செப்டம்பர் 20, 2014

ஜெபத்தில் வளர... ஜெபிக்கப்பழக...

ஜெபம் - ஒவ்வொரு  உண்மை கிறிஸ்தவர்களின் தாகம். வாஞ்சை. அடித்தளம்.
கிறிஸ்தவ ஜீவியத்தின் அஸ்திபாரம். வலிமை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அநேக கிறிஸ்தவர்களின் நிலையோ ஜெபத்தில் உறுதியாக இல்லை என்பது கசப்பான உண்மை. 

 ஜெபத்தில் வளர... ஜெபிக்கப்பழக... 

இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே வழி -  முதலில் ஒரு சபைக்கு ஒழுங்காக போக வேண்டும். போகிற சபையில் நிலைத்து  இருக்க வேண்டும். ஸ்தல சபை போதகரிடம் மற்றும் விசுவாசிகளிடம் நல்ல ஐக்கியமாக இருக்க வேண்டும். சபையில் ஆசரிக்கப்படும் அனைத்து ஜெபக்கூட்டங்களிலும் கூடுமானவரை அல்லது சமயமும் வாய்ப்பும் கிடைக்கும்பொழுதெல்லாம் பங்குபெற வேண்டும்.

சபைகளில் நடக்கும் ஒவ்வொரு ஜெபக்கூடுகையும் ஒவ்வொருவித ஆசீர்வாதத்தையும், எழுப்புதலையும் கொண்டு வரச் செய்யும் என்பதை நாம் அறிய வேண்டும்.

சபையில் நடக்கும் ஜெபங்களில் பங்குபெறும்போது...

1. எரிகிற விறகோடு பச்சை விறகும் சேர்ந்தால் பத்திகிட்டு எரியும் - என்று கிராமத்தில் ஒரு பழமொழி  சொல்வார்கள். அதுபோல ஜெபிக்கத் தெரியதவர்கள்... ஜெபிக்க கற்றுக் கொள்ள சபையில் நடக்கும் ஜெபக்கூட்டங்களுக்கு செல்லும்போது ஜெபிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

2. ஜெபத்தை நடத்துகிற போதகர் அல்லது ஜெபக்குழுத் தலைவர்கள் சொல்லும் ஜெபக்குறிப்புகளும் அதற்கேற்ற வேதவசன விளக்கங்களும் ஒப்பீடுகளும், நடைமுறை சாட்சி அனுபவங்களும், உதாரணங்களும் தொடர்ந்து ஜெபத்தில் ஊக்கமடைய நமக்கு உதவியாக இருக்கும். எனவே, நாம் ஜெபக்கூடுகைக்கு போகும்பொழுதெல்லாம் கூடவே, ஒரு குறிப்பேடும் பேனாவும் கொண்டு சென்று குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.

3. ஜெபத்தில் நம்மேல் தேவமகிமை இறங்குவதை தேவபிரசன்னத்தை நாம் உணரலாம். ஜெபநேரத்தில் அநேகர் விடுதலையும், சுகமும் பெறுவதை பார்க்க முடியும். அற்புதங்களை பெற்றவர்கள் ஞாயிறு ஆராதனைகளில் சாட்சிபகருவதை நாம் பார்க்கிறோமே! இப்படி அநேகம் நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

4. நாம் எதற்கெல்லாம் எப்படியெல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வோம். அநேக ஜெபக்குறிப்புகள் நமக்கு கிடைக்கும். ஜெபபாரம் அடைவோம். எழுப்புதல் உண்டாகும். சோர்வு நீங்கி உற்சாகமடைவோம்.

5. ஜெபத்தினால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பட்டியலிட்டால் இந்த பதிவு போதாது. எனவே, நாம் இதை கடந்து செல்வோம்.

 நம் வாழ்வில் ஜெபம் இல்லாவிட்டால்...

1. ஜெபமில்லாமை ஒரு மோசமான பாவம். அது ஒரு பேரழிவு.

2. ஜெபமில்லாமை வேறுபல பாவங்கள் செய்ய வழி திறக்கும். பின்மாற்றத்திற்கு  வழிவகுக்கும்.

3. ஜெபமில்லாமை தேவசித்தத்தை அறிய முடியாமல் தவிக்கும். தேவசித்தத்தை செய்ய மறுக்கும்.

4. ஜெபமில்லாமை தரிசனத்தை இழந்து போகச் செய்யும். 

5. ஜெபமில்லாமை நோக்கத்தை சிதறடிக்கும்.

6. ஜெபமில்லாமை தேவபெலனை நம்மில் அற்றுப்போகச் செய்யும்.

7. ஜெபமில்லாமை தேவ ஒத்தாசையை தடுத்து விடும்.

8. ஜெபமில்லாமை நம்மை சோதனையில் விழச் செய்து விடும்.

9. ஜெபமில்லாமை மாம்சீகமான வார்த்தைகளை கொண்டு வரும்.

10. ஜெபமில்லாமை விசுவாசத்தை அழித்து அவநம்பிக்கையை தோற்றுவிக்கும்.

இப்படிப்பட்ட நிலையை நாம் தவிர்க்க நம்மை நாம் தற் பரிசோதனை செய்து பார்த்து, ஜெபத்தில் நாம் வளர நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 

மூன்று மாதத்திற்கொருமுறை நம்மைநாம் தற்பரிசோதனை செய்து பார்த்து கொள்வது - நம்மை ஜெபத்தில் மேம்படுத்திக் கொள்ள உதவி செய்யும். மேலும் தேவ ஆலோசனைகளுக்கு போதகரிடம் தொடர்பு கொண்டு அல்லது தனித்து தேவ ஆலோசனை பெறுவது உசிதமானது.

கீழே வரும் அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து தற்பரிசோதனை செய்து பார்க்கலாம்