ஒரு இளம் போதகர் திரளான மக்கள் கூடும் ஒரு சபைக்கு மேய்ப்பனாக நியமனம் பெற்றார்.
அந்தச் சபையாரோ (சபைக்குள் ஒருவரையொருவர்) இகழ்கிற, குற்றஞ்சாட்டுகிற, முறையிடுகிற தீய ஆவியை உடையவர்களாய், சாட்சி கெட்டவர்களாய் இருந்தனர்.
இதனால், மிகவும் மனவேதனையடைந்த போதகர் மிக ஊக்கமாக ஜெபித்து ஒரு திட்டத்தை வகுத்தக் கொண்டார். அதன்படி செயல்படவும் ஆரம்பித்தார்.
யாராவது சபை அங்கத்தினரான இன்னொருவரைப் பற்றி குறைகூற வரும்போது , "பொறுங்கள்... பொறுங்கள்... இதோ இந்த முறையீட்டுப் புத்தகத்தில் நீங்கள் எந்த சகோதரனுக்காவது எந்த சகோதரிக்காவது விரோதமாக சொல்வதையெல்லாம் நான் தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும்.... எழுதின பின்பு நீங்கள் அதன்கீழ் உங்கள் பெயர், முகவரி எழுதி கையெழுத்து இட்டு விடுங்கள்.
எனக்கு சமயம் வாய்க்கும்பொது நான், நீங்கள் குறிப்பிட்ட அந்த நபரிடம், நீங்கள் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களை காண்பித்து, அதிகாரப்பூர்வமாக விளக்கம் கேட்பேன்" என்பார்.
குறைகூற வந்தவர் மெல்ல கழன்றுகொள்வார். இந்தப் போதகர் அந்தச் சபையில் பணியாற்றிய 40 ஆண்டுகாலமும் ஒரு முறையீடாவது அந்த புத்தகத்தில் பதிவாகவில்லை.
ஆம், குறைகூறும், பழிக்கும், இகழும் ஆவி அந்த சபையை விட்டே அகன்று ஓடிற்று.
இறுமாப்பு, பேதமை, தர்க்கங்கள், வாக்குவாதங்கள், பொறாமை, சண்டை, தூஷணம், பொல்லாத சந்தேகங்கள், கெட்டசிந்தை, தேவபக்தியை ஆதாயத் தொழிலாய் கருதுகிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்கள் போன்ற எவையும் நம் சபைகளிலும் இருக்கக்கூடாது. நம் வீடுகளிலும் இருக்கக்கூடாது. (1தீமோத்தேயு: 6:4,5)
நன்றி: நித்திய பேரின்பம்