செப்டம்பர் 27, 2014

ஏனிந்த தனிமையின் அனுபவம்?


ஒரு கருவி பயன்பட வேண்டுமானால் அதற்கு முன்பு அது ஒரு பொருளாக கருவியாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அதுபோல நாமும் தேவனால் பயன்படுத்தப்பட வேண்டுமானால் கர்த்தரால் உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியம். ஆமென்! அல்லேலூயா!

ஏசாயா: 43:1 - "இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:..."  - தேவன் யாக்கோபை சிருஷ்டித்தார். ஆனால், அவன் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற தகுதியற்றவனாகக் காணப்பட்டான். எனவே, தேவன் அவனை உருவாக்க விரும்பினார்.  

புமிக்கடியில் கிடைக்கும் கனிம வளங்கள் அனைத்தும் நாம் விரும்பும் வகையில் உடனடியாக நமக்குக் கிடைப்பதில்லை. தங்கம், வைரம், ரத்தினம் ஆகிய எதுவானாலும் அதன் சுத்திகரிப்புக்குப் பின்னர் தான் பட்டை தீட்டிய பின்பு பயன்பாட்டிற்கு வருகிறது. 

அதுபோல, தேவனால் பயன்படுத்தப்படப்போகிற எவராயிருந்தாலும், தேவனால் உருவாக்கப்பட்டப் பின்பே கர்த்தருடைய வேலைக்கும், அவரின் ஆசீர்வாதங்களுக்கும் தகுதி பெறுகின்றனர்.

கர்த்தர் தம்முடையவர்களை  மூன்றுவிதங்களில் புடமிட்டு உருவாக்க விரும்புகிறார்.   எப்படி என்பதைப் பற்றி இப்பகுதியில் தியானிப்போம்.

1. தனிமையின் அனுபவம்:

கர்த்தரால் உருவாக்கப்பட முதலில் தேவன் நம்மை தனிமையின் அனுபவத்திற்கு கொண்டு செல்கிறார். தனிமையின் அனுபவம் மிக அவசியமானது.இவ்வித தனிமையில்தான் தேவநடத்துதலை நாம் தெளிவாக பெற இயலும்.


ஆதியாகமம்: 28:10,11 - யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு  ஆரானுக்குப் போகப் பிரயாணம் பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான்" என்று வாசிக்கிறோம்.

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தை ஏமாற்றியதாலும், தகப்பனுடைய ஆசீர்வாதத்ததை பெறுவதற்கு ஏசாவைப்போல வேடந்தரித்து வந்து, தகப்பனாகிய ஈசாக்கிடம் பிதாக்களின் ஆசீர்வாதத்தை பெற்றதாலும் கோபங்கொண்ட ஏசா, யாக்கோபை பழிவாங்க சமயம் பார்ப்பதை அறிந்த ஈசாக்கும், ரெபேக்காளும் அவன் கைக்கு தப்புவிக்க, பதான் ஆராமிலிருக்கிற தன் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததை வேதத்தில் வாசிக்கிறோம்.

**யாக்கோபு பெற்றோரை விட்டு தனித்து விடப்பட்டான். பதான் ஆராமிற்கு தனித்து போகவேண்'டும். அதுவும் இளவயதில். ஒரு மைல், இரண்டு மைல் அல்ல. நூற்றுக்கணக்கான மைல்கள் வனாந்திர வழியாய் பிரயாணம் பண்ண வேண்டும். பாதை மாறி, திசை மாறி போய் விடக் கூடாது. காட்டு மிருகங்களுக்கு இரையாகி விடக்கூடாது. கள்ளர் கையில் அகப்படக் கூடாது. இயற்கை சேதங்களுக்கு சிக்கி சின்னபின்னமாகி விடக்கூடாது. எதிரிகள் கையில் சிக்கி அடிமையாகி விடக்கூடாது. ஏசாவின் கைகளில் சிக்கி மரணமடையக்கூடாது. நடுவழியில் நோய்வாய் படக் கூடாது. முழுசாக ஊர்போய்ச் சேர வேண்டும். முடியுமா?!

முடியும். எப்படி? "அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே" என்று எபிரெயர்: 4:23 ல் வாசிக்கிறோம். இதுபோன்று யாக்கோபு தன் தேவன்மேல் நம்பிக்கையுடையவனாக தன் பிரயாணத்தில் தொடர்ந்து வெற்றி கண்டான்.

அறியாத தேசத்திற்கு பட்டணத்திற்கு ஊருக்கு தனிமையில் விடப்பட்டான். தனிமைதான் நமக்கு பல்வேறு அனுபவங்களுக்கு வழி நடத்தும் ஆசான். புதுபுது சிந்னைகள், புதிய தரிசனங்கள், தேவனோடு நெருங்கிச் சேரும் அனுபவம், கர்த்தருடைய சித்தம் உணர்ந்து கீழ்படியும் அனுபவம் இதெல்லாம் குழுவாக இருக்கும்போது கிடைக்காது.

**சங்கீதம்: 25:16 - "...நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்" என்றான் தாவீது. சவுலுக்கு பயந்த தாவீது வனாந்திரத்தில் தேவனால் உருவாக்கப்படும்படி தனித்து விடப்பட்டான்.

**வெளிப்படுத்தல்: 1:9 - அப்போஸ்தலனாகிய யோவான்  தேவதரிசனங்கள் கடைசிகால வெளிப்படுத்தல்களை பெற்றுக் கொள்ள பத்மு என்னும் தீவில் தனித்து விடப்பட்டான் என வேதத்தில் வாசிக்கிறோம்.

தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளையும் தன் குடும்பத்தை விட்டு, நேசிக்கப்படுகிறவர்களை விட்டு, நண்பர்கள், உறவுகளை விட்டு வெகுதூரம்  கர்த்தரால் தனித்து விடப்படுவதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அருமையான தேவஜனமே!  இன்று நீ வெகுதூரம் உன் குடும்பத்தை விட்டு ஏதோ ஒரு காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு வேறுபிரிக்கப்பட்டிருக்கலாம் கவலைப்பட வேண்டாம். ஏதோ ஒரு தேவநோக்கத்திற்காக அவ்விதம் உனக்கு நேரிட்டிருக்கலாம். தேவசித்தம், தேவநோக்கம் இல்லாமல் நம்வாழ்வில் எதுவும் நடந்துவிடுவதில்லை. நம்வாழ்வு தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு வாழ்வு என்றால் நிச்சயம் நம் தனிமை ஒரு தேவ நோக்கம் நிறைவேறவே இதெல்லாம் நடக்கிறது என விசுவாசியுங்கள். தனிமை எப்போதும் நிரந்தரமாக நீண்டகாலங்கள் நீடித்திருப்பதில்லை. நிச்சயம் முடிவு உண்டு. முடிவில் மேன்மையைக் காண்பீர்கள். அதுவரை தேவசித்தம் நிறைவேற பொறுமையோடு காத்திருங்கள்.

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" (நீதிமொழிகள்: 13:12).

நாம் ஆராதிக்கும் தேவனாகிய இயேசுவும் தனிமையில் விடப்பட்டவர்தான். உங்களின் தனிமையை நிச்சயம் மாற்றுவார். தனிமை என்பது நாம் அவரால் உருவாக்கப்படுவதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட காலமே. உருவாக்கப்பட்டதும் தனிமைப்படுத்தினவரே வெளியெ கொண்டு வருவார். கன்மலையின் மேல் நிறுத்துவார்.

2. விரும்பாத அனுபவம்:

ஆதியாகமம்: 29:25 - "காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர் என்றான்".

**யாக்கோபு  விரும்பியது அவனுக்கு கிடைக்கவில்லை.

நம்மை உருவாக்க தேவன் நமக்குப் பிரியமான வழியில் அல்ல; தமக்குப் பிரியமான வழியில் நடத்துகிறார்.
  • விரும்பினது கிடைக்கவில்லையா? கிடைத்ததை விரும்புங்கள். 
  • கேட்டது கிடைக்கவில்லையா? கொடுத்ததை பெற்றுக் கொள்ளுங்கள். 
  • தேடியது கிடைக்கவில்லையா? கிடைத்ததை பயன்படுத்துங்கள்
எதையும் மகிழ்ச்சியோடு பெறவும், ஏற்றுக் கொள்ளவும் ஆயத்தமாயிருங்கள்.

1சாமுவேல்: 18:19 - "சவுலின் குமாரத்தியாகிய மோராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்" என்று வாசிக்கிறோம்.

**தாவீதுக்கும் அவன் விரும்பியது கிடைக்கவில்லை.

** யோசேப்பு விரும்பாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டான். யோசேப்பு விருப்பமும் நிறைவேறவில்லை.

எனக்கருமையான தேவஜனமே!  இந்நாளில் நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்காமல் கைநழுவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். தந்திரமாகவோ அல்லது நயமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ பிடுங்கப்பட்டிருக்கலாம். அதற்காக வருந்த வேண்டாம். அதை தேவசித்தம் என கருதி ஆறுதல் அடையுங்கள். நீங்கள் இழந்ததைப் பார்க்கிலும் மிகச் சிறப்பானதை பின்னாட்களில் பெறப்போகிறீர்கள்.  நீங்கள் இப்பொழுது அடைந்த மனதுக்கம், மனவேதனை அனைத்தும் அப்பொழுது மாறிப்போய் உங்கள் புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறியிருப்பதைக் காண முடியும்.

விரும்பாத இடங்களில், அடையாத துன்பத்தை காரணமின்றி அனுபவித்து வருகிறீர்களா? எனக்கு ஏன் இது நேரிடுகிறது என ஒன்றுமே புரியாத நிலையில் திகைத்துப்போய் கலங்கி நிற்கிறீர்களா? பயப்படாதீர்கள்!

சங்கீதம்: 34:19 - "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" என வேதம் கூறுகிறதே. ஆகவே, கலங்காதீர்கள்.

நம்மை உருவாக்க தேவன் நமக்குப் பிரியமான வழியில் அல்ல; தமக்குப் பிரியமான வழியில் நடத்துகிறார் என்பதை அறியுங்கள்.

3. பகைக்கப்படும் அனுபவம்:

ஆதியாகமம்: 31:2 - "லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்".


யாக்கோபு தன் மாமானார் வீட்டில் சுமார் 20 ஆண்டுகாலம்  கடினமாக உழைப்பு உழைத்தான். பலன் - அவன் மூலம் நன்மையை பெற்றவர்கள் அவனை பகைத்தனர்.

1சாமுவேல்: 18:9-13 - தாவீது சவுலுக்கு நன்மை செய்தான். ஆனால், சவுல், தாவீதை கொலை செய்ய வகை தேடினான்.

நாம் வாழும் உலகமானது - நன்மைக்கு நன்மையல்ல ; நன்மைக்கு தீமைசெய்கிற உலகமாக உள்ளது. இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? மக்கள் தீமையாளர்களாக மாறி விட்டார்களா? அல்ல... சாத்தான் ஜனங்களை தீமை செய்கிறவர்களாக மாற்றியிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். வேதம் கூறுகிறது: 2தீமோத்தேயு: 3:1 - 7 - வரை வாசிக்கும்போது... எந்தளவிற்கு இவ்வுலகம் கொடிதாக மாறியுள்ளது என்பதனை நம்மால் அறிய முடிகிறது.

இப்படிப்பட்ட உலகத்தில் தேவன் தம்முடையவர்களை பகைக்கப்படும் அனுபவத்திற்கு கொண்டு சென்று பக்குவப்பட வைத்து தமது சித்தத்திற்கேற்றவாறு உருவாக்க விரும்புகிறார்.

நீதிமானை எவ்வளவுதான் துன்பப்படுத்த சத்துரு, எதிராளி நினைத்தாலும் அது தேவன் அனுமதிக்கும் காலம் வரைக்கும் மட்டும்தான். பகைக்கப்பட்ட இடத்தில் தேவன் விரும்புகின்ற பக்குவம், முதிர்வு நிலை வந்ததும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வந்து விடும். அதற்கு மேல் அவனால் நம்மேல் ஆதிக்கம் செலுத்த எதிராளிக்கு அதிகாரமில்லை.

தனிமையின் அனுபவம், விரும்பாத அனுபவம், பகைக்கப்படும் அனுபவம் இம்மூன்றும் உங்கள் வாழ்வில் அனுமதிக்கப்பட்டு, கடந்து வந்துள்ளீர்களா? கவலைப்பட வேண்டாம். இவைகளை கடந்துவந்த உங்களுக்கு இனிமேல் உயர்வும், ஆசீர்வாத மேன்மையும் பின்தொடரும். தேவனால் இப்படிப்பட்ட வழிகளில் பண்படுத்தப்பட்ட நீங்கள் உங்கள் விசுவாச வாழ்வில் இனிவரும் சோதனைகள் மற்றும் இனிமேல் சத்துருவினால் வரும் அனைத்துவித போராட்டங்களையும் வெல்ல வலிமை பெற்றுவிட்டீர்கள். ஆவிக்குரிய வாழ்வில் இனி ஜெயமே.

யாக்கோபை எவ்வளவாய் பகைத்தனரோ அவ்வளவாய் அவன் ஆசீர்வாதம் பெருகியது. இஸ்ரவேலர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் பலுகிப் பெருகினார்கள் (யாத்திராகமம்: 2:12) என்று வேதம் கூறுகிறது.

பகைக்கப்படுகின்ற இடத்தில் பலுகிப்  பெருகி பெருக்கமடைகிற ஆசீர்வாதம்தான் தேவன் தம்முடையவர்களுக்கு கொடுக்கும் மாபெரும் ஆசீர்வாதம் - என்பதை அறிந்து, சத்தமாக ஆண்டவருக்கு ஒரு அல்லேலூயா சொல்லுங்கள்.

தாவீதை சவுல் பகைக்க பகைக்க அவன் நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள் (2சாமுவேல்: 3:1) என்று வேதம் கூறுவதை கவனியுங்கள். கர்த்தருடைய பிள்ளையே... நீ பகைக்கப்படும் அனுபவத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாயா? கலங்காதே. கர்த்தர்மேல் விசுவாசமாயிரு. மேற்கண்ட மூன்று அனுபவங்களும் உன்னை மேன்மைப்படுத்தி, பலப்படுத்தி, உயர்த்திடவே என்பதை மறந்துபோகாதே.