செப்டம்பர் 01, 2014

கர்த்தரில் பலப்படுங்கள்


எபேசியர்: 6:10 - "கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்".

இவ்வசனத்தில்   அ) கர்த்தரில் பலப்படனும்        ஆ) கர்த்தருடைய வலிமைமிக்க வல்லமையில் பலப்படனும்  - என்ற இரண்டு விஷயங்களை நமக்கு போதிக்கிறது. ஏனென்றால்...

நாம் வாழும் உலகமும் காலமும் அப்படிப்பட்டது. எப்படியென்றால்...

  • 2தீமோத்தேயு: 3:1 -  8  - கொடிய காலம் அல்லது மிருக சுபாவம் நிறைந்தது. (உலகம்)

  • வெளிப்படுத்தல்: 12:12 - குறுகிய காலம் கொண்ட பிசாசின் கோபம் நிறைந்தது. (சாத்தான்)

  • 2பேதுரு: 2:13 - ஒருநாள் வாழ்வை இன்பமென்று எண்ணும் மனம் நிறைந்த  மனிதர்களால் நிறைந்தது. (மாம்சம்)
நாம் வாழும் காலம் அல்லது இனி வரும் காலம் மேற்கண்ட மூன்று (உலகம், மாம்சம், பிசாசு) காரணிகளால் நிரப்பப்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருவதினால்... இவற்றை நாம் எதிர்கொள்ள... கர்த்தரிலும், கர்த்தருடைய வலிமைமிக்க வல்லமையிலும் பலப்பட வேண்டியது மிக அவசியம்.

அ) கர்த்தரில் பலப்படுவது எப்படி?

உலகில் வாழும் இன்றைய மக்கள் தங்களை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்ள பலவழிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதிகார பலம், ஆள் பலம், பணபலம், மாம்ச பலம் என பலவிதங்களில் தங்களை பலப்படுத்திக் கொண்டு, உலகில் வலிமைமிக்கவர்களாக தங்களை மாற்றிக்கொண்டு தங்கள் சுயபலத்தினால் வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், ஆவிக்குரியவர்களான நாமோ... அவ்வித பலத்தினால் நம்மை வலுப்படுத்தாமல் தேவபலத்தினால் நிரப்பப்பட நம்மை ஒப்புவிக்க வேண்டும்.

  2கொரிந்தியர்: 10:4 - "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது".

கர்த்தருக்குள், கர்த்தரில் பலப்படுவதைப் பற்றிய விளக்கத்தை  - வேதாகமத்தின் வழியே மூன்று உதாரணங்களைப் பார்ப்போம்.

1. காரியங்களை கர்த்தரிடம் ஒப்புவித்து காத்திருப்பது:



சங்கீதம்: 27:14 - "கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு."

நம் வாழ்வில் - சத்துருவினால் வரும் அனைத்து இன்னல்களையும், கர்த்தரிடம் ஜெபத்தில் ஒப்புவித்துவிட்டு, அமைதியாக, தேவன் தரும் தீர்வை எதிர்நோக்கிக் காத்திருப்பது.

ஆரம்பகால  பரிசுத்தவான்களில் அநேகர் ... சரீரத்தில் வரும் நோய்களுக்கு மருத்துவத்தை நாடாமல்... எண்ணெய்   பூசி, கர்த்தரால் வரும் தெய்வீக சுகத்திற்காக காத்திருப்பார்கள்.

இன்னும் சில தேவபிள்ளைகள் - அன்றாட வாழ்வில் ஏற்படும், எதிர்கொள்ளும் மனித உறவுகளால் வரும் பிரச்சினைகள், போராட்டங்கள், தங்கள் ஆஸ்தி மற்றும் உடைமைகளுக்கு வரும் சோதனைகள் இவைகளை மாம்ச பெலத்தினால் மேற்கொள்ள விரும்பாமல், அப்படிப்பட்ட போராட்டங்களை கர்த்தரிடம் ஒப்புவித்து விட்டு அவரால் வரும் இரட்சிப்பிற்காய் காத்திருப்பார்கள். அநேக கர்த்தருடைய பிள்ளைகள் இவ்விதமாக காத்திருந்து ஜெயம் பெற்றிருக்கிறார்கள்.


நாம் செய்ய வேண்டியது:  "நீங்கள்  ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" ((பிலிப்பியர்: 4:6) என்ற வசனத்தின்படி நமது காரியங்களை, விசாரங்களை  தேவனிடம் ஒப்படைத்து விட்டு,  ஒரு குழந்தை தாயை சார்ந்திருப்பதுபோல கர்த்தரையே சார்ந்து காத்திருக்க வேண்டும். அதாவது, தேவனிடம் விசுவாசத்தை காட்டுங்கள். அப்பொழுது,  கர்த்தரிடமிருந்து தேவபலம் உங்களுக்கு வரும்.

2. சூழ்நிலையைப் பொறுத்து, தேவசித்தப்படி செயல்படுதல்:



 2சாமுவேல்: 10:12 - "தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்".

யுத்த முனையில் நிற்கும் தாவீதின் தளபதி யோவாபு தன் சகோதரனாகிய அபிசாயிடம் கூறுகிற வசனத்தை பார்க்கிறோம். (2சாமுவேல்: 10 ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்து சம்பவத்தை அறியுங்கள்)

தாவீதின் தளபதி யுத்தமுனையில் நிற்கிறான். முன்னும் பின்னும் எதிரிபடைகள் சூழ்ந்திருக்கிறது. யோவாபிடம் உள்ள படைபலமோ கொஞ்சம். எதிரிபடைகளோ அதிகம். நடுவில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கும் நிலை. ஆலோசனை சொல்ல, வழிநடத்த  தாவீதும் அருகாமையில் இல்லை. என்ன செய்வது? இக்கட்டான நிலைமை. யோவாபு கர்த்தரை சார்ந்து சூழ்நிலைக்கேற்றவாறு சரியான முடிவெடுத்து தேவ சித்தப்படி படைகளை இரண்டாகப் பிரித்து யுத்தம் செய்து வெற்றி பெறுகிறதைப் பார்க்கிறோம்.

3. கர்த்தருடைய வார்த்தை கிடைத்தவுடன் செயல்பட ஆரம்பிப்பது:



ஆகாய்: 2:4 - "... நீ திடன் கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

பழைய ஏற்பாட்டு நாட்களில் ஜனங்களை நடத்துகிற ஜனத்தின் தலைவர்கள் பல நேரங்களில் சத்துருவின் அச்சுறுத்தல் மற்றும் பிசாசின் போராட்டங்களால் சோர்ந்து போயிருக்கும் போதும், செய்வதறியாது திகைத்துப் போய் கலங்கி நிற்கும் வேளைகளிலும் கர்த்தருடைய நோக்கம், திட்டம் முடங்கிப்போய் பாதியிலே நிற்கும்.

தேவன் தமது தீர்க்கதரிசிகளை , ஊழியர்களை எழுப்பி, அனுப்பி அவர்களை தமது வாக்குத்தத்த வார்த்தைகளால் திடப்படுத்தி, ஊக்கப்படுத்தி, பலப்படுத்தி தொடர்ந்து கர்த்தருடைய வேலையை ஊக்கமாக செயல்பட வைப்பார்.

சோர்ந்து போயிருக்கிறவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தை கிடைத்தவுடனே பலங்கொண்டு திடமனதாயிருந்து காரியத்தை உற்சாகத்துடன் செய்து வெற்றி பெறுவார்கள். அதுபோல, இன்றும் நாம் பலவேளைகளில், பலநேரங்கள் நாம் பலவீனப்பட்டு சோர்ந்து போயிருந்தாலும், தேவன் தம்முடைய தாசர்களை, ஊழியர்களைக் கொண்டு, தமது வார்த்தைகள் மூலமாக அவரது வல்லமையுள்ள வாக்குத்தத்தங்களைக் கொடுத்து நம்மை பலப்படுத்தி வருகிறார்.

ஆ) வலிமைமிக்க வல்லமையில் பலப்படுவது எப்படி?

1. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் (1தெசலோனிக்கேயர்: 5:17)

2. ஆவியை அவித்துப் போடாதிருங்கள் (1தெசலோனிக்கேயர்: 5:19)

3. இரவும் பகலும் வேத தியானம் செய்யுங்கள் (சங்கீதம்: 1:2)

4. பரிசுத்தமாயிருங்கள் (1பேதுரு: 1:16)

5. உபவாசித்து ஜெபியுங்கள் - சாத்தான் ஓடிப்போவான் (மத்தேயு: 17:21)

இவைகளில் எது குறைவுபட்டாலும் நாம் பலவீனர்களாவோம். எனவே, இவைகளில் எது குறைவுபடுகிறதோ... அதை உடனே உயிர்ப்பித்து பலப்படுத்துங்கள். பலமடைவீர்கள். தாமதமும், தள்ளிப்போடுவதும் நம்மை பலபவீனமாக்கும்.

"தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன்" (எபேசியர்: 2:19).