நவம்பர் 19, 2016

கொர்பான் – Corban - (קרבן)

Image result for Mark: 7:1-13

கொர்பான் – Corban - (קרבן)

ஒரு ஆய்வுக் கட்டுரை

“கொர்பான்” என்னும் சொல் அரமேய பாஷை ஆகும். இது Korban ;  Qorban ; Corban – (Kopßav – Korban – கொர்பான் –  קרבן )  என்றும் சொல்லப்படுகிறது.

இச்சொல் கர்த்தருடைய சமூகத்தில் படைக்கப்பட்ட அல்லது ஏறெடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் பொதுவாக குறிப்பிட்டு நின்றது. உதாரணமாக … லேவியராகமம்: 1:2; நெகேமியா: 10:35; 13:31 ஆகிய வசனங்களை வாசித்தறியலாம்.
 “கொர்பான்” என்னும் அரமேயச்சொல்லானது - “அண்மையில் கொண்டு வரப்பட்ட பொருள்” என்று அர்த்தமாம். அதாவது, “கர்த்தருடைய சமூகத்தில் காணிக்கையாக கொண்டு வரப்பட்டவை” என்பது கருத்து.

பின்னாட்களில் இது எப்படி மாறிப்போயிற்று என்றால்…


இயேசுவின் நாட்களில் வாழ்ந்து வந்த யூதர்கள் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் இவ்வழக்கம் வேறுவிதமாக மாறிப்போனது. அதாவது, வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்களோடு வைத்து பராமரிக்க மனதில்லாமல், அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல், அதற்குப் பதிலாக கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது போன்று, ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து ஒதுக்கி விடும்படி, பரிசேயர்கள் சுயாதீனமாய் உருவாக்கிக் கொண்ட ஒரு முறைமைக்குப் பெயர்தான் “கொர்பான்” என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தங்கள் பெற்றோருக்கு கொர்பான் காணிக்கை மூலம் செலுத்திவிட்டு, பெற்றோர்களை ஓரங்கட்டி, கைகழுவி விட்டுவிடுவார்கள். இதனால், அவர்களுடைய பிக்கல்பிடுங்கல்கள் இல்லாமல், தங்கள் மீது எவ்வித உரிமையும் அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் தங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் கொண்டு, தங்களை சுதந்தரமாக்கிக் கொண்டார்கள். இது அவர்களுடைய இருதயக் கடினத்தைக் காட்டுகிறது. இதைத்தான் ஆண்டவர் இயேசு கடிந்து கொண்டார்.

மாற்கு: 7:9-13 – “பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்பபடிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்”.

வயதான பெற்றோருக்கு பணம் மட்டுமே அவசியம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் பாசம், அரவணைப்பு, அருகாமை இதைத்தான் விரும்புவார்கள்.  பெற்றோர்கள் மரிக்கும்வரைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சகலவிதமான சவரத்தனைகளும், பராமரிப்புகளும் இறுதிவரை பிள்ளைகள் மற்றும் வாரிசுகள் செய்தாக வேண்டும். 

கடமை தீர்ந்தது என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடவோ, தங்கள் வாழ்நாளில் குற்றமற்ற மனசாட்சியில்லாமலோ வாழ்ந்திட முடியாது. பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்த்துவிட்டது போல பிள்ளைகளும் பெற்றோர்களை இறுதிவரை வைத்து பராமரிப்பதுதான் தேவநீதி. 

பரிசேயர்கள் சுயமாக தாங்கள் ஏற்படுத்தின கொர்பான் காணிக்கையெல்லாம் கர்த்தருக்கு முன்பாக நீதியாகாது; எடுபடாது என்பதை நாம் ஒருவராகிலும் மறந்துபோகலாகாது.