப்படிப்பட்ட ஒரு இருண்டகாலம் அது. அப்படிப்பட்ட ஒரு காலம் இனி ஒருநாளும், ஒருக்காலும், ஒரு இடத்திலும், எந்த ஒரு நாட்டிலும், தேசத்திலும் வரக்கூடாது. கர்த்தருடைய தாசர்கள், கர்த்தருடைய வார்த்தை அணைந்து போகாதபடிக்கு காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

2இராஜாக்கள்: 18:3,4 - "... அரமனை விசாரிப்புக்காரனாகிய ... ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்" என வாசிக்கிறோம். 

நாம் வாழ்வது கடைசிக் காலம். இனி வரப்போகிற காலங்களோ கொடிய காலங்கள் (1தீமோத்தேயு: 3:1) என வேதம் கூறுகிறது. "அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு குறைந்துபோம்" என வேதம் கூறுகிறது. 

"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்றார்" (யோவான்: 13:34,35).

"நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (கலாத்தியர்: 5:15).

இஸ்ரவேலைக் காக்கவும், வழிநடத்தவும் தேவன் தாவீதை அபிஷேகம் பண்ணினார். இஸ்ரவேலுக்கு விளக்காயிருந்தான். அது அணைந்து போகாதபடிக்கு அவன் மனுஷர் அவனைக் காத்தனர். தாவீதும் அவன் மனுஷரும் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதை எவ்வளவு அழகாக வேதம் எடுத்துக்காட்டுகிறது பாருங்கள்!!

தாவீது ஏன் ஒரு 'இஸ்ரவேலின் விளக்கு' என தாவீதின் மனுஷர் குறிப்பிட்டனர்? 

* தாவீதின் வாழ்க்கையில் ... ஆரம்ப நாட்களில் இருந்தே ஆடுகளுக்காக தன் ஜீவனைக்கொடுப்பதில், அதை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ளவனாக இருந்ததில் நல்ல மேய்ப்பனாக இருந்தான். (1சாமுவேல்: 17:34,35)

* இஸ்ரவேல் ஜனங்களை காப்பதிலும், இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தவனை நிக்கிரகம் செய்வதிலும், கர்த்தருடைய வல்லமை ஈட்டியிலும், பட்டயத்திலும் இல்லை; அவரை விசுவாசிக்கிறவர்களிடத்தில் உள்ளது என நிரூபிப்பதிலும், எதிர் வரும் சவாலை சந்திப்பதில் சுயபெலத்தால் நிற்காமல், கர்த்தருடைய நாமத்தினால் வருகிறேன் என்ற விசுவாச அறிக்கையிட்டு ஜனங்கள் நடுவே விசுவாசத்தை விதைப்பதிலும், இந்த யுத்தம் கர்த்தருடையது என கூறி இஸ்ரவேலின் படைகள் தேவன் பேரில் நம்பிக்கை வைக்கவும் தூண்டுகோலாய் இருப்பதில் தாவீது நல்ல தளகர்த்தனாய் விளங்கினான். (1சாமுவேல்: 17:46,47)

* அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை கனம் பண்ணுவதில் கவனமுள்ளவன் (1சாமுவேல்: 24:5,6; 26: 8-11) (2சாமுவேல்: 1:17)

* தாவீது 'கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவன்' இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர் (1சாமுவேல்: 25:28)

* எதிரிகளுக்கும், இஸ்ரவேலருக்கும் தாவீது தேவதூதனைப்போல காணப்பட்டான். (1சாமுவேல்: 29:9;  2சாமுவேல்: 14:17)

* பாடுகள் உபத்திரவங்கள் வரும்போதெல்லாம் தாவீது கர்த்தரையே சார்ந்து கொள்வான். (1சாமுவேல்: 30:6,7)

* தன்னுடைய இராஜமேன்மையை கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தாழ்த்தி, நடனம் பண்ணினான். (2சாமுவேல்: 6:14)

* தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருப்பதைக் கண்ட தாவீது, தனது அரமனையைவிட தேவனுடைய ஆலயம் சிறப்பாக, பெரிதாக இருக்க வேண்டுமென விரும்பினான். (2சாமுவேல்: 7:2,

* நன்றி மறவாத நட்புடையவன் தாவீது. "யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா?" (2சாமுவேல்: 9:1)

* தன்னிடம் உள்ள பாவம், தவறுகளுக்கு உடனடியாக மனந்திரும்புதல், பாவ அறிக்கையிட்டு காத்துக் கொள்ளுதல், ஊழியரை எதிர்த்து நில்லாமை இவையெல்லாம் தாவீதின் சிறப்பு வாய்ந்த நற்குணங்கள். (2சாமுவேல்: 12:13; சங்கீதம்: 51)

* கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணித் துதிக்க, புகழ, கீதவாத்தியங்களை வாசிக்க, கைத்தாளங்களைக் கொட்ட, புரிகைகளை ஊத ஆட்களை நியமித்தான். (2சாமுவேல்: 16:4-6)

இப்படி தன் வாழ்நாளெல்லாம் தன் தேவனாகிய கர்த்தருக்கும், தேவன் தந்த ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக இருந்தான். தன் வாழ்வில் எல்லா எல்லைகளிலும் இன்ப, துன்பங்களில் அனைத்திலும் சாட்சியுள்ளவனாக, ஜனத்தின் காவலனாக இருந்ததினால், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீதை - "இஸ்ரவேலின் விளக்கு" என அழைத்தனர்.

பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் தாவீது விடாய்த்துப் போனான். இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் விடாய்த்துப்போன நேரத்தில், தாவீதை வெட்ட வேண்டும் என இருந்தான். அச்சமயம், செருயாவின் குமாரனாகிய அபிசாய் தாவீதுக்கு உதவியாக வந்து பெலிஸ்தனைக் கொன்று போட்டான்.

இதனால், அதிர்ச்சியடைந்த தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள். (2சாமுவேல்: 21:16,17)


விடாய்த்துப்போன நேரத்தில்...

"... தாவீது விடாய்த்துப் போனான்... இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்ட வேண்டும் என்று இருந்தான்"

நாம் சோர்வடையும் நேரங்களில்தான் சாத்தான் நம்மை நெருங்கி வருவான். தேவபிள்ளைகள் சோர்வடையும் நேரங்களில் மிக விழிப்பாயிருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஜெபத்திலே ஒத்தாசை செய்ய வேண்டும்.

 "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் வந்து:" (மத்தேயு: 4:2,3) என வாசிக்கிறோம். நாம் எப்போது பெலவீனப்படுவோம், சோர்வடைவோம் என சோதனைக்காரன் காத்திருந்து நம்மை தாக்க வருவான். அவ்வேளைகளில் நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, நமக்காக ஜெபிக்கிறவர்களை கண்டுபிடித்து ஜெபிக்க சொல்ல வேண்டும். செருயாவின் குமாரனாகிய அபிசாய் போல நமக்காக ஒரு கூட்டம் ஜெபிக்கும் ஜெபப்பங்காளர்களை ஜெபவீரர்களை உருவாக்க வேண்டும். ஒருவரையொருவர் ஜெபத்திலே தாங்குகிறவர்களாய் மாற வேண்டும்.

தாவீது குறிப்பிட்ட விளக்குகள்

1. தேவனாகிய கர்த்தரே விளக்கு:

"கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்" (2சாமுவேல்: 22:29)

என்ன ஒரு விசுவாச நம்பிக்கையான அறிக்கை பாருங்கள்! தாவீதின் மனுஷர் 'தாவீதை இஸ்ரவேலின் விளக்கு' என்கின்றனர். ஆனால், தாவீதோ... "கர்த்தர் தான் என் விளக்கு" என்கிறான்.

தன் வாழ்வில் உள்ள இருளை வெளிச்சமாக்குபவர் தேவனாகிய கர்த்தர்தான் என அறிக்கையிடுகிறான். ஆம் பிரியமானவர்களே! நம் வாழ்வில் உள்ள இருளை வெளிச்சமாக்குபவர் நம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர்தான் என விசுவாச அறிக்கை செய்வோம். விசுவாசத்தில் பலமடைவோம்.

2. சந்ததியாகிய விளக்கு:

சங்கீதம்: 18:28 - " தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்" என தாவீது ஒரு விண்ணப்ப ஜெபத்தை ஏறெடுப்பதை வாசிக்கிறோம்.

தான் மட்டுமல்ல, தன் எதிர்கால சந்ததியே தேவனாகிய கர்த்தருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். வெளிச்சம் வீச வேண்டும். தன் பின்சந்ததிகள் இருளுக்குள் போய்விடக்கூடாது என்பதில் தாவீது கவனமாயிருந்து, தேவனிடம் மன்றாடி விண்ணப்பித்து ஜெபிப்பதை காண்கிறோம்.

1இராஜாக்கள்: 11:36 - "என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்து கொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்"

தாவீதின் விண்ணப்ப ஜெபம் கேட்கப்பட்டது.

ஏசாயா: 8:18 - "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்"


பிப்ரவரி 20, 2015

முதற் பலன்

Image result for first fruit

யாத்திராகமம்: 34:26 - "உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற்பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்"

யாத்திராகமம்: 23:19 - "உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக".

முதற் பலனை செலுத்தும் கட்டளை எப்போது, எதனால் வந்தது?

   "கழுதையின் தலையீற்றையெல்லாம்  ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக்  கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்" ( யாத்திராகமம்: 13:13-16).

430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலரை மீட்க, தேவனாகிய கர்த்தர் 10 வாதைகளை அனுப்பினார்.

  • யாத்திராகமம்: 7:19 - தண்ணீர் இரத்தமாகுதல்
  • யாத்திராகமம்: 8:2 - தவளை
  • யாத்திராகமம்: 8:16 - பேன்கள்
  • யாத்திராகமம்: 8:21 - வண்டுகள்
  • யாத்திராகமம்: 9:3 - கொள்ளை நோய்
  • யாத்திராகமம்: 9:9 - எரிபந்த கொப்புளங்கள் (சொறி, சிரங்கு)
  • யாத்திராகமம்: 9:19 - கல்மழை
  • யாத்திராகமம்: 10:4 - வெட்டுக்கிளி
  • யாத்திராகமம்: 10:22 - காரிருள்
  • யாத்திராகமம்: 11:5 - தலைப்பிள்ளை சங்காரம்
ஒன்பது வாதைகளுக்கும் பார்வோன் பயப்படவில்லை. மாறாக, அவனது இருதயம் மேலும் கடினப்பட்டது என வாசிக்கிறோம். மக்களை விடுவிக்கவில்லை. ஆனால், 10 வது வாதை வந்தபோதோ... இருதயம் கடினப்பட்டவனாக தென்படவில்லை. மகா கூக்குரலிட்டவர்களில் அவனும் ஒருவனாக இருப்பதை பார்க்கிறோம். (யாத்திராகமம்: 12:29,30).

இஸ்ரவேலர்கள் ஒன்பது வாதைகளால் மீட்கப்படாமல், தலைப்பிள்ளை சங்காரத்தினால், அதாவது, "எகிப்தில் உள்ள பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல், காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றுகளனைத்தையும் கர்த்தர் அழித்தார்" (யாத்திராகமம்: 12:29) அதனால் மீட்கப்பட்டார்கள்.

தங்களையும், தங்கள் உடைமைகளையும், தங்களுக்குண்டான யாவையும், தலைப்பிள்ளைகளையும் அனைத்தையும் இஸ்ரவேலர்கள் எகிப்தின் (தலைப்பிள்ளை சங்காரத்தினால்தான்) தலையீற்றுகளால்தான் மீட்கப்பட்டார்கள். எனவே, அதை நினைவுகூறும் வகையில்...

கர்த்தருடைய சமூகத்திற்கு வரும்போதெல்லாம் தங்களிடத்தில் விளைந்த முதற்பலனை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட  மீட்பை உணர்ந்து, மறவாமல் நினைவுகூர்ந்து முதற்பலனை செலுத்த வேண்டும் என தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.

"... ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்" (யாத்திராகமம்: 13:15).

பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக்  கேட்டால்...(யாத்திராகமம்: 13:14, 8/  12:26)

ஒவ்வொரு முறையும் முதற்பலனை கர்த்தருக்கு செலுத்தும்போதும்... பிள்ளைகளுக்குத் தெரியாமல் செலுத்தக்கூடாது. அவர்கள் கண்கள் காண கர்த்தருக்கு செலுத்த வேண்டும். அதை பிள்ளைகள் கண்ணால் கண்டு... விவரம் புரிந்து... பெற்றோரைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்கும்போது... அவர்களை அதட்டி விரட்டிவிடக் கூடாது. அது அவர்களுக்குப் புரியும் வகையில் பக்திவிருத்திக்கேதுவாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிட்டால்... நீங்கள் கர்த்தருக்கு வெகு பக்தி வைராக்கியமாக இருந்ததைப்போல, பின்னாட்களில் அவர்கள் உங்களைப்போல கர்த்தருக்கு பக்தி வைராக்கியமாக இருக்க மாட்டார்கள்.

கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு காணிக்கையும் நம் பிள்ளைகள் கண்காண எடுத்து வைத்து, அதை ஏன் செலுத்துகிறோம் என்பதை கூடுமானவரைக்கும் அவர்கள் புரியும்படி ஒவ்வொரு தடவையும் கற்றுத்தருவது நல்ல ஆவிக்குரிய பெற்றோர்களின் தெய்வீக சுபாவங்களில் ஒன்றாகும். முடிந்தால் காணிக்கைகளை பிள்ளைகளின் கரங்களில் கொடுத்து செலுத்த வைப்பது சாலச் சிறந்தது. ஏனெனில், பிற்காலத்தில் அவர்களும் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும் என்ற சத்தியத்தையும், கொடுப்பதினால் வருகிற ஆசீர்வாதத்தையும் நடைமுறை வாழ்வில் கற்றறிய உதவியாக இருக்கும்.

கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமுள்ளஅடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களான உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறவாதீர்கள். பிள்ளைகளின் உக்கிராணத்துவப் பொறுப்பு உங்களிடமே! அவர்களை அக்கினியாக மாற்றுவதும், வெதுவெதுப்பாக மாறுவதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறீர்கள்?

முதற்பலனைப் பற்றி பெற்றோர்களாகிய நாமே முதலாவது இச்சத்தியத்தை அறிந்திராதபோது... பிள்ளைகளுக்கு எப்படி விளங்கும்? முதற்பலனைக் குறித்து நாமே முதலில் அறியாததினால்தான் நாம் இன்னும் கர்த்தருடைய சபைக்கு அதை இன்னமும் சரிவர செலுத்தாமல் இருக்கிறோம். எனவே, அதனால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பெறாமல் போகிறோம்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் நாம், முதற் பலன்களை செலுத்த வேண்டுமா?

 செலுத்துவது நலம்.  கர்த்தருக்கு செலுத்த நினைக்கிற காணிக்கை எதுவாயிருந்தாலும்... அறிந்து செலுத்தினாலும் சரி... அறியாமல் செலுத்தினாலும் சரி... அதற்குண்டான பலனை நிச்சயம் கர்த்தர் தருவார். இருப்பினும், வேதத்தின் வழியே விளக்கம் தேடுவோம்...

"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்" (ரோமர்: 8:29)

"அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்" (கொலோசெயர்: 1:15)

"அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்" (கொலோசெயர்: 1:18)

* பிதாவாகிய தேவனுக்கு அவர் முதற்பேறானவர்  (கொலோசெயர்: 1:15)
* அநேக தேவபிள்ளைகளுக்கு அவர் முதற்பேறானவர்  (ரோமர்: 8:29)
* மரித்து உயிர்த்தெழுந்ததில் அவர் முதற்பேறானவர்  (கொலோசெயர்: 1:18/ 1கொரிந்தியர்: 15:23)
* யோசேப்பு, மரியாளுக்கு அவர் முதற்பேறானவர்  (மத்தேயு: 13:55) 

முதற்பேறு (First Born)  - முதல் பிறப்பு
முதற்பலன் (First Fruit)  - முதற்கனி

"அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." (1கெரிந்தியர்: 15:23)

"... இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்" (வெளிப்படுத்தல்: 14:4)

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரை  மீட்க முதல்பேறான தலையீற்று தலைச்சன்களால் மீட்டதைப்போல, புதிய ஏற்பாட்டில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் நம்மை மீட்க, முதற்பேறான முந்தின பேறுமான தலைக்கல்லாகிய இயேசுகிறிஸ்துவை கல்வாரி சிலுவை மரணத்தின் மூலம் மீட்டெடுத்தார்.

எனவே, பழைய ஏற்பாடானாலும் சரி... புதிய ஏற்பாடானாலும் சரி... முதற்பலன் கர்த்தருக்கு உரியது. அதை புதிய ஏற்பாட்டில் இருக்கிற நாமும் செலுத்துவது நலம். கட்டாயமாயுமல்ல... விசனமாயுமல்ல... விருப்பமிருந்தால்... முதற்பலனால் வரும் தேவாசீர்வாதங்கள் பெற விரும்பினால்... செலுத்தலாம்.

எவையெல்லாம் முதற்பலன்? அதன் வரையறை என்ன? (நெகேமியா: 10:35 - 37)

நெகேமியா: 10:35 -  1. தேசத்தின் முதற்பலன் :-  அரசாங்க சம்பளத்தில் வரும் முதல் சம்பளம், தொழில் வியாபாரத்தில் வரும் முதல் லாபம், 

2. சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனி:-  வீட்டுத்தோட்ட விருட்சமானாலும், கொல்லைப்புற விருட்சமானாலும், வயல்வெளி விருட்சமானாலும்  - வருடாவருடம் ஒவ்வொரு சீசனிலும் முதற்கனி

நெகேமியா: 10:36 - 3. குமாரரில் முதற்பேறு:-  முழுநேர ஊழியத்திற்கு

4. ஆடுமாடுகளில்:-  தலையீற்றுகள்

நெகேமியா: 10:37 - 5. பிசைந்த மாவில் முதல் பாகம்:- இஸ்ரவேலில் பிசைந்த மா. இந்தியாவில்... குறிப்பாக தமிழ்நாட்டில் - சமைக்கும்போது எடுக்கும் அரிசியில் ஒரு பிடி அரிசி எடுத்து வைத்து செலுத்துதல்

6. படைப்புகளில் முதல் பாகம்:- 

7. திராட்சைப்பழரசம்:-

8. நிலப்பயிர்களில் தசமபாகம்:-

9. வெள்ளாண்மை பட்டனங்களில் தசமபாகம்:-

10. நீதிமொழிகள்: 3:9 - உன் பொருளில், எல்லா விளைவின் முதற்பலன்:-


கர்த்தருக்கு முதற்பலனை செலுத்துவதினால் வரும் ஆசீர்வாதங்கள்: 

"அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சம் புரண்டோடும்" (நீதிமொழிகள்: 3:10)

பிப்ரவரி 19, 2015

தேவனுடைய இரகசியச் செயல்

Image result for job:29:4 - God's intimate

தேவனுடைய இரகசியச் செயல்

யோபு: 29:4 - "தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது"  என பக்தனாகிய யோபு கூறுகிறதை வாசிக்கிறோம். 

யோபு: 38 -41 ஆகிய அதிகாரங்களில் வாசிக்கும்போது... தேவன் இவ்வுலகத்தை சிருஷ்டித்த விவரத்தை கூறுகிறார். அந்நாட்களில் தான் இப்படித்தான் உலகை சிருஷ்டிக்கப்போகிறேன் என்றும், இவ்விதமான படைப்புகளைத்தான் உலகில் படைக்கப்போகிறேன் என்று எந்த தூதனிடமும், கேருபீன், சேராபீன்களிடமோ அவர் சொன்னதில்லை. உள்ளத்தில் உள்ளதை அவர் பகிர்ந்து கொள்ளவுமில்லை. 

ஆனால், உலகில் உள்ள அனைத்தையும் ஐந்து நாட்களில் படைத்த தேவன் ஆறாம்நாளில் மனிதனைப் படைத்தார். அதன் பின்பு, அவனோடேகூட அவர் தினமும் சாயங்கால வேளையில் குளிர்ச்சியான நேரத்தில் அவனோடே பேசி உலாவி  வருவார். மனிதனைப் படைத்த பின்பு அவனிடத்தில் ஒவ்வொன்றாக சொல்லி, விளங்க வைத்து, காண்பிக்கிறார்.

மனிதன் தேவவார்த்தையை மீறி பாவம் செய்தபோது, தன் வார்த்தைக்கு கீழ்ப்படிகிற குறிப்பிட்ட  தன்னுடையவர்களோடு மட்டும் தனது மனவெளிப்பாடுகளை பகிர்ந்து கொண்டார். நடப்பிக்க வேண்டிய கிரியைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

உதாரணம்:

* ஜலப்பிரளயத்தைக் குறித்து நோவாவிடம் பகிர்ந்து கொண்டார். (ஆதியாகமம்: 6:13-21) 

* சோதோம் கொமாராவின் அழிவைக் குறித்து ஆபிரகாமிடம் பகிர்ந்து கொண்டார் (ஆதியாகமம்: 18:18)

* வரப்போகும் ஏழு வருட பஞ்சத்தைக் குறித்து யோசேப்பிடம் பகிர்ந்து கொண்டார் (ஆதியாகமம்: 41:25)

* இஸ்ரவேலின் மீட்பைக் குறித்து மோசேயிடம் பகிர்ந்து கொண்டார் (யாத்திராகமம்: 3:16,17)

* ஏலியின் வீட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பை சாமுவேலிடம் பகிர்ந்து கொண்டார். (1சாமுவேல்: 3:11-14)

யோபுவின் சிநேகிதன், தேமானியனாகிய எலிப்பாஸின் எதிர் கேள்வி:

"நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக் கொண்டீரோ? நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதா?" (யோபு: 15:8,9)

யோபுவின் மூன்று நண்பர்களில் மூத்தவன் எலிப்பாஸ். இவன் உலக ஞானம் மிகுந்தவன். யோபு: 4,5,15,22 ஆகிய அதிகாரங்களில் இவன் பேசிய பேச்சுக்களை வாசித்தறியலாம் அனைத்தும் உலக லௌகீக ஞானம் மிகுந்ததாக காணப்படுமேயன்றி, தேவஞானம் இல்லாதிருப்பதை காணலாம். இவனது வம்ச அட்டவணையை ஆதியாகமம்: 36:4,11,40-42 ஆகிய வசனங்களில் பார்க்கலாம். இவன் ஒரு உலகப்பிரகாரமான மனிதன். ஆவிக்குரியவன் அல்ல. எனவே, ஆவிக்குரியவனின் வழிகளை இவனால் அறிந்து கொள்ள முடியாது. எனவே, யோபுவின் வழிகள் இவனுக்கு விளங்கிக் கொள்ள இயலாததினால், எதிர்கேள்வி கேட்பதை பார்க்கிறோம். 

"... தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."(1கொரிந்தியர்: 2:11)

  "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்;  அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதாணிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." (1கொரிந்தியர்: 2:14)

"ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும், அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்" (1கொரிந்தியர்: 2:15).

தேவனுடைய இரகசியத்தின் இருப்பிடம்:

* "...நீதிமான்களோடே  அவருடைய இரகசியம் இருக்கிறது (நீதிமொழிகள்:3:32).

* "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது..." (சங்கீதம்: 25:14).


யாருக்கு தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்:


கர்த்தருடைய உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் இருப்பவர்களுக்கு தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்


  • கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரிடத்தில் அன்பாயிருப்பவனுக்கு வெளிப்படுத்துவார் (யோவான்: 14:21)

  • தேவனுக்கு சிநேகிதராக இருப்பவர்களுக்கு வெளிப்படுத்துவார் (யோவான்: 15:15)

  • "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ்: 3:7).

  • தீர்க்கதரிசிகளிடத்தில் தன்னை வெளிப்படுத்தி பேசுவார் (எண்ணாகமம்: 12:6)

  • மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தை பேசும்படி - உண்மையுள்ள ஊழியர்களை உபயோகப்படுத்துகிறார். (1கொரிந்தியர்: 2:7) 

  • யோவானைப்போல இயேசுவோடு நெருங்கி ஜீவிக்கும் எவருக்கும் தேவஇரகசிய செயலை வெளிப்படுத்துவார். (யோவான்: 13:23-26)                 

கர்த்தருக்குப் பயப்படும் கர்த்தருடைய பிள்ளைகள் யாராயிருந்தாலும் தேவனுடைய இரகசிய செயலை அவர்களுக்கு தெரியப்படுத்துவார். சாமுவேலைப்போன்ற சிறு பிள்ளையாண்டானிடத்திலும் வெளிப்படுத்துவார். எண்பது வயது முதியவர் மோசேயினிடத்திலும் வெளிப்படுத்துவார். 

கர்த்தருடைய உயர்மட்ட ஆலோசனைக்குழு என்பது மேலே கண்ட தகுதியுடையவர்கள்தான். இப்படிப்பட்டவர்களுக்கு பரலோகத்தின் இரகசிய வெளிப்பாடுகள் மறைக்கப்படாமல், தேவனோடு உறவாடுகிறவர்களுக்கு உடனடியாக தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்

"கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடப்பவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம்: 128:1).

உறுதியான தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் நிறைந்த உரையாடல்:

"பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க்கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீ வெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது" (எரேமியா:6:1)

"ஆகையால், நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றி விடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்" (எரேமியா: 6:11)

"கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?" (எரேமியா: 23:18)

"அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்" (எரேமியா: 23:22)

உறுதியான தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் எரேமியாவிற்கு உண்டாயிருப்பதை மேற்கண்ட வசனங்களில் வாசித்தறிகிறோம். கர்த்தர் பேசும்போது இங்கே இடிமுழக்கங்கள் இல்லை. பூமியதிர்ச்சிகளோ, அக்கினியோ, பெரும் இரைச்சலோ இல்லை. நீதிமான்களின் கூடாரத்தில் கர்த்தருடைய தேவசெயலின் இரகசியம் மட்டுமே உள்ளது.

 "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது..." (சங்கீதம்: 25:14).

எலிப்பாஸிற்கு விளங்காத விஷயம் என்ன?

"... நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதா?" (யோபு: 15:8,9)

"அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்" (1தீமோத்தேயு: 3:16)

யோபு: 19:25-27 - "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே காணும்..." என அறிக்கையிடுகிறார்.

இதுவே அந்த தேவ இரகசியம். இதுவே தேவனுடைய இரகசிய செயல். வாக்களிக்கப்பட்ட மீட்பரைக் குறித்து பழைய ஏற்பாட்டு காலங்களிலேயே யோபு அறிந்து கொண்ட தேவனுடைய இரகசியம் இதுவே. அவனது கூடாரங்களில் மீட்பருடைய மீட்பு இருந்ததை அறிந்தவன் யோபு.

வார்த்தையாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட போகிறார்.  நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழப் போகிறார். கடைசிநாளில் (அதாவது, இரண்டாம் வருகையில்) பூமியின்மேல் நிற்பார் என்பதை கர்த்தருக்கு பயந்து, அவரது கற்பனைகளை கைக்கொண்ட பக்தியுள்ள  யோபுவுக்கு தேவனுடைய இரகசியச் செயல் வெளிப்பட்டிருந்தது.
இந்த புதிய ஏற்பாட்டின் தேவஇரகசியத்தை யோபு அறிந்த அளவிற்கு... பழைய ஏற்பாட்டில் உள்ள பக்தியற்ற எலிப்பாஸ் அறிந்திருக்கவில்லை.  உலக மனிதனுக்கு தேவனுடைய வழிகள் விளங்காது. "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்" (1கொரிந்தியர்: 2:14)

"நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; ... " (1கொரிந்தியர்: 2:10)

யோபு மட்டும் இதை எப்படி அறிந்திருப்பார்?

யோபு ஏதோமியர் தேசத்தில் வாழ்ந்த ஒரு கோத்திரத் தலைவன். ஊத்ஸ் தேசம்தான் பின்னாட்களில் ஏதோம் தேசமாக மாறியது. இன்று இப்பகுதி வடக்கு அரேபியாவில் அமைந்துள்ளது.

யோபும், அவனது சிநேகிதரும் யூதர்கள் அல்ல. யோபு கோத்திரப்பிதாக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ( கி.மு.2000  ஆபிரகாம் காலத்தில்)  வாழ்ந்திருக்கலாம் என வேதபண்டிதர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆதாரம்:  1. யோபு: 1:5 - ம் வசனத்தில் யோபு, தன் குமாரர்களுக்காக சர்வாங்க தகனபலிகளை செலுத்துவான் என வாசிக்கிறோம். பிரதான ஆசாரியன் இல்லாத அந்நாட்களில் கோத்திரப் பிதாக்களே பலிகளை முன்னின்று செலுத்துவார்கள். எனவே, யோபு கோத்திரப்பிதாக்கள் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்தவன்; மட்டுமல்ல, இவனும் ஒரு கோத்திரப்பிதா ஊழியத்தைச் செய்தவன் என வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். (யோபு: 1:3/ 42:12).

ஆதாரம்: 2.  யோபுவின் புஸ்தகத்தில் இஸ்ரவேலரின் வரலாற்றைப் பற்றியோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, யோபுவின் வரலாறு கி.மு. 1500 க்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மோசேக்கு முன்பு கோத்திரப்பிதாக்களின் காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, " பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன்;" (எபிரெயர்: 1:1), யோபுவுக்கும் திருவுளம் பற்றியிருக்கலாம். எப்படி?

ஆபிரகாமின் நாட்களில் ... 

ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதராக இருந்தார். (ஆதியாகமம்: 18:18/ யோவான்: 15:15).

ஆபிரகாம் தன் கூடார வாசலில் இருக்கும்போது, தேவன் அவனுக்கு தரிசனமானார். (ஆதியாகமம்: 18:1)

கர்த்தரோடு வந்த இரண்டு புருஷர்கள் இறங்கிப்போனபோதும்... ஆபிரகாமோ... பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். (ஆதியாகமம்: 18:,22).

கர்த்தர் ஆபிரகாமின் கூடாரத்திற்கு முன்பாக நின்று, தம்முடைய இரகசியச் செயலை ஆபிரகாமுக்கு விவரித்துக் காண்பித்தார். ஏன் விவரிக்க வேண்டும்? தேவன் தன்னுடைய சிநேகிதருக்கு, தம்முடைய திட்டங்கள் எதையும் மறைக்க இயலாது (யோவான்: 15:15/ ஆதியாகமம்: 18:18/ ஆமோஸ்: 3:7) என்பது அவருடைய தேவநீதி.

தன் தாசனாகிய ஆபிரகாமின் கூடாரத்தில் தேவனுடைய இரகசியச்செயல் இருந்ததுபோல, கோத்திரப்பிதாக்களின் காலத்தில் வாழ்ந்த தன் தாசனாகிய யோபுவின் கூடாரத்திலும் தேவனுடைய இரகசியச் செயல் இருந்தது.

ஆபிரகாம், யோபு போல நாமும் தேவனுக்கு சிநேகிதராக மாற வேண்டும். அப்பொழுது தேவனுடைய இரகசியச்செயல் நம் கூடாரங்களிலும் காணப்படும். அப்பொழுது, தேவனது வெளிப்பாடுகள், வேதத்தின் மகத்துவங்கள், பரலோக ராஜ்யத்தின் மேன்மை, தேவனுக்காக நாம் செய்ய வேண்டிய காரியங்கள், தேவசித்தம் அனைத்தும் நமக்கும் வெளிப்படும்.

தேவனுடைய இரகசியச் செயல் இருக்கும்போது வரும் மேன்மை:



"நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது," (யோபு: 29:7)

"எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது. மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்" (யோபு: 29:21-23)

ஒரு தேவபிள்ளையிடம் கர்த்தருடைய இரகசியச் செயல் இருக்குமானால், ஒரு தேவ மனிதரிடம் தேவனுடைய இரகசியச் செயல் இருக்குமானால், கர்த்தருடைய வார்த்தையை இவர்களிடமிருந்து ஜனங்கள் கேட்பதற்கு மிகுந்த ஆவலுடன், தாகமாய் காத்திருப்பார்கள்.

எனவே, தேவனுடைய இரகசியச் செயல் நம்முடைய கூடாரங்களில் காணப்படும்படி, தேவனுக்கு பயந்து, அவரின் கற்பனைகளைக் கைக் கொண்டு, தேவனுக்கு சிநேகிதராக மாற அர்ப்பணிப்போமானால்... ஆபிரகாமின் கூடாரங்களிலும், யோபுவின் கூடாரங்களிலும் காணப்பட்ட தேவனுடைய இரகசியச் செயல் நம்முடைய கூடாரங்களிலும் காணப்படும். தேவனுடைய இரகசியம், வெளிப்பாடுகள் நம்மூலம் வெளிப்பட, நம்மிலே தேவனுடைய கிரியைகள் காணப்பட, நம்மூலமாய் அநேகர் தேவநாமத்தை அறிந்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த அர்ப்பணிப்போம். கர்த்தருடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் காண்போம். பிறரையும் காணச் செய்வோம். அவரது நாமத்தின் மகிமையை பிறருக்கு விவரிப்போம். கர்த்தருடைய நாமம் தேசத்தில், தேசத்தின் குடிகள் நடுவே உயர்த்தப்படட்டும். தேசம் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்பட தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவோம். அல்லேலூயா! ஆமென்!

பிப்ரவரி 18, 2015

என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்


 கடவுளை மறந்துவிடத் தீர்மானித்தார்
பாறைகளால் சூழப்பட்ட கடற்கரை கிராமம் குட்லக். அது, அமொரிக்காவில் நியு ஜெர்ஸி நாட்டில் உள்ளது. 1270 ஆம் ஆண்டில் ஒரு பாய்மரக் கப்பல் அந்தப் பாறைகளில் மோதியது. அநேகர் மாண்டனர். 
உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற ஒரு போதகரும் உண்டு. அவரது மனைவி, மக்கள் யாவரும் மரித்துவிட்டனர். இந்தக் கொடிய துயரத்தை அவரால் தாங்கமுடியவில்லை. தம்மை அநாதையாக்கிய கடவுளை மறந்துவிடத் தீர்மானித்தார். மனித வாசனை அதிகமாக இல்லாத அப்புதிய இடத்தில் வாழ்நாளைக் கழிக்கவும், மனம்போல் வாழவும் தீர்மானித்தார்.
 கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி: "உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உமக்காகவே, இந்த மீன்களைத் தயாராக வைத்திருக்கிறேன்'' என்றான்.
"என்னை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் மரே. 
அதற்குத் தாமஸ் என்ற மனிதன் பதில் சொன்னான்: "ஐயோ, உம்மை அறியேன், ஆயினும் கடவுளைப்பற்றி எங்களுக்கு அறிவிக்க, கடவுள் அனுப்பிய ஊழியன் நீர் என்பதை நிச்சயமாக அறிவேன்'' என்றான்.
"இனிமேல் எந்தப் பிரசங்கமும் செய்ய நான் தயாராக இல்லை'' என்றார் மரே.
தாமஸ் தொடர்ந்து பேசினான்: "நான் ஒரு மாலுமி. எனக்குப் படிக்கத் தெரியாது. என் மனைவி சிறிது படிக்கத் தெரிந்தவள். இருபது ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். என் மனைவி சில வேத வாக்கியங்களைக் கூறுவாள். அதைக் கேட்க, கேட்க, கடவுளைப்பற்றி அதிகமாக அறிய விரும்பினேன். அதோ தெரியும் சின்ன ஆலயத்தை நானே கட்டினேன். அதன் ஊழியக் காரனும் நானே. எனக்கோ ஆண்டவரைப்பற்றி அதிகம் தெரியாது. நிலையாக எங்களோடு தங்கி, கடவுளைப்பற்றி அறிவிக்க ஒருவர் வேண்டும் என்பது எங்களது நீண்ட நாளைய ஜெபம். நேற்றிரவு ஓர் அதிசயக்குரல் கேட்டது: "கப்பற்சேத மூலம் உங்களுக்கு ஒரு போதகரை ஊழியனாக அனுப்பியுள்ளேன்! அந்தக் குரல் கேட்ட நேர முதல் உமக்காகக் காத்திருக்கிறேன். எங்களை விட்டு நீர் எங்கும் போகக்கூடாது'' என்றான் தாமஸ்.
தாமஸின் கதையைக் கேட்ட போதகர் மரே, தெய்வசித்தத்தை உணர்ந்தார். தம் குற்றத்தை அறிக்கையிட்டார். ஊழியப் பணிவிடை செய்தார். அங்கு ஒரு அருமையான சபை எழுந்தது.

நாம் எப்படி வாழ நினைக்கிறேம் என்று சற்றே சிந்தனை செய்! அழைக்கிறார் தேவன்...
"நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்'' (யோபு 16:12).

நன்றி :Paul...  Shalom ministry vellore

பிப்ரவரி 17, 2015

பேசாதவைகளோடு பேச முடியுமா?

Image result for joshua:10:12,13
"பேசாதவைகளோடு பேசு"

யோசுவா: 10:12,13 - "... சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியை சரிக்கட்டும் மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; ..."

'பேசாதவைகளோடு பேசு' - என்பது பேசமாட்டாத விக்ரகங்களோடு பேசு என்பதோ, அதனிடம் உன் மன்றாட்டை சொல் என்பதோ அல்ல.

கர்த்தரின் சித்தம் செய்யும்போது, தடையாகவோ, எதிராகவோ, முன்பாகவோ இருப்பதை தேவசித்தம் நிறைவேறும்படி சாதகமாகும்படி மாற்றிக்கொள்ள அவைகளோடு பேச வேண்டும் அதாவது, அதற்கு 'கட்டளையிடு' என்பதை கூறுகிறது.

கட்டளையிடுபவன் - அதிகாரமுள்ளவன் அல்லது எஜமான் என பொருள்.

உத்திரவு பெறுபவன் - வேலைக்காரன் அல்லது அடிமை என பொருள்.

பேசாதவைகளோடு பேச முடியமா?

ஆம். முடியும்.

அதற்கு கேட்கும் திறன் அல்லது செவி இருக்கிறதா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், விசுவாச வீரர்கள் சொல்வதையெல்லாம் பேசமாட்டாதவைகளும், செவியில்லாதவைகளும், செயல்படாதவைகளும், பார்க்க இயலாதவைகளும், நடக்கமாட்டாதவைகளும் அனைத்தும் கீழ்படியும், செவி கொடுக்கும் என்பதை மாத்திரம் அறிவேன்.

அதற்கு சிந்திக்கும் திறனோ, புரிந்துகொள்ளும் அறிவோ உண்டோ?

இவ்வித ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது. இருப்பினும், விசுவாச வீரன் பேசினாலோ, கட்டளையிட்டாலே, ஜெபித்தாலோ அதற்கு கீழ்படியவும், நிற்கவும், பின்னிட்டு போகவும், தள்ளுண்டு போகவும், இதற்கு மேல் மிஞ்சி வராதிருக்கவும் அதற்கு தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பதை மாத்திரம் அறிவேன்.

பேசாதவைகளோடு பேசினவர்கள் யார்?

* தேவன் - சிருஷ்டிப்பில்... அலைகளைப் பார்த்து ... -  "கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு, இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக் கடவது என்று ..." (யோபு: 38:8,10,11)

* திசைகளிடம் பேசும் ஆண்டவர் - "நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி..." (ஏசாயா: 43:6)

* யோசுவா - எமோரியருக்கு விரோதமான யுத்தத்தில்... - சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டளையிடுதல் (யோசுவா: 10:12,13)

* பேதுரு - மரித்துக் கிடந்த தபீத்தாளின் பிரேதத்தைப் பார்த்து - "தபீத்தாளே எழுந்திரு" என கட்டளையிட்டான். (அப்போஸ்தலர்: 9:40)

ஃ இப்படி வேதத்தில் எத்தனையோ உதாரணங்களை நாம் காணலாம். அதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறேன். வேதத்தை தியானியுங்கள்.

பேசாதவைகளிடம் பேசும் முன் - பேசுகிறவரிடம் பேசி விட வேண்டும்:

  • யோசுவா: 10:12 - "... அந்நாளிலே யோசுவா, கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: "  சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டளையிட்டான்.
  • 2இராஜாக்கள்: 4:33 - எலிசா - மரித்துப்போன பிள்ளையை உயிர்ப்பிக்கும் முன் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
பேசாதவைகளிடம் பேசுகிற அதிகாரம் வல்லமை எனக்கு உண்டா?

ஆம்! உண்டு. இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொண்டு,  இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் இவ்வதிகாரம் உண்டு. அது பரத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

".. வானத்திலும் பு+மியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு: 28:18)

"சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;" லூக்கா: 10:22)

"... நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்..." ஓசியா: 1:10; ரோமர்: 9:26)

ரோமர்: 8:16 - "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்"

"தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர்: 8:32).

"இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களை சேதப்படுத்தமாட்டாது" (லூக்கா: 10:19)

பேசாதவைகளிடம் பேச தேவையானது எது?

"கடுகளவு விசுவாசம்தான்."  வேறென்ன? அசைக்க முடியாத விசுவாசம், அவிசுவாசமில்லாத விசுவாசம், சந்தேமற்ற, அரைகுறையான மனமற்ற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். அதைப் பார்த்து பேச வேண்டும். கட்டளை கொடுக்க வேண்டும்.

"அதற்கு இயேசு: ... கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு: 17:20).

பரலோக அனுமதி கிடைத்து விட்டது. பிறகென்ன?! தாமதமில்லாமல் கட்டளையிட வேண்டியவைகளுக்கு கட்டளையையும், உத்தரவு இட வேண்டியவைகளுக்கு உத்தரவும் கொடுங்கள்.

"வியாதிகளை குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்" (மாற்கு: 3:15)

கட்டளையிடுவதற்கு முன்பு தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று கர்த்தருடைய பிள்ளையாக வேண்டியது மிக அவசியம். இரட்சிப்பு, விசுவாசம் இவையிரண்டும் பரத்திலிருந்து நமக்கு வல்லமையை கொடுத்து, பேசாதவைகளிடம் பேசுகிற வல்லமையை கொடுக்கும்.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. அதாவது, பேசாதவைகளிடம் பேசுகிறேன் என தேவையில்லாமலும், நியாயமான காரணமில்லாமலும், எவ்வித அவசியமில்லாமலும், சுய விளம்பரத்திற்காக, தேவசித்தமில்லாமல் வீணாக சென்று வீணிலே பேசக்கூடாது, வீணிலே கட்டளையிடக் கூடாது, வீணிலே உத்தரவு இடக்கூடாது  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேசாதவைகளோடு நாம் ஏன் பேச வேண்டும்?

உலக வாழ்வில் வெற்றி பெற,  வாழ்வை சுகமாய் அனுபவிக்க, சத்துருவை முறியடிக்க, தடைகளை நிர்மூலமாக்க பேசாதவைகளோடு பேசித்தான் ஆக வேண்டும். பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டியவையிடம் பேசினால்தான் பெற வேண்டியதை பெறவும், அகற்ற வேண்டியதை அகற்றவும், நிலைநிறுத்த வேண்டியதை நிலைநிறுத்தவும் முடியும்.

பேச வேண்டிய நேரத்தில் ...

நீங்கள் பேசாததினால் - பேசாதது பேசுகிறவனிடம் கீழ்படிந்து போகிறது.

நீங்கள் பேசாததினால் - பேசாதவைகள் உங்களுக்கு எதிராக நிற்கிறது.

நீங்கள் பேசாததினால் - பேசாதது பேசாமல் அமைதி காக்கிறது.

நீங்கள் பேசாததினால் - பேசாதது உங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறது.

நீங்கள் பேசாததினால் - பேசாதது அடங்க மறுக்கிறது.

பேசாதவைகளிடம் பேசு... அதாவது "கட்டளையிடு"  "உத்தரவு கொடு"

"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது" (நீதிமொழிகள்: 18:21)


நிலம் வாங்க முயற்சிப்போம்... முடியாமற் போகும்.  வீடுகட்டுவோம். ஏனோ தெரியாது... பாதியிலேயே நின்று விடும். காரணம் புரியாது. தொழிலில் நஷ்டம் தொடர்ந்து வரும்.  இழப்புகள் வரும்... ஆனால், ஒன்றும் விளங்காது. அடிக்கடி சுகவீனங்கள், பெலவீனங்கள் குடும்பத்தில் வந்து கொண்டேயிருக்கும். சோர்ந்து போவோம். அது மட்டும்தான் நம்மால் முடியும் என்ற நிலை. என்ன செய்வது? திரும்பிய பக்கமெல்லாம் இருளான நிலைமை!?

எல்லாம் நன்றாகத்தான் செய்கிறேன்... ஆனாலும், நஷ்டங்களை இழப்புகளை தவிர்க்க இயலவில்லை. அது என்னை பின் தொடருகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் மீதம் இல்லை. வருவதுபோல் தெரிகிறது... ஆனால், எங்கே போகிறது என தெரியவில்லை... ஒரு குழப்பம்... தீர்வு இல்லையா? உதவுவோர் இல்லையா?  இரவெல்லாம் கண்ணீர்... குடும்பத்தில் சமாதானமில்லை.... ஒரே வழி... ஒன்று எங்கேயாவது ஓடி விடுவது... இல்லை... தற்கொலை...

அருமை நண்பா! சோர்ந்து போகாதே... உனக்கு மாற்று வழியை அதாவது புது வாழ்வை இயேசு தருகிறார். இயேசு தரும் இரட்சிப்பை பெற்றுக் கொள். அவரை விசுவாசி. அவரிடம் ஜெபம் பண்ணு. பின்பு பேசாதவைகளிடம் பேசு. அது உனக்கு கீழ்படியும்.


  • உன் ஆசீர்வாதங்களுக்கு தடையாக நிற்கும் எதுவானாலும் சரி... அதைப் பார்த்து கட்டளையிடு
  • உன் நலிவடைந்து கொண்டிருக்கும் தொழில், வியாபாரத்தைப் பார்த்து கட்டளையிடு
  • நின்று போன உன் வீட்டு கட்டிட வேலையைப் பார்த்து கட்டளையிடு
  • வந்து வந்து, பார்த்து பார்த்து தடையாகிப்போன திருமண வரன் நிலைநிற்க ஜெபத்தில் அதை நினைத்து கட்டளையிடு
  • உன் குடும்பத்தை அடிக்கடி பெலவீனப்படுத்துபவைகளை பார்த்து உத்திரவு இடு
  • திசைகளைப் பார்த்து கட்டளையிடு; நாலா திசைகளிலிருந்தும் சபைக்கு ஆத்துமாக்கள் வரும்படி உத்தரவு இடு 
  • வறண்டு போய் இருக்கும் பொருளாதார பொக்கிஷசாலை மற்றும் பண்டக சாலை நிரம்பி  வழியும்படி கட்டளையிடு
  • எதிரான சத்துருக்களின் சதியாலோசனை அபத்தமாகும்படி ஜெபத்திலே உத்திரவு கொடு
  • தற்கொலை எண்ணங்களை கொண்டு வரும் சாத்தானின் துர்ஆலோசனை விலகும்படி ஆணையிடு

"உத்திரவு கொடு - கட்டளையிடு - ஆணையிடு"  

நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, கழுவப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்ட  கர்த்தருடைய பிள்ளைகள். பரத்திலிருந்து தேவ அதிகாரம் பெற்ற பிள்ளைகள். எனவே, தேவன் தந்த பரலோக அதிகாரத்தை பயன்படுத்து!

அதிகாரத்தைப் பயன்படுத்தும் முன்பு, குறைந்தது ஆண்டவரிடம் ஒருமணி நேரமாவது ஜெபத்தில் பேசிவிடு! விசுவாசமாயிரு! இரட்சிப்பில் நிலைத்திரு! வேதத்தை வாசித்து வசனத்தைக் கைக்கொள்! வசனத்தின்மேல் நம்பிக்கையாயிரு! வாழ்வில் ஜெயம்பெறுவாய்! அல்லேலூயா! ஆமென்!

அடைக்கலப்பட்டணம்


அடைக்கலப்பட்டணம்

அடைக்கலப்பட்டணங்களின் மொத்த எண்ணிக்கை: 48. 

அடைக்கலப்பட்டணம் என்றால் என்ன?

பழைய ஏற்பாட்டு நாட்களில் அறியாமல், கைப்பிசகாய் கொலை செய்தவன் தப்பி ஓடிப்போகிறதற்கு அல்லது தப்பி பிழைப்பதற்கு தேவனால் கொடுக்கப்பட்ட இரக்கத்தின் பட்டணமே அடைக்கலப்பட்டணம் ஆகும். மோசேயின் மூலமாக தேவனால் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை இது. (எண்ணாகமம்: 35:6)

"கொலைசெய்தவன் நியாய சபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது" (எண்ணாகமம்: 35:12)

யாரெல்லாம் இந்த அடைக்கலப்பட்டணங்களில் போய் தப்பிப் பிழைக்கலாம்?

* "கைப்பிசகாய் ஒருவனை கொன்று போட்டவன்" - (எண்ணாகமம்: 35:11)

*  "தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்" - (உபாகமம்: 19:4)

* "ஒருவன் விறகு வெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடாரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்து போனால்" (உபாகமம்: 19:5)

* பகையொன்றும் இல்லாமல், சடுதியில் தள்ளி விட்டு கொலை செய்தால் (எண்ணாகமம்: 35: 22)

* பதுங்கியிராமல், யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினால் அவன் மரித்துப் போனால் (எண்ணாகமம்: 35:22)

* அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்று போடத்தக்க ஒரு கல்லினால் அவனைக் காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால், (எண்ணாகமம்: 35:23)

எவ்வளவு காலம் அடைக்கலப்பட்டணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழலாம்? (யோசுவா: 20:1-6)

* " ... பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்" (எண்ணாகமம்: 35:25)

* கொலை செய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப்பட்டணத்திலிருக்க வேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்த பின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்" (எண்ணாகமம்: 35:28).

சில நிபந்தனைகள்:

* "ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு  வெளியே கண்டுபிடித்துக் கொன்று போட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை" (எண்ணாகமம்: 35:26,27)

*  " தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பி வரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது". (எண்ணாகமம்: 35:32)

* அநியாயமாய் கொலைசெய்யும் கொலை பாதகருக்கு அடைக்கலப்பட்டண்த்தில் இடமில்லை. அப்படி ஓடிப்போயிருந்தாலும் அழைத்து வந்து அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம். (எண்ணாகமம்: 35:16-21, 31)


அடைக்கலப்பட்டணங்களின் தொகுப்பு: விபரம்: (யோசுவா: 21 அதிகாரம்)

1. யூதாவின் மலை தேசத்தில் எபிரோன் பட்டணம் (யோசுவா: 21:11)

2. எப்பிராயீமின் சீகேம்  (யோசுவா: 21:21)

3. மனாசே - பாசான், கோலான் (யோசுவா: 21:25)

4. நப்தலி கலிலிலேயாவிலுள்ள கேதாஸ் (யோசுவா: 21:32)

5. காத் கோத்திரம் கீலேயாத்திலுள்ள ராமோத் (யோசுவா: 21:33)

6. ரூபன் கோத்திரம் எரிகோவில் யோர்தான் அக்கரையில் பேசேரை (யோசுவா: 21:36)


லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்கள்

1. எபிரோனையும், அதை சூழ்ந்த  வெளி நிலங்களும் லிப்ருவையும், யாத்தீரையும், எஸ்தெமொவாவையும், ஏலோன், தெபீர், ஆயின்யுத்தா, பெத்ஷிமே  -  (9 பட்டணங்கள்)

2. கிபியோன் மற்றும் கோபாவும் வெளிநிலங்களும் ஆனதோத், அல்மோன், பென்யமீன் கோத்திரம் - (4 பட்டணங்கள்) 

3. சீகேம், கேசேன், கிப்சாயீம், பெத்ரோன், எப்பிராயீம் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

4. எல்தெக்கே கிபெத்தான் ஆயலோன் காத்தி ரிம்மோன் - தாண் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

5. தானாகை, காத்ரிமோன் - மனாசே கோத்திரம் - (2 பட்டணங்கள்)

6. பாசாணி கோலானையும் பெயத்திரா - மனாசேயின் பாதிக் கோத்திரம் - (2 பட்டணங்கள்)

7. கீசோன் தாபார், யர்முத், என்கன்னிம் - இசக்கார் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

8. மிஷயால், அப்தோன், எல்காத் ரோகாப் - இசக்கார் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

9. கோதேஸ், அம்மோத், கர்தான் - நப்தலி கோத்திரம் - (3 பட்டணங்கள்)

10. யொக்னியா, கர்தா, திம்னா, நகலாலை - செபுலோன் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

11. பேசேர், யாகசா, கெதேமோத், மெபாகாத் - ரூபன் கோத்திரம் - 4 பட்டணங்கள்)

12. ராமோத், மக்னாயீ, எஸ்போன், யாசேர் - காத் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

ஃ மொத்தம் அடைக்கலப்பட்டணங்கள் : 48

இப்புதிய ஏற்பாட்டில் மேலே கண்ட அறியாமல், தெரியாமல் கைபிசகாய் நேரிட்ட பாவங்கள் மட்டுமல்ல... மனிதனுடைய சகல பாவங்களையும் மன்னித்து சுத்திகரிக்க அடைக்கலப்பட்டணமாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார். "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" (1யோவான்: 1:7) 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து டஎல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான்: 1:9).

  நினைவுச்சின்னங்களாக உள்ள அடைக்கலப்பட்டணங்களின் படங்கள்:



என்றென்றும் அடைக்கலமும் அடைக்கலப்பட்டணமுமாயிருப்பவர் நம்   கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒருவர் மாத்திரமே