செப்டம்பர் 22, 2014

நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்க இருக்க தேவன் விரும்புகிறார்?


நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர்,  தம்முடையவர்கள் தம்மைப்போலவே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.  அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும். அவரது அடிச்சுவடுகளை பின்பற்றி நாமும் நடக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.(1பேதுரு: 2:21).

நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். எனவே, அவர் என்ன சொல்லுகிறாரோ? அல்லது அவர் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ? அதை கேட்கவும், கேட்டு கீழ்படியவும், கீழ்படிந்து அதன்படி செய்யவும், அவரது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். (யோவான்: 2:5). அதுதான் ஒரு உண்மை கிறிஸ்தவனின்  வாழ்க்கை முறையாகும்.

1. 1பேதுரு: 1:16 - "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்..."



முதலாவது, நாம் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தமானவர். அவரில் எவ்வளவேனும் பழுதில்லை. பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணர். பாவத்தை வெறுக்கிற தேவன். பாவியையோ நேசிக்கிறவர். பாவியை பாவத்திலிருந்து விடுவிக்கிறவர். அவரே பரிசுத்தமுள்ள தேவனாகிய கர்த்தர். 

பாவியை மீட்க மனிதனாக வந்த இயேசு சொல்கிறார்: யோவான்: 8:36 - "என்னிடத்தில் பாவமுண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?" என்றார். அக்காலகட்டத்தில் வாழ்ந்த, குற்றம் கண்டு பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த பரிசேயர், சதுசேயர்களால் கூட ஆண்டவர் இயேசுவிடம் எதையும் காண இயலவில்லை.

ஆயிரக்கணக்கான பேரை சிலுவை மரத்திலேற்றிய கவர்னர் பிலாத்து, ஆண்டர் இயேசுவை நியாய விசாரணையில் விசாரித்து பார்த்து " இவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணேன்" என சாட்சி  கொடுத்தான்.(லூக்கா: 23:14,15).

தேவனாக இருக்கின்ற போதும், மனிதனாக வந்த போதும் பாவமற்றவராக, பரிசுத்தராக இருக்கின்ற ஒரே தெய்வம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே.

எபேசியர்: 5:26,27 - சபை பரிசுத்தமாயிருக்க வேண்டும் என விரும்புகிறார்.

1தெசலோனிக்கேயர்: 3:13 - அவர் வரும்போது நாம் பரிசுத்தமாய் காணப்பட வேண்டுமென்று விரும்புகிறார்.

1தெசலோனிக்கேயர்: 4:3 - நாம் பரிசுத்தமாக வேண்டுமென்பதே தேவ சித்தமாயிருக்கிறது என வேதம் கூறுகிறது.

சாத்தான் இன்றைக்கு அநேகரை இதில்தான் அதிகம் சோதிக்கிறான். இரட்சிக்கப்பட்டவனையும் சரி.... இரட்சிக்கப்படாதவனையும்சரி... தினந்தோறும் செய்தி தாள்களில் வாசிக்கும்போது இவ்விஷயத்தில் பாகுபாடின்றி அனைவரையும் பிசாசு இதிலே விழத்தள்ளுகிறதை காண முடிகிறது. இதிலே ஊழியர்களும் விதிவிலக்கல்ல.

எனவே, நம்மிடம் பாவம் அணுகாதபடி அணுதின வாழ்வில் நம்மைக் காத்துக் கொள்வதில் கவனம் அவசியம்.

இரகசிய பாவம், மறைவான பாவம், பகிரங்க பாவம், துணிகர பாவம் என்று எந்த பெயரிலும் பாவம் அணுகாது காத்துக் கொள்வதில் ஒரு விழிப்புணர்வு நமக்கு மிக அவசியம். சில சமயங்களில்... இதெல்லாம் பாவமில்லை... இதெல்லாம் நடைமுறையில் இருப்பதுதானே... என பாவத்தோடு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எதிராளியாகிய சாத்தான் நம்மை விட புத்திசாலி என்பதை அறியுங்கள்.

தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும்போது... அந்நாட்டு கலாச்சாரத்தை மதிக்கிறேன் என கூறி வேதத்திற்கு புறம்பானதை, ஒவ்வாததை சிலவற்றை புசிப்பதும் குடிப்பதும் கூடாது. தாய்நாட்டை விட்டு பாபிலோன் சென்ற தானியேலை நினைத்துக் கொள்ளுங்கள். பாபிலோனிய பழக்க வழக்கங்களுக்கு அவன் அடிமையாகிப் போய் விடவில்லை. (தானியேல்: 1:8).

திரள் கூட்ட மக்கள் ஒரு பாவத்தை செய்யும்போது, அல்லது அநீதியை செய்யும்போது அது தேவநீதியாகி விடாது. நாடு விட்டு நாடு போனாலும், ஊருவிட்டு ஊரு போனாலும் வேதத்தின் சத்தியம், தேவநீதி மாறி விடாது. ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், தீவுக்கு தீவு வேதம் ஒருபோதும் மாறுவதில்லை. சத்தியம் மாறாதது. வசனம் மாறாதது.

இனத்திற்கு தகுந்தார்போலவோ, மக்களுக்கு தகுந்தார்போலவோ, ஆதிவாசிகளுக்கு தகுந்தார்போலவோ வசனமோ சத்தியமோ ஒருபோதும் மாறாது. எனவே, தெய்வபயத்தோடு பரிசுத்தத்தை நிறைவேற்றுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். வருகையில் எடுத்துக் கொள்வார்.

எந்த நாட்டு சட்டப்புத்தகமும், புராணங்களும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எந்த நாட்டில் குடியிருக்கிறோமோ... அந்த நாட்டுச் சட்டத்தை மதிப்பதில் தவறில்லை. சட்டத்தின்படி வாழ வேண்டியது அவசியம். ஆனால், அதேவேளையில் கர்த்தருக்கு விரோதமான சட்டங்களுக்கு உடன்படுவதில் பிரச்சினையுள்ளது என்பதை நினைவில் கொள்க. நியாத்தீர்ப்பின் நாளில்... எந்த நாட்டில் வசித்தோமோ... அந்த நாட்டு சட்டத்தை வைத்து நாம் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. முழு உலகத்திற்கும் நியாயத் தீர்ப்பைக் கொடுக்கிற ஒரே புத்தகம் - "பரிசுத்த வேதாகமம்" மட்டுமே என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. (யோவான்: 12:48; பிரசங்கி: 12:14).

கர்த்தருக்கு விரோதமான சட்டங்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வரத்தான் செய்தது. ஆனால், பரிசுத்தவான்கள் எவரும் அவைகளுக்கு பணிந்ததில்லை என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் எங்கிருப்பினும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருப்பதில் கவனமாயிருக்க வேண்டும்.

எபிரெயர்: 12:14 - "...பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் பரிசுத்தம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறியுங்கள்.


2.  லூக்கா: 6:36 - "ஆகையால், உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்"


இரண்டாவதாக, கர்த்தருடைய பிள்ளைகள் இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.

சங்கீதம்: 145:8 - "கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்" என வேதம் கூறுகிறது.

மத்தேயு: 9:36 - "அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி"

மத்தேயு: 20:34 - "இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்"

மாற்கு: 1:41 - "இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்".

லூக்கா: 7:13 - "கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி".

நமதாண்டவர் இயேசு இரக்கமும் மனவுருக்கமுமுடையவர். அதேபோல நாமும் இரக்கமும் மனதுருக்கமும; உடையவர்களாய் இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார்.

மத்தேயு: 9:13 - "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்..." என்று கூறுகிறார். இப்படி இயேசு கூற காரணம் என்னவாக இருக்கும்?

ஆதாமிலிருந்து இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து, பரிசுத்தாவி பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்தாவியின் அபிஷேகம் ஊற்றப்பட்டு சபை நிறுவப்படுகிறதற்கு முதல் நாள் வரை நடந்த அனைத்து சம்பவங்களும், நிகழ்ச்சிகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு காரியங்கள்தான் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு நடக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுகள் அனைத்தும் புதிய ஏற்பாடு. எனவே, ஆண்டவர் இயேசு வாழ்ந்த உபதேசித்த அக்காலகட்டம் பழைய ஏற்பாட்டு காலம் என்பதை மனதிற் கொண்டு இதை தியானிக்க வேண்டும். அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்ல வரும் சத்தியம்  விளங்கிக்கொள்ள ஏதுவாகும்.

"இரக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்த காரணங்கள்:


பழைய ஏற்பாட்டு கால மக்கள் இருதய கடினமுள்ளவர்கள் என வேதம் பல இடங்களில் கூறுகிறது. ஆண்டவர் இயேசுவும் அதை அவ்வாறே வலியுறுத்துகிறதை காண முடியும். (மத்தேயு: 19:8; மாற்கு: 10:5; 3:5; 16:14). நியாயப்பிரமாணக் கட்டளைகள் கடினமானதாக கொடுக்க காரணமே இஸ்ரவேல் மக்களின் கடினத்தினால்தான் என கருதுகிறேன்.

அநேக வேளைகளில் தேவஜனங்கள் சத்தியத்தை பிடித்துக் கொண்டு - இரக்கத்தை விட்டு விடுகிறார்கள்.  கர்த்தருடைய ஜனத்திற்கு சத்தியத்தை அறிய அறிய வாழ்வில் ஒருவித கடினத்தன்மை வருகிறதை பரவலாக காணலாம். ஆழமாக ஆராய்ந்து இருளுக்குள் போய் விடுகிறார்கள். ஏனெனில், "ஆழத்தின்மேல் இருள் இருந்தது" (ஆதி: 1:2) என்று வேதம் கூறியுள்ளதே.

அ)  தேவனிடம் சேர இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்:

மாற்கு: 7:1-8 - சீஷர்கள் கழுவாத கைகளினால் போஜனம் பண்ணுவதில் குற்றம் கண்டு பிடித்து குற்றம் சாட்டினார்கள். மனுஷருடைய பாரம்பரியத்தை கைக்கொண்டு தேவனுடைய கட்டளையை புறந்தள்ளினார்கள். எனவே, அவர்கள் தேவனுக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள் என்றும், உதடுகளால் கனம் பண்ணி, இருதயத்தால் தேவனுக்கு தூரமாய் விலகிப் போனதை இயேசு கிறிஸ்து அவர்களின் கடினத்தை கடிந்து கொள்கிறதை பார்க்கிறோம்.

மத்தேயு: 26:7 - 13 - பரிமள தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றியதைக் கண்டு விசனப்படுகிற இருதயத்தை கடிந்து கொண்டார். "யானை போகிறது தெரியாதாம்; பூனை போகிறது தான் தெரியுமாம்" என்பது கிராமத்துப் பழமொழி. அதுபோல... விசனப்படுகிறவர்களின் பணத்தால் வாங்கப்பட்டதல்ல இந்த  பரிமள தைலம். இவர்கள் எதற்கு வீணாக பரிதாபப்பட வேண்டும். இவர்களுடைய மனம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? இவர்களுக்கு எந்தவிதத்தில் நஷ்டம் ஏற்பட்டது? அல்லது ஏற்படப்போகிறது?

தங்கள் சுயநலத்திற்காக, ஆடம்பரத்திற்காக, சொகுசிற்காக அணுதினமும் எவ்வளவு  வீண் செலவாகிறது என்பது இப்படிப்பட்டவர்களுக்கு தெரியாது. ஆனால், தேவனுக்கு மற்றும் ஊழியங்களுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு தொகைக்கும் இப்படிப்பட்டவர்கள் சதாகாலமும் வருவோர் போவோரிடம் முறுமுறுத்துக் கொண்டு புலம்பி திரிவார்கள். கர்த்தருக்கு கொடுக்க முன்வர மாட்டார்கள். கொடுத்து தாங்குபவர்களின் ஈகை குணத்தை பார்த்து முறுமுறுப்பார்கள். இக்குணம் எல்லா காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையான ஒன்று.

கர்த்தருடைய ஊழியத்தை சிக்கனமாக செய்தால்தான் என்ன? என்பார்கள். இப்படிப்பட்டவர்களின் விசேஷங்கள் மற்றும் பார்ட்டிகள் கொடுக்கும் போது இவர்களுடைய ஆடம்பர படோடாபங்களைப் பார்க்க வேண்டுமே.... படு அமர்க்களமாக இருக்கும். ஒரு விசேஷத்திற்கு மற்றும் பெயர் பிரஸ்தாபத்திற்காக பல லட்சங்கள் என்ன பல கோடிகளைக்கூட செலவிடுவார்கள். அதில் பல சுவிசேஷ கூட்டங்களை நடத்தி விடலாம். பல சபைகளுக்கு இடங்கள் வாங்கி விடலாம். பல சபைகளை கட்டி கொடுத்து விடலாம் என்கின்ற அளவிற்கு தங்கள் சுயமேன்மைக்கு செலவழித்திருப்பார்கள் என்பதுதான் நிதர்சணமான உண்மை. இதை யாரும் மறுக்க இயலாது.

இதையெல்லாம் விட்டுவிடுவார்கள்... கர்த்தருக்கு ஆகிற செலவுகள் மட்டுமே பிரதானமாக கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட கடினத்தன்மையை நம்மை விட்டு அகற்றப்பட  வேண்டும். கர்த்தரிடம் சேர தகுதிப்பட வேண்டும். தேவனுடைய இராஜ்யம் பேச்சிலல்ல. பெலத்திலே என்பதை உணருங்கள்.

ஆ) வயதான பெற்றோர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்:

மாற்கு: 7:10 - 13 - கொர்பான் காணிக்கையை பற்றி கடிந்து கொள்கிறார். பழைய ஏற்பாட்டு மக்கள் மோசேயின் கட்டளையான தாயும் தகப்பனையும் கனம் பண்ணுகிற விஷயத்தில் பாரம்பரியத்தைப் புகுத்தி மாய்மாலம் பண்ணுகிறதை இயேசு கடிந்து கொண்டதை பார்க்கிறோம்.

அதாவது, வயதான பெற்றோருக்கு  ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் அந்திய காலத்திற்கு ஜீவனாம்ச தொகை போன்று ஒருமுறை டோட்டலாக கொடுத்து (தங்களை விட்டு பிரித்து ஒதுக்கி தனித்து விட்டுவிடுவதற்கு) நாசூக்காக விலகி விடுவதற்கு "கொர்பான்" என்று பெயர். இது அவர்களுடைய இருதய கடினத்தை வெளிப்படுத்துகிறது.

வயதான பெற்றோருக்கு பணம் மட்டுமே அவசியம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் பாசம், அரவணைப்பு, அருகாமை இதைத்தான் விரும்புவார்கள். இதை பிள்ளைகள் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பொருளீட்டும் வேகம், ஆர்வம் அவர்களை பெற்றோரை விட்டு தூரப்படுத்துகிறது. அந்நியப்படுத்தி விடுகிறது. இந்த நிலை அன்றும் சரி... இன்றும் சரி... மாறாத தன்மையோடு இன்றும் தொடருவதுதான் மிக வேதனையான ஒன்று. இதுவே நிதர்சணமான உண்மையுங்கூட. இந்நிலை மாறவும், இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி பெற்றோரின் உணர்வுகளை புரிந்து நடக்கவும், கடினத்தன்மை மாறவும் ஜெபிப்போம்.

இ) மனைவியின்மேல் இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்:

மத்தேயு: 19:8 - மோசே தள்ளிவிடுதலை குறித்து கொடுத்த கட்டளையை பழைய ஏற்பாட்டு தேவஜனங்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களின் இருதயக்கடினத்தினிமித்தம் இவ்வாறு கட்டளை கொடுத்தான் என்று இயேசு கூறுகிறதைக் காண்கிறோம்.

1பேதுரு: 3:7 - "அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களோடு வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்".  மனைவிக்குரிய கனத்தை மட்டும் உண்மையாக உணர்ந்து  கொடுத்துப் பாருங்கள். அதன்பின்பு அவர்கள் நடந்து கொள்ளும் விதமே தனி அலாதிதான். வாழ்க்கை ருசிக்க ஆரம்பித்து விடும். ஆவிக்குரிய வாழ்வும்தான்.

ஏனென்றால், ... "அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள்..." (ஆதியாகமம்: 3:12) என்று கூறுகிறார். ஆம். மனைவியானவள் தேவன் நமக்குத்தந்த நல்லதொரு பரிசு. நம்மோடுகூட இருக்கும்படி தேவனால் கொடுக்கப்பட்ட ஏற்ற துணை - என்பதை விசுவாசியுங்கள்.

குற்றங்குறைகளை மன்னியுங்கள். சகிப்புத்தன்மையோடு விட்டுக் கொடுத்து வாழ பழகுங்கள். வியாதிப்பட்ட நேரத்தில் அனுசரணையாய் இருந்து உதவி செய்யுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களையே நம்பி வந்து உங்களையே சார்ந்திருந்து வாழும் அவளை நேசியுங்கள். இரக்கமாயிருங்கள். என்ன நடந்தாலும், எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் மனம் விட்டுப்பேசி பயனில்லை என்ற நிலை வந்தாலும்கூட, நீங்களே விட்டுக் கொடுத்தாவது சகிப்புத்தன்மையோடு வாழ  முயற்சியுங்கள். கசப்புத்தன்மை, கடினத்தன்மையை உங்களை விட்டு அகற்றிப் போடுங்கள்.  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்.

ஈ) ஏழைகள் மேல் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்: 

நீதிமொழிகள்: 19:17 - "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்"

பழைய ஏற்பாட்டுகாலங்களில் ஏழை எளியவர்கள் பிரபுக்களால், அதிகார வர்க்கத்தினால் ஒடுக்கப்பட்டதை வேதத்தில் வாசிக்கிறோம். அதை பல தீர்க்கதரிசிகளைக் கொண்டு எச்சரித்ததையும், கடிந்து கொண்டதையும் வேதத்தில் வாசிக்கிறோம். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் எளியவர்கள் மேல் அக்கறையின்றி இருப்பதை ஐசுவரியவான் - லாசரு உவமையில் இயேசு கூறுவதை வாசிக்கிறோம். (லூக்கா: 16:19-31). இன்று இந்த நிலை இல்லாமல் இல்லை.

இன்றும் என்றும் ஏழை எளியவர்கள் நலனில் அக்கறையும் கரிசனையும் உள்ள தேவன் நம் ஆராதிக்கும் தேவனாகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே.

உபாகமம்: 15:7-11 - எளியவனுக்கு இருதயத்தை கடினப்படுத்தாதே, என்றும் கொடுப்பதற்கு கையை மூடாதே என்றும், கொடுப்பதற்கு விசனப்படக்கூடாது என்றும் கட்டளை கொடுத்திருக்கிறார்.

உபாகமம்: 24:14,15 - ஒடுக்கக்கூடாது என்றும் பொழுது சாயுமுன்னே கூலியை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

லேவியராகமம்: 23:22 - சிந்திக்கிடக்கிற கதிர்களை பொறுக்காமல் எளியவர்கள் பரதேசிகளுக்கு விட்டுவிட வேண்டும்.

உபாகமம்: 24:19 - பயிரை அறுக்கையில் வயலிலே மறதியாக விட்டு வந்தால் அதை எடுக்க திரும்ப போகாமல், அதை எளியவர்களுக்கு விட்டுவிட வேண்டும்

நீதிமொழிகள்: 14:21 - "... தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்".

2தீமோத்தேயு: 1:9 - அவர் நம்முடைய கிரியைகளின்படி இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகால முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட  கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்". நம்முடைய நல்ல நடக்கையை பார்த்து, அல்லது நம்முடைய நல்ல ஒழுக்கத்தைப் பார்த்து நம்மை இரட்சியாமல் அவர் நம்மேல் வைத்த இரக்கத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று வேதம் கூறுகிறது.

நாம் தேவனிடம் இரக்கத்தை பெற்றுக் கொண்டதைப்போல மற்றவருக்கு நாமும் அதேபோல இரக்கத்தைக் காண்பிக்க கடமைப்பட்டுள்ளோம். இதைத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்லசமாரியன் உவமையில் காண்கிறோம். (லூக்கா: 10:30-37).

ஆண்டவர் இயேசு தன் மலைப்பிரசங்கத்தில் கூறும்போது: "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத்தேயு: 5:7) என்று கூறியபடி இரக்கமுள்ளவர்களாயிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.

உ)  அதையும் இதையும் விடாதிருக்க இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்: 

மத்தேயு: 23:23 - தசமபாகம் செலுத்தி விட்டு, இரக்கத்தை விட்டுவிட்டார்கள் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள். அக்கால பரிசுத்தவான்கள் தசமபாகத்தை உண்மையாக செலுத்தினால் போதும். நாம் நீதிமான்கள் என நினைத்திருந்தனர். ஆனால், இயேசு வந்தபோதோ... அது மட்டும் போதுமானதல்ல. நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டு விட்டார்கள். எனவே, இயேசு அவர்களது அந்த கடினத்தை கடிந்துகொண்டார். "இவைகளையும் செய்ய வேண்டும்; அவைகளையும் விட்டுவிடாதிருக்க வேண்டும்" என்று கூறினார்.

புதிய ஏற்பாட்டுகாலத்தில் வாழும் நாம் தசமபாகம் செலுத்தினால் மட்டும் போதுமானதல்ல. இரக்கத்தை விட்டுவிடக்கூடாது என வலியுறுத்தப்படுகிறோம்.

நாம் ஏன் இரக்கப்பட வேண்டியது அவசியம் என வேதம் வலியுறுத்துகிறது?

"ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்" (யாக்கோபு: 2:13).

"மனுஷனே, நன்மை இன்னதென்று, அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாகமனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா: 6:8)

"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர்: 4:16)

பரிசுத்தமும் இரக்கமும் பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையில் இணைபிரியாதிருப்பதாக.


தேவசமாதானம் உங்களில் நிலைத்திருப்பதாக! ஆமென்! அல்லேலூயா!