செப்டம்பர் 03, 2014

சுதந்தரித்துக் கொள்ள வேண்டியதோ... இன்னும் "மகா விஸ்தாரமாயிருக்கிறது"

ஊழியர்களுக்கான தேவ செய்தி - 1


யோசுவா: 13:1 - "யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயது சென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக் கொள்ள வேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது".

ஒரு சுவிசேஷகரின் கருத்து: "போதகர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியதை செய்யாததால்... ஜனங்கள் எங்களைத் தேடி வருகிறார்கள்".

ஒரு சபை மூப்பரின் கருத்து: "பாஸ்டர்.சுந்தரம் அவர்களிடம் இருக்கிற வல்லமையை கண்டு, எங்களை போன்றோர் அவரை நாடிச் சென்றோம்".

எனவே, ஒரு போதகர் சுவிஷேசகனுடைய  வேலையைச் செய்ய வேண்டும். கிராமங்களில் சென்று சுவிஷேசம் அறிவித்து, தெருக்கூட்டங்கள் சிறிய அளவில் ஆரம்பித்து நடத்த வேண்டும். மட்டுமல்ல, போதகர்கள் தங்களை வல்லமையுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜனங்கள் சுவிஷேசகூட்டங்களுக்கு அலைமோதிக் கொண்டு போகும் காரணங்களை கண்டறிய வேண்டும். கண்டறிந்து சபைக்குள் கொண்டு வந்து சேர்க்கும் கிருபையை தேவனிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

யோசுவா: 3:7 - "கர்த்தர் யோசுவாவை நோக்கி; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்".

இஸ்ரவேல் ஜனங்களின் கண்காண செங்கடலைப் பிளந்து மோசேயைக் கர்த்தர் மேன்மைப்படுத்தினார். அதேபோல யோசுவா: 3:7 ல் சொன்னபடி யோர்தானை இரண்டாகப் பிளந்து மோசேயைப்போல யோசுவாவையும் மேன்மைப்படுத்தினார்.

யோசுவா: 4:14 - "அந்நாளிலே யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்".

கர்த்தாரால் தெரிந்து கொள்ளப்பட்டும், அவரால் ஊழிய அழைப்பும், அபிஷேகமும் பெற்று முழுநேரமாக இன்றும் ஊழியம் செய்கிற ஒவ்வொரு தேவஊழியரையும், ஜனங்களுக்கு முன்பாக  மேன்மையுண்டாகும்படி தேவபயத்தை ஜனங்களுக்குள் ஏற்படுத்துவார்.

ஆண்டவருடைய தேடல்...

கர்த்தருடைய தேடலெல்லாம்... அழைப்பும், அபிஷேகமும் நிறைந்த மோசேயும், யோசுவாவும் போன்றோர்கள்தான். மிரியாம் போன்றவர்களல்ல...  சிற்சில குறைகள், குறைவுகள் இருக்கலாம். ஆனால், இவர்களிடம் தேவனுடைய அழைப்பும், அபிஷேகமும் இருந்தது.

எலியா: அழைப்பும் அபிஷேகமும் நிறைந்தவன். கர்த்தருக்காக 450 பாகால் தீர்க்கதரிசிகளை வெட்டிச்சாய்க்கிற அளவிற்கு பக்தி வைராக்கியம் இருந்தது. சங்கீதம்: 118:6 - "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன்  எனக்கு என்ன செய்வான்". அபிஷேகம் பெற்றவனுக்கு முன்பாக எதிர்த்து நிற்பவன் யார்?

  • இது சுவிஷேசகனுடைய வேலை,.. இது என்னுடைய வேலையல்ல... என எதையும் அலட்சியப்படுத்தும் மனப்போக்கு சபை மேய்ப்பனுக்கு இருக்கக்கூடாது. ஒரு ஊழியன் ஐந்துவித ஊழியத்தையும் செய்ய தேவனால், அழைப்பும், அபிஷேகமும் பெற்றிருக்கிறான் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 
  • நீ இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்பு வேறுஒரு வழியாய் வரும். அநேகர் இங்கே வா...அங்கே வா... என அழைத்து பிரித்துக் கொண்டு போய் விடுவார்கள். சபை வறண்டு விடும். பின்னர் புலம்பிப் பயனில்லை.
  • சபைதான் - நம் தேவ சந்ததி. அதை கட்டுவதில் அதிக கவனம் தேவை. அதை கட்ட ஆவியானவர் துணை அவசியம். இதுவரை ஐந்துவித ஊழியம் செய்யாதவர்கள் இனி செய்ய வேண்டும்.
  • தரிசனத்தோடு செயல்பட வேண்டும். தரிசனத்தோடு ஜெபிக்க வேண்டும். நம் சபை இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என தரிசனங் காண வேண்டும். திரள் கூட்ட மக்கள் ஆராதனைக்கு வர வருவதை தரிசிக்க வேண்டும். பால்கனியில் ஆராதிப்பதுபோன்று தரிசனத்தோடு ஜெபியுங்கள்.
  • நம் பகுதிக்கு புதிதாக ஒரு ஊழியர் வரும்போதெல்லாம்... நாம் இன்னும் சரியாக... அல்லது... சுறுசுறுப்பாக கர்த்தருடைய வேலையை செய்யவில்லை என நினைக்க வேண்டும். அறுவடைக்களம் இன்னும் பெரிதாக உள்ளது...
  • சுதந்தரிக்க வேண்டிய இடம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது என்ற நினைவோடு, வேகமாகவும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.
  • நாம் இருக்கும் இக்காலத்திலேயே நாம் ஊழியம் செய்யும் பட்டணம் இரட்சிப்பு பெற வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
  • 'செத்தாலும் சாகிறேன்' என்ற விசுவாசத்தோடு நம் பட்டணம் சந்திக்கப்பட வேண்டும் என்று வாஞ்சையோடு ஜெபிக்க வேண்டும்.
  • சபை வளரும்போது மேட்டிமை வரும். அது வரவிடாமல் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வீழ்ச்சி ஏற்படும்.
2நாளாகமம்: 26:17 - "ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பது பேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து," - என்று வசனம் கூறுகிறதை பார்க்கிறோம்.

ராஜாக்கள் மற்றும் பிரபுக்கள் பராக்கிரமசாலிகளாக இருக்கிறார்கள் என வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால், இங்கு கர்த்தருடைய ஆசாரியர்களை தேவன் பராக்கிரமசாலிகளாக்குகிறார். என்ன ஒரு ஆச்சரியம்?! என்ன ஒரு விந்தை பாருங்கள்?! நம்மிடம் உள்ள மேட்டிமை, பெருமை நம்மை விட்டு நீக்கும்போது நாம் தேவனால் பயன்படுத்தப்படுவோம் என்பதில் ஐயமில்லை.

ஊழியத்தில் வரும் பயம்

ஊழியத்தில் ஊழியர்களுக்கு அடிக்கடி தேவையற்ற பயங்கள் வரலாம். மனிதரால், சத்துருக்களால், பலவிதங்களில் வரக்கூடிய நிலை இருப்பதை மறுக்க இயலாது. வேதத்தில் பல தேவமனிதர்கள், தீர்க்கதரிசிகளுக்கு புறஜாதிகளால், கள்ளச்சகோதரர்களால் பலவித தீங்குகளும், இன்னல்களும் ஏற்பட்டதை நாமறிவோம்.

ஆனால், நம்மை அழைத்த தேவனது அழைப்பிலும், அபிஷேகத்திலும் உறுதியாக நிலைத்திருந்தால் அவைகளை மேற்கொள்ளலாம்.

"விசுவாசம் - பயத்தைத் துரத்தும்
பயம் - விசுவாசத்தைத் துரத்தும்"

பல இடங்களிலிருந்தும், பலபக்கங்களிலிருந்தும் பயம் வரலாம். விசுவாசிகள் பயமுறுத்தலாம்; மனைவி பயமுறுத்தலாம்; பிள்ளைகள் பயமுறுத்தலாம். ஆனால், நீ "விசுவாசமுள்ளவனாயிரு"

யோனாவைப் போல ... புயலைக் கொடுத்தாவது அபிஷேகமுள்ளவனை தமது பக்கமாய் தேவன் திருப்புவார். புயலைக் கண்டு ஓடினாலும் விடமாட்டார்.

கிறிஸ்துவின் சுதந்திரர் - கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்

ரோமர்: 8:17 - "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே. தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்".

ஒவ்வொரு ஊழியரையும் தேவன் கிறிஸ்துவின் உடன் சுதந்திரர் என கருதுகிறார். ஊழியர்களை உயர்ந்த அந்தஸ்தில் வைக்கிறார் என பவுல் கூறுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் - ஒரு இரகசியத்தை அறிகிறான்.  அது "உயிர்ப்பித்த வல்லமை" என்பதே. அவரை உயிர்ப்பித்த அதே வல்லமை நம்மையும், நமது ஊழியத்தையும்  உயிர்ப்பிக்கும். இயேசுவை உயிர்ப்பித்த அதே வல்லமை நமது ஊழியத்திலும் மகா மேன்மையான மகத்துவங்களை காணச் செய்யும் என்பதே.

எபேசியர்: 1:19 - "தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன்"  

உடன் சுதந்திரர் - என்பதின் பொருள் - உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பெறும் அனைத்து ஆசீர்வாதங்களையும் உடன் சுதந்திரர்களாகிய நாமும் பெறுவோம் என்பதே.

ஏசாயா: 53:11 - "அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு, திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும்  அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்." 

ஏசாயா: 53:12 - "அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக  வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்."

"அநேகரை பங்காக கொடுப்பேன்" - அந்தப் பங்கில் நாமும் சேர்ந்திருக்கிறோம். ஏனென்றால், நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்.

நமக்கு அநேக நம்பிக்கையான வார்த்தைகள் உண்டு. உயிர்ப்பிக்கும் வல்லமை உண்டு. ஏனென்றால், நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்திரர். அதைரியப்படாதிருங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர்.  நம்மை இறுதிவரை நடத்துவார்.


கர்த்தருடைய அறுவடைக்களம் மகா விஸ்தாரமாயிருக்கிறது. வேலையோ பெரியது. கர்த்தருடைய நாமத்திற்கு முன்பாக, தடைகளெல்லாம் பெலவீனமானவை என அறிந்து, இயேசுவின் நாமத்தில் தகர்த்தெறியுங்கள். வீறுநடை போடுங்கள்.

அநேகரை நீதிமான்களாக்குகிற தேவன் - அநேகரை பங்காகவும் கொடுப்பார். இனி சபைகளில் ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருகும். சபையை நோக்கி குடும்பம் குடும்பமாக, திரள் திரளான மக்களை ஆவியானவர் ஆராதனைக்கு கொண்டு வருவதை காண்பீர்கள். உங்கள் தரிசனம் மற்றும் இலக்குகள் நிறைவேறும். கர்த்தர் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவார். கர்த்தருடைய கிருபை உங்கள்மேல் பெருகுவதாக! ஆமென்!