அக்டோபர் 01, 2014

நாம் இடைவிடாமல் செய்ய வேண்டியவை


தேவனுடைய பிள்ளைகளாகிய நம் எல்லோர் மேலும் விழுந்த கடமை இது.  இதை நிறைவேற்றுவது ஊழியர்களின் கடமை. நமது வேலையல்ல என கருதாது நாம் அனைவரும், இவைகள் நம்மில் நிறைவேற பிரயாசப்பட வேண்டும். 

இடைவிடாமல் என்பது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவைகளில் தவறாது கடைபிடிக்க கவனமாயிருக்க வேண்டும் என்பதே. தானியேலுக்கு ஜெபிப்பதில் தடை இருந்தது. இருப்பினும், அவன் தன் தேவனுக்கு முன்செய்து வந்த வழக்கத்தின்படியே மூன்றுவேளையும் தவறாது எருசலேமுக்கு நேராக பலகணிகளை திறந்து வைத்து ஜெபிப்பதை வேதத்தில் வாசிக்கிறோம். காலை மாலை இரவு என சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஜெபிப்பதும், ஆராதிப்பதும் தானியேலின் வழக்கமாயிருந்ததை அவனது வாழ்வில் காண முடிகிறது.

தாவீது வனத்தில் சவுலுக்கு பயந்து ஓடிய நாட்களிலாகட்டும், அரண்மனை வாழ்வாகட்டும் சதாகாலமும் கர்த்தருடைய வசனத்தின்மேல் தாகமுள்ளவனாய், வசனத்தின்படி நடப்பதில் இருதயத்தை சாய்க்கிறவனுமாய் இருப்பதை காணமுடிகிறது.

அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணுவதிலும், போதிக்கிறதிலும் இடைவிடாமல் தரித்திருப்பதை - அறிக்கையிடுவதை வாசிக்கிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஆதிதிருச்சபைமக்களுக்கு கண்ணீரோடே புத்திசொல்கிறதை வேதத்தில் வாசிக்கிறோம். அதேபோன்று நாமும் இடைவிடாமல் பலபாடுகள், போராட்டங்கள் நம்மை வருத்தினாலும் சோர்ந்து போகாமல் இடைவிடாமல் ஆவிக்குரியவைகள் நம்மில் நிறைவேற பிரயாசப்படுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!