செப்டம்பர் 03, 2014

அளவில்லா ஆவியைப் பெற்றவர்


யோவான்: 3:34 - "தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்."

நாம் ஆராதிக்கிற தேவன், யாருக்கு எதை கொடுத்தாலும் - "அளவில்லாமல் கொடுக்கிற தேவன்" என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆனால், நம்நாட்டுப் பழமொழியோ - "ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு" என்றும், "தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்" என்றும், கொடுப்பதற்கு என்று ஒரு அளவுகோலை நியமித்தும், 'சுயநலத்தோடுதான் கொடுக்கிற குணம் இருக்க வேண்டும்' என்றும் சொல்கிறது.

நம்தேவனோ... அமுக்கிக் குலுக்கி சரிந்து விழுமட்டும் மடியிலே போடுகிற தேவனாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தம்மிடம் வருவோரை 'இன்று போய் நாளை வா' என கூறாமல், "என்னிடம் வருகிற ஒருவனையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்கிற தேவன் நமக்கு உண்டு.

பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றும்படி குமாரனாகிய இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டார். கிறிஸ்து என்பதற்கு கிரேக்க மொழியில் 'கிறிஸ்டோ' என அழைக்கப்படுகிறது. அதற்கு 'அபிஷேகிக்கப்பட்டவர்' என்று பொருள். குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டவர். அவரை அனுப்பின பிதாவாகிய தேவனால் அளவில்லாமல் ஆவியினால் நிரப்பப்பட்டு அனுப்பப்பட்டவர்.

'அளவில்லாமல்' என்ற சொல்லிற்கு பொருள் - "குறைவில்லாமல்" அல்லது "முழுமையானது" அல்லது  "பூரணமானது" என்று சொல்லலாம்.

இயேசு கிறிஸ்து பரிசுத்தாவியின் நிறைவைப் பெற்றிருந்தார். இதைக்குறித்து முன்னுரைத்த தீர்க்கன் ஏசாயா கூறும்போது, "ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்" (ஏசாயா: 11:2) என சொல்கிறார்.

      

வெளிப்படுத்தல்: 3:1 ; 4:5 - தேவனுடைய ஏழு ஆவிகள் ஏசாயா: 11:1,2 ல் உள்ள ஏழு ஆவிகள் ஒப்பிட்டுப்பாருங்கள்.

ஏசாயா: 61:1 - "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிஷேசத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்"

பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றும்படி குமாரனாகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாக ஆவியினால் பரிபூரணமாய் நிரப்பப்பட்டு அனுப்பப்படுவார் என ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைப்பதை காண்கிறோம்.

கிறிஸ்துவின் வாழ்வில் அளவில்லா ஆவியின் நிறைவு

1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் பரிசுத்தாவியின் நிறைவு:

லூக்கா: 1:35 - "தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்"

மத்தேயு: 1:18 - "... மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது".

மத்தேயு: 1:21 - "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்".

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது பிறப்பிலேயே பாவமில்லாமல் பரிசுத்தாவியினால் பிறந்ததினால் - முழு மனுக்குலத்திற்கும் அவரால் பாவப்பரிகாரம் செய்ய முடிந்தது என்பதை இதனால் நாம் அறிய முடிகிறது.

2. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்தாவியின் நிறைவு:


மத்தேயு: 3:16 - "இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்".

அவர் பரிசுத்தாவியின் நிறைவை பெற்றதுபோல தமது சபைக்கும் அப்படிப்பட்ட பரிசுத்தாவியின் நிறைவை இன்றும் கொடுக்கிறார். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் நாற்பது நாளளவும் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகி, " அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்".

சபைக்கு பரிசுத்தாவியின் அபிஷேகத்தை இயேசு கிறிஸ்து பொழிந்தருளுவதை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம்.

அப்: 2:33 - "அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்தாவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்"

அப்:  2:38 - "பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்".

அப்: 2:39 - "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது..."

3. இயேசு கிறிஸ்துவின் சோதனையில் பரிசுத்தாவியின் நிறைவு:


லூக்கா: 4:1 - 13 - வரை இயேசு கிறிஸ்துவை சோதனைக்காரன் சோதிப்பதை வாசிக்கிறோம். ஆண்டவர் இயேசு சாத்தானை பரிசுத்த ஆவியின் நிறைவினால் வேத வசனத்தைக் கொண்டு மேற்கொள்வதை பார்க்கிறோம். பரிசுத்தாவியின் நிறைவு சோதனையை கொண்டுவரும் சாத்தானை விரட்டியடிக்க பெலன் கொடுக்கும்.

4. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் பரிசுத்தாவியின் நிறைவு:

மத்தேயு: 12:28 - "நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே".

லூக்கா: 4:14 - "பின்பு இயேசு, ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார்...".

அப்போஸ்தலர்: 10:38 - "நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்".

இவ்வாறாக... நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் பரிசுத்தாவியின் நிறைவு காணப்படுவதை வேதத்தில் வாசிக்கிறோம்.

5. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பரிசுத்தாவியின் நிறைவு:

ரோமர்: 1:5 - "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும் பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்".

ரோமர்: 8:11 - "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்".

இவ்விதமாக பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தமது அளவற்ற ஆவியினால் நிரப்பியுள்ளதை அறிய முடிகிறது.

யோவான்: 1:16 - "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்" என்று வேதம் கூறுகிறது. அதாவது இயேசு கிறிஸ்துவானவர், பரிசுத்த ஆவியின் நிறைவில் பரிபூரணமடைந்திருப்பதினால், அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்ட நமக்கு ஆவியின் பரிபூரணத்தை அவர் மூலம் நாமும் முழுமையாக பெறுகிறோம்.

பரிசுத்தாவியானவர் நம்மிடம் வரும்போதுதான் அல்லது பெறும்போதுதான் நாம் பரிபூரணம் அடைகிறோம். பரிசுத்தாவி இல்லாமல் நாம் பரிபூரணம் பெற இயலாது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை பரிசுத்த ஆவியின் நிறைவு காணப்பட்டது போன்று, நம் வாழ்விலும் ஆவியின் அளவற்ற நிறைவை வாஞ்சித்து பெற்று வருகையில் எடுத்துக் கொள்ளப்பட  நம்மை தகுதிபடுத்திக் கொள்வோம். 

ஆவியில் அனலாயிருப்போம். பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருப்போம். பரிசுத்த ஆவியை இதுவரை அறியாதவர்கள் அறிய ஆர்வமெடுப்போம். அறிந்தவர்கள் அந்நிய பாஷை அடையாளத்துடன் பெற்று சாட்சியாக வாழ அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே தமது அளவற்ற ஆவியினால் நம்மை நிரப்பி நித்தமும் வழி நடத்துவாராக. ஆமென். அல்லேலூயா.