செப்டம்பர் 23, 2014

நம்மை விட்டு அகற்ற வேண்டியவைகள்

கலாத்தியர்: 5:19 - "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன..." என வேதம் சொல்கிறது. 

ரோமர்: 8:6 - "மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்"

ரோமர்: 8:8 - "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு பிரியமாயிருக்க மாட்டார்கள்"

ரோமர்: 8:13 - "மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்"

எனவே, மாம்சத்தின் கிரியைகளை நம்மை விட்டு அகற்றுவோம்.  அநேக வேளைகளில் நம்மிடம் உள்ள இத்தகைய சுபாவங்கள் நம்மில் இருப்பதே அறியாமல் அல்லது உணராமல் அல்லது தெரியாமல் அல்லது அது சரியென்றே நினைத்து - இதுவரை வாழ்ந்து வந்திருப்போம். இனி நம்மில் ஆவிக்குரிய மாறுதல்கள் ஏற்பட அர்ப்பணிப்போம்.

உன்னதப்பாட்டு: 2:15 - "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பு+வும் பிஞ்சுமாயிருக்கிறதே" என வேதம் கூறுகிறது. 

நாம் தேவனுடைய தோட்டத்தில் நடப்பட்டவர்கள். நம்மை உள்ளிருந்தே கெடுக்கக்கூடிய இவ்வித மாம்ச சுபாவங்களை நம்மில் வளராதபடி மாம்சத்தின் கிரியைகள் அழிக்கப்பட வேண்டும். 

இதைப்பற்றி நமதாண்டவர் இயேசுகிறிஸ்து கூறும்போது: மாற்கு: 7:20 - 23 - "மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்"

மாம்சத்தின் கிரியைகள் பற்றி வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாம்ச சுபாவத்தை கட்டுப்படுத்த வேண்டி பழைய ஏற்பாட்டில் பல கட்டளைகள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கிறோம். நியாயப்பிரமாணக்கட்டளைகள் எல்லாம் அதற்காகத்தானே எழுதப்பட்டுள்ளது. மாம்சத்தின் கிரியைகள் பட்டியலை வேதத்திலிருந்து தொகுத்து வழங்கியுள்ளேன். அவைகளை ஜெபத்தில் அறிக்கையிட்டு விரட்டியடியுங்கள். பரிசுத்தமாகுதலை நிறைவேற்றுங்கள். உங்கள் நடுவே தேவன் அற்புதங்களை செய்ய வல்லவர். தனிமனித பரிசுத்தமே எழுப்புதலை கொண்டு வரும்.